சிவாஜி கணேசன் இறந்த அன்று மாலை .
அவர் பால்ய காலத்தில் வாழ்ந்த திருச்சிசங்கிளியாண்ட புரத்தில் இருந்தேன்.
ஏன் இருந்தேன் ? அன்று தான் அங்கே அதையொட்டி இருந்த எம்.கே தியாக ராஜ பாகவதரின் சமாதியை கண்டு பிடித்தேன் .
அவருடைய சமாதியை யாரோ ஒருவர் கழிவறையாக தினமும் உபயோகித்து வருகிறார் என தெரிந்தது . ( சாரு நிவேதிதா அவருடைய சின்னப்பா பற்றிய உயிர் மை கட்டுரையில் நான் தியாகராஜபாகவதர் சமாதிக்கு போனவிஷயத்தையும் , கிட்டப்பா பற்றிய உயிர்மை கட்டுரை யில் இது குறித்த என் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறார் .)
ரொம்ப புதிதான கொஞ்ச நேரத்திற்கு முன் கழிக்கப்பட்ட மலம் ! அதோடு அந்த பிரபல பிரமுகரின் சமாதியை தினம் தன்னுடைய பிரபலமான கழிவறை யாக பயன்படுத்தும் அந்த பிரகிருதி யின் முந்தைய நாட்களின் மலக்கழிவுகள் காய்ந்த நிலையில் சமாதி முழுவதும் பரவலாக .அந்த பிரகிருதிக்கு இதில் ஒரு குரூர சந்தோசம் . பிரபலமான கழிவறை .
எனக்கு ஷேக்ஸ்பியர் உடைய ஜூலியஸ் சீசரில் மார்க் ஆண்டனி யின் புலம்பல் தான் நினைவுக்கு வந்தது .
நான் வாய் விட்டே சொன்னேன் .
“Oh, MKT!
Were all your conquests, glories and triumps
Shrunk to this little measure ?”
நடித்தது பதின்மூன்று படங்கள் . அதிலும் எட்டு படங்கள் தான் வெற்றி பெற்றன . ஆனால் தமிழ் ஜன சமூகம் அவருக்கு கொடுத்த அந்தஸ்து மரியாதை ... அவருடைய பிராபல்யம் !
தேஜஸ் ! உன் பெயர் எம்.கே. டி !!
தங்க தட்டில் சாப்பிட்டு , பன்னீரில் குளித்து சகல சுக போகங்களையும் அனுபவித்து பின் தன் வாழ் நாளிலேயே அத்தனை துயரம் ,வர்ஜனம் ,இழிவுகளையும் பார்த்து விட்டு மறைந்தால், இறந்த பின்னும் எ தொடரும் அவமானம் . சமாதியே மலஜலமாக .....
கடல் அலை என புலம்பிய மனதுடன் அங்கிருந்து கிளம்பி வெளி வரும்போது அங்கே சங்கிலியாண்டபுரத்தில் பரபரப்பாக பலரும் பேசிகொண்டிருந்தார்கள் .
சிவாஜி இறந்து விட்டார் ! டிவியில் அவர் இறந்த ஆஸ்பத்திரியில் கூடி நிற்கும் பிரமுகர்களை காட்ட ஆரம்பித்தார்கள் .
ஒன்பது வருடங்களுக்கு முன்
பெமினா ஹோடேலில் சிவாஜி கணேசன் என்னை பார்த்து சொன்ன வார்த்தைகள்
OK, Youngman!
I’m leaving!!