Share

Oct 5, 2019

கள்ளபார்ட் நடராஜன்


தஞ்சாவூரைச்சேர்ந்த இந்த நடராஜனின் அப்பா நாடகங்களில் கள்ளபார்ட் வேடம் செய்தவர்.
அதனால் ‘கள்ளபார்ட்’ நடராஜனாக திரை உலகில் அடையாளப்படுத்தப்பட்டார்.
உயரம் குறைவான நடிகர்.
‘பராசக்தி’யில் அகதி முகாமில் அரசு அதிகாரியாக நடித்தார்.

பெரிய கோவில்(1958) படத்தில் கதாநாயகனாக நடித்தாராம்.
நாகமலை அழகி (1962) என்ற ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததாகவும் தெரிய வருகிறது.
தெய்வப்பிறவி(1960)யில் சிவாஜியின் சேட்டைக்காரத்தம்பியாக நடித்திருப்பார்.

கள்ளபார்ட் நடராஜன் என்றால் இன்றும் எல்லோருக்கும் நினைவில் நிற்பது அவருடைய டப்பாங்குத்து டான்ஸ் தான்.
1959ல் ‘வண்ணக்கிளி’ - “சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு, மத்தாப்பூ சுந்தரி ஒருத்தி” பாடலில்
1961ல் குமுதம் - “மாமா, மாமா, மாமா” பாடலில் கள்ளபார்ட் நடராஜனின் டப்பாங்குத்து நடனம்! உற்சாகமாக,அனுபவித்து ஆடுவார்.

’மலரை பறித்தாய், தலையில் வைத்தாய்,
மனதை பறித்தாய் எங்கே வைத்தாய்’ பி.பி.எஸ் பாடல் இவருக்கு தான்.
திருச்சி தியாகராஜன் எழுதிய பாடல்.

அதன் பிறகு கள்ளபார்ட் நடராஜன் சொல்லும்படியாக நடித்தது மதறாஸ் டூ பாண்டிச்சேரி! கதாநாயகன் மாடர்ன் நடிகர் ரவிச்சந்திரனைப்போல வில்லனும் அழகாக,ஸ்டைலாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் பலரும் அப்போது சொன்னார்கள்.
“ஒளிவிளக்கு” எம்.ஜி.ஆரின் நூறாவது படத்தில்
கள்ளபார்ட் நடராஜன்
விதவை சௌகார் ஜானகியை கற்பழிக்க முயலுவார்.
அப்புறம் வில்லனாக அவருக்கு ஏ.பி.நாகராஜனின் “கண்காட்சி”.
சி.ஐ.டி சகுந்தலா ஜோடி.
குன்னக்குடி வைத்தியநாதன் பாடல் கூட நடராஜனுக்கு ஆடிப்பாட கிடைத்தது.
“ஐ ஆம் இன் த டவர்! லைக் எ பியூட்டிஃபுல் ப்ளவர்”
‘காணும் கலையெல்லாம் கண்காட்சி”
சினிமாவின் புதிர்ப்பாதை மர்மங்கள்.
ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (1976) கமல், சுஜாதா, விஜயகுமார் நடித்தது. “ஆண்டவன் இல்லா உலகமிது ஆசைகளில்லா இதயமிது” பாடலில் பிரேமியுடன் படகில் பாடி கள்ளபார்ட் நடராஜன் நடித்தார்.
அதன் பின் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் ஏதுமே வாய்க்கவில்லை!
அப்போது அவருக்குத்தெரியாது. பதினாறு வருடங்களுக்குப் பின் மீண்டும் கமலின் படத்தில் தான் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது எனும் விஷயம்.
அதில் இவர் நடித்த முதல் பட கதாநாயகன் சிவாஜிகணேசனும் நடிப்பார் என்பதும் கூட விந்தை நிகழ்வு தான்.
“தேவர் மகன்” ரேவதிக்கு அப்பாவாக மீண்டும் மறுபடியும் தமிழ் திரையில் கள்ளபார்ட் நடராஜன் திரையில்.

(ஆனால் ஒரு விஷயம் தெரிய வருகிறது. ஊதாப்பூவுக்கும் தேவர் மகனுக்கும் இடையில் ’தனிக்காட்டு ராஜா’வில் நடித்துள்ளார்.)

1996ம் வருடம் மார்ச் 27ம் தேதி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று இறந்திருக்கிறார்.

...  
மந்திரி குமாரி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஏ.நடராஜன். கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்.         

       எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது. தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன்  எஸ் ஏ நடராஜன்.
………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.