Share

Oct 26, 2019

மு.க.முத்து

கருணாநிதி வசிக்கும் அதே தெருவில் என் மறைந்த நண்பன் சவ்வாஸ் முபாரக்கின் சகோதரி பாப்பாத்தியக்கா வீட்டுக்கு(1986ல்) போயிருந்தேன். எதிர் வீடு முக முத்து வீடு.
அங்கிருந்து கிளம்பும்போது கருணாநிதி வீட்டிலிருந்து வெளியேறிய நபர் முழு போதையில் சட்டை பட்டன் அனைத்தும் திறந்திருந்த நிலையில் நடக்க முடியாமல் நடந்து வந்துகொண்டிருந்தார். முக முத்து.
சேகண்டி இனாயத்துல்லா " இங்க பாரு மு.க.முத்து!"
தன் வீட்டில் நுழைந்த அவர் அங்கே எதிர் வீட்டில் நின்றிருந்த என்னையும்,சேகண்டி இனாயத்தையும் சவ்வாஸ் பரூக்கையும் பார்த்துக்கொண்டே தான் நுழைந்தார்.
உடனே வெராண்டாவில் உட்கார்ந்தார்.
உள்ளே இருந்து ஒரு ஆள் அப்போது சாப்பாட்டு தட்டை கொண்டு வந்து வைத்தவுடன் அதிலிருந்த மாமிசத்தை உடல் மடிய குனிந்து ஜவ்வை இழுத்து கடித்து சாப்பிட்டார்.
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
கோட்டையில பொறந்தாலும் விதி போட்ட புள்ளி தப்புமா?
குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்து திருவாரூரில் அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார்.
அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். முக முத்து சேட்டை செய்தால் அடிக்க கூட தெரியாது. தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி
' சீ ராஸ்கல்.. ராஸ்கல் சீ ' என்பார்.
எழுபதுகளில் கட்சி உடைந்த நிலையில் கருணாநிதி அரசியல் சொல்லடி கல்லடி படும் போதும் அப்போது முக முத்து திமுகவின் அரசியல் எதிரிகளால் அரசியலில் பகடை யாய் உருட்டப்பட்ட போது அவரை புத்திர பாசத்தோடு பாதுகாத்து தன் எதிரிகளை நோக்கி சொன்னார் " பாவம் அவன் ஒரு இளந்தளிர். அவனை விட்டு விடுங்கள். "
அவரின் புத்திர பாசத்திற்கு அக்னி பரீட்சை வைத்து தந்தையை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார் முக முத்து.
ஜெயலலிதா கொடுத்த ஐந்து லட்சத்திற்கு கூட விலைபோனார் என்பது கருணாநிதி எதிர்கொண்ட மிக மோசமான சோகம்.
எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்தபோதே,ஒரு முறை முத்து கோவித்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சமாதானப் படுத்தி ‘நான் அப்பாவிடம் பேசுகிறேன்’ என்று திருப்பி அனுப்பி விட்டார்.
பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு .
ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து வீடு திரும்பிய நிகழ்வை தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.
திருந்திய கெட்ட குமாரன்.
முக முத்து வின் மனைவி,(தாய்மாமன் சிதம்பரம் ஜெயராமன் மகள்) குழந்தைகளோடு அவரை விட்டு பிரிந்த பின் இவர் நடத்திய வாழ்க்கையில் சம்பந்த பட்டவர்கள்.
நெல்லூர் அனுசூயா இவருக்கு வேலைக்காரியாக வந்து இவருக்கு ஒரு பெண் மகவை பெற்ற பின் வீட்டம்மா ஆகியதால் அதன் பின் வேலைக்காரியாக வந்தசீர்காழி பானுவும் இவருக்கு மனைவியாகி பானு இல்லாமல் முத்துவால் வாழவே முடியாது என்ற நிலை மு. க. முத்துவுக்கு ஏற்பட்டது.
பானுவும் முக முத்து வும் "மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ ?" பாடி
லாயிட்ஸ் காலனி ஹௌசிங் போர்டில் தினமும் அக்கம் பக்கத்தார் கேட்க கச்சேரி நடத்தியது.
சிவாஜி கணேசன் இறந்த போது முக முத்து தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பிராந்திகடையை திறக்க சொல்லி அனுசூயா, பானு வுடன் காரில் வந்து (அழகிரி கொடுத்த கார் !) ரகளை செய்தது -"ஏண்டா சிவாஜி செத்துட்டா உலகமே அழிஞ்சிடுச்சா .கடையை திறங்கடா டே."
அண்ணாவின் பிரபல நாடகம். 'வேலைக்காரி ' திரைப்படமாகவும் வந்து அவருக்கு தமிழகத்தின் பெர்னாட் ஷா பட்டம் வாங்கி தந்த வேலைக்காரி காவியம்.
முக முத்துவுக்கு அண்ணா மீது ரொம்ப பிரியம்.
அதனால் வேலைக்காரி மீதும்.
அனுசூயா முகமுத்து மகள் ஷீபா பீஸ் கட்ட முடியாமல் பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் ஆகி இருக்கிறாள். அறிவுநிதியின் ஆட்கள் மிரட்டி அடிக்கவும் செய்யும் போது போலீசுக்கும் போக முடியாமல் அனுசூயா மிரண்டு "இவன் கிட்ட சிக்கிக்கிட்டேன். போதா குறைக்கு நானே எனக்கு ஒரு சக்களத்தியை தேடிகொண்டேன் ' என்று கண்ணீர் விட்ட விஷயம்.
எல்லாம் எப்போதோ நடந்த பழைய விஷயங்கள்.........
2003ம் ஆண்டு முத்து திருவாரூரில் இருந்த போது இவரிடம் ஒருவர் 'அண்ணே உங்க செல் போன் நம்பர் கொடுங்க' என்று கேட்ட போது இவர் பதில் "போய்யா என் வாழ்க்கையே செல்லரிச்சு போச்சி"
.................
முகமுத்து சொந்தக்குரலில் பாடிய ஒரு பாடல்
’அணையாவிளக்கு’ படத்தில்
‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
இந்தப்பாடலை நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது எப்போதும் பாடுவேன்.
‘ ராஜநாயஹம்!நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள்!’ என்று நெகிழ்வார்கள்.
முகமுத்து பாடிய இன்னொரு பாடல்
‘சமையல்காரன்’ படத்தில்
’சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க!
நான் சொத்தா நினைக்கிறது உங்க அன்பைத்தானுங்க!’
தாயில்லாமல் வளர்ந்த பிள்ளை.Spoiled Child!
முத்து பாடல் கச்சேரியில் அப்பா வசனம் எழுதி கல்யாண்குமார் நடித்த ’தாயில்லாப் பிள்ளை’ படத்தில் டி.எம்.எஸ் பாடிய பாடலை எப்போதும் அனுபவித்துப் பாடுவார்.
‘தாயில்லாப் பிள்ளை
பேச வாயில்லாப் பிள்ளை’
அதில் சரணமுடிவில்
‘இன்று ஊருமில்லை உறவுமில்லை யாரும் இல்லையே
நான் கடந்து வந்த பாதையிலே அமைதி இல்லையே
நான் தாயில்லாப்பிள்ளை பேச வாயில்லாப்பிள்ளை’
தன் மோசமான நடவடிக்கைகளால் உறவுகளை சிரமப்படுத்தி அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கியவர்.
நல்லா இருந்தாலே உறவுகள் சீராக இருக்க முடியாத உலகம் இது.
தம்பி தமிழரசுவின் மகள் திருமணத்திற்கு கூட
அதிருப்தி காரணமாக மு.க.முத்து போகவிரும்பவில்லை.
குடித்து விட்டு முன் ஒரு தடவை அப்பாவை பார்க்க மாடியேறிய போது முக முத்துவை பிடித்து கீழே தள்ளி விட்டார் மு.க தமிழ் என்ற வருத்தம் கூட மறந்திருக்க முடியாது.
உறவுகளுக்கு இவரால் பல வருத்தங்கள் !
குடும்பத்தில் மூத்த பிள்ளை சரியில்லை என்ற வருத்தம் அப்பாவுக்கும்,சகோதர சகோதரிகளுக்கும் இருக்கத்தானே செய்யும்.
இவருக்கு அவர்கள் உதாசீனம் செய்கிறார்கள் என வருத்தம்.
தயாளு அம்மையார் , ராசாத்தி அம்மாள் பிள்ளைகள் வேறு , பத்மாவதி பெற்ற முத்து வேறு, அவர்கள் கண்ணில் வெண்ணை, தன் கண்ணில் சுண்ணாம்பு என்ற ஆதங்கம்.
முக அழகிரி மீது மட்டும் முத்துவுக்கு பாசம் பிரியம் இருக்கிறது .
"அப்பாவுக்கு புகழ் போதை! அழகிரி நல்ல தம்பி!
ஸ்டாலின் மாறவேண்டும் ! "
கட்சியை விட்டு அழகிரி ஓரம் கட்டப்பட்ட போது கோபால புரம் வீட்டிற்கு போய் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து சத்தம் போட்டிருக்கிறார். மாடியில் இருந்து அவருடைய அப்பா ரீயாக்ஸன் "முத்து குரல கேட்டு எவ்வளவு நாளாச்சி"
எல்லாம் பழைய விஷயங்கள்.........
2011 சட்டசபை தேர்தலின் போது மிகவும் உடல் நிலை சீர்கெட்டு ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்தார். தி.மு.க தலைவரே பிரச்சார மேடையிலேயே சொன்னார்- 'என் மூத்த மகன் மு.க.முத்து இன்று மிக ஆபத்தான உடல் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..'
இதுவும் பழைய விஷயம்..
அப்பாவும் இல்லை.
.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.