Share

Jun 27, 2018

ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சர்


என் அப்பா மறைவுக்கு பின் இரண்டு மாதத்தில் எனக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. ஒரு காண்ட்ராக்ட் மூலமாக. ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராக. ஆறு மாதமாக அப்போது வேலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அந்த நிலையில் இந்த வேலை.
குழந்தைகள் என் துயரங்களின் நிழலை விரட்டியடித்தார்கள்.
மன நிம்மதி என்பதை நம்புபவன் அல்ல. ஆனால் ஒரு ஆன்மீக அனுபவமாக பள்ளியில் என் அனுபவம்.
என் மீது இத்தனை அன்பை யாரும் வாழ்நாளில் காட்டியதில்லை.
2013 -2014 எனக்கு விசேஷமான கால கட்டம்.
குழந்தைகளின் பெற்றோர் என்னை தேடி வந்து பிரமிப்போடு பேசினார்கள்.
மிக சுருக்கமாக இதை எழுத வேண்டியிருக்கிறது.
என்னேரமும் ’ஸ்போக்கன் சார்’ பற்றி தான் வீட்டில் பேச்சாம். சொல்லி வைத்த மாதிரி நூறு பெற்றோர் இப்படி சொன்னார்கள்.
நான் பாடமெடுக்காத வகுப்புக்குழந்தைகள் கூட என்னை நேசித்தார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் பாடல்கள் பாடினேன்.

இண்டெர்னெட்டில் என் புகைப்படத்தை எடுத்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமி என்னைப்பற்றி எழுதி லேமினேட் செய்து நோட்டிஸ் போர்டில் போட்டதை ஆசிரியர்கள் என்னிடம் சொன்னார்கள்.
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அபூர்வமாக ஆசிரியர் வராத போது நான் வகுப்பெடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கூட்டிப்பெருக்கும் பெண்மணியொருவர் “குழந்தைகள் உங்களைப் பார்த்தவுடன் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள். இப்படி நான் பார்த்ததேயில்லை சார். நீங்கள் வெள்ளிக்கிழமை பாடும்போது எனக்கு அழுகையாக வருகிறது சார்.”
மார்ச் ஒன்றாம் தேதி பள்ளிக்கு போயிருந்த போது காண்ட்ராக்ட் ஃப்ராடுகள் எனக்கு இனி அங்கு வேலையில்லை என்ற தகவலை தந்த போது கண்ணில் பட்ட பள்ளி மாணவ மாணவியரிடம் பூடகமாக இனி நான் பள்ளிக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லி விட்டு, உடைந்து நான் கலங்கி விடுவதை தவிர்த்து அவசரமாக பள்ளியை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது குழந்தைகள் கண் கலங்கி என் காலில் விழுகிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவிகள். ஒன்பதாம் வகுப்பு குழந்தைகள் சிலர்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் – இது தான் பள்ளியில் என்னுடைய கடைசி நாள் என்று அறிந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தவன் இரண்டு மணி நேரமாக அழுது கொண்டே தான் இருந்திருக்கிறான்.
ஜூன் மாதம் ஆரம்பித்த வேலை பிப்ரவரியோடு முடிவுக்கு வந்து விட்டதை மார்ச் ஒன்றாம் தேதி தான் நானே அறிய வந்தேன்.
எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் ஜனவரி, பிப்ரவரி மாத சம்பளத்தை காண்ட்ராக்ட் ஃப்ராடுகளிடமிருந்து என்னால் வாங்கவே முடியாமல் போய் விட்டது.
மீண்டும் ஜூன் மாதம் மற்றொரு தனியார் பள்ளியில் நேரடியாக வேலைக்கு சேர்ந்தேன். ஸ்போக்கன் இங்க்ளிஷ் டீச்சராக. மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. இரண்டு பள்ளிகளுக்கும் எல்லா வகுப்பிற்கும் கம்யூனிகேட்டிவ் இங்க்ளிஷ் ட்ரைனர்.
ஜூன் 12ம் தேதி முதல் நாளே என் தலையில் இடியாக ஒரு செய்தி மொபைலில் வருகிறது. அந்த துயரத்தை தாங்கிக்கொண்டே தான் அன்றும் மறு நாள் மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலும் வகுப்பறைகளில் “ When I was just a child, I asked my mama what will I be?”  பாடினேன்.
ஆசிரியர்கள் சொல்கிறார்கள் ‘ அது எப்படி சார்? உங்களுக்கு மட்டும் பள்ளிக்கூடத்தில் இவ்வளவு Fans.’
பிசிக்ஸ் மேடம் வகுப்பில் “ அடுத்த பீரியட் நான் வர மாட்டேன். ராஜநாயஹம் சார் தான் வருவார்” என்று ப்ளஸ் ஒன் வகுப்பில் சொன்னவுடன் மாணவர்கள் மாணவிகள் பரவசமாகி எழுந்து ஆடினார்களாம். பிஸிக்ஸ் மேடம் “ என்ன மாயம் சார் இது?” என்று என்னிடமே வந்து சொல்கிறார்.
மாலை பள்ளி விட்டு செல்லும்போது “good-bye" சொல்லிக்கொண்டிருந்த பிள்ளைகள் என்னால் எல்லோரிடமும் “Adieu" சொல்ல ஆரம்பிக்கிறார்கள். என்னிடம் “Adieu" சொல்ல போட்டி போடும் செல்லங்கள்.
இந்த பள்ளியின் கூட்டிப்பெருக்கும் ஆயாவும் “ ஏன் சார்? இது புதுசா நான் பாக்கறேன். பதினஞ்சு வருசமா இங்கே கூட்டி பெருக்கிறேன். இப்ப தான் அதிசயமாருக்கு..  குழந்தைகள் எல்லோருமே உங்கள பாத்தவுடனே இப்படி சந்தோசப்படுறாங்களே”
குழந்தைகளோடு இருப்பது எவ்வளவு சுகமோ, அந்த அளவுக்கு நிர்வாக கடுமை கசப்பானது.
இங்கேயும் நிர்வாகம் திடீரென்று பிப்ரவரியுடன் எனக்கு வேலை முடிகிறது என்கிறார்கள்.
அந்த 2015ம் வருடம் நான் முன்னர் வேலை பார்த்த பள்ளியின் மாணவி ப்ளஸ் டூவில் மாநிலத்தில் முதல் ரேங்க்.
அவளுடைய வீட்டில் பெற்றோர் சொல்கிறார்கள்
“ இவ ப்ளஸ் ஒன் படிக்கும்போது தான் இங்க்ளீஷில கூச்சமில்லாம பேச ஆரம்பிச்சா சார். ஒங்களால தான்.”
அவளுமே ‘நாங்க தான் உங்க கிட்ட படிச்சதுக்கு பெருமைப்படணும். ப்ளஸ் டூவில நாங்க எல்லோருமே உங்கள எப்பவும் நெனச்சிக்கிட்டே இருப்போம் சார்”
மனைவிக்கு ஆபரேசன், எனக்கு கண் ஆபரேசன் எல்லாம் முடிந்து ஆகஸ்டில் வேலைக்கு சேர்கிறேன்.
ஆகஸ்ட் கடைசி நாள் மாலை. ஒரு ஏழாவது வகுப்பு மாணவனின் தாய் என்னிடம் அந்த பையனை அழைத்து வந்து பேச ஆரம்பிக்கிறார்.
“என்னேரமும் வீட்டில் உங்களைப்பற்றியே தான் பேசிக்கொண்டிருக்கிறான். எல்.கே.ஜியில் இருந்து இப்படி இவனை நான் பார்த்ததேயில்லை. இவனோட அப்பாவும் ஆச்சரியப்படுறாரு. உங்கள மாதிரி ஒரு வாத்தியார் கிடைக்கிறது அபூர்வம் சார். உங்களோட ஆசி இவனுக்கு எப்பவும் வேணும் சார்.”
அப்போது உதவி பிரின்ஸிபால் என்னை கூப்பிட்டு “ சார், நிர்வாகத்தில ஸ்போக்கன் இங்க்ளிஷிற்கு இந்த வருடம் பட்ஜெட் இல்லன்னு சொல்லிட்டாங்க சார். நாளையில் இருந்து உங்களுக்கு பள்ளியில் வேல இல்லன்னு மேடம் சொல்லச் சொல்லிருக்காங்க சார்.”
நிர்வாகியோ, பிரின்ஸிபாலோ என்னை சந்திக்கும் தர்ம சங்கடத்தை தவிர்த்தார்கள்.
செப்டம்பர் 13ந்தேதி குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்தேன்.
இப்போதும் பள்ளிக்குழந்தைகள் பலரும் “ We miss you a lot sir, please come back” என்று அடிக்கடி ஃபேஸ்புக்கில் மெஸ்ஸேஜ் போடுகிறார்கள். போனில் கூட என்னிடம் அன்பை பொழிகிறார்கள்.

Jun 22, 2018

வில்லுப்பாட்டு


பள்ளிப்படிப்பின் போது அடிக்கடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். மொத்தத்தில் ஒரு இருபது தடவைகளாவது வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறேன்.
சிறுவனாக நான் வில்லுப்பாட்டு பிரமாதமாக பாடி பேசி நடிப்பதாக எல்லோரும் அப்போது சொல்வார்கள்

கல்லூரி காலத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வாய்ப்பே கிட்டவில்லை. அந்நியமாகி விட்டது.
 பால் பருவத்து என் வில்லுப்பாட்டு அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. பாடல் வரிகள்.

“தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள் சந்தான தெய்வமே
சந்தத்தோடு பானை தாளம்
சித்துடுக்கை பம்பையுடன்
பஞ்ச பூதங்கள் அழித்த
பரமன் கதை நானுரைக்க
பாதக மானிடன் மீட்பை
பாங்குடனே நான் விளக்க
வந்தெனக்கு துணையிருப்பாள்
துர்க்கையம்மனே
அந்த வடிவழகி பாதம் போற்றி!”

” பாடறியேன் படிப்பறியேன்
அந்த பாட்டிலுள்ள பொருளறியேன்
பாடறியா நாளையிலே
என்னை படிக்க வைத்தார்
என் தாய் தந்தையர்
படிக்காமலே தறுதலையாய்
நான் ஊர் சுற்றினால் என்ன செய்வார்?
நான் ஒரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நினைவொரு நாள் மறப்பதில்லே
என் நினைவொரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நெஞ்சொரு நாள் மறப்பதில்லே”

இந்த ’பாடறியேன் படிப்பறியேன்’ பின்னால் இளையராஜாவால் 'சிந்து பைரவி' படத்தில் நாட்டுப்புற பாடலாக பிரபலமானது.

பழங்காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டு பற்றி நிறைய சொல்வார்கள்.

நடிகர் எஸ்.எஸ்.ஆர் பல காலம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நிகழ்ச்சி பார்க்க கிடைத்ததில்லை. எஸ்.எஸ்.ஆரையே நான் நேரில் பார்த்ததில்லை.


’வில்லடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை’ என்ற அளவிற்கு கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ரொம்ப காலத்திற்கு இருந்திருக்கிறது.



Jun 21, 2018

சொட்டு


சொட்டு 1
1996ல் மும்பை கொலாபாவில் உள்ள 
சராக் தின் (Charagh Din) ஷோ ரூமில் இருந்து 
தருவிக்கப்பட்ட ரெடிமேட் சர்ட் 
இன்றும் இருபத்திரெண்டு ஆண்டுகளாக
 எனக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது.





.................................

சொட்டு 2
ஒரு எழுவது வயசு கிழவி.
A Pompous Hag!


அதுக்கு ராஜநாயஹத்தை பிடிக்கலைன்னு சொல்லுச்சாம். இதை என் கிட்ட சொன்னவரே அத்த பத்தி சொன்னார்..’DANGEROUS LADY'
Nobody likes even a fairy when she is seventy.
Why should I bother about a seventy year old wicked witch?

சொன்னா ‘ஓ, இன்னாரான்னு எல்லாருக்கும் தெரிஞ்ச வீண்ணா போன பொம்பள தான்.
ச்சீ...போ....ஐய...கெய்வி...

.................................................

Jun 17, 2018

பாட்டுல டயலாக்


நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
’ஆசை போவது விண்ணிலே
கால்கள் போவது மண்ணிலே
பாலம் போடுங்கள் யாராவது
ஆடிப்பாடுங்கள் இன்றாவது’
பாடலை போதைக்காரர் காது கொடுத்து நன்கு கவனித்து கேட்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.
இந்த மாதிரி ஆட்கள் எப்படியும் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் react செய்வார்கள். நான் நின்று அவர் கவனிக்காத வகையில் அவரை கவனிக்க ஆரம்பித்தேன்.
பாடலின் ஒவ்வொரு சரண முடிவில் எஸ்.பி.பி தத்துவமாக டயலாக் சொல்கிறார். ரொம்ப நெனப்போடு அந்த டயலாக்குகள்.
’நாம் பிறந்த மண்’ படத்தில் கமல் கூட ரொம்ப ஓவர் நெனப்போடு தான் பாடலின் டயலாக்குகளுக்கு நடித்திருப்பார் என்பது நினைவுக்கு வந்தது.
’கட்டிடம் ஜொலிக்கிறது..அஸ்திவாரம் அழுகிறது.’
’இன்பங்கள் தூங்குவதில்லை.. துன்பங்களும் அப்படித்தான்’
அப்படி இரு சரண முடிவில் டயலாக் வரும்போதும் குடிகாரர் முகம் சுளித்து ‘ச்சே’ என்பதாக தலையை உதறினார்.
மூன்றாவது சரணம் முடியும் போது டயலாக்
’உழுதவர்கள் வாடுகிறார்கள்
அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்’
உடனே போதைக்காரர் ஒரு கூப்பாடு போட்டார்
“உழுதவர்கள் ஒழ்க்கிறார்கள். ஒங்கள குனிய வச்சு தள்ளுவார்கள்.
அறுத்தவர்கள் புழுத்துவார்கள். பாடச்சொன்னா ஒழுங்கா பாட்ட பாடுங்கடா.. ஏண்டா தேவையில்லாம பேசிறீங்க. பெரிய தத்துவப்புழுத்திங்க..”
Children, fools and drunkards have a beautiful vision.
………………….
மதுரையில் ஒரு சினிமா பாடல் கச்சேரி. பாடகர் ”தேவனே, என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள்” என்று பாட ஆரம்பித்தார்.
தோரணையெல்லாம் சிவாஜி பாணியில். ஏதோ அந்தப்பாடலை அந்த மேடைப்பாடகரே எழுதி இசையமைத்து பாடுவதாக ஒரு பெருமிதமான அங்க சேஷ்டைகள்.
“உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன” என்று இரண்டு விரல் நீட்டி கையை ஆட்டிக்காட்டி டயலாக் சொன்னார்.
ஏற்கனவே ஏதாவது உடைசல் கொடுக்கும் முடிவில் முன்னால் நின்று கொண்டிருந்த குருவி மண்டையன் உடனே ஒரு கூப்பாடு போட்டான் “ அவை இரண்டும் கருத்தக்கண்ணு கசாப்புக்கடையில் அறுக்கப்பட்டு விட்டன”
.................................

கஜல், சூஃபி பாடல்களில் இடையிடையே பேசுவதை கேட்பதற்கு எவ்வளவு இதமாக, பாந்தமாக இருக்கிறது. பாடல்களுக்கு இடையே பேசுவதற்கு ஒரு நேர்த்தியான இயல்பு தன்மை இருக்கிறது.
............

Jun 10, 2018

தகவல் பிழை


ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியின் முன்னாள் முதல்வர் லட்சுமி நாராயணன். நான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்காரர் வைஷ்ணவத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அறிஞர்.
இவருடைய மனைவி (பெயர் ஜெயலட்சுமி என்று நினைவு.) குற்றாலம் பராசக்தி கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பின் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு மகளிர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார்.
லட்சுமி நாராயணன் தென்காசியில் சொந்த வீட்டுக்காரர். அவ்வப்போது தென்காசிக்கு ஒரு சில நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். அந்த சமயங்களில் யூ.கே.ஜி படித்துக்கொண்டிருந்த என் இளைய மகன் அஷ்வத் தான் மாமியோடு கூட துணைக்கு படுத்துக்கொள்வான். சுட்டிப்பயல். ஒரு சில நாட்களில் பெட்டிலயே ஒன் டாய்லட் போய் விடுவான். ஆனால் மாமி அதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வார்.
லட்சுமி நாராயணன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் போது கூட அவரிடம் அஷ்வத் “ நீங்க எப்ப ஊருக்கு போவீங்க. நீங்க ஊருக்கு போங்க. நான் மாமியோடு படுத்துக்கிறேன். நீங்க ஊருக்கு போங்க.. நான் மாமியோடு படுத்துக்கிறேன்.” என்று அனத்துவான். “டேய், என்ன இங்க இருக்க விட மாட்டியா..என்னடா என் பொண்டாட்டி கூட படுத்துக்கிறேன்னு ஏங்கிட்டவே சொல்றே… சரி… நான் போகும்போது சொல்றண்டா..” என்று ஜாலியாக அவர் பதில் சொல்வார்.
எங்கள் வீட்டிலும் அவர் வீட்டிலும் சீனியம்மா என்ற அருந்ததியப் பெண் வேலை பார்த்தாள். வீட்டு வேலை பார்க்கும்போது அவளுடைய குழந்தையை தூங்க வைப்பது, கவனித்துக்கொள்வது எல்லாம் லட்சுமி நாராயண அய்யங்கார் தான். சீனியம்மாவின் குழந்தையை சீராட்டுவார்.
என்னுடைய அமெரிக்கன் கல்லூரி தமிழ் பேராசிரியர் சாலமன் பாப்பையா, மணோன்மணியம் சுந்தரனார் கல்லூரி முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் ஆகியோருடைய வகுப்புத்தோழராக லட்சுமி நாராயணன் தன்னைப் பற்றி சொல்வார். க.ப.அறவாணன் இவருடைய பெயரை தூய தமிழில் மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துவாராம். இவர் மறுத்து விட்டாராம். அப்போது பாப்பையா தன் பெயரை ‘வளவன்’ என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டிருந்தாராம்.
என்னிடம் பேசும்போது அடிக்கடி ஒரு விஷயம் குறிப்பிட்டதுண்டு. ‘ஜெமினி கணேசன் மனைவியும் லா.ச.ராமாமிருதம் மனைவியும் கஸின்ஸ். ஜெமினி பற்றி லா.ச.ரா ‘ நான் கேரக்டர் இல்லாத மனிதனை மதிப்பில்லை’ என்று சொல்வார்.
இதனை என் பதிவுகளில் லட்சுமி நாராயணன் சொன்னதாகவே நான் எழுதியிருந்தேன்.

இப்போது ஜெமினி மனைவி பாப்ஜியும் லா.ச.ரா மனைவியும் உறவினர்கள் அல்ல என்று எனக்கு தெரிய வந்தது. உடனே அதை என் பதிவில் இருந்து நீக்கி விட்டேன். என் பதிவுகளில் தகவல் பிழை இருப்பது உறுதியாக தெரிந்தால் நான் எப்போதும் அதை திருத்திக்கொள்வேன்.
முன்பு எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய உறவினன் ஒருவன் 2002ல் என்னிடம் அவருக்கு 80 வயது என்று சொன்னான். என்னால் நம்ப முடியவே இல்லை. ஆனால் அவன் எஸ்.எஸ்.ஆர் வயது எண்பது தான் என அடித்து சொன்னான்.

2008ல், 2013ல் என் பதிவுகளில் எழுதியிருந்தேன். ஆனால் பின்னர் அவன் சொன்னது உண்மையல்ல என்பது உறுதியாக தெரிய வந்தது. உடனே அதனை என் பதிவுகளிலிருந்து நீக்கியிருக்கிறேன்.
எஸ்.எஸ்.ஆர் இறந்த போது நான் தான் ’இந்தியா டுடே’யில் இரங்கல் எழுதியிருந்தேன்.
அதற்கு முன் ஜெமினி மறைந்த போது ’காலச்சுவடு’ அஞ்சலி நான் எழுதியது தான்.

அது எப்படி லட்சுமி நாராயணன் என்னிடம் இப்படி இல்லாத ஒரு விஷயத்தை பேசியிருக்க முடியும். அப்படியென்றால் லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

தென்காசியில் லா.ச.ரா வங்கி ஒன்றில் பணி புரிந்த போது தான் லட்சுமி நாராயணன் அடிக்கடி சந்தித்திருக்கிறார். இன்னொன்றும் தோன்றுகிறது. லட்சுமி நாராயணன் என்னிடம் பொய் சொல்லவில்லை என்றால் லா.ச.ரா ஏன் அப்படி அவரிடம் பொய் சொல்ல வேண்டும். குழப்பமாயிருக்கிறது. இருவரும் இப்போது உயிருடன் இல்லை. ஜெமினி கணேசனும் தான் இல்லை. அவருடைய முதல் மனைவி பாப்ஜியும் தான்.
லட்சுமி நாராயணன் சொன்ன மற்றொரு விஷயம் பற்றி என் “ உண்டிங்கு ஜாதி எனில்” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னிடம் பேசும்போது, நம்மாழ்வார் இல்லத்துப்பிள்ளை. அவருடைய தாயாருடைய ஊர் திருவெண்பரிசாரம். தகப்பனாருக்கு ஆழ்வார் திருநகரி என்றவர், தன்னுடைய ஆய்வுப்படி பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரின் பெற்றோர் இல்லத்துப் பிள்ளைமார்தான் என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால் அதனை ஒரு எள்ளலோடு வேடிக்கையாக தாமரை இலை தண்ணீராக அந்த விஷயத்தில் ஒட்டாமல் எழுதியிருந்தேன்.
ஏனென்றால் நம்மாழ்வார் காலத்தில் அவர் ஜாதி பற்றி இப்படி உறுதிப்படுத்துவதெல்லாம் அபத்தம்.
எங்கள் சொந்த ஊர் செய்துங்க நல்லூருக்கு அருகில் ஆழ்வார்திருநகரி. அப்படியானால் என் தாத்தா செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையின் முன்னோராக நம்மாழ்வார் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதே. ஆண்டாள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள ப்ரீதி கூட இந்த வைஷ்ணவப் பாரம்பரிய உணர்வினால் தானோ? என்றெல்லாம் புல்லரித்து, செடியரித்து, மரமரித்து……
………………………………………………………….



.

Jun 8, 2018

R.P.Rajanayahem's performance 02.06.2018



மழை நின்று கொஞ்ச நேரத்தில் மின்சாரத்தடை. மொபைல் போன்களின் ஒளியில் தொய்வின்றி தொடர்ந்த நிகழ்த்துக்கலை
( பகுதி இரண்டு)

Jun 7, 2018

R.P.Rajanayahem's performance in Koothuppattarai on 02.06.2018



அன்று நல்ல மழை. கூத்துப்பட்டறையின் கூரையில் மழை விழும் போது மிகுந்த இரைச்சல் ஏற்படும். அந்த சத்தத்தில் என் உரத்த குரலில் இந்த நிகழ்த்துக்கலை. பின்னர் மின்சாரத்தடையும் கூட. அப்போதும் நிறுத்தாமல் மொபைல் போன்களின் வெளிச்சத்தில் தொடர்ந்த செயல்நிரல். ( முதல் பகுதி)