Share

Oct 18, 2012

1971 இடைத்தேர்தலில் தமிழகம்


1967ல்காங்கிரஸுக்கு தேர்தல் சின்னம் இரட்டைக்காளை மாடுகள்.

காளைமாட்டுச் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று
1967 பொதுத்தேர்தலில் பிரச்சாரம்.

”ஆயிரம் வரிகள் விதித்தவரே! அண்ணாவை சிறையில் அடைத்தவரே!

அறுபத்தியேழில் சூரியன் உதிக்குது!

நில்! நில்! நில்! காளைமாடே நில்! நில்!”

வாழ்க்கைப்படகு படத்தில் ”ஆயிரம் பெண்மை மலரட்டுமே! ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே” பாடலின் மெட்டு.

அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம்.

திமுக கோஷம் - பக்தவத்சலக்குரங்கே! பதவியை விட்டு இறங்கு!

உதயசூரியன் தான் உதித்தது!

”படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்ற காமராஜர் தன் சொந்த ஊரில் தோற்றுப்போனார்.

51 இடங்கள் காங்கிரசுக்கு.

பரங்கி மலை தொகுதியில் நின்ற குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் தான் படுத்துக்கொண்டே ஜெயித்தார்.

அண்ணாத்துரையின் தி,மு.க அரியணையேறியது.

திமுக நடத்திய உலகத்தமிழ் மாநாடு.

அண்ணனுக்கும் ஓர் சிலை வைத்த போது

”ஆள் காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா! ஆனணயிடுகிறார் என்றெண்ணியிருந்தோம்.
ஐயகோ! இன்னும் ஓராண்டே வாழப்போகிறேன் என்று ஓர் விரல் காட்டியது இன்றல்லவோ புரிகிறது.” என்று கருணாநிதி கதறியழுதார்.

திமுகவின் தலைவரானார்.அடுத்த முதல்வரானார்.

ஜனாதிபதி தேர்தலில் இந்திராவின்‘மனசாட்சி ஓட்டு’ யுக்தி காரணமாக சஞ்சீவரெட்டி தோற்று வி.வி.கிரி ஜெயித்ததில் காங்கிரஸும் இண்டிகேட் சிண்டிகேட் என்று உடைந்தது.

1971ல் அண்ணனை இழந்த தம்பிகள் இடைத்தேர்தலை சந்திக்கும்போது

இந்திராகாந்தியின்இண்டிகேட் காங்கிரசுடன் கூட்டு.

தமிழகத்தைப்பொறுத்தவரை அது சிண்டிகேட் என்ற ஸ்தாபன காங்கிரஸ் தான்.1967ல் திமுகவுடன் கூட்டு போட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி இப்போது ஸ்தாபன காங்கிரஸுடன் கூட்டு.

இங்கே  சின்னவயது கருணாநிதியை எதிர்த்து
மூதறிஞர் ராஜாஜியும் பெருந்தலைவர் காமராஜரும் ஓர் அணியில்!

காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பற்றி சந்தேகமில்லை என்ற நிலை தான்.
சுதந்திரா கட்சி ஹண்டே பற்றி குறிப்பிடாமல் இருக்கக்கூடாது.சட்டசபையில் அவர் அப்போது கதாநாயகன். 
பெரியாருக்கு வீரமணி போல ராஜாஜிக்கு அப்போது டாக்டர் ஹண்டே!
திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தில் அவர் முன்னிலை வகித்தார். இந்தப் பிரச்சார சமயத்தில் எரியீட்டி என்ற திமுக நாளேட்டில் “இங்கே தமிழகத்தில் ஹண்டேக்களும் புண்டேக்களும் இருக்கமுடிகிறதென்றால் அது எங்கள் சகிப்புத்தன்மையாலும்,பெருந்தன்மையாலும் தான்.” என்று எழுதப்பட்டது.


எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வெறி பிடித்த ரசிகர் கூட்டம். இந்த தேர்தல் கூட இந்த இருவருக்குமான கௌரவப்பிரச்னை என்ற நிலை.

சிவாஜி கணேசன் “ நடிப்பில் சந்திப்போமா? வீரத்தில் சந்திப்போமா?” என்று எம்.ஜி.ஆருக்கு பகீரங்க சவால் விட்டார்.

எம்.ஜி.ஆர் இதற்கு பதில் சொன்னார்.

” தம்பி கணேசன் நடிப்பில் சந்திப்போமா? என்று என்னைப் பார்த்துக்கேட்கிறார்.நடிப்பில் என்னுடைய பாணி வேறு.அவருடைய பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.ஏன் என் தம்பிக்கே தெரியும்.பின் ஏன் என்னை அவர் நடிப்புக்கு சவால் விட்டுக் கூப்பிடவேண்டும்.ஒரு வேளை ’சிவந்த மண்’ படத்தில் இவரை விட நண்பர் முத்துராமன் சிறப்பாக நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே! அதனால் சிவாஜிக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்து விட்டது போலும்!

வீரத்தில் சந்திப்போமா என்று கேட்கிறார்! ஐயோ பாவம்!”

கடலலையெனத்திரண்டிருந்த கூட்டத்தின் சிரிப்பும் ஆரவாரமும் அளவிடமுடியாதபடி நீண்ட நேரம் நீடித்தது.


’தங்கச்சுரங்கம்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக நடித்த ஓ.ஏ.கே தேவர் திமுக மேடையொன்றில் “ கணேசா! நீ முதலில் என்னுடன் நடிப்பில் மோதிப்பார்.’ என்று சவால் விட்டார்.
கலர் கதாநாயகன் ரவிச்சந்திரன் அப்போது தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த கதை இன்று பலருக்கு தெரியாது.

 நாகப்பட்டினத்தில் சிவாஜி பிரச்சாரம் செய்தபோது "நாகப்பட்டினத்துக்குத்தான் என் இரண்டு பெண்ணையும் கொடுத்திருக்கிறேன்" என்றார்.
இதற்கு நடிகர் எஸ்.ஏஅசோகன் "ஊருக்கே பொண்ணைக் கொடுத்துட்டாரா?" எனப்பேசி சிவாஜியின் பகையை சம்பாதித்தார்.

கருணாநிதி பேசிய ஒரு கூட்டத்தில் ஒருவர் “ தேர்தல் பிரச்சாரத்தில் வரம்பு மீறி ஸ்தாபன காங்கிரசார் அநாகரிமாக கலைஞரை விளக்குமாற்றுடன் ஒரு பெண் கோபமாக பார்த்து சண்டைக்கு வருவது போல படம் வரைந்திருக்கிறார்கள்” என்று வேதனைப்பட்டார். அதற்கு கருணாநிதி மேடையில் சொன்னார். ”காங்கிரசார் சித்திர எழுத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அந்தப்பெண் இந்த கருணாநிதியிடம் திமுக ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்குமாறு கேட்கிறாள்.மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் என்னவெல்லாம் நன்மை செய்யப்போகிறீர்கள் என்று விளக்குமாறு கேட்கிறாள்.அண்ணனை இழந்த தம்பிகள் இந்த தேர்தலில் மீண்டும் வென்று சரித்திரம் படைக்கும்போது மக்கள் வாழ்வில் ஏற்படப்போகும் மறுமலர்ச்சியைப்பற்றி அன்போடு விளக்குமாறு கேட்கிறாள்.”

கருணாநிதி பேசிய மற்றொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எதிரே ஒரு சுவரில் “ பாரு பாரு நல்லாப்பாரு திமுக ஆட்சியின் அலங்கோலத்தைப் பாரு!” என்று பட்டியல் போட்டு எழுதியிருந்தார்கள்.

கருணாநிதி அதைப் பார்த்து விட்டு தன் கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் முகத்தில் பொருத்திக்கொண்டு தன் விசேஷமான கரகரத்த குரலில் சொன்னார்: ”பாரு பாரு! நல்லாப் பாரு!
51 இந்தத்தேர்தலில் 15 ஆகுதா இல்லையான்னு பாரு!”

1971 தேர்தலில் திமுக அமோகவெற்றி பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸுக்கு 15 இடங்கள் தான் கிடைத்தது!

வாக்குச்சீட்டில் ரஷ்ய மை பயன்படுத்தப்பட்டிருந்தது என்ற புரளியை கண்ணியத்துடன் நாகரீகமாக, படுதோல்வி அடைந்த நிலையிலும் பெருந்தலைவர் காமராஜர் புறந்தள்ளினார்.ஜிகினா அரசியல் அறியாத உத்தமத்தலைவன்!
எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து கண்ட மாபெரும் வெற்றி இது.
1972ம் வருடம் முடியுமுன்னே இருவருக்கும் பிரிவு வந்து அரசியல் காட்சிகள் மாற ஆரம்பித்து விட்டன.

எது எப்படியோ! ஒரு விஷயத்தில் அதன் பின் எந்த மாற்றமும் இல்லை என்றாகிவிட்டது.தமிழக அரசியல் கருணாநிதியை மட்டும் மையம் கொண்டதே தான். ’கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரு குறுகிய வட்டம்! இதைத் தாண்டி ஒரு உன்னத ’அரசியல் சித்தாந்தம்’ எதுவும் வாய்க்கவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம்.
http://rprajanayahem.blogspot.in/2012/10/the-man-who-scared-indira-gandhi.html

10 comments:

  1. RPR Sir,

    67-க்குப்பின் காமராஜர் மறைவு வரை சி.எஸ், மூப்பனார், குமரி அனந்தன், பழனியாண்டி, பா.ராமச்சந்திரன் போன்றவர்கள் அவருடன் இருந்தார்களா இல்லை இந்திராவிடம் இருந்தார்களா என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  2. //திமுக ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்குமாறு கேட்கிறாள்//
    இந்த எகனை, மொகனைல கருணாநிதியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது! :)

    ReplyDelete
  3. nice work. Interesting to read old political happenings.

    ReplyDelete
  4. சி.எஸ் 1969ல் இருந்து இந்திராவுடன் இருந்தார்.எப்போதும் காமராஜருக்கு எதிர் நிலையில் தான் இருந்தார்.காமராஜரை எதிர்த்து முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டவர்.மூப்பனார் பற்றி காமராஜர் இறந்தபின் இரு காங்கிரஸ் இனணப்பில் அவர் தமிழக தலைவரான போது தான் அறிய வந்தேன்.
    நெடுமாறனும்,அனந்தனும் காமராஜருடன் தான் அவருடைய மரணபரியந்தமும் இருந்தார்கள்.
    மூப்பனார் போலவே பழனியாண்டி பற்றி அவர் காங்கிரஸ் தலைவரானபோது தான் நான் அறிய வந்தேன்.

    ReplyDelete
  5. மூப்பனார் காமராஜருடன்தான் இருந்தார். பழனியான்டி மூப்பனாருடன் இருந்தார்.

    ReplyDelete
  6. தமிழகத்தில் இந்த நொடிவரை ஒன்று "கலைஞர் வாழ்க" என்று கூறி அரசியல் செய்ய வேண்டும். இல்லையேல் "கருணாநிதி ஒழிக" என்று கூறி அரசியல் செய்ய வேண்டும். இதுதான் நிலை.

    ReplyDelete
  7. அதுதான் தமிழகத்தின் துரதிட்டம்

    ReplyDelete
  8. ஹெச்.வி ஹண்டே அவர்களைப் பற்றி சுவையான தகவல் ஏதேனும் இருக்கா? அவரைப் பற்றி சுருக்கமாக நான் எழுதியுள்ளேன் இங்கு

    http://simulationpadaippugal.blogspot.in/search/label/Dr.H.V.Hande


    - சிமுலேஷன்

    ReplyDelete
  9. Really Fantastic Sir....
    Please write these old days political matters...
    Thanks a lot...Long Live...

    ReplyDelete
  10. simulation Sir,
    ஹ்ண்டே பற்றி நிச்சயம் இந்தப் பதிவில் எழுதத்தான் வேண்டும்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.