Share

Oct 19, 2019

ஆதித்தன்



"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " டிஎம் எஸ் பாட்டு.
 'விளக்கேற்றியவள் ' படத்தில் ஆதித்யன் என்ற நடிகர் கதாநாயகனாய் நடித்த பாட்டு.

சினிமா என்ற மாய உலகம் சிதைத்த நடிகர்களில் ஆதித்தனும் ஒருவர்.
இவர் காரைக்கால் பி.எஸ்.ஆர் சினிமா கொட்டகையில் டிக்கெட் கிழித்து கொடுத்துகொண்டிருந்தார்.

சிட்டாடல் அறிமுக நடிகர்கள் ஆனந்தன் (பிரகாஷ் ராஜ் மாமனார் ),
ஜெய் சங்கர்,
ஆதித்தன் ஆகியோர்.
ஆனந்தன் படு செயற்கையான மூன்றாந்தர நடிகர். நல்ல பிரபலமாகி பின்னால் ரொம்ப கஷ்டப்பட்டார்.
டிஸ்கோ சாந்தி சம்பாரித்த பின் தான் சாகிற நேரத்தில் வளமையை பார்த்தார்.
ஜெய் சங்கர் ஏராளமான டப்பா படங்களில் நடித்தே நிறைய சம்பாரித்தவர்.சினிமாப்படம் போரடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய்சங்கர் படங்களால் தான தெரிய வந்தது!
'குழந்தையும் தெய்வமும் ' 'பட்டணத்தில் பூதம்' படங்களில் இவர் இருந்தார். அந்த படங்களின் தரத்திற்கு நாகேஷ் தான் காரணம்.
பெயரும் தெரியாமல்,காசும் பார்க்காமல்,
கடைசியில் தியேட் டரில் டிக்கெட் கொடுப்பது , கிழிப்பது, புரொஜெக்டரை ஆபரேட் பண்ணுவது என்று வறுமையையும் சிறுமையையும் முழுமையாக அனுபவித்தவர் ஆதித்தன்.
A most poor man, made tame to fortune’s blows
– Shakespeare in ’King Lear’
யதார்த்தத்தை உணர்ந்த நிலையில் சினிமா சம்பந்தப்பட்ட நினைவுகளை ஒதுக்கி விட்டதாக சொன்னார். விரக்தியில் தன் சினிமா சம்பந்தப்பட்ட புகைப்படங்களை கூட அழித்து விட்டார்.
இவருக்கு தையல் வேலையும் தெரியும் என்பதால் டெய்லர் வேலையும் காரைக்காலில் பார்த்திருக்கிறார்.

இவ்வளவு சரிவான நிலையிலும் ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். ஒன்பது பிள்ளைகள் என்பதும் விந்தை.
'விளக்கேற்றியவள்' 1964ல் ஜோசப் தளியத் படம். இதில் 'கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியை தீட்டு, கண்ணியம் தவறாதே அதிலே கடமையை காட்டு ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடு " எம்ஜியார் பாணியில் புத்தி சொல்லி பாடிய ஆதித்யன் அதே 1964 வருடத்தில் வெளி வந்த தேவர் தயாரித்த " தாயும் மகளும் " என்ற படத்திலும் கதாநாயகன்!
அடுத்து இரண்டு வருடத்தில் வில்லனுக்கு அடியாளாக 'காதல் படுத்தும் பாடு ', 
அதற்கு அடுத்த வருடம் எம்ஜியாரின் படம் 'தனி பிறவி ' படத்தில் சின்ன வேடம்.
உணர்ச்சியை, பாவங்களை முகத்தில் காட்ட தெரியாத நடிகர் ஆதித்தன்!
திரையுலகம் இவருக்கு அந்நியமானதில் ஆச்சரியம்,வருத்தம் ஒன்றும் இல்லை.
1997ல் குமுத்ததில் பேட்டி கொடுத்த போது எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டு தன்னை பழி வாங்கி விட்டார் என்று அபத்தமாக பேட்டி கொடுத்தார்.
மலை பெருமாள் என்ற ஆதித்தன்.
காரைக்கால் அருகிலுள்ள திருமலைராயன் பட்டினம் சொந்த ஊர்.
2015 நவம்பரில் இந்த நடிகர் மறைந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.