Share

Aug 30, 2018

கோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்


பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி என்னிடம் 
“இவன் என் தம்பிடா. பாண்டிச்சேரி நாடகத்துறையில் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறான்.


ஒரு பத்திரிக்கையில் அப்போது என்னைப்பற்றி அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், மணிக்கொடி சிட்டி, புதுவை முன்னாள் துணை வேந்தர் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகியிருந்தது. அதன் நகல் ஒன்றை கோணங்கியிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவனை சந்தித்த போது என்னிடம் சொன்னான். “ என் தம்பி கிட்ட அதை கொடுத்தேன். அவன் சொன்னான் ‘இந்த ஆளை இவங்க நல்லா மொட்டை அடிச்சிருக்காங்க.’
உண்மையில் ஜாம்பவான்கள் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் பற்றி விளக்குவது என்றால் ஒவ்வொன்றுமே ஒரு சிறுகதை போல விரியும்.
ஆனால் கோணங்கி இப்படி மட்டையடி தான் அடிப்பான். 


கோணங்கிக்கு நான் எவ்வளவோ செலவழித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் என்னை மொட்டையடித்தது என்றால் அதில் பிரதான இடம் கோணங்கிக்கு உண்டு தான்.
Invariably, a taker and not a giver. Precisely, Konangi is a sponger.

திருப்பூரில் இருந்த நாட்களில் ஒரு முறை நான் போன் பேசிய போது கோணங்கி சொன்னான் “தமிழ்நாட்டில ஒருத்தன் திருப்பூருக்கு போயிட்டான்னா அவன் அகதின்னு தான் அர்த்தம். ராஜநாயஹம் நீ அகதி ஆயிட்டியேப்பா.”

இப்படி என்னிடம் பல சலுகைகள் அனுபவித்த ஒருவர் பேசுவது எரிச்சலாக இல்லையா என்றால் இல்லை.  இல்லவே இல்லை


ஒரு பத்திரிக்கையில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். தனுஷ்கோடியில் கோணங்கி தன் அம்மாவை நினைத்து கதறி அழுததாக.

‘என் பிள்ளை அழுங்குரல் கேட்குதே’ என்று கடலம்மையாய் அலைகள் தவித்திருக்கும் வாசக ஷற்புத்திரரே.
”சிருஷ்டியின் எண்ணற்ற மாய உருக்கள் தோற்றத்திலும் மொழியிலும் வடிவமாகக் கூடுகிறதே” என்பான் கோணங்கி.
”அம்மா மறைந்துலவும் இந்நாட்களில் நைந்து போன ஹிருதய பூமியில் வளரும் மரத்தைப் பாதுக்காக்கவே அகதிப்பறவைகளின் உதிர் இறகுகளோடு திரிந்து கொண்டிருக்கிறேன்” என்பவை ச.முருகபூபதியின் வரிகள்.

Aug 25, 2018

ராஜநாயஹம் எழுதுவது
ராஜநாயஹம் எழுதுவது
 வானில் நிலவு, நட்சத்திரங்களை மறைக்கும் மேகம் சிறகால் வருடுவது போல, பூச்சொரிதல் போல தூறலாய் பொழியும் சாரல்.

மீன் நீரில் நீந்தும் வழியை இதுவென்று எப்படி வகுக்க முடியாதோ, வானில் சிறகடிக்கும் பறவையின் பாதையை எப்படி நிர்ணயிக்க முடியாதோ அப்படித்தான் ராஜநாயஹம் வாழ்வும் எழுத்தும்.

 எழுத்தின் உள்ளடக்கம் பன்முகமாய் விரியும் தூரிகையின் வண்ண ஓவியமா?    
சீரான நீரோட்டம் காணாத நுரைத்துப் புடைக்கும் புனலா?
சிக்கலான இழைகளா? மணல் கோடுகளாய் பல் வேறு பத்திகள்.

 குளிர்ந்த பின்னிய மேகச்சடையின் சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன் எடுத்துக்கூறுவது தான் என்ன?

காலத்தின் அசுர உருவத்தை சிமிழில் அடைக்கும் முயற்சி தானா  என் எழுத்து?  நெகிழ்ந்த ’பாந்தவ்ய சிரிப்பு’ கூடிய வாக்கிய ஆலாபனையா?
நெஞ்சை அமுக்கி வலிக்கும் புண் தான் இந்த வார்த்தைகளின் அணிவகுப்பு. வீரிய வாசகம்.

பிரம்ம தண்டத்தை தலையில் வைத்தாற் போல சொல்லப்பட்ட ரிஷி வாக்கு இது என்ற பிரமை ஏதும் எனக்கில்லை. ஆனாலும் தழல் வீரம் காட்டும் உக்கிரம் இந்த என் சொல் சித்திரங்கள்.
ராகம் என்னவென்று கண்டுபிடிக்க சிரமமான சங்கீதம்.

வாழ்க்கையின் குரங்குத்தனத்திற்கு கட்டுப்பாடு இல்லையெனில் எழுத்தின் குரங்குத்தனத்திற்கும் அப்படியே தான்.

தன்முனைப்பு  அற்ற கவனக்குவிப்பு.

பரிச்சயம், பழக்கமில்லாதவர்களின் உணர்வுகளை சிராய்த்து காயப்படுத்தும் புதுமை.

சொல்வது என்ன என்பது முதல் தடவை முற்றாக புரிந்து விடுவதில்லை என்பதனாலேயே மீண்டும் படிக்க வேண்டியிருக்கிற எழுத்து.

எழுத்து என்பதே அவஸ்தை தான். சமூகத்திலிருந்து விலக்கப்படுதல் என்பதை விட விலகுதல். பிரிக்கப்படுதல் என்பதல்லாமல் பிரிதல். யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.
நகுலன் சொல்வது போல தனியாக இருக்கத்தெரியாதவன் எவனும் எழுத்தாளனே அல்லவே.
Aug 22, 2018

’எச்ச’ எங்கெங்கும், எப்போதும்,மனுஷ்ய புத்திரன் மீது ஹெச்.ராஜா பாய்ந்திருப்பதை அறியும் போது எனக்கு 2002ம் ஆண்டு நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எச்சத்தனம் அரசியல் உலகில் மட்டுமல்ல முதிர்ந்த ஞான இலக்கிய சாகரத்திலும் உண்டு. எங்கெங்கும், எப்போதுமான சாசுவத விஷயம்.
ஊட்டி நாராயண குருகுலத்தில் ஜெயமோகன் ஒரு எதிர் அழகியலை( தளையசிங்கத்தின் “ தொழுகை” சிறுகதை) முன்வைத்த போது நான் ஒரு எதிர் அழகியலை முன் வைத்தேன். அது ஏற்படுத்திய சர்ச்சை அப்போது பிரபலம். நான் எழுதிய “ ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை” திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் வாசித்தேன். அந்த கட்டுரை லாஸ் ஏஞ்சல்ஸ் இணைய இதழ் திண்ணை.காம், காலச்சுவடு 42வது இதழ் இரண்டிலும் அவரவர் வசதிக்கு எடிட் செய்யப்பட்டு வெளி வந்தது. அப்போது மனுஷ்யபுத்திரன் காலச்சுவடு ஆசிரியக்குழுவில் இருந்தார்.
சொல் புதிது 10வது இதழின் தலையங்கத்தில் ஜெயமோகன் 'காலச்சுவடு அனுப்பிவைத்த ஒற்றன் தான் ராஜநாயஹம்' என்று எழுதிய கையோடு தன் பூர்வீகப் பார்வையுடன் 'ராஜநாயஹத்தின் கட்டுரையை வாசிக்க இடம் கொடுத்த அமுதன் அடிகளும், (கிறிஸ்துவ பாதிரி) கட்டுரையைப் பிரசூரித்த மனுஷ்ய புத்திரனும் (முசல்மான்) தங்களது மதக் காழ்ப்புணர்வின் காரணமாகவே இந்து நிறுவனமான நாராயண குருகுலத்தின் மீது தாக்குதல் தொடுத்ததாக துப்பறிந்து எழுதியிருந்ததை இப்போதும் மறக்க முடியுமா?
ஒரே ரகம் தான். ஒரே முகம்.
Both are cut from the same cloth. They are two peas from the same pod.

Aug 13, 2018

நக்கீரனில் ராதாரவி கர்ஜனை


ராதாரவியின் ’கர்ஜனை’ நக்கீரன் தொடர். நூறு வாரங்கள் தாண்டி விட்டது. நான் சமீபத்தில் ஒரு இருபது வாரங்களாகத்தான் பார்க்கிறேன். நல்ல சுவாரசியமான சினிமா அனுபவங்கள்.
விஜயகாந்த், டி.ராஜேந்தர், பிரபு, கார்த்திக், சந்திரசேகர் இன்னும், இன்னும் பலர் படங்களில் இவர் நடித்திருப்பதைக் குறிப்பிட்டு அவையெல்லாம் வெற்றிப்படங்கள் என்கிறார் ராதாரவி. ரொம்ப பூரிப்புடன் இப்படிசொல்கிறார்.
அந்த படங்கள் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. தமிழில் ஓரளவு நல்ல படங்களாக தேர்ந்து எடுத்து பார்த்தவன் நான். கமல் படங்கள் மீது தான் அதிக விருப்பம். முக்கிய உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள் இப்படி கவனம் இருந்ததால் ராதாரவி நடித்திருக்கிற அந்த வெற்றிப் படங்கள் நான் பார்த்ததில்லை.
ஒன்று தெரிகிறது. அன்று தமிழின் நல்ல தரமான படங்களில் ராதாரவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது திரையுலக சூழல் மாறியுள்ளதால் மிஸ்கின் படத்தில் கூட அவரால் நடிக்க முடிந்திருக்கிறது.
ராதாரவியின் சினிமாவுலக அனுபவங்கள் படிப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. ராதாரவி நடித்த இந்த மாதிரி படங்கள் தான் கடந்த காலத்தில் தமிழின் சிறந்த படங்கள் என்று ஒரு கத்துக்குட்டி நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ராதாரவி பல படங்களில் தன் நடிப்பைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படியொன்றும் பாத்திரஙகளை கையாண்டவரில்லை. மெருகூட்டியவரும் அல்ல.
எம்.ஆர்.ராதாவின் திறன் மிக்க நடிப்பு வேறு. ராதாரவி நடிப்பு வேறு.
எம்.ஆர்.ராதா சீரியஸ் ரோல் செய்யமாட்டார். ஆனால் எம்.ஆர்.ஆர்.வாசு குணச்சித்திர நடிப்பிலும் முயற்சித்தார்.
ராதாவின் வக்கிர நடிப்பை அவருக்கு பின் வெளிப்படுத்தியவர்கள் வில்லன் சத்யராஜும், மணிவண்ணனும் தான். மணிவண்ணன் என்ன பிரமாதமான ஃபார்மில் இருந்தார்.
வில்லன் நடிப்பில் கூட ரகுவரன், பிரகாஷ்ராஜ் தரத்திற்கு, அருகில் ராதாரவி நிற்க முடியுமா?

ராதாரவியின் நக்கீரன் கட்டுரையில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. பல செய்தி புத்தம்புதியவை.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஆரம்ப காட்சி. ’என்ன பார்வை, உந்தன் பார்வை’ பாட்டில் வரும் அந்த Open top Convertible car! சிவப்பு நிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் எம்.ஆர் ராதாவுடையதாம். அவரிடம் கேட்டுப் பெற்று இயக்குனர் ஸ்ரீதர் பயன் படுத்தியிருக்கிறார்.
இந்த காரில் எம்.ஆர்.ராதா வைக்கோல் போர் ஒரு முறை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதை வைத்து உலவும் பிரபல வதந்தி கட்டுக்கதை. வைக்கோல் போர் வேண்டும் என்று மனைவி கேட்டுக்கொண்டதால் அவசரத்திற்கு காரில் ஏற்றியிருக்கிறார். வேறு Motive எதுவும் கிடையாது என்ற உண்மை ராதாரவி மூலம் தெரிய வந்திருக்கிறது.
கருணாநிதி உட்பட டணால் தங்கவேலு வரை எல்லோரையுமே ராதாரவி பாசத்துடன் அப்பா என்றே சொல்கிறார்.
டி.எஸ்.பாலையாவை பெரியப்பா என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவை விட ஏழு வயது இளையவர். ( நான் தான் பாலையா நூற்றாண்டின் போது தமிழ் இந்து பத்திரிக்கையில் 2014ல் அவருக்கு அஞ்சலி கட்டுரை எழுதியவன்.)
ஜுனியர் பாலையா தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு சீனியர். ஆனால் ராதா மகன் யோகக்காரர். அவருக்கு சினிமாவுலகிலும் அரசியலிலும் நல்ல அந்தஸ்து கிடைத்தது.
........................................

Aug 8, 2018

அவர் தான் கலைஞர். பார். அவர் தான் கலைஞர்!


தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பலத்த அடி. சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விட்ட நிலை.எம்.ஜி.ஆருக்கெதிரான மு.கருணாநிதியின் மகத்தான முதல் வெற்றி. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானவுடன் எம்.ஜி.ஆர் ஆட்சி டிஸ்மிஸ்.
தலைப்பு செய்திக்கு பொருத்தமாக ஏதாவது எழுதவேண்டும் என்று மதுரை ஏ.ஏ. ரோட்டில் தி.மு.க தோழர்கள் என்னிடம் கேட்டனர்.தி.மு.க.மன்றத்தின் முகப்பில் ஒரு போர்டு. அதில் அவ்வப்போது ஏதேனும் எழுதிப் போடுவது மன்றத்தாரின் வழக்கம்.
எம்.ஜி.ஆரை கிண்டல் செய்வது போல வாசங்கள் ஏதேனும் சொல்ல முடியுமா? நான் யோசிக்காமலே என் நினைவில் தெளிவாய் இருந்த ஒரு கவிதையின் வரிகளை அவர்களிடம் எழுதிப்போடச் சொன்னேன். ”உங்கள் தலைவர் முன்னரே எழுதிய கவிதையொன்றின் ஒரு நான்கு வரிகள் தான் இவை. இதனை மன்றத்தின் போர்டில் எழுதுங்கள். எழுதி அவர் பெயரை போடுங்கள்.”அந்த வரிகள்
“ மான் போட்ட கணக்கை வேங்கை அழித்து விடும்.ஏன் போட்டாய் தப்புக்கணக்கென்று வேங்கையை வேடன் வீழ்த்திடுவான்.இது தான் உலகு”
ஏ.ஏ. ரோட்டில் பலரும் நின்று நின்று இந்த மு.க.வின் கவிதை வரிகளை எம்.ஜி.ஆர் அரசு டிஸ்மிஸ் ஆன அன்று வாசித்து சென்றார்கள். அந்த அரசியல் சூழலுக்கு மிகப்பொருத்தமான வரிகள் கருணாநிதி முன் எப்போதோ எழுதியவை. கரகரத்த குரலில் அவர் சொல்வது போலவே இருக்கிறதல்லவா?
………………………………………………………….முதல் முறை முதல்வராய் மு.க இருந்த போது அவர் கவிதை வாசித்த ஒரு கவியரங்கம். குன்றக்குடி அடிகளார் தலைமை.
தமிழக முதல்வர் கவிதை வாசித்தார்.“எனக்கிருக்கும் எத்தனையோ வேலைகளில் இதுவும் ஒன்று என கிறுக்கும் என்னை ஈங்கழைத்தார் பெருந்தவக்கிறுக்கர்” என்று ஆரம்பித்தவுடன் ஆரவாரம் எப்படியிருந்திருக்கும்?
ஒரு சம்பவம் ஒன்றை விவரித்தார். வள்ளியை தேடி முருகன் மலையேறுகிறான். அப்போது எதிர்ப்பட்ட முதியவர்கள் சிலரிடம் வள்ளியெங்கே என்று கேட்கிறான். மலையுச்சிக்கு சென்றால் காணலாம் என வயதானவர்கள் சொல்கிறார்கள்.
மலையுச்சிக்கு செல்கிறான் முருகன். மு.க சொல்கிறார். “கண்டவிடமெல்லாம் வள்ளிக்கிழங்கு! கிழங்களின் குறும்பு தான் என்னே! வள்ளியெங்கே என்று கேட்டால் கிழங்கினை காட்டி விட்டு சென்று விட்டார்களே!”
இந்த கவியரங்கத்திலோ அல்லது வேறு கவியரங்கம் ஒன்றிலோநிலா, தென்றல் ஆகிய தலைப்பில் கவிதை வாசிக்க வேண்டிய இருவர் வரவில்லையாம். மு.க. வின் கிண்டலான எதிர்வினை: “கவியரங்க விழா பகலில் நடப்பதால் நிலா வரவில்லை. கவியரங்கம் குளிர் சாதன அறையில் நடப்பதால் தென்றலும் இங்கே நுழையவில்லை”

ஒரு விண்ணப்பம்.
அவருடைய போராட்டமான அரசியல் வாழ்வுக்காகவும், எவரோடும் ஒப்பிட முடியாத தன்மைக்காகவும்
பாரதரத்னா விருது கருணாநிதிக்கு உடனே, உடனே வழங்கப்படவேண்டும்.அது தகுதியும் நீதியுமாகும்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு கருணாநிதிக்கு கொடுக்கப்படவேண்டும் என்று சொன்னால் தான் அபத்தம்.

Aug 7, 2018

Miracles Just happen


மதியமும் இல்லாத மாலையும் இல்லாத மயக்க பொழுதில் சின்மயா நகர் பஸ் ஸ்டாப்பில் நான். பஸ் வரவில்லை. ஷேர் ஆட்டோ எதிலும் இடம் இல்லை.
ஒரு ஸ்கூட்டர் இளைஞனிடம் லிஃப்ட் கேட்டேன். உடனே அவர் நிறுத்தினார். நான் இரைஞ்சலாக ’பஸ் வரவில்லை’ என்று விளக்கமுனையுமுன்னே “ நீங்கள் ராஜநாயஹம் சார் தானே?” என்று முகம் மலர்ந்தார்.”உங்களை படிக்கும் வாசகன் நான்”
“எப்படி என்னை அடையாளம் கண்டீர்கள்?”
”உங்களை தொடர்ந்து படிப்பவனுக்கு அது சிரமமான விஷயம் இல்லை”
ஸ்கூட்டரில் ஏறிக்கொண்ட பின் தெரிய வந்தது - அவர் பெயர் சாமிநாதன் ராமசாமி. திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். நாளை அவர் எடுக்க இருக்கும் ஷார்ட் ஃப்லிம்க்காக கிண்டியில் ஆர்ட் டைரக்சனுக்காக செலவு செய்துள்ள நிலை. நாளை ஷூட்டிங் கேன்சல் ஆனால் நிறைய நஷ்டம். அந்த நிலையில் அது விஷயமாக அலையும் நிலையில் எனக்கு லிஃப்ட் கொடுக்கிறார். எனக்கு கவலை கூடி விட்டது.
’ இந்த ஷூட்டிங் பிரச்னை இல்லாவிட்டால் உங்களை ஆலப்பாக்கம் வந்து வீட்டிலேயெ விட்டிருப்பேன். ’ என்று வேதனையோடு வருத்தப்பட்ட்டார். நான் அவரைத் தேற்றி என்னை ஆற்காட் ரோட்டில் என்னை இறக்கி விட்டால் போதும் என்றேன்.
வேம்புலிஅம்மன் கோவில் வரை நடந்து வந்தேன். பஸ் கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோ ஒன்றில் கூட ஏறவே முடியவில்லை.
ஒரு டாக்ஸி வந்து நின்றது. போரூரா சார் என்று அதில் இருந்த மூன்று இளைஞர்கள் கேட்டனர். ”நான் ஆலப்பாக்கம் போக வேண்டும். ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கிக்கொள்கிறேன்.” என்றேன். கதவை திறந்து ’ஏறுங்க சார்’ என்று ஒரு இளைஞன் சொன்னான். “ நீங்க புண்ணியம் நிறைய செய்திருப்பீர்கள். சரிதானே.” என்றான். என்னிடம் வார்த்தையில்லை.
”சாருக்கு ஏசியை போடு” 
கார் விண்டோக்களை ஏற்றினார்கள் இருவர்.

Miracles never cease in this world!

வளசரவாக்கம் தாண்டி ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கி ரோட்டை குறுக்கே தாண்டி ஆலப்பாக்கம் ரோட்டில் நுழைந்தேன்.
பால் வாங்குவது, ரொட்டி வாங்குவது, தக்காளி,பச்சை மிளகாய், தேங்காய், முட்டை வாங்குவது எல்லாம் இவ்வளவு சவாலான விஷயமா?!
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
மு.கருணாநிதி மரண செய்தி வெளியிடப்படுமுன்னரே வீட்டுக்குள் நுழைந்தேன்.

......................................

Aug 3, 2018

காவன்னா காளிமுத்து


கா.காளிமுத்து சிவகாசி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்த போதெல்லாம் கூட மதுரையில் ஒரு டுட்டோரியல் கல்லூரி(VTC)யில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் பிரபலமானதெல்லாம் தி.மு.கவிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்தபோது தான்.
தி.மு.கவையே எம்.ஜி.ஆர் கட்சி என்று தான் பாமர மக்கள் சொல்வார்கள். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காரில் பயணம் செய்து கொண்டிருந்த தி.மு.க ஸ்தாபகர் அண்ணாத்துரையிடம் விராலிமலையில் வெள்ளந்தியாக பாமர அம்மையார் ஒருவர்
“ நீங்க எம்.ஜி.ஆர் கட்சி தான?” என்று கேட்டதுண்டு.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பாணி தொனியில் ஆர்.எஸ்.மனோகர் போல தோளை குலுக்கி காளிமுத்து மேடையில் பேசுவார். சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அடுக்கி பேசி எல்லா கூட்டங்களிலும் பலத்த கைத்தட்டல் வாங்குவார். Soap box orator.என் மாமனார் எஸ்.எம்.டி. சந்திரனிடம் பல உபகாரங்கள் பெற்றவர். எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த போது பொருளாதாரத்தில் காளிமுத்து மிகவும் பின் தங்கியிருந்த நிலை.

மேற்கு முகவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த என் மாமா தன் சொத்தில் இருந்து கட்சிக்கு செலவழித்தவர்.
இரண்டாவது மனைவி நிர்மலா காளிமுத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன நிலையில் என் மாமா ஒரு கனமான ரெட்டை வட செயினை காளிமுத்துவிடம் கொடுத்து, அதை மம்சாபுரம் அறிவரசன் மூலமாக அடகு வைத்து அந்த பணத்தில் தான் ஆஸ்பத்திரி செலவை சமாளித்தார். நகையை திருப்பி தரவில்லை. நகை மதிப்பு பெரிய அளவிலானது. அந்த நகையை அடகிலிருந்து மீட்க காளிமுத்து அக்கறை காட்டவில்லை.
அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்திராத காலம். இந்த சம்பவமே 1977க்கு முன் நடந்த விஷயம்.

என் மாமா பெரிய முரடர். காளிமுத்துவிடம் கேட்கும்போது “ திருப்பி தந்து விடுகிறேன், அண்ணாச்சி” என்று பவ்யமாக சொல்லியிருக்கிறார்.
வேறு வழியில்லாமல் ராமாவரம் தோட்டத்திற்கு போய் எம்.ஜி.ஆரிடமே என் மாமா நடந்த விஷயத்தை சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் கோபமாகி உடனே காளிமுத்துவை தோட்டத்திற்கு வரவழைத்து ’உடனே சந்திரனிடம் வாங்கிய நகையை திருப்பிக்கொடு’ என்று டோஸ் விட்டார்.
நகை திருப்பப்பட்டு என் மாமா கைக்கு வந்தது.
ஒரு கசப்பான நிகழ்வு தான்.

1977க்கு பின்னர் காளிமுத்து ஊராட்சி துறை மந்திரியாகி, 1980ல் விவசாய அமைச்சராக இருந்த நேரத்தில் தாமரைக்கனி எம்.எல்.ஏ ரொம்ப பிரபலம். அப்போது என் மாமனாரிடம் காளிமுத்து “ என்ன அண்ணாச்சி, சும்மா இருந்த பயலை பெரிய ஆளாக்கி விட்டுட்டீங்க. அவன் காமராஜ் நாடார விட பெரிய ஆளாயிடுவான் போல இருக்கு.” என்று அங்கலாய்ப்பாக கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டே ஸ்ரீவில்லிபுத்தூரில் சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர் காளிமுத்து. மூன்றாவது பீரியடில் கூட விவசாய மந்திரியாக இருந்தார்.
துக்ளக் சோ தன் பத்திரிக்கையில் அடுத்த திராவிட தலைவராக காளிமுத்துவை கணித்து எழுதியிருந்தார். கேள்வி பதிலில் கூட இப்படி சொல்வார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவில்லை.
1989ம் ஆண்டில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவரை நான் மதுரை ரயில் நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் என்னைக் காட்டி ஒரு வக்கீல் “ மாமா, ராஜநாயஹம் யார் தெரியுமா? எஸ்.எம்.டி.சந்திரனின் மருமகன்” என்றார்.
அப்போது என் மாமனார் இறந்து இரண்டாவது வருடம். காளிமுத்து என்னை ரயில் நிலைய ஓய்வறைக்கு அழைத்து சென்று ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். “சந்திரனுக்கு நீங்க மருமகன்னா எனக்கும் மருமகன் தான். நானும் சந்திரனும் சகோதரர்களை விட நெருக்கமான நேசம் பாராட்டியவர்கள்." என்றார்.
ஜெயலலிதாவை வறுத்து எடுத்தவர். வசந்த சேனையென்று தாக்கினார். காளிமுத்து பயன் படுத்தியதால் பிரபலமான ஒரு பழைய சொலவடை “கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது.”
ஜெயலலிதாவுடன் சமாதானமாகி, சமாதானமாகி என்ன, சரண்டர் ஆனார்.
ஜெயலலிதாவுக்கு முதல்வராவதில் சட்ட சிக்கல் நேரத்தில் சபாநாயகராயிருந்த தன்னை முதல்வர் ஆக்க மாட்டாரா என்று தவித்தார். ஆனால் பன்னீர் செல்வம் முதல்வர் என்பதை காரில் போகும்போது ரேடியோவில் செய்தியாக அறிந்த போது உடைந்து போனவர் தான். தனக்கு ஜெயலலிதா இழைத்த பெருத்த அவமானமாக இதை கருதினார். அதன் பின் அவர் உடல்நிலையும் மோசாகியது. இந்த அதிர்ச்சி தான் காளிமுத்து மரணத்தை துரிதப்படுத்தியது.
…………………………………

Aug 2, 2018

சந்தேக தாமஸ் கேள்விகள்

ஆத்திமூக்காக்காரர்கள் தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டாலின் செயல்பாடு போற்றப்படுகிறது. தன் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு, நேரில் போய் ஆறுதல் கூறுகிறார்.
எதிர் கட்சித்தலைவராக இருக்கும் போது இப்படி செய்யும் ஸ்டாலின் நாளை ஆட்சியை கைப்பற்றிய பின் இந்த கண்ணியத்தை கடைப்பிடிப்பார் என்று உறுதி சொல்ல முடியுமா? ஏனென்றால் Politician out of power is a different species.
When the devil is sick, it would be a saint.
இவர் முதல்வராய் இருக்கும் போது, இந்த வன்முறை நடந்த பின் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ, வட்டச்செயலாளர் போன்றவர்கள் பிரியாணி கடை, போலீஸ் என்று இரு பக்கத்திலும் தங்கள் பவரை காட்ட முடியாத படி ஸ்டாலின் மூக்கணாங்கயிறு போடுவாரா? அரெஸ்ட் செய்யமுடியாத படி குற்றவாளிகள் தலைமறைவாக கட்சி மேல் மூடிகளே உதவாத படி தடுப்பாரா?
இன்றைய நிலவரத்தில் அடுத்து ஆட்சிக்கு வர அதிக வாய்ப்பு தி.மு.கவுக்கு தான்.
இப்போதே அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க குடும்ப சொந்தங்கள் வற்புறுத்துகின்றதாக தகவல்.
அழகிரிக்கு கட்சியில் இடம் கொடுத்த பின் ஸ்டாலின் ஆட்சியில் மதுரையில் அராஜகம் நடக்காது என்று உத்தரவாதம் தரமுடியுமா? அப்படி மதுரையில் அழகிரி அடிப்பொடிகள் தடியெடுத்து தண்டல்காரர்களாக மாறினால் அண்ணனையோ, மதுரை ரௌடித்தனத்தையோ கண்டிக்கிற பேராண்மை அவருக்கு இருக்குமா?
ஏன்னா, ஏயன்னா, போன தடவ தீமூக்கா ஆட்சியில ஸ்டாலினே மதுரைக்குள்ள போக சிரமப்பட்டாரு.

சோரம் செய்யாமல், தீமை செய்யாமல் ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்துமில்லை என்று தான் பாரதி சொல்லியிருக்கிறான்.