Share

Oct 22, 2019

'காதலிக்க நேரமில்லை' பிரபாகர்



காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.

'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட் வாங்கணும்.' ஏக்கமாய் நாகேஷிடம் சொல்வார். நாகேஷ் “விட்டா எங்கப்பனையே வாங்கிடுவே போலருக்கு.”

நாகேஷ் அவர் படத்தில் இவர் மகள் கதாநாயகியாய் நடித்தால்' எங்கப்பா (பாலையா ) முன்னாலே நீ கால் மேலே கால் போட்டு ..'என்று சொல்லும்போது பிரபாகர் குறுக்கிட்டு பதறி ' அது மரியாதை இல்ல .. அது மரியாதை இல்ல.." என்பது சுவையான காட்சி.

எஸ் வி சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடக நடிகர் . தி ஜா வின் 'வடிவேலு வாத்தியார்' நாடகம் சேவா ஸ்டேஜ் போட்ட போது அதில் 'கேப்ரியல்'என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
இந்த நாடகத்தில் கவிஞர் வைத்தீஸ்வரனும் அன்று நடித்தாராம்.

காதலிக்க நேரமில்லை படத்தில் அவருக்கு கிடைத்தது போல நல்ல காமெடி ரோல் அவருக்கு அதற்கு பின் கிடைக்கவில்லை. அவர் பிரபலம் ஆகவும் இல்லை.

ராமண்ணா இயக்கிய “குலக்கொழுந்து” பட ஷீட்டிங் விஜயா வாகினியில் நடந்து கொண்டிருந்த போது இவரை பார்த்தேன். இவருக்கு அதில் ஒரு ரோல். ஆனால் நாகேஷுக்கு படத்தில் வேலை இல்லை. அங்கே ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்.

ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார்.

பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”

நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”

பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”

நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”

பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”

நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”

இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம்
மின்னல் வேகத்தில்!

நான் அவர் பெயரை கேட்டு அவர் 'பிரபாகர் 'என்று சங்கடப்படாமல் சொன்னார்.
அதோடு அப்போது நான் வாய்த்துடுக்காக
 " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பாத்தீங்களா. இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்கவேண்டியிருக்கு! " என காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் இவரை பார்த்து சொன்ன வசனத்தையே சொன்னபோது பிரபாகர் தன்னிரக்கத்துக்கு ஆளாகாமல் உற்சாகமாகி நாகேஷிடம் என்னை அறிமுகப்படுத்தியது கூட சினிமாவுலகில் அரிதான விஷயம்.

பாலச்சந்தரின் 'மன்மத லீலை 'படத்தில் இவர் Y.விஜயாவின் கணவராக வருவார்.வக்கீலாக நல்ல காமெடி செய்வார்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ரஜினி காம்பிநேசனில் ஒரு காட்சி.
ரஜினி வேகமாக சொல்லும் ஆங்கில வாக்கியத்தை சிரமப்பட்டு சொல்லும் குடிகாரராக!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் நாவல் படமாக்க ஸ்ரீதர் விரும்பி சிவாஜியை ஜோசெப் ரோலுக்கு புக் செய்தார். ஸ்ரீதருக்கும் ஜெயகாந்தனுக்கும் சண்டையாகி ஜோசெப் ரோலில் சிவாஜி நடிக்க முடியாமல் போயிற்று.
அப்புறம் சந்திர பாபு அந்த ரோலை செய்ய ரொம்ப ஆசைப்பட்டார். ஜெயகாந்தனோடு ரொம்ப டிஸ்கசன் செய்து பார்த்தார். நடக்கவில்லை.
அதன் பின் ஒரு வழியாக கே விஜயன் இயக்கி நாகேஷ் தான்
 "யாருக்காக அழுதான் "படத்தில் நடித்தார்.

(ஆனால் தனிப்பட்ட முறையில் படைப்பாளி ஜெயகாந்தன் எந்த நடிகர் யாருக்காக அழுதான் ஜோசெப் ரோல் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தெரியுமா? வீரப்பன்! ஜெயகாந்தனின் நண்பர் இவர்.பணத்தோட்டம்,பொண்ணுமாப்பிள்ளே படத்தில் நாகேஷுடன் நடித்தவர் வீரப்பன்.கவுண்டமணிக்கு காமெடி சீன்ஸ் எழுதியவர்.)

ஜெயகாந்தன் இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன் 'படத்தில் வரும் சிறுவனின் தாயாருக்கு ஒருவனோடு affair இருக்கும் . அது தானே அந்த கதையின் முக்கிய முடிச்சு. அந்த குருவி ஜோஷியக்காரனாக நடித்தவர் பிரபாகர் தான். கதாநாயகி காந்திமதிக்கு ஜோடி. ஆம் உன்னைப்போல் ஒருவன் கதாநாயகி பின்னால் சிரிப்பு நடிகையாக கலக்கிய காந்திமதி தான்.

தமிழ் திரை கண்ட மிக சிறந்த நடிகர்களில் பிரபாகர் ஒருவர். ஆனால் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.
முப்பது வருடங்களுக்கு முன் பிரபாகர் இறந்து விட்டார் என கவிஞர் வைத்தீஸ்வரன் தகவல் தெரிவித்தார்.

Cecil B. Demille இயக்கிய Samson and Delilah படத்தில் கதாநாயகனாக நடித்த Victor Matureவேடிக்கையாக சொல்வார் :“I am not an actor. I have got 67 movies to prove it.” 67படங்களில் நடித்தவர் இவர்.

பிரபாகருக்கு 'காதலிக்க நேரமில்லை' படம் ஒன்றே அவர் சிறந்த நடிகர் என்பதற்கு போதுமான சாட்சி.

ஒரு படம் கூட ஒழுங்காக நடிக்காத பல நடிகர்களை தமிழ் திரை கண்டு சீராட்டி போஷித்திருக்கிறது என்பது விசித்திர அபத்தம்.

..........................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.