Share

Oct 31, 2019

சங்கீத சௌபாக்யம்



எஸ் ஜி கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு குருவாய் சொல்ல முடியாதவர்.

"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள்.

ரொம்ப ஆச்சரியம்.

தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா! இவர் பாடிய நாத சிந்தாமணி 'எவரனி ' பற்றி நான் 'சஹானாவும் தேவாம்ருத வர்ஷிணியும்' பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் .

அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர்.
விளாத்திகுளம்சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி.
இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார்.அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா.

மாரியப்ப சுவாமிகளின் ரசிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல். வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .

கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார்.

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார்!

தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார்.

சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் மாரியப்பசுவாமிகள்.

மாரியப்ப சுவாமிகள் வேறு.
திரைப்பட நடிகர் எம்.எம்.மாரியப்பா வேறு.  குழப்பிக்கொள்ளக் கூடாது.

தோடி சீத்தாராமையர் என்று ஒருவர். விளக்கம் தேவையில்லை.
தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார்.அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான். சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார்.

தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது. அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும்.

19 வது நூற்றாண்டில் வையச்சேரி மகா வைத்யநாத பாகவதர் இந்த சஹானா "கிரிபை" யை அனுபவித்து பாடுவாராம். ஒவ்வொரு கச்சேரியிலும் விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். ரசிகர்களும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள்.

ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர்
இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார். நெகிழ்ந்து கண்ணீர் மல்க சுப்பையர் அவர்களை இவர் தழுவிக்கொண்டாராம்.

அதன் பிறகு எந்த கச்சேரியிலும் அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது.
கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம். "அது பிச்சாண்டார் கோவில் சொத்து " என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.

தேவாம்ருதவர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

"எவரனி"தேவாம்ருத வர்ஷினி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரபலமாயிருந்த வாக்கேயக்காரருமான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்( எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ) ஒரு ரிகார்டிங் கம்பெனிக்காக பாடி பதிவாகியிருந்த சூழ்நிலையில்,
அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே "எவரனி" யின் மற்றொரு பதிவை கேட்ட முத்தையா பாகவதர், கிட்டப்பாவின் பாட்டில்
சொக்கிப் போய் தன்னுடைய பதிவை உடனே நீக்கி கொள்ளும்படி ரிகார்டிங் நிறுவனத்திடம் அட்வான்சை திருப்பிகொடுத்து விட்டாராம்.
" கிட்டப்பா பாடியது தான் "எவரனி" –மிக பெருந்தன்மையோடு ஹரிகேச நல்லூர் பூரித்துப்போனார்.

அப்படி ஒரு காலம், அப்படிப்பட்ட சங்கீதப் பிறவிகள்.

Oct 30, 2019

Baghdadi and The Washington Post



According to Donald Trump, “IS chief Baghdadi died like a dog. He died after running into a dead-end tunnel, whimpering and crying and screaming all the way.”
Baghdadi pursued by dogs, blew himself up and three children.


தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்து சிதறிய பாக்தாதி.

பாக்தாதி நாய் போல செத்ததாக ட்ரம்ப் சொன்னதோடு அந்த ஐ.எஸ் தலைவனை விரட்டிச்சென்ற ராணுவநாயின் புகைப்படத்தையும் கூட ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

வாஸிங்டன் போஸ்ட் பத்திரிக்கை பாக்தாதி கொல்லப்பட்டதை இரங்கல் செய்தி போல வெளியிட்டுள்ளது என்று சர்ச்சை.
ட்ரம்ப் நடவடிக்கைகள் குறித்து வாஸிங்டன் போஸ்ட் கடுமையாக தொடர்ந்து விமரிசித்து வருகிறது..


1971ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை, வியட்நாம் யுத்த  விவகார  Pentagon papers வெளியிட்ட கதை,( The most highly classified document of the war)

இரண்டு வருடங்களுக்கு முன் மெரில் ஸ்ட்ரீப், டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வந்த ஹாலிவுட் படம் The Post பற்றி ஞாபகம் வருகிறது.

The first rough draft of the history. Exposing Government’s secret of Vietnam War.

செய்தி பத்திரிக்கை அதிபர் கேத்தரின் க்ரஹாமாக கதாநாயகியும் அந்த பத்திரிக்கை ஆசிரியர் பென் ப்ராட்லீயாக கதாநாயகனும்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில்.

  The presidencies of Nixon and Trump.
Mustering the full power of the presidecy.

The way they lied, those days have to be over.

Oct 29, 2019

எம்.ஆர்.ராதா குரல்ல

உச்சி வெய்யில் நண்பகல் பதினொன்றரை மணி நேரம். ஆலப்பாக்கத்தில் ஒரு காலனியின் நுழைவு பகுதிக்கு முன்னே தேங்கி நிற்கிற சிறு அளவு மழை நீர் குட்டை. ரோட்டில் அதை ஒட்டி ஒரு தள்ளு வண்டி டிபன் ஸ்டால். இந்த பக்கம் ஒரு பேங்க். பஸ் ஸ்ட கரும்பு ஜூஸ் கடை. எதிரே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவகம். படு பிசியான ரோடு.எதிரே ஃபர்னிச்சர் கடை. டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ரெண்டு.பல வகை வாகனங்கள் நகர்வில். நடப்பவர்கள், நிற்பவர்கள் என ஜீவனுள்ள பகுதி ஆலப்பாக்கம் மெயின் ரோடு.
ஒரு பெரிய மனுஷன் வேட்டிய கழற்றி தரையில் வைத்து விட்டு, ’யார் கோபப்பட்டாலும் எனக்கென்ன? நான் கவலைப்படவே மாட்டேன், மயிரே போச்சி’ன்ற தோரணையில டவுசரை கழற்றிய படி புடுக்கு தெரிய, பீக்குண்டி தெரிய மழை நீர் குட்டையில் குண்டி கழுவிக்கொண்டிருக்கும் போது….
பஸ்ஸில் ஏறி உட்காரும்போது இந்த காட்சியை நான் பார்க்கும்படியானது.
இது போன வருஷ கத.
இந்த ஆள் மன நிலை சரியில்லாதவர் என்கிற மாதிரி தான் தெரிகிறது.
பாதி விவர மெண்ட்டல். இந்த அபிப்ராயத்தை சாதகமாக்கிக்கொண்டு அத்து மீறும் அர மெண்ட்டல்கள் அனேகம். எவ்வளவு பேர பாக்க வேண்டியிருக்கு.

கடந்த ஒரு வருடத்தில் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் ஜீவா காம்ப்ளெக்ஸ் பக்கம் பார்க்கிறேன். உலாத்திக்கொண்டு சில சமயம். கார்ப்பரேஷன் ஸ்கூல் ஒட்டிய ஆந்திரா பாங்க் நடுவில் உள்ள பாலாஜி காலனியில் இருந்து ஸ்கூட்டரில் வெளி வரும்போது பாங்க் சுவரோரமாக டூ டாய்லட் ஆயத்தத்தில் இருக்கும் போது நான் பார்த்து “ இங்க வெளிக்கி இருக்கக்கூடாது. போ.. போ..” என்றேன். நகர்ந்து ரோட்டில் மெதுவாக நடந்து நின்று கொண்டான்.
ஒரு மீன்காரம்மாவிடம் இந்த ஆளை காட்டி விசாரித்தேன். ”வசதியானவன் தான். சொந்த வீடெல்லாம் இருக்கு” என்றாள்.
வீட்ல மூச்சி முட்ட சாப்ட்டுட்டு,வெட்ட வெளியில் வெளிக்கி போகும் சுகத்தை அனுபவிக்கிறான்.எங்க தோதுப்படுதோ அங்கங்க அன்னன்னைக்கி. லொக்கேசன அப்பப்ப மாத்திக்கிட்டு.
காலனியை விட்டு வெளியே வரும்போது பாங்க் சுவரையொட்டி நரகலை பார்க்க நேர்ந்தால் இந்த ஆள் ஞாபகம் வரும். பேங்க் தேசியமயமாக்கினது இந்திரா காந்தின்னா இவன் பேங்க் சுவத்த ஒட்டி நேஷனலைஸ் பண்றான்.
எழுபது வயதிருக்கும். நல்ல உயரம். காக்கி டவுசர், வேட்டி, மேலுக்கு சட்டை போட்டிருக்கிறான்.
ஒரு நாள் மாலை பார்க்குக்கு வாக்கிங் போனேன்.
உள்ளே அந்த ’வெட்டவெளி வெளிக்கி’ போற ஆள் உட்கார்ந்திருந்தான்.
அரைப்பார்வை என்னை பார்த்தான். நான் இரண்டாவது ரவுண்டு வரும்போது நின்று கொண்டிருந்தான். வேறு ஆள் யாரும் அந்த பகுதியில் அப்போது இல்லை. இவனுக்கு ஒரு Shock treatment கொடுக்கனுமே.
நான் எம்.ஆர்.ராதா குரலில் “ காலனில வந்து வெளிக்கி இருக்கிறான். மழத்தண்ணில குண்டி கழுவுறான்.” என்று சொல்லியவாறு கடந்து சென்றேன்.
சட்டென்று திரும்பி என்னை கவனிக்கிறான். நான் சொன்னது புரிந்திருக்குமா?
அடுத்த ரவுண்டில் அவன் நிற்கிற பக்கம் வரும்போது நான் ராதா குரலிலேயே டயலாக் “ காலனியில வந்து வெளிக்கி இருக்றான். மழத்தண்ணில குண்டி கழுவுறான். அயோக்கிய பய”
மூன்றாம் ரவுண்டு நான் சுற்றி வரும்போது அந்த ஆள் என்னையே உற்று கவனிக்கிறான். நான் கட்டத்தொண்டயில் ” காலனில வந்து கொள்ளக்கி போறான். மழத்தண்ணில குண்டி கழுவுறான். போலீஸ் ஒரு நாள் புடிச்சிட்டு போகப்போகுது. ஜெயில் தான். பப்ளிக் ப்ளேஸ்ல வெளிக்கி இருக்கறவன போலீஸ் ஜெயில்ல தான் போடும்.”
விறு விறு என்று பார்க்கை விட்டு வெளியேறி, ஒட்டியுள்ள டீக்கடையில் நின்று கொண்டு, வாக்கிங் போகும் என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்புறம் ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.
நான் பத்து ரவுண்டு வாக்கிங் முடிக்க வேண்டும்.

Oct 28, 2019

Scene Stealer




அகில இந்திய அளவிலும் இன்று வரை முதிய கதாபாத்திரங்களில் ஷோபித்தவர் யார் என்று கேட்டால் அதற்கு ஒரே பதில் ரங்காராவ் என்பதாகத்தான் இருக்க முடியும்.
முதியவராக நடித்த சிறந்த நடிகர்களில் முதலிடம் இவருக்கு தான்.
நீண்ட நெடிய காலம் முதியவராக நடித்த ஒரு நடிகர் தன் வாழ் நாளில் அறுபது வயதைப் பார்த்ததேயில்லை என்பது தான் அவருடைய வாழ்வின் அபத்தம்.
மறைந்த போது வயது ஐம்பத்தாறு.
அவர் பிறந்த வருடம் 1919 என்பீர்கள் என்றால் ஐம்பத்தைந்து.
1974ம் வருடம் ஜூலை 18ம் தேதி ரங்காராவ் இறந்தார்.
அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா,
எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.
இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.
பாலையாவுக்கு 58 வயது.
சுப்பையாவுக்கு 57 வயது.
வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில்
இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும்
முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள்.
52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.
உயர்ந்து வளர்ந்த ரங்காராவின் தேக அமைப்பு, அந்த அழகான வழுக்கை தலை, அந்த விஷேச மூக்கு இவையெல்லாம் ரங்காராவுக்கு இயல்பிலேயே ஒரு தனித்தன்மையை அளித்திருந்தது.
நடிப்பு என்பதே மிகை சார்ந்த விஷயம் என்றிருந்த ஒரு காலத்தில் மிக இயல்பாக நடிக்க இவரை எப்படி அனுமதித்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.
சீர் மிக வாழ்வது என்று ஒரு வார்த்தை போல சீர் மிக நடிப்பு நிகழ்த்தி காட்டியவர்.
ஒரு தெலுங்கு நடிகர் தமிழிலும் சாதிக்க முடிந்திருக்கிறது. இன்னொருவர் தெலுங்கு நடிகை சாவித்திரி.
கமல் ஹாசன் சொன்னார் ‘‘நான் சந்திக்க விரும்பும் நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் எஸ்.வி. ரங்காராவும் அடக்கம்.’’
தெலுங்கு,தமிழ் படங்களில் நடித்தவர்.
தெலுங்கு மக்கள் இவருக்கு 'விஸ்வநாத சக்ரவர்த்தி ' என பட்டம் அளித்தார்கள்.
அந்தப் பட்டம் தமிழ் பட டைட்டிலில் யாரும் பார்த்திருக்க முடியாது.
அந்தக்காலத்தில் பட்டதாரி நடிகர்.
எஸ்.வி.ரங்காராவ் B.Sc.
நாடகமேடையில் ஆங்கில நாடகங்களில் நடித்த Shakespearean Actor.
’ரங்காராவ் ஷேக்ஸ்பியரியன் ஆக்டர்’ என்பதை அடையார் ஃப்ல்ம் இன்ஸ்டிடியூட்டில் ’லீனா, ரீனா, மீனா’ ஷூட்டிங்கின் போது,
வி.எஸ்.ராகவன் கண்ணை விரித்து அழுத்தமாக என்னிடம் தெரிவித்தார். டி.வி பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறார்.
நாடகங்களில் நடித்திருந்தாலும்,
திரைப் படங்களில் புராண கதா பாத்திரங்களில் நடித்திருந்தாலும்
நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய
சாதனை செய்தார்.
தெலுங்கு நடிகர் தமிழ் படங்களில் செய்த சாதனை அசாதாரணமானது.
ஆஜானுபாகுவான ரங்காராவ் ஒரு காட்சியில் இருந்தால் இவர் தான்
Scene Stealer. ஏனையநடிகர்கள் யாராயிருந்தாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

‘கற்பகம்’ படத்தில் ஜெமினியின் நடிப்பை சிலாகித்து ரங்காராவ், “தம்புடு, you know I am a scene stealer. ஆனால் கற்பகத்தில் you have excelled me “ என்றாராம்.
நானும் ஒரு பெண்(1963) படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான
நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை.
ரங்காராவ் ரொம்ப தாமதமாக
உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே
கமென்ட் அடித்திருக்கிறார்
" கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு.
ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்."
ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம்
''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி. ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ்
காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .
எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்.
நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு
கையெழுத்து போடு அத்தான்...."
- ராதா படாத பாடு படுத்துவார்.
எந்தப்படத்திலாவது சந்திர பாபு செட்டில் இருந்தால் எப்போதும் ரெங்காராவிடம் அத்து மீறி விளையாடுவாராம்.
இவரால் தாங்கமுடியாத அளவுக்கு கலாய்ப்பார்.
சகிக்க முடியாத அளவுக்கு பாபுவின் நடவடிக்கை இருக்கும் போது ரங்காராவ் ரொம்பவே
மூட் அவுட் ஆகிவிடுவாராம்.
ரங்காராவ் ’ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி
கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவை திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு
பெரிய நடிகரைப்பார்த்து இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.
பக்த பிரகலாதா (1967) படத்தில் ரண்யகசிபுவாக
ரங்கா ராவ் நடித்தார்.
ஷூட்டிங்குக்கு ரங்காராவ் சரியாக
ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர்
ஏ .வி.மெய்யப்ப செட்டியார் காதுக்கு தகவல் போனது.
'முழுக்க ஷூட்டிங்கில் நடிக்க மறுக்கிறார். ஒரு நாளில் மூன்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டால்
கிளம்பி விடுகிறார்.'
செட்டியார் கோபமாகி விட்டார்."நான் இன்று
செட்டுக்கு வருகிறேன்.
ரங்காராவை பார்த்துக் கொள்கிறேன்"
ஷூட்டிங் ஆரம்பித்து சிலமணி நேரத்தில்
செட்டியார் ஆஜர்.
ரங்காராவுக்கு சூட்சுமம் புரிந்து விட்டது.
கம்ப்ளைன்ட் ஆகியிருக்கிறது.
ஷாட் ப்ரேக்கில் அவரே செட்டியாரிடம் வந்து அவர் அணிந்திருந்த கவச ஆபரணங்களைஎல்லாம் கழற்றி விட்டு சொன்னார்
" மிஸ்டர் செட்டியார், இந்த நகைகளை பிடியுங்கள் "
செட்டியார் கையில் வாங்கியிருக்கிறார்.
சரியான கனம்.
"இவ்வளவு கனமான நகைகளைப் போட்டுக்கொண்டு
புராண வசனமும் பேசி
எவ்வளவு நேரம் நான் உழைக்க முடியும் சொல்லுங்கள்.நான் வீட்டுக்குப் போனபின்னும்
இந்த பாரம் சுமந்த வேதனை என்னை விட்டு நீங்காது "
செட்டியார் கோபம் பறந்து விட்டது.
பரிவுடன் சொன்னாராம் "நீங்கள்
செய்தது சரிதான் "
.
ரங்காராவ் நடித்த காட்சிகள் மிகவும் விஷேசமானவை. படிக்காத மேதையில் முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’
“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமி சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட வசனகர்த்தா கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள்
“ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”
தேவதாஸ், மிஸ்ஸியம்மா ஆரம்பித்து
'நானும் ஒரு பெண் 'மாமனார் -மருமகள் உறவு'.
விஜயகுமாரியின் மாமனாராக.
'கற்பகம் ' ஜெமினி கணேஷின் மாமனாராக.
'அப்பா ' ரோல் திரைப் படங்களில் ரொம்ப மலிவானது. அதை மிகவும் உயர்த்திக் காட்டியவர் எஸ்.வி.ரங்காராவ்.
'கண் கண்ட தெய்வம் ' படத்தில் சுப்பையாவின் 'அண்ணன் ' ரோல்.
அவர் செய்த புராண பாத்திரங்கள்.
வில்லனாக 'நம் நாடு ' படத்தில் 'பக்த பிரகலாதா'வில்.
'மாயா பஜாரில் ' கடோத்கஜனாக "கல்யாண சமையல் சாதம்,"
சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை.
தெலுங்கில் இவர் இயக்கிய இரண்டு படங்கள் நந்தி விருது பெற்றிருக்கின்றன. தெலுங்கு படங்கள் சில இயக்கியிருக்கிறார்.
இந்தோனேசியாவில் ஒரு திரைப்படவிழாவில் இவர் 'நர்த்தன சாலா'
என்ற படத்தில் கீசகனாக நடித்ததற்காக ஒரு விருது வாங்கியிருக்கிறார்.
மற்ற படி இந்திய அரசாங்க கெளரவம் எதுவும் இவருக்கு கிடைத்ததில்லை.
உலகத்தின் மிகச் சிறந்த அபூர்வ நடிகர்களில் ஒருவர் எஸ்.வி.ரங்காராவ்.
டி.வி சேனல்களில் எவ்வளவோ நடிகர்களை
பலரும் மிமிக்ரி செய்வதைப்
பார்க்கமுடியும்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஒருவர் கூட இதுவரை
நடிகர் ரங்காராவை இமிடேட் செய்ததே கிடையாது.
ரங்காராவின் தனித்துவத்திற்கு இது கூட உதாரணம்.
அவ்வளவு நுட்பமானது அவரது நடிப்பின் பரிமாணங்கள்.
முதியவராக நடித்தவர் என்றாலும்
இவரை ஒரு வட்டத்துக்குள்
அடைத்து Brand செய்துவிட முடியாது.
ஏனென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவ்!
.........

ராஜநாயஹம் பற்றி கவிஞர் வைத்தீஸ்வரன்

கவிஞர் வைத்தீஸ்வரன் : 
"ராஜநாயஹம் ஒரு பனிப்பாறை என்று நினைக்கிறேன். Iceberg. அதன் ஆழம் அளக்க முடியாதது. அவரது கடந்த காலம் ஒரு கீழடி பிரதேசம்."


Oct 26, 2019

மு.க.முத்து

கருணாநிதி வசிக்கும் அதே தெருவில் என் மறைந்த நண்பன் சவ்வாஸ் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா வீட்டுக்கு(1986ல்) போயிருந்தேன். எதிர் வீடு முக முத்து வீடு.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து.
சேகண்டி இனாயத்துல்லா " இங்க பாரு மு.க.முத்து!"
தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும்,சேகண்டி இனாயத்தையும் சவ்வாஸ் பரூக்கையும் பார்த்துக்கொண்டே தான் நுழைந்தார்.
உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார்.
உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
கோட்டையில பொறந்தாலும் விதி போட்ட புள்ளி தப்புமா?
குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்து திருவாரூரில் அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார்.
அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். முக முத்து சேட்டை செய்தால் அடிக்க கூட தெரியாது. தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி
' சீ ராஸ்கல்.. ராஸ்கல் சீ ' என்பார்.
எழுபதுகளில் கட்சி உடைந்த நிலையில் கருணாநிதி அரசியல் சொல்லடி கல்லடி படும் போதும் அப்போது முக முத்து திமுகவின் அரசியல் எதிரிகளால் அரசியலில் பகடை யாய் உருட்டப்பட்ட போது அவரை புத்திர பாசத்தோடு பாதுகாத்து தன் எதிரிகளை நோக்கி சொன்னார் " பாவம் அவன் ஒரு இளந்தளிர். அவனை விட்டு விடுங்கள். "
அவரின் புத்திர பாசத்திற்கு அக்னி பரீட்சை வைத்து தந்தையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார் முக முத்து.
ஜெயலலிதா கொடுத்த ஐந்து லட்சத்திற்கு கூட விலைபோனார் என்பது கருணாநிதி எதிர்கொண்ட மிக மோசமான சோகம்.
எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்தபோதே,ஒரு முறை முத்து கோவித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சமாதானப் படுத்தி ‘நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ என்று திருப்பி அனுப்பி விட்டார்.
பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு .
ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து வீடு திரும்பிய நிகழ்வை தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.
திருந்திய கெட்ட குமாரன்.
முக முத்து வின் மனைவி,(தாய்மாமன் சிதம்பரம் ஜெயராமன் மகள்) குழந்தைகளோடு அவரை விட்டு பிரிந்த பின் இவர் நடத்திய வாழ்க்கையில் சம்பந்த பட்டவர்கள்.
நெல்லூர் அனுசூயா இவருக்கு வேலைக்காரியாக வந்து இவருக்கு ஒரு பெண் மகவை பெற்ற பின் வீட்டம்மா ஆகியதால் அதன் பின் வேலைக்காரியாக வந்தசீர்காழி பானுவும் இவருக்கு மனைவியாகி பானு இல்லாமல் முத்துவால் வாழவே முடியாது என்ற நிலை மு. க. முத்துவுக்கு ஏற்பட்டது.
பானுவும் முக முத்து வும் "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ?" பாடி
லாயிட்ஸ் காலனி ஹௌசிங் போர்டில் தினமும் அக்கம் பக்கத்தார் கேட்க கச்சேரி நடத்தியது.
சிவாஜி கணேசன் இறந்த போது முக முத்து தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிராந்திகடையை திறக்க சொல்லி அனுசூயா, பானு வுடன் காரில் வந்து (அழகிரி கொடுத்த கார் !) ரகளை செய்தது -"ஏண்டா சிவாஜி செத்துட்டா உலகமே அழிஞ்சிடுச்சா .கடையை திறங்கடா டே."
அண்ணாவின் பிரபல நாடகம். 'வேலைக்காரி ' திரைப்படமாகவும் வந்து அவருக்கு தமிழகத்தின் பெர்னாட் ஷா பட்டம் வாங்கி தந்த வேலைக்காரி காவியம்.
முக முத்துவுக்கு அண்ணா மீது ரொம்ப பிரியம்.
அதனால் வேலைக்காரி மீதும்.
அனுசூயா முகமுத்து மகள் ஷீபா பீஸ் கட்ட முடியாமல் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் ஆகி இருக்கிறாள். அறிவுநிதியின் ஆட்கள் மிரட்டி அடிக்கவும் செய்யும் போது போலீசுக்கும் போக முடியாமல் அனுசூயா மிரண்டு "இவன் கிட்ட சிக்கிக்கிட்டேன். போதா குறைக்கு நானே எனக்கு ஒரு சக்களத்தியை தேடிகொண்டேன் ' என்று கண்ணீர் விட்ட விஷயம்.
எல்லாம் எப்போதோ நடந்த பழைய விஷயங்கள்.........
2003ம் ஆண்டு முத்து திருவாரூரில் இருந்த போது இவரிடம் ஒருவர் 'அண்ணே உங்க செல் போன் நம்பர் கொடுங்க' என்று கேட்ட போது இவர் பதில் "போய்யா என் வாழ்க்கையே செல்லரிச்சு போச்சி"
.................
முகமுத்து சொந்தக்குரலில் பாடிய ஒரு பாடல்
’அணையாவிளக்கு’ படத்தில்
‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
இந்தப்பாடலை நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது எப்போதும் பாடுவேன்.
‘ ராஜநாயஹம்!நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள்!’ என்று நெகிழ்வார்கள்.
முகமுத்து பாடிய இன்னொரு பாடல்
‘சமையல்காரன்’ படத்தில்
’சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க!
நான் சொத்தா நினைக்கிறது உங்க அன்பைத்தானுங்க!’
தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை.Spoiled Child!
முத்து பாடல் கச்சேரியில் அப்பா வசனம் எழுதி கல்யாண்குமார் நடித்த ’தாயில்லாப் பிள்ளை’ படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலை எப்போதும் அனுபவித்துப் பாடுவார்.
‘தாயில்லாப் பிள்ளை
பேச வாயில்லாப் பிள்ளை’
அதில் சரணமுடிவில்
‘இன்று ஊருமில்லை உறவுமில்லை யாரும் இல்லையே
நான் கடந்து வந்த பாதையிலே அமைதி இல்லையே
நான் தாயில்லாப்பிள்ளை பேச வாயில்லாப்பிள்ளை’
தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர்.
நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது.
தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட
அதிருப்தி காரணமாக மு.க.முத்து போகவிரும்பவில்லை.
குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை பிடித்து கீழே தள்ளி விட்டார் மு.க தமிழ் என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது.
உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள் !
குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும்,சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
இவருக்கு அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம்.
தயாளு அம்மையார் , ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு, அவர்கள் கண்ணில் வெண்ணை, தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம்.
முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை! அழகிரி நல்ல தம்பி!
ஸ்டாலின் மாறவேண்டும் ! "
கட்சியை விட்டு அழகிரி ஓரம் கட்டப்பட்ட போது கோபால புரம் வீட்டிற்கு போய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து சத்தம் போட்டிருக்கிறார். மாடியில் இருந்து அவருடைய அப்பா ரீயாக்ஸன் "முத்து குரல கேட்டு எவ்வளவு நாளாச்சி"
எல்லாம் பழைய விஷயங்கள்.........
2011 சட்டசபை தேர்தலின் போது மிகவும் உடல் நிலை சீர்கெட்டு ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்தார். தி.மு.க தலைவரே பிரச்சார மேடையிலேயே சொன்னார்- 'என் மூத்த மகன் மு.க.முத்து இன்று மிக ஆபத்தான உடல் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..'
இதுவும் பழைய விஷயம்..
அப்பாவும் இல்லை.
.....................................

Oct 23, 2019

மாவீரன் நெடுமாறன்


காமராஜருக்கு பக்கபலமாக இருந்து ஸ்தாபன காங்கிரஸை வளர்க்க பாடுபட்டவர்
பழ. நெடுமாறன்.

இவருடைய தலைவர் ஈ.வி.கே சம்பத் 1971 தேர்தலில் கோபிச்செட்டி பாளையம்பாராளுமன்ற தொகுதியில் தோற்ற பின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து விலகி இந்திரா காங்கிரஸில் இணைந்த பின்னும் காமராஜருக்கு பக்க பலமாக நெடுமாறன் நின்றவர்.
பெருந்தலைவர் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்கு விசுவாசமாய் நின்றவர்.
ஜனதா கட்சி ஆட்சியில் முன்பு இந்திராகாந்தியை திமுக காரர்கள் மதுரையில் தாக்கிய போது அவர் மீது அடி படாமல் அவ்வளவு அடிகளையும், தானே வாங்கி காப்பாற்றிய போது பழ. நெடுமாறனுக்கு மண்டை உடைந்தது.
"கண்ணகியை அடித்து விட்டீர்கள்,மதுரையே பற்றி எரியபோகிறது! " என்று ஆவேசப்பட்டவர்.

காங்கிரஸ் அட்ஹாக் கமிட்டியில் இந்திரா காந்தி "My son who saved my life!" என்று பெருமிதத்துடன், நெகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தினார்.
நெடுமாறனை தன் மூத்த மகனாகவே இந்திரா கருதினார்.
அந்த இந்திரா காங்கிரஸையும் விட்டு வெளியேறி தனியாக கட்சி நடத்தினார்.
இந்திராகாந்தியின் மகனை கொன்றவர்களை நெடுமாறன் இன்று ஆதரிப்பது ஒரு வரலாற்று முரண்.
அண்ணாத்துரை,ஈ.வி.கே.சம்பத், காமராஜர், இந்திராகாந்தி என்று பல தலைமையை கண்ட ஒரு அரசியல்வாதி இலங்கை விடுதலைப்புலிகள்
தலைவன் பிரபாகரனின் ஊதுகுழல் ஆன விசித்திரம்.
..
1980ல் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மதுரையின் மற்றொரு தொகுதியில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டில் இவர் ஜெயித்தார்.
நெடுமாறனுக்கு திக்கு வாய் ஒரு பலகீனம்.
அதை கவனமாக மேடையில் பேசும்போது மறைக்க முயல்வார். பேச்சும் சுவாரசியமாக, கூட்டத்தை கவர்ந்திழுக்கும்படியெல்லாம் இருக்காது.
"அன்றைய தினம் மகாகவி பாரதி அவர்கள் பாடல்கள் எழுதியபோது இவையெல்லாம் க...அ..விதைகளா என்று கேட்டார்கள். ஆனால் இன்று ......... "
தீப்பொறி ஆறுமுகத்திற்கு நெடுமாறன் என்றாலே இந்த திக்கு வாய் விஷயம் தான் அவல்.
" இந்த கொன்னவாயன் நெடுமாறன் சட்ட சபையில பேசுறாய்யா.. ' கே..எ..ஏரளாவுக்கு எ..எ..எரும மாட்டைக்கடத்துறாங்கெ..'.. அட எரும மாட்டுப்பயலெ.. எனக்கு ஒரு ஆசை.
இந்த கொன்னவாயன் நெடுமாறனுக்கும் மென்டல் பய ரஜினிகாந்துக்கும் பேச்சுப்போட்டி வக்கனும். எவன் ஜெயிக்கிறான்னு பாக்கனும்."
தமிழகத்தின் முதல் "மாவீரன்" நெடுமாறன் தான் தெரியுமா?
மாவீரன் தாமரைக்கனி..... மாவீரன் மு.க. அழகிரி......
இன்று இன்னும் அந்த பட்டம் ஒரு நூறு பேர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்....
அண்ணாமலை பல்கலை கழகத்தில் நெடுமாறன் படிக்கும் போது
ஒரு போராட்டத்தின் போது சில மாணவர்கள் ஒரு மிகப் பெரிய பேரழிவை ரசாயண கூடத்தில் நிகழ்த்த முயன்ற போது நெடுமாறன் தான் தடுத்திருக்கிறார்.
அப்போது அங்கே மாணவராய் இருந்த ந.முத்துசாமி இந்த தகவலை என்னிடம் சொன்னார். முத்துசாமியின் மாணவ நண்பர் கஜராஜ் சொல்லின் செல்வர் ஈ.வி.கே. சம்பத்தின் தம்பி. கஜராஜ் அற்பாயுளில் மறைந்தவர்.
கண்ணதாசன் இந்த மதுரை நெடுமாறன் பற்றி மிக பிரமாதமாக தன் சுயசரிதை வன வாசத்தில் எழுதியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஐம்பத்தெட்டு வருடங்களுக்கு முன் சம்பத்தோடு வெளியேறி,
'திராவிட இயக்கத்தின் இரும்புமனிதர்' மதுரை முத்துவுக்கு எதிராக தைரியமாக அரசியல் செய்தவர் தான் நெடுமாறன்.
அப்போது தான் மதுரை மக்களுக்கு இவர் மாவீரன் ஆனார்.
மதுரை முத்துவின் கடைசி காலத்தில்
'இலங்கைப் பிரச்னை' அவரை நெடுமாறனுடன் இணைந்து ஒரே மேடையில் அமர வைத்தது.
இலங்கைப் பிரச்னையே முழுமையாக இவரை ஆக்கிரமித்து விட்டது.

வீரப்பனிடம் இருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை 
மீட்டு அழைத்து வந்தவர் நெடுமாறன்.


என்னுடைய ஆங்கில பேராசிரியர் R. நெடுமாறன்.
 பல தடவை பழ. நெடுமாறனை கைது செய்ய வேண்டி வரும்போதெல்லாம் போலீசார் குழப்பத்தில்  பேராசிரியர் நெடுமாறன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார்கள்.

பிரபலமான விவேகானந்தர் காலண்டர் பழ. நெடுமாறனுடைய குடும்ப சொத்து.
.....


.............

Oct 22, 2019

'காதலிக்க நேரமில்லை' பிரபாகர்



காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.

'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட் வாங்கணும்.' ஏக்கமாய் நாகேஷிடம் சொல்வார். நாகேஷ் “விட்டா எங்கப்பனையே வாங்கிடுவே போலருக்கு.”

நாகேஷ் அவர் படத்தில் இவர் மகள் கதாநாயகியாய் நடித்தால்' எங்கப்பா (பாலையா ) முன்னாலே நீ கால் மேலே கால் போட்டு ..'என்று சொல்லும்போது பிரபாகர் குறுக்கிட்டு பதறி ' அது மரியாதை இல்ல .. அது மரியாதை இல்ல.." என்பது சுவையான காட்சி.

எஸ் வி சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடக நடிகர் . தி ஜா வின் 'வடிவேலு வாத்தியார்' நாடகம் சேவா ஸ்டேஜ் போட்ட போது அதில் 'கேப்ரியல்'என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
இந்த நாடகத்தில் கவிஞர் வைத்தீஸ்வரனும் அன்று நடித்தாராம்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கிடைத்தது போல நல்ல காமெடி ரோல் அவருக்கு அதற்கு பின் கிடைக்கவில்லை. அவர் பிரபலம் ஆகவும் இல்லை.

ராமண்ணா இயக்கிய “குலக்கொழுந்து” பட ஷீட்டிங் விஜயா வாகினியில் நடந்து கொண்டிருந்த போது இவரை பார்த்தேன். இவருக்கு அதில் ஒரு ரோல். ஆனால் நாகேஷுக்கு படத்தில் வேலை இல்லை. அங்கே ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்.

ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார்.

பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”

நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”

பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”

நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”

பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”

நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”

இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம்
மின்னல் வேகத்தில்!

நான் அவர் பெயரை கேட்டு அவர் 'பிரபாகர் 'என்று சங்கடப்படாமல் சொன்னார்.
அதோடு அப்போது நான் வாய்த்துடுக்காக
 " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தீங்களா. இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு! " என காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இவரை பார்த்து சொன்ன வசனத்தையே சொன்னபோது பிரபாகர் தன்னிரக்கத்துக்கு ஆளாகாமல் உற்சாகமாகி நாகேஷிடம் என்னை அறிமுகப்படுத்தியது கூட சினிமாவுலகில் அரிதான விஷயம்.

பாலச்சந்தரின் 'மன்மத லீலை 'படத்தில் இவர் Y.விஜயாவின் கணவராக வருவார்.வக்கீலாக நல்ல காமெடி செய்வார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி காம்பிநேசனில் ஒரு காட்சி.
ரஜினி வேகமாக சொல்லும் ஆங்கில வாக்கியத்தை சிரமப்பட்டு சொல்லும் குடிகாரராக!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் நாவல் படமாக்க ஸ்ரீதர் விரும்பி சிவாஜியை ஜோசெப் ரோலுக்கு புக் செய்தார். ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் சண்டையாகி ஜோசெப் ரோலில் சிவாஜி நடிக்க முடியாமல் போயிற்று.
அப்புறம் சந்திர பாபு அந்த ரோலை செய்ய ரொம்ப ஆசைப்பட்டார். ஜெயகாந்தனோடு ரொம்ப டிஸ்கசன் செய்து பார்த்தார். நடக்கவில்லை.
அதன் பின் ஒரு வழியாக கே விஜயன் இயக்கி நாகேஷ் தான்
 "யாருக்காக அழுதான் "படத்தில் நடித்தார்.

(ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்பாளி ஜெயகாந்தன் எந்த நடிகர் யாருக்காக அழுதான் ஜோசெப் ரோல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தெரியுமா? வீரப்பன்! ஜெயகாந்தனின் நண்பர் இவர்.பணத்தோட்டம்,பொண்ணுமாப்பிள்ளே படத்தில் நாகேஷுடன் நடித்தவர் வீரப்பன்.கவுண்டமணிக்கு காமெடி சீன்ஸ் எழுதியவர்.)

ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன் 'படத்தில் வரும் சிறுவனின் தாயாருக்கு ஒருவனோடு affair இருக்கும் . அது தானே அந்த கதையின் முக்கிய முடிச்சு. அந்த குருவி ஜோஷியக்காரனாக நடித்தவர் பிரபாகர் தான். கதாநாயகி காந்திமதிக்கு ஜோடி. ஆம் உன்னைப்போல் ஒருவன் கதாநாயகி பின்னால் சிரிப்பு நடிகையாக கலக்கிய காந்திமதி தான்.

தமிழ் திரை கண்ட மிக சிறந்த நடிகர்களில் பிரபாகர் ஒருவர். ஆனால் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
முப்பது வருடங்களுக்கு முன் பிரபாகர் இறந்து விட்டார் என கவிஞர் வைத்தீஸ்வரன் தகவல் தெரிவித்தார்.

Cecil B. Demille இயக்கிய Samson and Delilah படத்தில் கதாநாயகனாக நடித்த Victor Matureவேடிக்கையாக சொல்வார் :“I am not an actor. I have got 67 movies to prove it.” 67படங்களில் நடித்தவர் இவர்.

பிரபாகருக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் ஒன்றே அவர் சிறந்த நடிகர் என்பதற்கு போதுமான சாட்சி.

ஒரு படம் கூட ஒழுங்காக நடிக்காத பல நடிகர்களை தமிழ் திரை கண்டு சீராட்டி போஷித்திருக்கிறது என்பது விசித்திர அபத்தம்.

..........................

Oct 21, 2019

டவுன் பஸ் கண்ணப்பா


பட்டபடிப்பு முடித்திருந்த நேரம்.
கோரிபாளையம் அமெரிக்கன் கல்லூரி முன் உள்ள கடைகளுக்கு முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம்.
என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன் ஒருவனை காட்டினான்.
"மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் " என்ற பாடலை அந்த புது நண்பன் அழகாக பாடினான்.
அருண் சொன்னான்." மாப்பிள்ளை, இவனோட அப்பா சினிமா நடிகராம்டா " என்றான்.
அந்த நண்பனிடம் "யார் உங்க அப்பா ?" -கேட்டேன்.
' கண்ணப்பா.' - புது நண்பன் பதில்.

"அடடே 'டவுன் பஸ்'கதா நாயகன்.
கே சோமு படம். ஏ பி என் வசனம் எழுதினார்.
அஞ்சலி தேவி தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி.                             இருவருக்கும் பாட்டு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே. உலகம் இது தானா துயரம் நிலை தானா' "
அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது.
நான் தொடர்ந்தேன். ''தேவகி ' படத்தில் எம் ஜி யார் மனைவி வி.என் ஜானகியோடு கதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் " என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன்.
'எஸ்.எஸ்.ஆர் நடித்த 'தெய்வத்தின் தெய்வம் ' படத்தில் இரண்டாவது கதாநாயகன்.
சிவாஜி படம் கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரனாருக்கு தேசாந்திர தண்டனை கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார் தம்பி.
ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும் சீனாக்கார ராணுவ அதிகாரி '
இப்படி நான் அடுக்கி கொண்டே போகும் போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது.) கண்கள் கலங்கி விட்டது.
" இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர் என்று சொன்னால் யாருக்குமே புரியவில்லை. என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு. ' என்னமோ சொல்றான். யாருன்னே புரியலே ' என்பார்கள்.
நீங்கள் தான் சார் எங்க அப்பா பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள். பெயர் நான் சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள்! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.நம் வயதில் யாருக்குமே என் அப்பா பற்றி எதுவுமே தெரியவில்லை."
கமல், ரஜினி காலம்.
கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்?
அன்று வீட்டில் அவர் அப்பா கண்ணப்பாவிடம் என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட அழைத்திருக்கிறார்.
மதுரை கே கே நகரில் வீடு. அதற்கு மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர் வீட்டுக்கு போனேன்.
கண்ணப்பாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு பிள்ளைகள். பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார்.
கண்ணப்பா, அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள்.
பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார். எனக்கு பழைய போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம்.
ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் கண்ணப்பா, சிவாஜி கணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக,
அதே புகைப்படத்தில் வேட்டி கட்டிய இளைஞனாக எம் என் நம்பியார்.
இன்னும் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா "சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.
பல நடிகர்களை பார்த்து அவர்கள் பெயரை குறிப்பிட்டு நானே அடையாளம் காட்டியது கண்ணப்பாவுக்கு திகைப்பு!
கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார்.

Oct 19, 2019

ஆதித்தன்



"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " டிஎம் எஸ் பாட்டு.
 'விளக்கேற்றியவள் ' படத்தில் ஆதித்யன் என்ற நடிகர் கதாநாயகனாய் நடித்த பாட்டு.

சினிமா என்ற மாய உலகம் சிதைத்த நடிகர்களில் ஆதித்தனும் ஒருவர்.
இவர் காரைக்கால் பி.எஸ்.ஆர் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்து கொடுத்துகொண்டிருந்தார்.

சிட்டாடல் அறிமுக நடிகர்கள் ஆனந்தன் (பிரகாஷ் ராஜ் மாமனார் ),
ஜெய் சங்கர்,
ஆதித்தன் ஆகியோர்.
ஆனந்தன் படு செயற்கையான மூன்றாந்தர நடிகர். நல்ல பிரபலமாகி பின்னால் ரொம்ப கஷ்டப்பட்டார்.
டிஸ்கோ சாந்தி சம்பாரித்த பின் தான் சாகிற நேரத்தில் வளமையை பார்த்தார்.
ஜெய் சங்கர் ஏராளமான டப்பா படங்களில் நடித்தே நிறைய சம்பாரித்தவர்.சினிமாப்படம் போரடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய்சங்கர் படங்களால் தான தெரிய வந்தது!
'குழந்தையும் தெய்வமும் ' 'பட்டணத்தில் பூதம்' படங்களில் இவர் இருந்தார். அந்த படங்களின் தரத்திற்கு நாகேஷ் தான் காரணம்.
பெயரும் தெரியாமல்,காசும் பார்க்காமல்,
கடைசியில் தியேட் டரில் டிக்கெட் கொடுப்பது , கிழிப்பது, புரொஜெக்டரை ஆபரேட் பண்ணுவது என்று வறுமையையும் சிறுமையையும் முழுமையாக அனுபவித்தவர் ஆதித்தன்.
A most poor man, made tame to fortune’s blows
– Shakespeare in ’King Lear’
யதார்த்தத்தை உணர்ந்த நிலையில் சினிமா சம்பந்தப்பட்ட நினைவுகளை ஒதுக்கி விட்டதாக சொன்னார். விரக்தியில் தன் சினிமா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை கூட அழித்து விட்டார்.
இவருக்கு தையல் வேலையும் தெரியும் என்பதால் டெய்லர் வேலையும் காரைக்காலில் பார்த்திருக்கிறார்.

இவ்வளவு சரிவான நிலையிலும் ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். ஒன்பது பிள்ளைகள் என்பதும் விந்தை.
'விளக்கேற்றியவள்' 1964ல் ஜோசப் தளியத் படம். இதில் 'கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியை தீட்டு, கண்ணியம் தவறாதே அதிலே கடமையை காட்டு ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு " எம்ஜியார் பாணியில் புத்தி சொல்லி பாடிய ஆதித்யன் அதே 1964 வருடத்தில் வெளி வந்த தேவர் தயாரித்த " தாயும் மகளும் " என்ற படத்திலும் கதாநாயகன்!
அடுத்து இரண்டு வருடத்தில் வில்லனுக்கு அடியாளாக 'காதல் படுத்தும் பாடு ', 
அதற்கு அடுத்த வருடம் எம்ஜியாரின் படம் 'தனி பிறவி ' படத்தில் சின்ன வேடம்.
உணர்ச்சியை, பாவங்களை முகத்தில் காட்ட தெரியாத நடிகர் ஆதித்தன்!
திரையுலகம் இவருக்கு அந்நியமானதில் ஆச்சரியம்,வருத்தம் ஒன்றும் இல்லை.
1997ல் குமுத்ததில் பேட்டி கொடுத்த போது எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டு தன்னை பழி வாங்கி விட்டார் என்று அபத்தமாக பேட்டி கொடுத்தார்.
மலை பெருமாள் என்ற ஆதித்தன்.
காரைக்கால் அருகிலுள்ள திருமலைராயன் பட்டினம் சொந்த ஊர்.
2015 நவம்பரில் இந்த நடிகர் மறைந்தார்.

Oct 18, 2019

அசோகமித்திரனின் 'கோயில்' சிறுகதை



அசோகமித்திரனின் ‘கோயில்’ கதை செயலோயச்செய்து விட்டது.

 இந்த ‘கோயில்’ கதை அவருடைய  சிறுகதைத்தொகுதி  ‘1945 இல் இப்படியெல்லாம் இருந்தது’ காலச்சுவடு வெளியீட்டில் இருக்கிறது.

அசோகமித்திரன் படைப்புகளை முழுமையாய் படித்தவர்களுக்கு இந்தக் கதை தரும் அனுபவம் புதிதாய் படிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார். ஆனால் அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர்.

18 வது அட்சக்கோடு நாவலில் அவருடைய அப்பா உயிரோடு வருவார். அப்பா வரும் கதைகள் என்றால் சட்டென்று லீவு லெட்டர், மண வாழ்க்கை,, திருநீலகண்டர், இன்ஸ்பெக்டர் செண்பக ராமன் போன்ற கதைகள் நினைவுக்கு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் நாவல் ‘ யுத்தங்களுக்கிடையில்’- அப்பா மாயவரத்திலிருந்து செகந்திரா பாத்  போய் பிழைப்புச்சவாலை ஏற்பார். இப்படி ஒரு அன்னியப் பிரதேசத்திற்கு எது அவரை உந்தியது.

அப்பாவின் மரணத்தையொட்டி நடந்தவைகளைப் பேசும் ’அப்பாவின் சிநேகிதர்’ ‘ முனீரின் ஸ்பான்னர்கள்’ போன்ற சிறுகதைகள்.

செத்துப்போன அப்பா பற்றி எத்தனை தடவை பிரஸ்தாபித்திருக்கிறார்!
.... என் அப்பா செத்துப்போய் விட்டார்.....
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனைத் தொடர்ந்து படிப்பவர்கள் அந்த அப்பா கேரக்டரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவர். முழுமையாக படித்தவர்களும் அந்த அப்பாவின் கதாபாத்திரத்துடன் பரிச்சயம் கொண்டிருப்பர்.
அப்படிப்பட்டவர்கள் இந்த ’கோயில்’ கதை படிக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாகாமல் இருக்க முடியாது.

கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவது தானே கதை என்பார் அசோகமித்திரன்.

‘யார் எழுதினாலும் கதைகளை வாசித்துவிட்டு வாசித்ததைக் கவனத்திலிருந்து விலக்கி விடுபவர்களுக்கு இச்சங்கடம் நேராது; ஆனால் தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஒரு எழுத்தாளனின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்புகளில் இடம் பெறுமா?’ என்ற வாசகனின்  தவிப்பையும் அசோகமித்திரன் அறிந்து சொன்னவர் தான்.

அப்பா செகந்திராபாத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆகி விட்டது.

அப்பா பிறந்து வளர்ந்த ஊர் மாயவரத்திற்கு தன் நாற்பதையொட்டிய வயதில் சென்னையில் இருந்து கதை சொல்லி வருகிறார். அப்பா இந்த ஊரில் தான் இருபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய கஸின் சிஸ்டர் காமாட்சி வசிக்கும் பூர்வீக வீடு.

 உள்ளூரில் பார்க்க வேண்டிய வேலையை இவர் முடிக்கிறார்.
 மாயவரம் காமாட்சி கோயிலுக்கு கஸின் போகிறாள்.
இவரும் கொஞ்ச நேரம் கழித்து அந்த காமாட்சி கோயிலுக்குப் போகிறார்.

எதிரே கோயிலுக்குப் போய் விட்டுத்திரும்பும் காமாட்சி
“ இன்னக்கென்னமோ எனக்கு ஏதோ பயமாயிருந்தது.” என்று சொல்கிறாள்.

 கோயிலுக்குள் வெளிச்சம் போதாது.
அவருடைய முன்னோர்கள் இந்தக் கோயிலுக்கு தினமும் போயிருப்பார்கள். இருட்டில் எதிலோ இடித்து காலில் இவருக்கு இப்போது ரத்தக்காயம்.
சுற்றி கடைசிப்பக்கத்தை அடைகிறார்.

அவ்வளவு நீளப்பிரகாரத்திற்கு ஒரு விளக்கு கூட கிடையாது.பயமாகத்தான் இருக்கிறது. தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவர் அசோகமித்திரனையே பார்த்தபடியே முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.
இருவரும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.
யார் அது? யார்?

கன்னத்தில் அறைந்தது போல அடையாளம் தெரிகிறது! இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்த அப்பா தான் இவர் முன்னே நின்று கொண்டிருக்கிறார். ‘அப்பா!’ என்று அசோகமித்திரன் கத்துகிறார்.

கோயிலாக இருந்தாலென்ன? பழைய கட்டிடங்களுக்கெல்லாம் தனியாகப் போகக்கூடாது.

You tremble and look pale:
Is not this something more than fantasy?
.....What may this mean?.... Why is this?..

- Shakespeare in Hamlet

..........

மீள்
27.03.2013

அசோகமித்திரனின் ‘கோயில்’ சிறுகதை பற்றி நான் எழுதிய 13வது நாளில் (09-04-2013)
என் அப்பா இறந்தார்.

 அப்பாவுக்கு அசோகமித்திரனின் வயசு தான்.

1931ம் ஆண்டு பிறந்தவர் தான்.

சாரு நிவேதிதா ஃபேஸ்புக்கில் - 18.10.2019

ராஜநாயஹம்.  உங்களுக்கு என்னை விட வயசு கம்மியாகத்தான் இருக்கும்.  வயசு என்ன வயசு.

 துறவிக்கு 12 வயசாக இருந்தாலும் பால சந்நியாசி என்று பாதம் பணிகிறது இல்லையா?  உங்கள் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க விரும்புகிறேன்.
காரணம் இதுதான்: அசோகமித்திரன் கோயில் கதை எழுதினார்.  உலகின் அதியற்புதமான சிறுகதைகளில் ஒன்று.  அது பற்றி நீங்கள் பத்து வரி எழுதியிருக்கிறீர்கள்.  அதுவும் சரி.

ஆனால் முத்தாய்ப்பாக ஹேம்லெட்டிலிருந்து ரெண்டு வரி எடுத்துப் போட்டு அந்தக் கதையை ஆகாசத்துக்கு எடுத்துக் கொண்டு போய் விட்டீர்களே ராஜநாயஹம்.  நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.  வயசு கம்மி என்றாலும் உங்கள் பாதம் பணிகிறேன்.

-- சாரு நிவேதிதா

சிட்டியாலா ராமச்சந்திரன்

சிட்டியாலா ராமச்சந்திரன்
- R.P.ராஜநாயஹம்

சி.ராமச்சந்திரன். பெயரில் உள்ள இனிசியல் ஊரின் பெயர். ஆந்திராவில் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் போகும் வழியில் சிட்டியாலா (chitiyala) ரயில்வே ஸ்டேசன் இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர் சிட்டியாலா ராமச்சந்திரன். அவர் பரம்பரையில் யாரும் அப்பா பெயரை இனிசியலாக போட மாட்டார்கள். ஊர் பெயரை தான் குறிப்பிடுவார்கள்.

சிட்டியாலா ராமச்சந்திரன் அவர்களுக்கு வயது 2017ல் எண்பத்தெட்டு. கூத்துப்பட்டறையின் டிரஸ்ட் மெம்பராய் இருந்தவர் . கூத்துப்பட்டறை விவகாரங்களில் பெரும்பங்கு வகித்தவர்.

மறைந்த வக்கீல் பாகீரதி மூலமாக ந.முத்துசாமிக்கு அறிமுகமானவர்.

என்னுடைய Dress sense ஐ ரொம்ப ரசிப்பவர் சிட்டியாலா.

வேடிக்கையாக என்னிடம் பேசிக்கொண்டே இருப்பார்.
’சார், சீக்கிரமா பார்லிமெண்ட் மெம்பர் ஆகிடுங்க. எம்.பிக்கு அலவன்ஸ், சம்பளமெல்லாம் லட்சக்கணக்கில தர்றாங்களாம்’ – திடீரென்று ஒரு நாள் ஸ்ட்ரேன்ஞ்சாக இப்படிக்கூட என்னிடம் சொன்னார்.
 முதுமை அவருடைய பேச்சில் அழகான மழலையை கொண்டு வந்திருந்தது.

தன் கல்லூரி வாழ்க்கையை என்னிடம் நினைவு கூர்ந்தார்.
சிட்டியாலா ராமச்சந்திரன் திருநெல்வேலி இந்துக்கல்லூரி மாணவர்.

மதுரை திரவியம் தாயுமானவர் ஹிண்டு காலேஜ்.
மதுரை திரவியம் தாயுமானவர் தான் இந்துக்கல்லூரியின் ஃபவ்ண்டர்.

 இந்த நெல்லை இந்துக்கல்லூரி பற்றி காதில் விழும்போது  அதில் படித்த புதுமைப்பித்தன் நினைவுக்கு வருவார்.

ஜூனியர் பி.ஏ. பாலக்காட்டில் படித்த சிட்டியாலா ராமச்சந்திரன் சீனியர் பி.ஏ இந்துக்கல்லூரிக்கு வந்திருக்கிறார்.

இந்துக்கல்லூரி முதல்வர் பெயர் அலெக்சாண்டர் ஞானமுத்து.
 ஷேக்ஸ்பியர் பாடம் இவர் பிரமாதப்படுத்துவார்.

 ப்ரொஃபசர் பொன்னுசாமி பிள்ளை இந்து கல்லூரியில் பிரபலமான பேராசிரியர்.

1949ல் ஒரு வசீகர நிகழ்வு திருநெல்வேலியில். தமிழகக் கல்வித்துறை ஒட்டு மொத்தமும் இதை கவனித்து கன்னத்தில் கை வைத்திருக்கும். மூக்கில் விரல் வைத்து நெல்லையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.

இந்துக்கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஞானமுத்து மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகள் உண்டு.

பாளையங்கோட்டை சாரா டக்கர் கல்லூரி பெண்களுக்கானது. இதில் ஒரு பெண் தான் முதல்வர். இவர் கணவனை இழந்தவர். பெண் முதல்வருக்கு பத்து புத்திரங்கள். புள்ளக்குட்டிக்காரர்.

இவர் பெயர் இப்போது சிட்டியாலா ராமச்சந்திரனுக்கு நினைவில்லை.

சாராடக்கர் காலேஜ் பெண் முதல்வரும் இந்து காலேஜ் முதல்வர் அலெக்சாண்டர் ஞானமுத்துவும் திருமணம் செய்து கொண்டார்கள்!
My child and your children are playing with our children!

சிட்டியாலா ராமச்சந்திரன் போஸ்ட் க்ராஜுவேசன் படிப்பு சென்னை தாம்பரம் கிறிஸ்டியன் காலேஜ்.
ஆணழகன் ஜி.என்.பாலசுப்ரமண்யம், காதல் மன்னன் ஜெமினி கணேசன் கிறிஸ்டியன் காலேஜில் படித்தவர்கள் தான்.

அங்கே ராமச்சந்திரனுக்கு பிரின்ஸி பாய்ட் (Boyd).
Absent minded professor Dr.Kibble. கிப்பில் மேத்ஸ் ப்ரொபசர். முதல்வர் பாய்ட், கிப்பில் இருவருமே ஸ்காட்டிஷ். Scotland.

ப்ரஃபசர் கிப்பில் ரோட்டில் கிடக்கும் கல்லைக்கூட எடுத்து வந்து டெமொ செய்து கணக்குப்பாடம் நடத்துவாராம்.
எக்மோரில் காரை நிறுத்தியதை மறந்து விட்டு ட்ரெயின் ஏறி தாம்பரம் வந்து விடுவாராம்.

தண்டலம் தேவநேசன் பாலிடிக்ஸ் ப்ரொஃப்சர். பின்னாளில் அசாமில் ஒரு யுனிவர்சிட்டி வைஸ் சான்ஸலர் ஆகியிருக்கிறார்.

எண்பத்தெட்டு வயதில் தன் ஆசிரியர்களை நினைவு கூர்ந்த சிட்டியாலா ராமச்சந்திரன் சார்.

சென்ற வருடம் மறைந்து விட்டார்.
ந. முத்துசாமி கடைசியாக கலந்து கொண்ட
 துக்க நிகழ்வு சிட்டியாலா ராமச்சந்திரன் மரணம் தான்.

………………………………..


Oct 17, 2019

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர்.


அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது.


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். அந்த பிள்ளைகள் ஜெய காந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம்.

காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள்.

காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார்.

ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.

இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார்.

" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன்.

கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசன்?
போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம்
ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்?

உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு.

......


(கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் , இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி
(நன்றி : The Hindu))


Oct 15, 2019

’தண்ணிலவு தேனிறைக்க’ மாயவநாதன்


'காகித ஓடம் கடலலை மேலே ' பாடல் எழுதப்பட்ட சுவாரசியம் பற்றி வைரமுத்து துவங்கி முதல்வர்
மு.கருணாநிதி வரை தமிழக மக்களுக்கு சொல்லிவிட்டார்கள்.
அந்த கவிஞர் மாயவநாதன்.
பூலாங்குளம் மாயவநாதன்.

'காகித ஓடம் ' பாடலை மாயவநாதன் எழுதுவதற்கு பதிலாக 'மறக்க முடியுமா ' தயாரிப்பாளர் மு.கருணாநிதி எழுதினார்.
டி கே ராமமூர்த்தியிடம் பாடலுக்கு மெட்டு கேட்டார் மாயவநாதன். ராம மூர்த்தி " என்னையா மெட்டு .' மாயவநாதன், மாயவநாதன், மாயவநாதன்' இது தான் மெட்டு ." என்றவுடன் மாயவநாதன் கோவித்துக்கொண்டு போய்விட்டார்.
இந்த கோபம் தான் அவரை வறுமைக்கு விரட்டியது. மான ரோஷம் பார்த்தால் குடும்பம் தெருவுக்கு வந்து விடும் என்று அறியாதவராய் இருந்திருக்கிறார்.
( பல வருடங்களுக்கு முன் ,'தேவி 'பத்திரிகையில் மாயவநாதனின் குடும்பம் அவர் மறைவிற்குப்பின் ஒரு ஓலை குடிசையில் வசிப்பதை படம் பிடித்து காட்டியிருந்தார்கள் )
காகித ஓடம் பாடலில் பல்லவி மட்டுமல்ல சரணம் கூட ' மாயவநாதன் மாயவநாதன் மாயவநாதன் ' தானே.
"தண்ணிலவு தேனிறைக்க , தாழைமரம் நீர் தெளிக்க " என்று குளுகுளு பாட்டு எழதியவர் மாயவநாதன்.
பி.சுசிலா பாடியது. "படித்தால் மட்டும் போதுமா"? படத்தில் சாவித்திரி நளினமாக நடந்து பாடி நடிப்பதற்காக.
'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ? நெஞ்சில்
நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ?
கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ?'
என்ற,சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'பந்த பாசம் ' படப்பாடலை எழுதியவரும் மாயவநாதன் தான்.
”இதழ் மொட்டு விரிந்திட, முத்து விளைந்திடும் சித்திரப்பெண் பாவை,
கண் பட்டு மறைந்தெனை விட்டுப் பறந்திடும் காரணம் தான் யாதோ?”
சந்தங்கள் கொண்ட சொக்க வைக்கும் இந்த பாடல் பந்த பாசத்தில் ஜெமினி - சாவித்திரிக்கு.
பி.பி.எஸ், சுசிலா.
இதயத்தில் நீ “ சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ, இந்த கட்டுக் கரும்பினைத் தொட்டு குழைந்திட யார் வந்தவரோ”
'தண்ணிலவு தேனிறைக்க , தாழை மரம் நீர் தெளிக்க ' பாடலை குளிர்ச்சியாக எழுதிய மாயவநாதன் கடைசியில் நல்ல உச்சிவெயிலில்,கடும் பசிமயக்கத்தில்,நடுரோட்டில் சுருண்டு விழுந்து இறந்து போனார்.
'என்றும் மேடு பள்ளம்
நிறைந்தது தான் வாழ்க்கையென்பது ' என்று 'நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ ' பாடலில் ஒரு சரணத்தில் எழுதிய மாயவநாதன் அதே பாடலில் இன்னொரு சரணத்தின் கடைசி வரி
" வழி இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது?" என கேட்டு எழுதியிருந்தார்.
’விதி’ இங்கு வந்து முடியுமென்றால் யார் தடுப்பது? என்று தான் நான் எப்போதும் இந்த பாடலை பாடும்போதெல்லாம் முடிப்பேன்.
...
(01.12.2008 அன்று எழுதப்பட்ட பதிவு)

Oct 14, 2019

ஹரநாத் ராஜா


ஹரநாத் ராஜா. பானுமதி நடித்த 'அன்னை' படத்தில் அவருக்கு வளர்ப்பு மகன்.
தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார்.தங்க தட்டில் தான் சோறூட்டி பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.
சச்சு உடன் ஹர நாத் ராஜா வுக்கு ஒரு நல்ல பாடல். அழகான காரில் .
’அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்’
சுமை தாங்கியில்
எல். விஜயலக்ஷ்மியுடன்
'ஓ மாம்பழத்து வண்டு, வாசமலர் செண்டு '
சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி . பரமசிவனாக.


இவர் ஓவர்நைட்டில் ஹீரோ ஆனவர்.
பாண்டி பஜாரில் ஷு வாங்கும்போது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பார்த்து இவரை தெலுங்கில் கதாநாயகனாக்கினார் என்று ஒரு வெர்ஷன்.
பைலட் ஆக ஆசைப்பட்டவர். சினிமா திசை மாற்றியிருக்கிறது.
கோணசீமா ஜமிந்தார் குடும்பத்தில் இருந்து இவருக்கு மனைவி வாய்த்தார்.
கோட்டையிலே பிறந்தாலும் விதி போட்ட புள்ளி மாறுமா?
’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் வில்லன். சிவாஜியை குடித்து விட்டு ஹர நாத் ராஜா நிஜமாகவே நடிக்கும்போது கன்னத்தில் அறைந்து விட்டார். .பாலாஜி இவரை பெண்டு கழட்டி விட்டார்.
பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லாட்ஜில் வைத்து ஒரு நாள் சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி ' இவர் யார் தெரியறதோ? ஹர நாத் ராஜா . ' என சுட்டினார்.
ஆர்வமாக பார்த்தேன். வசதி இல்லை இப்போது அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது. குடித்தே வீணாக போய் விட்டார்.
ஹர நாத் ராஜா போன சிறிது நேரத்தில் நான் கிளம்பினேன். பஸ் ஸ்டாப். ராஜா அங்கே
பஸ்ஸு க்காக நின்று கொண்டிருந்தார். நான் அவரை மீண்டும் பார்த்தேன்.
தான் இன்னார் என்று எனக்கு தெரிந்து புரிந்து தான் அவரை கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து என்னை பார்த்தார். அதற்குள் பஸ் வந்து விட்டது. சரியான கூட்டம் பஸ் நிறைய. ஏறவும் பலரும் பெரும் முயற்சி எடுக்க ஆரம்பித்தனர்.
இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார். கம்பியை பிடித்த பிடியை விடவில்லை.
கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார்.
கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது.
பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் முகம் சுளித்து, கம்பியை பிடித்திருக்கிற ஹரநாத் கையில் அடித்து ' கைய எடுப்பா. கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார். ஹரநாத் ராஜாவின் பிடி தளர்ந்து தடுமாறி கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.
'அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'
அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது.
அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.
அவர் அடுத்த பஸ்ஸுக்காக காத்துகொண்டிருந்தார் .
ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது
"காவிய கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "
அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த டவுன் பஸ்ஸை எதிர்நோக்கிகொண்டிருந்தார்.
(2008ல் ’அழகிய மிதிலை நகரினிலே’ என்ற தலைப்பில்
நான் எழுதிய பிரபலமான பதிவு)