Share

Jul 31, 2020

பிச்சாண்டார் கோவில் சொத்து

தியாகபிரும்மத்தின் சஹானா ராக
 கீர்த்தனை "கிரிபை"
 M.D.ராமநாதன் பாடியதை 
எத்தனை தடவை கேட்டாலும் 
திகட்டவே செய்யாது. 
அதோடு அப்போது ஏற்படும் 
ஆத்மீக அனுபவம் விசேசமானது.
இந்த பாக்யம் போதுமே 
என ஒரு மனநிறைவு ஏற்படும்.

19 வது நூற்றாண்டில்
 மகா வைத்யநாத பாகவதர் 
இந்த சஹானா "கிரிபை" யை 
அனுபவித்து பாடுவாராம். 

ஒவ்வொரு கச்சேரியிலும் 
விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். 
ரசிகர்களும் அவர் மறந்தாலும் 
ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள்.

ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர் 
இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது 
மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார். 

நெகிழ்ந்து கண்ணீர் மல்க 
சுப்பையர் அவர்களை 
இவர் தழுவிக்கொண்டாராம்.

அதன் பிறகு எந்த கச்சேரியிலும் 
அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது.

கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம்.
 "அது பிச்சாண்டார் கோவில் சொத்து "
 என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.

.....

Jul 30, 2020

சாரு நிவேதிதாவின் மயானக்கொள்ளை நாடகம்


இரண்டு வருடங்களுக்கு முன்
சாரு நிவேதிதா தன் ’மயானக்கொள்ளை’ நாடகத்தை
கூத்துப்பட்டறையில் வாசித்துக்காட்ட வந்திருந்தார்.
மு.நடேஷ் “ வா, மாப்ள” என்று அன்போடு வரவேற்றார்.
மயானக்கொள்ளை ஒரு அற்புதப் படைப்பு.
நான் தான் மயானக்கொள்ளையை நடிகர்களுக்கு வாசித்துக் காண்பித்தேன்.
இப்படி வாசிப்பது Closet Drama வகை.
அத்தனை கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நடிப்பையும் வாசிக்கும் போது கொண்டு வரவேண்டும்.
கேட்பவர்களுக்கு காட்சியாக விரியும்.
கேட்டவர்கள் அனைவரும் அதை உணர்ந்தனர்.
சாரு நிவேதிதா “ ராஜநாயஹம், ரொம்ப நல்லா வாசிச்சீங்க.
சத்தியமா என்னால நிச்சயமா
உங்கள மாதிரி வாசிச்சிருக்க முடியாது.” என்று
ரொம்ப விசாலமான மனத்துடன் பாராட்டினார்.
சாரு மேலும் சொன்னார்”உங்களுக்கு ஏதாவது செய்ய முடியலயேன்னு எனக்கு வருத்தமா இருக்கு”
எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அன்றைக்கு
அவர் நினைத்ததை
நடத்திக்காட்டி விட்டார்.
R.P. ராஜநாயஹம்”சினிமா எனும் பூதம்” நூல்
இந்த வருடம் ஜனவரியில்
புக் ஃபேரில் வெளி வந்தது.

Jul 28, 2020

Carnal Thoughts - 51



புணர்ச்சி இயல்பு விகாரம்

இந்த வார்த்தை தொனி
 ஏதோ Sexual Perversion என்பது போல 
அர்த்தம் தருகிறதோ.

ஒரு ஃபாரின் ஜோக்.
 இன்டியனைஸ், டமிலைஸ் செய்திருக்கிறேன்.

வாழ்க்கை வெறுத்துப்போன ஒரு கிழவி 
ஒரு பாலத்தின் மேல்
 தற்கொலை முயற்சியில் இருந்திருக்கிறாள்.
 குதித்து தற்கொலை செய்யப்போகிறாள். 

பாலம் நல்ல உயரம். 
கீழே தண்ணீர் சுத்தமாக கிடையாது. 
குதித்தால் நொடியில் மரணம் நிச்சயம்.
 உடனே, உடனே பிணமாகிப்போவாள்.

ஒரு சின்ன பயல் “ இருங்க, பொறுங்க” என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி
 ஓடி வந்திருக்கிறான்.

கிழவி அவனைப் பார்த்தவுடன் நினைத்திருக்கிறாள்
‘யாரோ மனிதாபிமானி போல இருக்கு. 
ச்சே..சாக விடமாட்டான் போல இருக்கே’

அந்த அயோக்கிய பையன் பக்கத்தில் வந்தவுடன் மூச்சிறைக்க, அந்த கிழவியிடம்
 “நீங்கதான் தற்கொலை பண்ணிக்கப்போறீங்களே, 
உங்கள நான் ஒரு டொக்கு போட்டுக்கறேனே” என்று கேட்டிருக்கிறான்.
Kinky sex rogue.

சின்னப்பெண்ணான போதிலே,
குமரியாய் இருந்த காலத்திலேயே, ஸ்திரிலோலர்களை கண்ட போதெல்லாம் கூந்தலை விரிச்சிப்போட்டு, 
ஒத்த முலைய பிச்சி வீசி, 
சிலம்ப உடச்சி 
“அத்தனையும் மாணிக்கப்பரல்டா” என்று 
ஆவேசமானவளாக்கும் அந்த கிழவி.

அந்த பழக்கம் சுடுகாடு வரைக்கும் இருக்குமல்லவா?

அயோக்கிய பயல் டொக்கு என்றவுடன்
 கிழவி பதறிப்போய்
 கூப்பாடு போட்டிருக்கிறாள்.
“ ச்சீ போடா பொறுக்கி, 
எனக்கு கற்பு தான்டா பொக்கிஷம்”

அயோக்கிய பையன், அந்த படவா ராஸ்கல் 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல்
 “சரி, பரவால்ல. 
நான் கீழ பாலத்துக்கு அடியில போய் 
வெயிட் பண்றேன்.”

ஒன்னாம் நம்பர் வெங்கம்பய.

தமிழ் இலக்கணத்தில்
 ’புணர்ச்சி இயல்பு விகாரம்’ வருகிறது.
தமிழ் இலக்கணம் என்றாலே 
எனக்கு படிக்கிற காலத்தில் பயம்.
கணக்கு, தமிழ் இலக்கணம் இரண்டுமே
 எனக்கு பிடிக்காத பாடங்கள்.

கணக்கு பள்ளி வாழ்க்கையோடு முடிந்து விட்டது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த காலத்திலும் 
முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் இலக்கணம் விரட்டிக்கொண்டு வந்தது. 
விளக்கெண்ணெய் குடிப்பது போல 
இலக்கணம் படிக்க வேண்டியிருந்தது. வெறுப்பில்லை. பயம். 
என்ன படித்தேன் என்பதெல்லாம் 
எதுவுமே நினைவில் இல்லை.

படிக்கிற காலத்துக்குப்பின்னால
 தமிழ் இலக்கணம் பற்றி நினைத்து பார்க்க நேரம், அவசியம் இருந்ததே இல்லை. 
ரெண்டு மூணு நாளா
 'புணர்ச்சி இயல்பு விகாரம்' போல
 வேறு சில ஞாபகம் வருகிறது.

 'கூறு கெட்ட'ன்னு திட்டுறத போல
' ஈறு கெட்ட எதிர் மறை வினையெச்சம்',

 அப்புறம் தேன்மாவு, புளிச்ச மாவு கணக்கா 'தேமா' , 'புளிமா' ..

சாலமன் பாப்பையா வகுப்பு போரடிக்கும். வகுப்பிற்கு வெளியே 
அவரிடம் பேசுவது ரொம்ப ஜாலி.
தமிழ் டிபார்ட்மெண்ட்டின்
 ஜென்ட்டில் மேன் பாப்பையா.

Jul 26, 2020

திருச்சி மாரிஸ் தியேட்டர் பாலத்தில்



திருச்சி மாரிஸ் தியேட்டர் பாலம் சிதிலமடைந்த நிலையில் பார்க்க கிடைத்தது. பள்ளிப்படிப்பு துவங்கி திருச்சி என் வாழ்வில் 
மிக முக்கியமான இடம் பெற்ற ஊர். 
எழுத்தில் அவ்வளவு சுலபமாக 
சொல்லி விட முடியாது. 

திருச்சி, நாகப்பட்டினம், கரூர், மதுரை, சென்னை, ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி. 
பன்னிரெண்டு வருடங்கள் வாழ நேர்ந்த திருப்பூர்.
இவ்வளவு ஊர்களும் என் வாழ்வோடு இணைந்தே வந்திருக்கின்றவை. 

இந்த மாரிஸ் பாலம் தான் 
எவ்வளவு பரவச நினைவுகளை எழுப்புகிறது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நான் திருச்சியில் பெற்றோர் குடியிருந்த புத்தூர் 
விஸ்வப்ப நாயக்கன் பேட்டை பங்களா வீட்டுக்கு
 வந்திருந்த போது திருச்சி மெயின் கார்ட் கேட் போக அருணா தியேட்டர் அருகில் 
ஆட்டோவில் ஏறுகிறேன். 

மனைவி, மகன்கள் இல்லாமல் 
அன்று  நான் மட்டும். 

பொதுவாக எந்த ஊரில் இருந்தாலும்
 திருச்சி வந்தால் திரும்புவதற்குள் இரண்டு முறையாவது குடும்பத்துடன்
 மெயின் கார்ட் கேட் போய், 
மாரிஸ் தியேட்டர், தெப்பக்குளம், மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு என்று ஒரு ரவுண்டு நிச்சயம். சலிக்கவே சலிக்காத இடங்கள். 
மைக்கல்ஸ் ஐஸ்க்ரீம், 
வடக்கு  ஆண்டார் தெரு ரமா கஃபே,
இம்பாலா பிரியாணி. 
திருச்சியில் இருந்த காலங்களில் ஆஹா.. சொல்லவே வேண்டாம். 

அருணா தியேட்டரருகில் கிளம்பிய ஆட்டோ உறையூர் வழியாக போய் மாரிஸ் பாலம் ஏறி இறங்கும் போது எதிரே வந்த பைக் காரன் மோதியதால் மூன்று குட்டிக்கரணம் போட்டது. 
இதே இடத்தில் தான். முன்னும் பின்னும் வந்த வாகனங்கள் நின்று விட்டன. ஆட்டோவை ஒட்டி டவுன் பஸ். எதிரேயும் ஒரு டவுன் பஸ். பல வாகனங்கள் இரு புறமும். எப்படி இவ்வளவு ட்ராஃபிக்கில் ஆட்டோவால் வசதியாக மூன்று குட்டிக் கரணம் போட முடிந்தது. மூன்றாவது குட்டிக்கரணம் போடும்போது பக்கவாட்டில் கவிழ்ந்த நிலை. 

கவிழு ஆரம்பிக்கும் போதே ஆட்டோ டிரைவர் வெளியே விழுந்து விட்டார். 

பாலத்தில் இரு பஸ்களில் இருந்தும், பாலத்தின் பல பகுதிகளில் இருந்தும் குரல்கள் 

'உள்ளாற ஆள் இருக்குது '

' ஆளுக்கு என்னாச்சின்னு பாருங்க. '

பெருங்கூட்டம். 

நான் உள்ளேயிருந்து பக்கவாட்டில் ஜம்ப் செய்து வெளியே குதித்தேன். 

' அடி பட்டுறுக்கா பாருங்க ' தொடர்ந்த கூப்பாடு. 

எனக்கு சின்ன காயம் கூட இல்லை. 

மோதிய பைக் காரன்  நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே எஸ்கேப். 

விசாரிப்பு, குசலமெல்லாம் முடிந்த பின் 
ஆட்டோ சார்ஜை டிரைவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்தே நான் நடக்க ஆரம்பித்தேன்.

Jul 23, 2020

சிவாஜி கணேசன்

முகப்பேரில் என்னை அடையாளம் கண்டு 
வந்து பேசிய அன்பர் ஒருவர் 
 "சார் நீங்க ராஜநாயஹம் தானே? 
நான் உங்கள் வாசகன். 
என்னுடைய சித்தப்பா நீங்கள் எழுதிய 'சிவாஜி கணேசன்' ஆர்ட்டிக்கிள் படித்து விட்டு                         தேம்பியழுதார் சார்' என்றார். 

சிவாஜி கணேசன்
               
திருவிளையாடல் படத்தில் 
கடற்கரையில் ஒரு நடை, 

மன்னவன் வந்தானடி பாட்டில் 
முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,

 ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை. 

’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி 
முடிந்ததும் ஒரு நடை.

’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு 
ஒரு அழகு நடை.

நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி 
காட்டி விட முடியுமா!

பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

 ’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல  பேசிய  அடுக்கு மொழி வசனங்கள்.
 ”காவிரி கண்ட தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து சேர,சோழ பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்திலே யார் கொடி தான் பறப்பது என்று இன்று போல் அன்றும் போர் தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து
’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் 
கொன்றே விடுகிறார்கள்” என்ற குமுறல்.

வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.
தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக  கன்னத்தில் அறைவார். 
அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக  ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” 
இதில் சிவாஜி கணேசனின் 
தொண்டை நரம்பு புடைக்கும். 
எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.

தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! 
தமிழ் திரை கண்ட அசுர நடிகன் 
எங்கள் சிவாஜி கணேசன்.

கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.

’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
 ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ  வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான 
கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

”அன்பாலே தேடிய ” என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.

சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”

”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”

இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,
அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி 
சொல்ல வார்த்தைகளே கிடையாது.

கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே 
யாரும் பயன்படுத்த முடியும். 
எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.
ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,
பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,
சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,
கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் 
இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் 
ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!

”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
 இடி.. ..மின்னல். இடி.. மின்னல். 
’ ராதா, ராதா, ராதா’என்ற கதறல். 

தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’

இன்றைக்கு 'அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... 
என்று  வந்த காட்சிகளுக்கெல்லாம் 
மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே. 

ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன். 

’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று  
கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.

’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா’ 
என்று தேம்பிய வெகுளி ரங்கன்.

’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா

’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
 நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ 
என்ற வரிகளுக்கு 
முகத்தின் குளோஸ் அப் மூலம்
 அர்த்தம் சொன்ன கலை மேதை.

’நாலும் நடந்து முடிந்த பின்னால்
 நல்லது கெட்டது தெரிந்ததடா, 
சட்டி சுட்டதடா கை விட்டதடா’

’நவராத்திரி’ நவரச நாயகன்.

’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் 
-”யார் அந்த நிலவு, ஏனிந்த கனவு”

சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??

’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி. 

ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’

’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’

உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 
124 படங்களுக்குப்பிறகு
 புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது 
கணேசனின் சாதனை வீச்சு.

சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும்  
முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.

கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள்
 எடுத்த மகத்தான கலைஞன். 

1960களில் மேக்கப் இல்லாமல்
 வேட்டி சட்டை போட்டு
 நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு
 பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.

அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 
70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!

ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.

’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,
அகங்கார, பணத்திமிர்.

நண்பனையே கொல்லத்துணியும்
 ’ஆலயமணி’ பொறாமை.

 இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாத ஒரே ஹீரோ நடிகர்.

ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான். 

ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.
ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் 
இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.

’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்....’

’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.

அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.
முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில்
 ‘என்னடா, உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் 
சிவாஜி கணேசன்.

நேரில் சந்திக்கிற மனிதர்களை 
தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.

’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.

திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு
 காஞ்சி பரமாச்சாரியாள்

'காவல் தெய்வம்' பட கௌரவ வேடத்திற்கு 
மதுரை செண்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்

 தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு 
வால்டர் தேவாரம்

வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு 
இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.

’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா( டி.வி.எஸ்).

பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல்
 கோவிந்த் சுவாமிநாதன்’

1994ல் ஜெமினியோடு நான்
 ஒரு சில மணி நேரம் இருந்த போது- 
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் 
பென்சில் சீவும் காட்சி-
அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே
 மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன்
 என்னை விட எட்டு வயசு 
இளையவன் தான்...
ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” 
”உனக்குமா சாவு” “
உன் சாதனை இனி எவனாலும் முடியாது”

 உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே. 

(சிவாஜி சிலை திறப்பு விழாவில் ரஜினி 
 இதை சொன்னார்) 

........

சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்



ராஜஸ்தான் ஆளுங்கட்சி காங்கிரஸ் கூத்து. கெலாட், பைலட் 
விவகாரம். 
இதில் மந்திர வாதி யாரு? ரத்தங்கக்கப்போறது யாரு? 

இது ஒருபுறம் இருக்க, அதே ராஜஸ்தானில் 
ராஜா மான்சிங் என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு
 35 வருடங்களுக்கு பிறகு இப்போது. 
இன்று 82 வயதாகி விட்ட அன்றைய என்கவுண்டர் டி. எஸ். பி. கன் சிங் பட்டிக்கு ஆயுள் தண்டனை. 

ராஜஸ்தானில் மான்சிங் சுயேட்சை எம். எல். ஏ வாக 1952லிருந்து தொடர்ந்து 1980ல் கூட ஜெயித்தவர். 

1985ல் காங்கிரஸ்காரர்கள் இவருடைய பேனர்களை கிழித்து விட்டார்கள் என்பதால் அன்றைய முதல்வர் மாத்தூர் பேசவிருந்த மேடையையும், அவருடைய ஹெலிகாப்டரையும் தன் வாகனத்தை ஓட்டியே துவம்சம் செய்து விட்டு மறு நாள் 'சரி சரண்டராயிரலாம்' ன்னு நெனச்சி கெளம்பிப் போகும் போது என்கவுண்டர். பொரிச்சிட்டாங்கெ. 

எல். என். மிஸ்ரா கொலை வழக்கு தீர்ப்பு 39 வருஷங்கழிச்சி வந்தப்ப அதைத் தொட்டு 2014 ல                       'Grave Injustice' ன்னு சொல்லி 
ஒரு பதிவுல கவலப்பட்டு எழுதினேன்.                    
 இப்ப பரவாயில்லை. 
நீதி கொஞ்சம் வேகம் கூடியிருக்கு. 

மான்சிங் கேஸ்ல 35 வருஷத்திலயே தீர்ப்பு வந்திடுச்சி. Delayed Justiceனு சட்டுன்னு 'வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோ' ன்னெல்லாம் சொல்ல முடியுமா? 

'சக்கரத்தை எடுப்பது ஒரு கணம், 
தர்மம் பாரில் தழைத்தல் மறு கணம்"

ஏங்கினான் எட்டயபுரத்து எரிமலை பாரதி!

ராஜபாளையம் எம். எல். ஏக்கு 12ம் தேதி காய்ச்சல். கரோனா டெஸ்ட் 14ந்தேதி
எடுக்கப்பட்டதாக அந்த  எம்எல்ஏ தங்க பாண்டியன் சொல்றாரு. 
'ரிசல்ட் வர எட்டு நாளா? 'என்று வருத்தப்பட்டிருக்கிறார். 
நாகர்கோவிலுக்கு அனுப்பி ரிசல்ட் வாங்கியிருக்கிறார்களாம்.

நாலு வேலி நிலம் வைத்தீஸ்வரன்

"நாலு வேலி நிலம்" தி. ஜானகிராமன் நாடகம். 
எஸ். வி. சகஸ்ர நாமம் சேவாஸ்டேஜ் மேடையேற்றியது. பின்னர் இது படமாகவும்
 நடிகர் சகஸ்ர நாமம் அவர்களால்
 தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அவர் பொருளாதார இழப்புக்கு ஆளாக வேண்டியிருந்தது. 

சகஸ்ர நாமம் மீது எப்போதும் எனக்கு மிகுந்த வாஞ்சையும், அபிமானமும், மரியாதையும் உண்டு. 
ஏனென்றால்  பி. எஸ். ராமையா, 
தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, 
எம். வி. வெங்கட்ராம், அசோகமித்திரன் போன்ற தமிழின் பேரிலக்கியவாதிகளுடன் 
அவர் நட்பு கொண்டிருந்தார்.
 அதற்கு காரணம் அன்று அவர் நல்ல வாசகர். இது அன்றைய நடிகர்களிடம் இல்லாத குணநலன். 

எம். வி. வெங்கட்ராம் கதை ஒன்று. 
தலைப்பு 'கோடரி' என்று நினைக்கிறேன். 
அந்த கதை எஸ். வி சகஸ்ர நாமத்திற்கு 
பிடித்த கதை. 

இப்படி இலக்கிய கவனம் கொண்ட ஒரு நடிகராக மற்ற நடிகர்களிடம் இருந்து தப்பித்து, 
வித்தியாசப் பட்டு எப்படியோ அவரால் 
இயங்க முடிந்திருக்கிறது. 

கவிஞர்களில் எனக்கு எஸ். வைத்தீஸ்வரன் மீது விசேஷ அன்பும், அபிமானமும், மரியாதையும் உண்டு. 

இதற்கு காரணம் அவர் சகஸ்ர நாமத்தின் சகோதரி மகன் என்பதோடு கவிதையுலகை தாண்டிய அவரது இளமைக் கால நாடக, திரையுலக நடிப்பு மற்றும் இந்த சூழலுடனான பரந்து பட்ட அனுபவங்கள். 
இது பிற நவீன இலக்கியம் சார்ந்த கவிஞர் பெருமக்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுகிற அம்சம். 

என்னுடைய ஆசான்களான 
ந. முத்துசாமி, அசோகமித்திரன் இருவருக்கும் பேலன்ஸிங்காக 
வைத்தீஸ்வரனுக்கு நண்பராக இருக்க சாத்தியப்பட்டிருக்கிறது. 

எஸ். வி. சகஸ்ர நாமம், எஸ். வி. சுப்பையா இருவரும் சகோதரர்களா? என அவர்கள் பற்றிய பதிவில் அபத்தமாக கேட்பவர்கள் இன்றும் உண்டு. 
தெலுங்கர் எஸ். வி. ரங்காராவையும் இவர்களோடு 
'சகோ' சம்பந்தப்படுத்தி குழப்பி பின்னூட்டம் வந்ததுண்டு. 

சிங்காநல்லூர் வி. சகஸ்ர நாமம் 
செங்கோட்டை வி. சுப்பையா 
இருவரும் சகோதரர்கள் அல்ல. 

 'நாலு வேலி நிலம்' 
படத்தில் பழம் பெரும் குணச்சித்திர நடிகர் 
எஸ். வி. சுப்பையா அவர்களுடன் 
இளமையான இன்ஸ்பெக்டர் வேடத்தில்
 நம்முடைய கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன்
 நடித்திருக்கிறார் 

https://m.facebook.com/story.php?story_fbid=2759525584260890&id=100006104256328

Jul 21, 2020

கல்யாண்குமார் காரில் சிவாஜி

1960 களில் நடந்த சம்பவம் ஒன்றை 
'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமார் 
என்னிடம் 1992ல் சொன்னார். 

மௌன்ட் ரோட்டில் கல்யாண் குமார் 
தன்னுடைய அந்த நேரத்து மாடர்ன் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். 
சிவாஜி கார் இவரை தாண்டிப் போயிருக்கிறது. 

 ஓவர் டேக் செய்து போகும் போதே கல்யாண்குமாரை சிவாஜி கவனித்து விட்டார். 
சிவாஜியின் கார் டிரைவர் 
இவரை காரை நிறுத்த சொல்லி
 சிக்னல் செய்து, காரை தானும் 
இந்த கார் முன் நிறுத்தி விட்டார். 

ஜன நடமாட்டமுள்ள மௌன்ட் ரோட்டில், கடைகளில் உள்ளவர்களும் கவனிக்கும் முன் சிவாஜி அவர் காரில் இருந்து கல்யாண்குமார் காரில் மின்னலென நுழைந்திருக்கிறார். 

"டேய், எப்படா இந்த கார் வாங்குனே"

"எங்கடா போற "

கல்யாண் ஸ்டுடியோ பெயரைச் சொல்லியிருக்கிறார். 

" எனக்கும் அங்க தான்டா ஷுட்டிங் "

சிவாஜிகணேசனின் டிரைவர் வந்து எட்டிப்பார்த்திருக்கிறார். 

சிவாஜி "நான் இவன் கூட வந்துடறேன்டா. நீ ஸ்டுடியோவுக்கு போயிடு" 

டிரைவரை தன் கார் எடுத்துக் கொண்டு போக பணித்து விட்டார். 

கல்யாண்குமார் செல்ஃப் டிரைவிங். 

ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். ஒரு நூறடியில் கார் நின்று விட்டது. 

என்ன முயன்று பார்த்தும் கார் கிளம்பவில்லை. 

சிவாஜிகணேசன் பதற்றம் அதிகமாகி 
திட்ட ஆரம்பித்து விட்டார். 

" பாவி, ஒன்னய நம்புனது தப்பாயிடுச்சேடா, ஏமாந்துட்டேனேடா, 
எவனாவது ஒர்த்தன் பாத்துட்டான்னா
 'சிவாஜி, சிவாஜி' ன்னு கூப்பாடு போட்டு 
கூட்டம் கூடிடுவானுங்களேடா"

'அண்ணே, அண்ணே மன்னிச்சிக்கங்க,
 ஐ ஆம் சாரி ' தவிப்பில் உளறியிருக்கிறார். 

சிவாஜிக்கு பங்க்சுவாலிட்டி
 வேறு ரொம்ப முக்கியம். 

கல்யாண் குமாருக்கு சிவாஜி சாருக்கு இப்படி
 ஒரு கஷ்டத்தை கொடுக்கும்படி ஆகி விட்டதே என்ற 
தர்ம சங்கடம். 

கல்யாண் குமார் சொன்னதில் இது வரை தான்                       எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. 

அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது
 எவ்வளவு யோசித்தாலும் 
குழப்பம் தான் மிஞ்சுகிறது.

It's in my memory locked. 
- Shakespeare in Hamlet 

இது இயல்பான ஒன்று. 
நினைவில் நிழல் விழுவதும் 
ஞாபக சிக்கல் ஏற்படுவதும்.

What if?

பெரியப்பா. 

நாகையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக                இருந்த போது Night patrolling போது
 நடந்த சம்பவம். 
 
வருடம் 1978
நல்ல நள்ளிரவு நேரம். 

நாகையை விட்டு தொலைவில் 

பெரியப்பா ஜீப்பில் உட்கார்ந்திருக்கிறார். 

ஒரு கார் வருகிறது. 

இன்ஸ்பெக்டர்கள் இருவர்
 ரோட்டோரமாக நிற்கிறார்கள். 

காரை நிறுத்தியிருக்கிறார்கள். 

காரில் இருந்து ஒரு கடுமையான சத்தம். 

'Sivaji Ganesan is on his way to Madras.'

ஜீப்பில் உட்கார்ந்திருந்த பெரியப்பாவுக்கு இந்த வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது. 
உடனே கேட்கிறார். "What if?" 

ஜீப்பை விட்டு இறங்கி காரை நோக்கி நடக்கும் போதே மீண்டும் கேட்கிறார் : "What if?" 

கடும் அமைதி. 

காருக்குள் இருட்டு.
 அந்த குரல் 
சிவாஜியுடையதும் அல்ல. 

பெரியப்பா கமாண்டிங் வாய்ஸில்
 "Switch on the light" 

காருக்குள் விளக்கு எரிந்த அதே நொடியில் 
அந்த விசேஷ குரலுடன் 
தலையை நளினமாக ஆட்டியவாறு சிவாஜி 
"Yes, I'm GANESAN "

லைட்ஸ் ஆன், ஸ்டார்ட் கேமரா, ஆக்சன் என்றவுடன் எத்தனை காலமாக இயங்கிய சட்டென்று இயங்கிய தேர்ந்த கலைஞன். 

'Please do check' மிக கனிவாக கணேசனின்        அடுத்த வார்த்தை. 

முன் சீட்டில் ஒருவர். அவர் தான் காரை நிறுத்தியவுடன் முதலில் கடுமையாக சீறியிருக்கிறார்.

சிவாஜியை பெரியப்பா 1962ல்
 திண்டுக்கல் அங்கு விலாஸ் முத்தையா பிள்ளை இல்ல திருமண விழாவில் சந்தித்திருக்கிறார். 

அப்போது இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படம் 
பெரியப்பா வீட்டிலும், எங்கள் வீட்டிலும் இருந்தது. 

சிவாஜி வேட்டி, அரைக்கை சட்டையுடன். (அந்தக் காலத்தில் சிவாஜி தான் வேட்டி சட்டையில் எவ்வளவு அழகாக தோற்றம் தருவார்) 
பெரியப்பா பேன்ட், சர்ட்டில் 'இன்' செய்து பெல்ட் போட்டு இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு 
பேசுகிற போது, 
போட்டோ ஃப்ளாஷுக்கு கணேசன் சற்று எதிர் பாரா ஆச்சரிய பாவங்காட்டி கண் விரிக்கிற அந்த புகைப்படம் கண்ணுக்குள்ளேயே இன்றும் இருக்கிறது. 

1980களில் கூட எங்கள் வீடுகளில் இருந்தது. எத்தனை தடவை சிறுவனாக அதை நான் ரசித்துப் பார்த்திருக்கிறேன். 
எவ்வ்வ்வளவு விசேஷ புகைப்படங்கள் இன்று காணக்கிடைக்காமல் 
தொலைந்து போய் விடுகின்றன. 

பெரியப்பா 1972ல் ஒரு ஸுட்டிங்கில் சிவாஜியை சந்தித்ததுண்டு. 

Patrolling போது இதையெல்லாம் 
பெரியப்பா நினைவு கூர்ந்து 
அந்த நள்ளிரவு நிகழ்வு 
சிவாஜியுடன் ஒரு உணர்வு பூர்வமான சந்திப்பு.

https://m.facebook.com/story.php?story_fbid=2775950852618363&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2775854145961367&id=100006104256328

மா. அரங்கநாதனின் சாகச புனைவுகள்

"எனக்குக் கடவுள் பத்தித் தெரியாது. 
அதனாலே நம்பிக்கையுமில்லே. 
ஆனா இந்தக் கோவில் என்ன பாவம் செய்தது?
நம்ம முன்னோரோட நம்பிக்கை மட்டுந்தான் 
அது காட்டற விஷயம். 
அதை ஏன் உதாசீனம் செய்யனும்? 
அப்படிச் செய்வது வால்யூவா? 
சொல்லப் போனா 
பிளவு படாம தடுக்கிற ஒரு அம்சம் 
இந்தக் கோவில் எல்லாத்திலும் இருக்கு. 

சில காரியங்கள் பிளவை நீக்குமென்றால், 
அது மகோன்னதமானது தான். 
கடவுள் இதற்கு மாற்றானால், 
அந்த நம்பிக்கை இருந்து விட்டுப் போகட்டுமே. "

- மா. அரங்கநாதன்  'திரிசூலம்' சிறுகதையில் 

அரங்கநாதன் கதைகளின் தனித்துவம் பற்றி நினைத்துப் பார்க்கும் போது,
 வாசகனுக்கு அவர் காட்டும் கதையின் 
பூடகத் தன்மை.
 இந்த படைப்புக் கலைஞன் எதையோ மறைக்கிறாராரோ என்ற தவிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தும் கதை கூறல் பாணி விசேஷத்துவமானது. 
இத்தனைக்கும் எழுது முறை
 அற்புதமான எளிமை கூடியது. 

வாசிப்பவரை மிக Comfortable ஆக Driver's seat ல் உட்கார வைக்கும் நேர்த்தியான form அரங்கநாதனின் craftsmanship. 

இலக்கிய சுவை, இலக்கிய சுகமாக விரியும் வினோத விசித்திரம். 

நான் முன்னரே சொல்லியிருக்கிறேன். 
முத்துக்கறுப்பன் பிரம்மாஸ்திரம். 

பிரம்மாஸ்திரம் அபூர்வமாக பயன்படுத்த வேண்டியது என்பது தான் பொதுப் புத்தியில் பதிந்த விஷயம். 
அதெல்லாம் அப்படி இல்லை என்பது
 அரங்கநாதன் படைத்த சாகச புனைவுகள் சொல்லும் சாதனை செய்தி.

Jul 20, 2020

எழுத்தாளர் கர்ணன் மறைவுக்கு இரங்கல்

கர்ணன் மறைவுக்கு அஞ்சலி 

ஜி. நாகராஜன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவருடைய நண்பர் ஒருவரை தேடியதுண்டு. 

 எழுத்தாளர் தான். டெய்லர்.  பெயர் கர்ணன்.

 ஜி.நாகராஜனின் நெருக்கமான நண்பராக  இருந்திருக்கிறார். 
அவருக்கு சி.சு.செல்லப்பாவுடன் 
சினேகிதம் இருந்திருக்கிறது.

 கர்ணனின் சிறுகதை தொகுப்பை செல்லப்பா அங்கீகரித்திருக்கிறார். 
அவரே வெளியிட்டிருக்கிறார் என்றும் ஞாபகம்.

 ’பொழுது புலர்ந்தது’ என்று ஒரு சிறுகதை தொகுப்பு கர்ணனுடையது தான்.

அவரை நானும் சரவணன் மாணிக்கவாசகமும் மதுரையில் 1982ல் சேர்ந்து தேடிய முயற்சி 
அன்று ஈடேறவேயில்லை.  
டெய்லர் கடை பூட்டியிருந்தது.

2019 ஏப்ரலில் 
மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் 
வழக்கறிஞர் பா.அசோக் அழைப்பின் பேரில் 
நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களும் 
நானும் கலந்து கொண்டு உரையாற்றினோம். 

 சோமு நூற்றாண்டு விழாவிற்கு
 வந்திருந்த கர்ணனை
 நிகழ்வு முடிந்தவுடன் தற்செயலாக 
சந்திக்க நேர்ந்தது. அபூர்வ சந்திப்பு.

பெரியவருக்கு 2004ல் எழுதிய ’அவர்கள் எங்கே போனார்கள்’ புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கூட கிடைத்திருக்கிறது.

மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸில் கூட்டம் முடிந்த பின் என்னைப் பார்த்து பிரியத்துடன் புன்னகைத்தார். நடக்க சிரமப்படுகிறார். வாக்கர் மூலம் நடக்க வேண்டிய நிலை. கழுத்தில் செர்விக்கல் காலர். 

அவர் தான் எழுத்தாளர் கர்ணன் என்பது 
தெரிய வந்த போது
 ஜி.நாகராஜன் நினைவு மேலெழும்பியது.

வழக்கறிஞர் பா.அசோக் மொபைலில்  படம்பிடிக்க முனைந்த போது
 கழுத்தில் உள்ள செர்விக்கல் காலரை 
கழற்றி விடவா என்று கேட்டார். 

அசோக் அதற்குள் இரண்டு படம் எடுத்து விட்டார்.

.. 

"மரணத்தை நேருக்கு நேரா
விரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "

இப்படி சொன்னார் கர்ணன்.

நாகராஜனின் நெருங்கிய சகா. 

மதுரை 'கண்ட' எழுத்தாளர் என்று எழுதினால்
அது அபத்தமாக தெரியும். 
காணாமல் போன எழுத்தாளர். 
மதுரை கண்டு கொள்ளாமல் போன எழுத்தாளர்.

84 வயதான கர்ணன் வாடகை வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். 

தையல் கலையில் கூட அந்த காலத்தில் கோடீஸ்வரனான டெய்லர்கள் உண்டு.

டெய்லர் கர்ணனுக்கு அப்படியும் லபிக்கவில்லை.

மேல மாசி வீதி தானப்ப முதலி தெரு, வடுக காவல் கூட தெரு பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த கர்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு
 'கனவுப் பறவை'
சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பிரசுரமாக
1964ல் வெளி வந்தது.

ந. பிச்சமூர்த்தி தான் கர்ணனின் கனவுப்பறவைக்கு ஒரு முன்னுரை எழுதினார்.

எழுத்து இலக்கிய பத்திரிக்கையிலேயே தான் இவர் எழுதிய 'சுமை' கதை வெளி வந்திருக்கிறது.

ப்ரசன்னம் என்ற கதை விசேஷமானது.

48 நூல்கள் கர்ணன் எழுதியுள்ளார்.

இவருடைய 'உள்ளம்' நாவலை 
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 

கவிதா பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது.

மணிவாசகர் நூலகம் கர்ணனின் 
'அகம் பொதிந்தவர்கள்' வெளியிட்டிருக்கிறது.

இதே பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நூல்
‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’

நர்மதா பதிப்பாக 'கி. வா. ஜ முதல் 
வண்ணதாசன் வரை' கர்ணனின் புத்தகம்.

http://rprajanayahem.blogspot.com/2008/09/g.html

https://rprajanayahem.blogspot.com/2016/01/blog-post.html

https://rprajanayahem.blogspot.com/2016/01/blog-post_26.html

Jul 19, 2020

ஜடிலை, வார்க்ஷி, திரௌபதி

அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும்
 திருமணம் செய்வது பற்றி 
துருபதன் ஆலோசிக்கிறான். 

தர்மரை கேட்கிறான்.
 தர்மர் " பாஞ்சாலியை 
நாங்கள் ஐந்து சகோதரர்களுமே
 திருமணம் செய்துகொள்ள வேண்டும் 
என்று தாயார் குந்தி உத்தரவு " என்கிறார். 

பாஞ்சாலியின் தகப்பன் துருபதன் 
பதட்டமடைந்து வேதனையுடன்
 " அது எப்படி சாத்தியம் ?'' என்று கேட்கிறான். 

வியாசரிடம் " இது முறை கெட்ட செயல் அல்லவா?" புகாராக துருபதன் முன் வைக்கிறான்.

வியாசர் தேற்றுகிறார் " ஐந்து பேரை 
பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல. 
இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.                                                      ஜடிலை என்ற பெண், 
சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள். 
வார்க்ஷி என்ற பெண்
 'பிரதேசுக்கள்' என்ற பத்து சகோதரர்களை 
கல்யாணம் செய்திருக்கிறாள் "

ஜடிலைக்கு ஏழுபேர்,
வார்க்ஷிக்கு பத்து பேர் என்று 
பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக 
பாஞ்சாலி காலத்திற்கு முன் 
அந்த இரு ஸ்த்ரிகள் 
வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

ஓத்தா = Fuck off

ஒரு பெரியவர்.
 பார்ப்பதற்கே பச்சாத்தாபம் தோன்றும்படி இருப்பார். 
இந்த முதியவர் இறந்து விட்டார். 

 கவனிக்கப்படாத குழந்தையின் கலவரத்தையும், திகிலையும் அவருடைய முகத்தில் காணமுடியும்.

 ஏழையல்ல. ஆனால் பிள்ளைகள் அன்பு                     பூரணமாய் கிடைக்கப்பெற்றவர் அல்ல.

 மனைவியுடன் இணக்கம் சிலாக்கியமாய் இல்லை.

 முதுமையில் பலருக்கும் ஏற்படும் நிலை தான். 

எப்போதும்  ந.முத்துசாமி சாரை பார்த்து 
கோவில் கோபுரத்திற்கு கும்பிடு போடுவது போல கையுயர்த்தி கண் மூடி வணங்குவார்.

அவரை நான் எதிர்கொள்ள நேரும்போது வணக்கம் சொல்வதுண்டு.

ஒரு நாள் நின்று பேசினேன். 

அவர் ஏனோ கண்ணில் கலக்கத்துடன் 
ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். 

’சாகப்போகிறவனுக்கு கூட
 பச்சத்தண்ணி கொடுக்காதீங்க. 
தண்ணி கொடுத்தீங்கன்னா 
’ஓத்தா! ஏண்டா ஒரு குவார்ட்டர 
என் வாயில ஊத்தாம
 வெறும் தண்ணிய ஊத்துற’ன்னு கேப்பான்.

Second childishness and mere oblivion 
- Shakespeare  in 'As you like it'

இந்த ஓத்தா என்ற வார்த்தை சென்னையில் நிமிஷத்துக்கு நிமிஷம் காதில் விழுகிற வார்த்தை.
 
இது பற்றி ஓவியர் மு. நடேஷ்  சொன்னார்
 “ இங்க ‘ஓத்தா’ என்பது Fuck off. 
ஓத்தா என்பதன் அர்த்தம் Fuck off தான்.”

ஓத்தா என்பது  mummy, mother பற்றிய 
கோபமான வார்த்தை என்று நான் நினைத்துக்கொண்டிருந்திருக்கிறேன் 
………………

Jul 18, 2020

ராஜேஷ் கன்னா

இன்று ராஜேஷ் கன்னா நினைவு நாள். 

அந்த  Havell’s fans - 
"Fans for ever" விளம்பரம்  
நினைவிருக்கிறதா? 

ராஜேஷ்  கன்னா! விசிறிகள்! 
Poetic  comparison. பின்னனியில் 'Ye shaam mastaanee' பாடல் ஹம்மிங். 

"My fans will always remain with me."

The only commercial Rajesh Khanna appeared 
in his whole life. 

ராஜேஷ் கன்னாவின் விசிறிகளுக்கு  
அவர்   Demigod. அப்படி ஒரு  Craze. 

எனக்கு அந்தக்கால 'ஆங்க்ரி யங் மேன்' அமிதாப்பை அவ்வளவாகப் பிடிக்காது. 
ராஜேஷ் கன்னாவை மிகவும் பிடிக்கும்.
சிறந்த நடிகர். 
Individual choice. 

      
 ராஜேஷ் கன்னாவுக்கான 
 கிஷோர் குமார் பாடல்கள். 

“Roop Tera Mastana  Pyar Mera diwana “

“Kora Kaagaz Tha  Yeh Mann Mera “

“zindegi ek safar “

“Yeh shaam Mastaanee “

“Ye Kyaa huaa,Kaise huaa ,Kab huaa Kyo huaa”

ஆராதனா, கட்டி பதங், சச்சா ஜூட்டா, துஷ்மன், ஆன் மிலா சாஜ்னா, அமர் பிரேம்.....

ராஜேஷின்   கதாநாயகிகள்.
ஷர்மிளா தாகூர், மும்தாஜ், ஆஷா பரேக்.

ரகசிய கல்யாணம் ஒன்று
 இந்தியாவை கலக்கியது
 - ராஜேஷ் கன்னா
தன் நீண்ட நாள் காதலி அஞ்சு மஹேந்துருவை கை விட்டு,
டிம்ப்ள் கபாடியாவை திடீரென்று திருமணம் செய்தது தான்.

'ராஜேஷ் கன்னாவுக்கு  தான் ஜவஹர்லால் நேருன்னு
நினைப்பு '- ஹேமா மாலினியின் ரொம்பப் பழைய கமென்ட். 
....

விஜயா வாகினியில் "பந்திஷ் " பட ஷூட்டிங்.
Bandish

ராஜேஷ் கன்னா- ஹேமா மாலினி நடித்துக்கொண்டிருந்தார்கள். 
இருவரையுமே அந்த ஷூட்டிங்கில் தான் 
நான் பார்த்தேன்.
ராமா நாயுடு படம்.

ஹேமாமாலினியிடம் ஷாட்டில் 
வசனம் பேசியதை தவிர
 ப்ரேக்கில் ராஜேஷ் கன்னா
 ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. 

...................................................

ராஜேஷ் கன்னா அந்திம காலத்தில் டிம்பிள் இல்லாமல் தான் வாழ்ந்தார். அனிதா அத்வானி என்ற பெண்ணுடன் சேர்ந்திருந்தார்.
 

உடல் நலம் குன்றியிருந்தபோது அவர் சொந்தக்குரலில் பதிவு செய்த
 "good bye, so long, farewell, adieu" படிக்கக் கிடைத்தபோது நெஞ்சை நெகிழ்த்தியது: 

" கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு, 
அந்த நினைவுகளில் வாழும் பழக்கம் 
எனக்குக் கிடையாது. எப்போதும் எதிர்காலத்தையே பார்க்கவேண்டும். 
கடந்து போன சம்பவங்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில் எந்தப் பயனுமே இல்லை. 
ஆனால் அந்நியமான சூழலில் 
நமக்கு நன்கு தெரிந்த முகங்களைப் 
பார்க்கின்ற போது 
நமக்கு அந்தக் கால நினைவுகள் 
வரத்தான் செய்கின்றன. 
என் கலையுலக வாழ்வு 
 நாடகத்தில் ஆரம்பித்தது. 
அங்கிருந்து தான் திரையுலகுக்கு வந்தேன். எனக்கு குரு என்று யாருமே இருந்ததில்லை. தயாரிப்பாளர்கள் நடத்திய
ஒரு திறமைப் போட்டி மூலம் தான் 
நான் திரைத்துறைக்கு வந்தேன்......"

கன்னா இறந்த பின் டிம்ப்ள் குடும்பத்தினர் 
தன் மீது வன்முறையைப் பிரயோகம் செய்ததாகவும்,அவரை வீட்டை விட்டே துரத்தி விட்டதாகவும்  அனிதா அத்வானி 
ஒரு வழக்கு தொடுத்தார்....

The erotic life of a remarkable actor.. 

டினா முனிம் கூட ராஜேஷ் வாழ்வில் 
முக்கியமான நடிகை தான். 

அவருடைய முதல் காதலி அஞ்சு மகேந்த்ரு பதினேழு வருடங்கள் ராஜேஷ் கன்னாவின் முகத்தில முழிக்கவில்லை. 
ஆனால் 1988 முதல் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார். 
அவர் உயிர் பிரியும் போது அவருடைய கையைப் பற்றிய வண்ணம் இருந்ததாக அஞ்சு மகேந்த்ரு சொல்லியிருக்கிறார். 
" My only consolation is that I was holding his hand when he took his last breath. "

ராஜேஷ் கன்னாவின் அந்த மும்பை 'ஆசிர்வாத்' பங்களா விற்கப்பட்டு விட்ட செய்தி  பத்திரிக்கையில் பார்க்கக்கிடைத்தது.
90 கோடியாம். 

.............................

Jul 14, 2020

ஹை கோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி

ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி.
 செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது
 காஞ்சி சங்கராச்சாரியாரைத் 
தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். 

முன்னாளில்
ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் 
ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த 
மலையாளி முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டலில் நான் ஒருவன் தான் சினிமாக்காரன். 
மற்றவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள். 
இன்னும் இன்கம்டாக்ஸ்,
 டி. வி., ஏர்லைன்ஸ், பேங்க் இப்படி.. 

சினிமா அசிஸ்டெண்ட் டைரக்டரான
 என்னை "டைரக்டர்" என்று தான் கூப்பிடுவார்கள். எல்லோருக்கும் வயதில் ஜுனியர் நான் தான். 

மெஸ் சாப்பாடு அசைவம் தான். 
ஒவ்வொரு நாளும் மட்டன், சிக்கன், ஃபிஷ், பீஃப் என்று மெனு. இங்கே தான் 
நான் பீஃப் சாப்பிட பழகினேன். 

அப்போது வக்கீலாக ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்த அக்பர் அலியும் 
இன்னொரு வக்கீல் கலாமும் 
எம்.இ.எஸ் ஹாஸ்டலில்
 ட்வின்ஸ் போல சேர்ந்தே தான் இருப்பார்கள். 
தமிழர்கள் தான். 

எம். இ. எஸ் ஹாஸ்டல் வாழ்க்கை எங்களுக்கெல்லாம் 
 மறக்க முடியாத ஒன்று. 

என் ரூம் மேட்  மலையாளி அபு பக்கர்
 தலைசிறந்த மனிதாபிமானி. 

எனக்கு உடம்பு சரியில்லாமல் போன போது பக்கத்து அறையிலிருந்த டாக்டர் ஒருவர் இன்ஜெக்ஸன் போட்டு டேப்லெட்ஸ் கொடுத்தார். 

எல்லோரும் ஹாஸ்டலை விட்டுக் கிளம்பிய பின் எனக்கு போரடிக்கக்கூடாதே என்று அபுபக்கர் ‘படங்களுடன் கூடிய பிரமாதமான ஒருசெக்ஸ் புக்’ கொடுத்து விட்டு ஆபீஸ் கிளம்பினார்

.... 

அறிவாலயத்தில் ஒரு திருமணத்தில் 
என்னைப் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த  நண்பரிடம் உயர் நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி  சொன்னார். 
 “ I meet this BOY after thirty years”

அவருக்கு இப்போதும் நான் பையனாகவே தோற்றம் தருகிறேன் என்பது சற்று வித்தியாசமாக, சந்தோஷம் தருவதாக இருந்தது. காலயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 
பயணம் செய்த சந்தோஷம். 

எம். இ. எஸ் ஹாஸ்டலில் எங்களோடு இருந்த மலையாள நண்பர் அபுபக்கர் அவர்களின் மகள் திருமணம் அண்ணா நகரில் நடந்தது. 
  
அங்கே என்னைப் பார்த்த போது
 நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த                             அக்பர் அலி அவர்கள் 
என்னை "டைரக்டர்" என்று தான் அழைத்தார். 

...

Jul 8, 2020

சினிமா எனும் பூதம் நூல் உதயநிதி காரில்



சாத்தான்குளம் ரெட்டைக் கொலை சண்டியர்த்தனம் உலக அளவில் கவனம் பெற்ற கோர நிகழ்வு. அமெரிக்க ஃப்ளாய்ட் கொலையை விடவும் கொடூரமானது.
துயர சம்பவம் என்ற அளவிலேயே அது ஒற்றை,
இது ரெட்டை என்பதையும் தாண்டி ஒப்பீட்டளவிலேயே சொல்லொணா துயர நிகழ்வு.
சாத்தான்குளத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்ற விஷயம் சரித்திர நிகழ்வு.
அவருடைய காரில் R. P. ராஜநாயஹம் எழுதிய
'சினிமா எனும் பூதம் ' நூல்.

Jul 7, 2020

'சினிமா எனும் பூதம்' பற்றி உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் R. P. ராஜநாயஹம் நூல் 'சினிமா எனும் பூதம்' பற்றி தன் முகநூல் பக்கத்தில்.
...


"ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து,                         
‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு கதையா’ என்று ஆச்சரியப்படும் வகையில் திரைத்துறையை ‘சினிமா எனும் பூதம்’ நூலில் அடக்கி நமக்குள் கடத்துகிறார்
 R. P. ராஜநாயஹம். 

எண்ணிலடங்கா தகவல்களை எளிமையாக நேர்த்தியாக எப்படிச்சொல்ல முடிகிறது என மலைத்தேன் 

இதில் ‘கலைந்த ஒப்பனை’ என்றொரு பகுதி. வேறொருவர் நடிக்க வேண்டியது, அவர் திடீரென இறந்ததால் அவ்வாய்ப்பு இவருக்கு வரும். நடித்துவிடுவார். அக்காட்சிகள் எடிட்டிங்கில் போய்விடும். அதைப் படிக்கும்போது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் எவ்வளவு போராட்டம் என்று வருத்தமாகவும் இருந்தது.

இதில் ‘movie connoisseur’ என்ற வார்த்தை பிரயோகம் வரும். அதாவது சினிமா வல்லுநர். உண்மையில் R. P. ராஜநாயஹம் ஒரு movie connoisseur. சினிமா குறித்து பலர் எழுதியிருந்தாலும் பலரும் மறந்த கலைஞர்களை நினைவுகூர்கிறீர்கள். வாழ்த்துகள் சார். நிறைய எழுதுங்கள்!"

- உதயநிதி ஸ்டாலின்

............ 


உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், சினிமா எனும் பூதம் புத்தகத்தை அவருக்கு பரிசாக தந்த

பெரு மதிப்பிற்குரிய இயக்குநர் கரு. பழனியப்பனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி


Jul 6, 2020

உதயநிதி ஸ்டாலின்

இன்று உதயநிதி ஸ்டாலின் என்னிடம்
 செல் பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 
'சினிமா எனும் பூதம் இப்போது தான் படித்து முடித்தேன். உடனே உங்களிடம் பேசுகிறேன். '

' இயக்குநர் கரு. பழனியப்பன் மூலம் தான் உங்கள் புத்தகம் பற்றி தெரிய வந்தேன். புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தையே அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்ததை பார்த்தேன்.' 

பழனியப்பன் தான் புத்தகத்தை கொடுத்தார். 

Credit goes to Karu. Palaniappan. 

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரை பற்றியும் கோடிட்டு காட்டி 'உங்களால் இப்படி எவ்வளவு விஷயங்கள் பற்றி எழுத முடிந்திருக்கிறது' 

எந்த ஆயத்தமும், தயாரிப்புமின்றி நான் எழுதியிருக்கிறேன் என்பதை அவர் கண்டு பிடித்து பேசினார் என்பது அவருடைய வாசக மேன்மையை உணர்த்தியது. 

நூலில் என் ஆங்கில மேற்கோள்களை 
சிலாகித்து சொன்னார். 

சினிமா எனும் பூதம் நூலில் படிக்கும் போதே குறிப்பெடுத்து அந்தந்த நடிகர்கள் புகைப்படங்களை கூகுளில் தேடியிருக்கிறார். 

' அவர்களுடைய புகைப்படங்களை சினிமா எனும் பூதத்தில் நீங்கள் இடம் பெறச்செய்திருக்கலாமே'என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

ராஜநாயஹத்தின் சினிமா எனும் பூதம்
 படித்ததன் மூலம் 
சில படங்களை பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்திருப்பதாக சொன்னார். 

உதயநிதி ஸ்டாலின் நடிப்பு எனக்கு பிடிக்கும் என்பதை 2015 ஆம் ஆண்டிலேயே 
என் பதிவொன்றில் எழுதியவன் நான். 
இப்போது கூட மிஸ்கின் 'சைக்கோ' வில் உதயநிதியின் பெர்ஃபெக்ட் பெர்ஃபாமன்ஸ் பற்றி எழுதியிருந்தேன். 

டெலிபதி மாதிரியிருக்கிறது. 



ராஜநாயஹத்தின் மற்ற புத்தகங்கள் படிக்க கிடைக்குமா? உதயநிதியின் ஆவல். 




' அண்ணே, அண்ணே' என்று இயல்பாக பேசிய உதயநிதி அன்புக்கு நெகிழ்கிறேன். 

கரு. பழனியப்பன் என்ற அபூர்வ மனிதருக்கு எங்கனம் சம்பிரதாயமாக நன்றி சொல்ல முடியும்? 

 அன்பும் அனுசரனையும் 
கொட்டி கிடக்கிறது. 

"மனிதனின் கைக்கு எட்டும் படி 'தற்செயல்' என்கிற ஒரு விசேஷமான சிலு சிலு ஓடை

கைகளை அந்த ஓடைக்குள் செலுத்தினால்
 இரு கைகளிலும் அதிசய அற்புதங்கள் சிக்கும் "

- ரே பிராட்பரி

Jul 5, 2020

நீதியரசர் ஷிவப்பா

சாத்தான்குளம் போலீஸ் அராஜகம் பற்றி 
தெரிய வந்த போது ஏற்பட்ட
 தாள முடியா துக்கம், பதற்றம் இவற்றிற்கிடையே 
அன்றைய மெட்ராஸ் ஹைகோர்ட் 
ஜஸ்டிஸ் ஷிவப்பா ஞாபகம் வந்தது. 

போலீஸுக்கு எதிரான கேஸ் எது வந்தாலும்           போலீஸ் அராஜகம் என்றே 
எப்போதும் வழக்கை விசாரணையின் போதே                               அந்த கண்ணோட்டத்தில் பார்த்து 
போலீஸுக்கு தண்டனை 
கொடுத்தே தீர்ப்பளித்தார். 

அவரிடம் ஒரு discretion இருந்தது.
 போலீஸ் ரவுடித்தனம் மீது அவருக்கு 
எப்போதுமே சந்தேகம் இருந்ததேயில்லை.
 'நீங்க நிச்சயமா மனித குணம் மறந்த மிருகங்கள் தான்டா' என்ற தீர்மானம். 

அதனால் பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகள் எல்லாம் தங்கள் கேஸ் ஃபைல் ஷிவப்பா விசாரணைக்கு போய் விடக்கூடாதே என்று தவிப்பார்கள். ஷிவப்பாவிடம் போய் விட்டதென்றால் அந்த ஃபைலை வேறு 
ஒரு நீதியரசருக்கு மாற்ற முயற்சி கூட மேற்கொள்வார்கள் என்பதும் இருந்திருக்கிறது. 

நீதியரசர்களில் இவர் 
தனித்துவமானவராக தெரிந்தார். 

ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் தொடர்ந்து பெயில் தர மறுத்தவர் தான் ஷிவப்பா. 
அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதில் உறுதியாக இருந்தார். 

1999 மார்ச் நான்காம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றை செய்து கொண்டிருந்த ஷிவப்பாவுக்கு ஒரு ஃபேக்ஸ் மத்திய சட்ட அமைச்சர் தம்பித்துரையிடம் 
இருந்து வந்தது. "ஷிவப்பா போன டிசம்பர்ல 
நீங்க ரிட்டயர் ஆயிட்டீங்க. போன வருஷம் உங்களுக்கு 62 வயசு முடிஞ்சிடுச்சி. 
உடனே எந்திரிச்சு கிளம்பிடுங்க "

Unceremonious sudden removal. 

உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவு வரவில்லை. ராஷ்டிரபதி பவனில் இருந்தும் இந்த ஆணை வரவில்லை. மத்திய சட்ட அமைச்சர் ஃபேக்ஸ். 

மறு நாளே வழக்கறிஞர்கள் இந்த விஷயத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை
 புறக்கணித்து போராட்டம். 

தம்பித்துரை சலிப்பு "அடடடே, என்னய்யாது? Everything is politicised. 
ஷிவப்பா ஒர்த்தர் தானா ஜட்ஜி. 
ஹை கோர்ட் வழக்குகள கவனிக்க
 நெறய்ய நல்ல ஜட்ஜிங்க 
அங்க மெட்ராஸ்ல இருக்காங்கப்பா.. " 

... 

ரிட்டயர்மெண்ட் லைஃப் லயும் 2015 ல
ஷிவப்பா பெரும் துயரத்திற்குள்ளானார்.

 கர்நாடகாவில் கொள்ளையர்கள் சிலர் 
ஷிவப்பா வீட்டிற்குள் நுழைந்து  அவரையும் அவர் மனைவியையும் கடுமையாக தாக்கி, 
வீட்டில் உள்ள விலை மதிக்கத்தக்க பொருட்களை கொள்ளையடித்து போய் விட்டார்கள்.

Jul 4, 2020

முரசொலி மாறன்

'மறக்க முடியுமா?' சீரியஸான சோகப்படம். 
"காகித ஓடம் கடலலை மேலே போவது போலே"

'வாலிப விருந்து ' அட்டகாசமான 
பொழுதுபோக்கு சித்திரம். 
"ஒன்ட்ரக்கண்ணு டோரியா, சென்னப்பட்ணம் போறியா
போறியா, போறியா, 
கப்பலா? காரிலா? ஓசி ரயிலா?"

இரண்டையும் இயக்கியவர் முரசொலி மாறன். 

 அன்னையின் ஆணை போல, இருபது படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருக்கிறார். 
படத்தயாரிப்பாளராக பெரும் அனுபவஸ்தர். 

சினிமாவில் சம்பந்தப்பட்ட யாரும் 
வேறு துறை போனாலும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டாயம் பேசுவார். எழுதுவார். 
யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. 

கருணாநிதி அரசியலில் எவ்வளவு பிசியானாலும் அவ்வப்போது சினிமாவில்
தன் அனுபவங்களை எப்போதுமே 
பேசி எழுதி வந்தவர். 
சுவையான திரை சம்பவங்களை 
எப்போதும் கூறுவார்.

ஆனால் ஒரு அபூர்வமான அதிசயம்
 முரசொலி மாறன்! 
நிறைய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். படங்களை தயாரித்துள்ளார், இயக்கியுள்ளார்.

ஆனால் அவர் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின் தமிழ் சினிமா அனுபவங்கள் பற்றி பேசியதே கிடையாது. எழுதியது கிடையாது .அவர் முழு நேர அரசியல்வாதியானதும், டெல்லி அரசியலில் பல முறை மத்திய அமைச்சர் ஆனதும்
 ' அந்த காலத்திலே அந்த படத்துக்கு வசனம் எழுதும் போது .... அந்த படத்தை நான் இயக்கிய போது ' - இப்படி ஒரு வார்த்தை .. மூச் ...ம்ஹூம் ..

மனித சுபாவத்தில் இது ரொம்ப ரொம்ப 
அபூர்வமான விஷயம்.