Share

Oct 18, 2019

அசோகமித்திரனின் 'கோயில்' சிறுகதை



அசோகமித்திரனின் ‘கோயில்’ கதை செயலோயச்செய்து விட்டது.

 இந்த ‘கோயில்’ கதை அவருடைய  சிறுகதைத்தொகுதி  ‘1945 இல் இப்படியெல்லாம் இருந்தது’ காலச்சுவடு வெளியீட்டில் இருக்கிறது.

அசோகமித்திரன் படைப்புகளை முழுமையாய் படித்தவர்களுக்கு இந்தக் கதை தரும் அனுபவம் புதிதாய் படிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார். ஆனால் அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர்.

18 வது அட்சக்கோடு நாவலில் அவருடைய அப்பா உயிரோடு வருவார். அப்பா வரும் கதைகள் என்றால் சட்டென்று லீவு லெட்டர், மண வாழ்க்கை,, திருநீலகண்டர், இன்ஸ்பெக்டர் செண்பக ராமன் போன்ற கதைகள் நினைவுக்கு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் நாவல் ‘ யுத்தங்களுக்கிடையில்’- அப்பா மாயவரத்திலிருந்து செகந்திரா பாத்  போய் பிழைப்புச்சவாலை ஏற்பார். இப்படி ஒரு அன்னியப் பிரதேசத்திற்கு எது அவரை உந்தியது.

அப்பாவின் மரணத்தையொட்டி நடந்தவைகளைப் பேசும் ’அப்பாவின் சிநேகிதர்’ ‘ முனீரின் ஸ்பான்னர்கள்’ போன்ற சிறுகதைகள்.

செத்துப்போன அப்பா பற்றி எத்தனை தடவை பிரஸ்தாபித்திருக்கிறார்!
.... என் அப்பா செத்துப்போய் விட்டார்.....
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனைத் தொடர்ந்து படிப்பவர்கள் அந்த அப்பா கேரக்டரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவர். முழுமையாக படித்தவர்களும் அந்த அப்பாவின் கதாபாத்திரத்துடன் பரிச்சயம் கொண்டிருப்பர்.
அப்படிப்பட்டவர்கள் இந்த ’கோயில்’ கதை படிக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாகாமல் இருக்க முடியாது.

கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவது தானே கதை என்பார் அசோகமித்திரன்.

‘யார் எழுதினாலும் கதைகளை வாசித்துவிட்டு வாசித்ததைக் கவனத்திலிருந்து விலக்கி விடுபவர்களுக்கு இச்சங்கடம் நேராது; ஆனால் தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஒரு எழுத்தாளனின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்புகளில் இடம் பெறுமா?’ என்ற வாசகனின்  தவிப்பையும் அசோகமித்திரன் அறிந்து சொன்னவர் தான்.

அப்பா செகந்திராபாத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆகி விட்டது.

அப்பா பிறந்து வளர்ந்த ஊர் மாயவரத்திற்கு தன் நாற்பதையொட்டிய வயதில் சென்னையில் இருந்து கதை சொல்லி வருகிறார். அப்பா இந்த ஊரில் தான் இருபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய கஸின் சிஸ்டர் காமாட்சி வசிக்கும் பூர்வீக வீடு.

 உள்ளூரில் பார்க்க வேண்டிய வேலையை இவர் முடிக்கிறார்.
 மாயவரம் காமாட்சி கோயிலுக்கு கஸின் போகிறாள்.
இவரும் கொஞ்ச நேரம் கழித்து அந்த காமாட்சி கோயிலுக்குப் போகிறார்.

எதிரே கோயிலுக்குப் போய் விட்டுத்திரும்பும் காமாட்சி
“ இன்னக்கென்னமோ எனக்கு ஏதோ பயமாயிருந்தது.” என்று சொல்கிறாள்.

 கோயிலுக்குள் வெளிச்சம் போதாது.
அவருடைய முன்னோர்கள் இந்தக் கோயிலுக்கு தினமும் போயிருப்பார்கள். இருட்டில் எதிலோ இடித்து காலில் இவருக்கு இப்போது ரத்தக்காயம்.
சுற்றி கடைசிப்பக்கத்தை அடைகிறார்.

அவ்வளவு நீளப்பிரகாரத்திற்கு ஒரு விளக்கு கூட கிடையாது.பயமாகத்தான் இருக்கிறது. தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
அவர் அசோகமித்திரனையே பார்த்தபடியே முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.
இருவரும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்.
யார் அது? யார்?

கன்னத்தில் அறைந்தது போல அடையாளம் தெரிகிறது! இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்த அப்பா தான் இவர் முன்னே நின்று கொண்டிருக்கிறார். ‘அப்பா!’ என்று அசோகமித்திரன் கத்துகிறார்.

கோயிலாக இருந்தாலென்ன? பழைய கட்டிடங்களுக்கெல்லாம் தனியாகப் போகக்கூடாது.

You tremble and look pale:
Is not this something more than fantasy?
.....What may this mean?.... Why is this?..

- Shakespeare in Hamlet

..........

மீள்
27.03.2013

அசோகமித்திரனின் ‘கோயில்’ சிறுகதை பற்றி நான் எழுதிய 13வது நாளில் (09-04-2013)
என் அப்பா இறந்தார்.

 அப்பாவுக்கு அசோகமித்திரனின் வயசு தான்.

1931ம் ஆண்டு பிறந்தவர் தான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.