Share

Jun 9, 2016

புகை மண்டலம்


அப்ப அவருக்கு அடையாளமே ’கஞ்சா குடிக்கி டாக்டர்’ தான். மெடிக்கல் காலேஜில் விரிவுரையாளராயிருந்தார். காலையில் வேலைக்குப்போய் விட்டு மாலை மேலப்பொன்னகரம் ரெண்டாவது தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு வந்தால், டாக்டர் போர்டு வீட்டில் மாட்டப்பட்டிருந்தாலும்
மற்ற டாக்டர்கள் போல க்ளினிக், பிராக்டிஸ் எல்லாம் எதுவுமே கிடையாது. உடனே மஹாமுனி அவர் வீட்டிற்கு வந்து விடுவான். 

“ மஹாமுனி கஞ்சா இருக்கா!”
மஹாமுனி “ இல்லங்க டாக்டர்.!”
”வாங்கிக்கிட்டு வர்றீங்களா தம்பி!”
மஹாமுனி கஞ்சா வாங்குவதில் மன்னன். வேல் நாய்க்கனிடம் இல்லாவிட்டால் சொறிக்காம்பட்டியானிடம் வாங்கி வந்து விடுவான். சொறிக்காம்பட்டியானை ரெய்டு பண்ணி த்தூக்கி விட்டார்கள் என்றால் ’மீனாட்சி தியேட்டர் பள்ளம்’ போய் கஞ்சா வாங்கி வருவான். மீனாட்சி தியேட்டர் பள்ளம் கஞ்சா சரக்கு ரொம்ப அருமையானது. அதனால் சைக்கிளில் போய் பள்ளத்தில் ’மருந்து’ வாங்குவது அடிக்கடி நடக்கும்.
கஞ்சாவை விடமுடியவில்லையே என்கிற தன்னிரக்கத்தைத்தான் குருவி மண்டையன் உருக்கமாக இப்படி பாடி வெளிப்படுத்துவான்! - “ பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்..”
கஞ்சாவை விடமுடியவில்லையே என்ற வேதனை எல்லோருக்குமே உண்டு.
கஞ்சா குடிக்கி டாக்டர் வீட்டில் ஒரே புகை மண்டலமாக இருக்கும். பத்து பேர், இருபது பேர், முப்பது பேர் என்று கூட்டம் கூடிக்கொண்டே போனதுண்டு.
டாக்டரின் தம்பி எம்.ஜி.ஆர் ரசிகன்.“உலகம் சுற்றும் வாலிபனால உலகப்பொருளாதாரம் எந்த வகையில் பாதிக்கப்பட்டது?”
”கஞ்சாவை இழுத்து விடும்போது Chest நல்லா விரியும்.சுருங்கும். நெஞ்சுக்கு எக்ஸசைஸ்.ரொம்ப நல்லது!”
டாக்டர் பாயில் படுத்துக்கொண்டே தான் கஞ்சா அடிப்பார்.
அவ்வப்போது சுவரில் காறி துப்புவார்.
“கொக்கோ மிட்டாய் வாங்கிக்கிட்டு வாங்க தம்பி”
டாக்டரிடம் புண்ணாய்ப்போன தன் காலை ஒச்சு காட்டி கேட்பான் “ என்ன டாக்டர் செய்யலாம்”
டாக்டர் கஞ்சா சிகரெட்டை நல்லா வாயில் வைத்து இழுத்தவாறே உற்று ஒச்சுவின் சீழ் வைத்த காலைப்பார்ப்பார். பின்னர் ஒச்சுவின் முகத்தை பார்த்து சொல்வார்: ” சும்மா..லூஸ்ல விட்டிருங்க தம்பி..”
மெடிஸன், வியாதி எது பற்றி கேட்டாலும் பதில்-“ தெரியாது தம்பி…”
டாக்டர் வீட்டில் போலீஸ் ரெய்டு நடந்து டாக்டரைத்தவிர மற்ற எல்லோரையும் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள்.
திடீரென்று டாக்டர் ஒரு நாள் “ கஞ்சாவை விட்டுட்டேன் தம்பி” என்பார்.
மூன்று நாள், ஒரு வாரம் கூட டாக்டர் வீடு வெறிச்சோடி இருக்கும். பின் மஹாமுனி மீண்டும் நுழைவான்.
”கஞ்சா இருக்கா தம்பி! வாங்கிக்கிட்டு வர்றீங்களா. மீனாட்சி தியேட்டர் பள்ளத்துக்கே போங்க தம்பி. அங்க தான் நல்லாருக்கும்.”
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்..
…………………………………………….
லூயிஸ் ஆரப்பாளையம் பார்க்கில் கல்கண்டு பத்திரிக்கையோடு உட்கார்ந்திருப்பான்.
மொட்டையன், கோபி, மண்டை மூக்கன், ஒச்சு, தொல்லை முதலிய சல்லிகள் பார்க்கில் நுழைவார்கள்.
”லூயிஸ்! மருந்து இருக்கா!”
லூயிஸ் பாக்கெட்டில் இருந்து காக்கிப்பொட்டலத்தை எடுத்துத்தருவான்.
”ஐயையோ! சார்மினார் சிகரெட்டு மூணு வேணுமே!”
”எங்கிட்ட இருக்குப்பா” லூயிஸ் ஆபத்பாந்தவர்.
சரக்கை சிகரெட்டில் லோட் செய்ததும் “ அடடே! பத்தவைக்க தீப்பெட்டி இல்லையே!”
லூயிஸ் ”இந்தா தீப்பெட்டி”
”லூயிஸ் இருந்தா இது ஒரு வசதிடா! அனாவசியமா அலைய வேண்டியதே இல்லை”

கோபி எப்போதும் லூயிஸிடம் ஏதாவது கேள்வி கேட்டுக்கொண்டே தான் இருப்பான். லூயிஸ் கொஞ்சம் எரிச்சலோடு தான் பதில் சொல்வான்.
லூயிஸ் கழுத்தில் உள்ள சிலுவையை காட்டி கோபி “ இது என்னங்க லூயிஸ்!”
”சிறுபம் கோபி”
“ இந்த சொரூபம்னு சொல்றாங்களே! அது தான் சிறுபமா?”
”சொரூபம் பெரிசு கோபி. சிறுபம் சிறுசு.”
கஞ்சா சிகரெட்டை பற்ற வைத்து ஆளுக்கு ஒரு இழுப்பு. கை மாறி கை மாறி லூயிஸிடம் சிகரெட்டை தொல்லை நீட்டும் போது லூயிஸ் “ எனக்கு வேண்டாம்..சீச்சி கழுதைய புடிச்சி இழுத்துக்கிட்டு.கெட்ட சனியன்டா இது! இந்த தரித்திரத்தை விட்டுத்தொலங்கடா! டே! ரிக்ஷாக்காரன் வைகைமணி மெண்டலாயிட்டான் தெரியுமா?! என்ன எழவுடா? இந்த வீணாப்போன கஞ்சா சனியனைப் பிடிச்சா விடவே முடியாதுடா…தரித்திரம் பிடிச்ச எழவ விட்டுத்தொலங்கடான்னு சொன்னா கேக்கவே மாட்டேன்றீங்களேடா!”
…………………………………………………...................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.