Share

Jan 31, 2019

முதுமை துயரம்


க்ரியா வெளியிட்ட வெ.ஸ்ரீராம் ஃப்ரஞ்ச் மொழிபெயர்ப்பு “சின்ன சின்ன வாக்கியங்கள்” நாவலில் “முதியோர்களுடன் பிரச்சினை என்னவென்றால், அவர்களுடைய போக்கிலேயே அவர்களை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்தி முக்கியத்துவம் அளிக்க இப்போது அவர்களுக்கு அப்பா அம்மா இல்லை என்பது தான்.”
முதுமையின் அவலம் பற்றி அற்புதமான பார்வை. ஃப்ரஞ்ச் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியது.

ஏனென்றால் புத்ர பாக்யங்கள் தங்கள் முதிய பெற்றோரின் பிரச்னைகளை அறியும் அளவுக்கு சூழல் கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பம், புதரம் என்று ஆகி விடும்போது கவனம் திசை மாறி விடுகிறது. இன்னொன்று பிள்ளைகளுக்கு ஐம்பது அறுபது வயது ஆகும் நேரத்தில் பெற்றோருக்கு முதுமையின் தள்ளாமை பிரச்னை வருகிறது. பிள்ளைகள் முதுமையின் இளமை எனப்படும் வயதில் லோகாயுத சிக்கல்களில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் துயர நிலை அப்போது. மீண்டும் குழந்தையாகி விட்ட தங்களின் முதிய பெற்றோரை போஷிப்பது Herculian Task.

பியரெத் ஃப்லுசியோ இன்று சொல்கிற விஷயத்தை விளக்குவது போல எவ்வளவோ வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் “காட்டு வாசம்” சிறுகதையில் தன் பிரத்யேகமான கிண்டல் நையாண்டியுடன் தொட்டுக்காட்டியுள்ளார் : ”இந்த உலகத்தில் அன்பு இருக்கிறதே, அன்பு. அது இறங்கு முகமாகப் போகும். பக்கவாட்டிலே போகும். மேல் நோக்கிப் போகாது.
அப்பனுக்குப் பிள்ளை மேல் ஆசை. அந்தப் பிள்ளைக்கு  அவன் பிள்ளை மேல் ஆசை. இப்படிப் போகுமே ஒழிய, பிள்ளைக்கு அப்பாவிடம் இருக்கிறது என்கிற சாத்தியம் இல்லை. அப்பாவிடம் பயம் தான் இருக்கும். பொண்டாட்டியிடமும் பிள்ளையிடமும் இருக்கிற அன்பும் ஆசையுமா இருக்கும்?
நம் சாஸ்திரங்கள், கவிகள் எல்லாம் என்ன சொல்கிறார்கள்? அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஏன் ஐயா? பிள்ளையிடம் அன்பாக இரு. பொண்டாட்டியிடம் ஆசையாக இரு என்று சொல்லக்கூடாதோ? ஆக, இந்த அன்பு போகிற போக்கு இறங்கு முகம் இல்லையா? மேல்நோக்கிப் போகிறது இயற்கைக்கே முரண் என்று ஆகவில்லையா?”
தி.ஜானகிராமன் முதுமையின் குழந்தைமை, தள்ளாமை துயரத்தை “விளையாட்டு பொம்மை” கதையிலும் முதுமையின் வக்கிரத்தை “பாயாசம்” மற்றும் ”அவலும் உமியும்” குறுநாவலிலும் அபூர்வ இலக்கிய நேர்த்தியுடன், ஓவிய பாணியில் வரைந்து காட்டியுள்ளார்.

Jan 30, 2019

வள்ளி நாயகனே


இன்று அதிகாலை ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் ஷண்முகப்ரியா ராகம் தானம் பல்லவி முழுமையாக கேட்டுக்கொண்டிருந்தேன். கஞ்ச தலாயதாக்ஷி காமாக்ஷி.
ஒவ்வொரு பெரிய வித்வானுக்கும் ஒரு ராகம் ஸ்பெஷல். செம்மங்குடி சீனிவாசய்யருக்கு கரகரப்ரியாவை சொல்வார்கள். மதுரை சோமு தோடியை கண் முன் கொண்டு வந்து விடுவார். ஜி.என்.பிக்கு ஷண்முகப்ரியா.
30 வருடங்களுக்கு முன் கர்னாடக சங்கீத, ஹிந்துஸ்தானி கேஸட் கலெக்‌ஷன் என்னுடைய தேடலில் முக்கிய இடம் பெற்றிருந்தது. ஜி.என்.பியின் காஸெட் இருபதுக்கு மேல் வைத்திருந்தேன். அவருடைய ஷண்முகப்ரியாவுக்காக எவ்வளவோ தேடியும் கிடைத்ததேயில்லை. ஒரு தடவை மதுரையில் டவுன்ஹால் ரோட்டில் ஒரு கடையில் கிடைத்து விட்டது. ஆஹா அபூர்வ புதையல் கிடைத்து விட்டதே என்று டேப் ரிக்கார்டரில் போட்டால் காஸெட் டேமேஜ் ஆகியிருப்பது தெரிய வந்தது. ஸ்ட்ரக் ஆகி இயங்கவேயில்லை. ஜி.என்.பியின் ஷண்முகப்ரியா கேஸட் கானல் நீர். கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இப்போது டெக்னாலஜி எவ்வளவு வசதியாய் இருக்கிறது. யூட்யூப் புண்ணியத்தில் அந்தக்கால கானல் நீரான விஷயங்களெல்லாம் நனவாகியிருக்கிறது.
இன்று ஜி.என்.பி ஷண்முகப்ரியா கேட்டுக்கொண்டிருந்த போது நினைவில் வந்த ஒரு காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது எங்கள் வீட்டிற்கு என் பெற்றோர் வந்திருந்தார்கள். அப்படியான நேரத்தில் என் மனம் மிகுந்த சந்தோஷ நிறைவில் நிரம்பி வழியும்.

அதிகாலை என் அப்பா ஹிண்டு பேப்பரை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் பார்த்த பிறகு தான் எப்போதும் நியூஸ் பேப்பரை எனக்கு கொடுப்பார். இரண்டு மணி நேரமாவது செய்திகளில் மூழ்கி விடுவார். வாசித்துக்கொண்டிருக்கும்போதே ரெண்டு,மூணு காஃபி கேட்பார்.
நான் பாலமுரளி பாடிய நான்கு ஷண்முகப்ரியா கீர்த்தனைகள் அடங்கிய கேஸட்டை போட்டு விட்டிருந்தேன்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ( இவர் எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா தெரியுமோ?) கீர்த்தனை வள்ளி நாயகனே பாடலை கணீர் என்று பாலமுரளி ஆரம்பித்த போது என் அப்பா பேப்பரில் இருந்து தலையை தூக்கினார். பாடலை கவனமாக ரசித்து தலையை ஆட்டினார். முகம் பிரகாசித்தது. செய்தியிலிருந்து அப்பா கவனம் ஷண்முகப்ரியாவிற்கு தாவி விட்டது.
எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. அப்பாவின் அம்மா பெயர் வள்ளி. வள்ளி நாயகன் யார்? அப்பாவின் அப்பா ராஜநாயஹம் பிள்ளை. அவருடைய அப்பா 1965ல் மறைந்தார். அம்மா 1969ல் மறைந்து விட்டார். என் தாத்தா பாட்டியை நினைவு படுத்தும் கீர்த்தனை. அந்த கீர்த்தனை முடியும் வரை அப்பா செய்தித்தாளை பார்க்கவில்லை.






Jan 29, 2019

Significant other


தி.ஜானகிராமன் சாஸ்த்ரிய சங்கீத பாடகர்களை ஆக்ரமிக்கும் Eroticism பற்றி கவனப்படுத்துகிறார் : ''ஜெண்டை வரிசை ஆகும்போது வெள்ளைக் கடுக்கண் வேணும் போலிருக்கும். வர்ணம் வந்தா மயில் கண் வேஷ்டி, மல்லு சட்டை. கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தா தேவலை போல இருக்கும். அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும். அதுக்கப்புறம் சங்கீதம், பிராணன் எல்லாம் ஒன்னொன்னா கரையும் ...............................................பணமும்,பேரும்,துர்நடத்தையும் எங்கே, எங்கே என்று வாயைப் பிளந்து கொண்டு விழுங்க காத்திருக்கும் கலை இது."
ஏதாவது ஒன்று கெட்டுப்போகும் என்றால் அது கட்டாயம் கெட்டுப்போகும்.

பரதநாட்டியம் பயின்றவர் திருமணம் செய்துகொள்வது அவ்வளவு சிலாக்கியமில்லையாம் .
பரதநாட்டியம் பற்றி திஜாவின் 'மலர் மஞ்சம் ' நாவலில் நட்டுவனார் பெரியசாமி சொல்வதாக வருவது : ''ஒருத்தரோடு அவுராத முடிச்சா முடிஞ்சுக்கிட்டு உக்கார்ந்துகிட்டா அப்புறம் இந்த ஆட்டம் ,பாட்டம் எல்லாம் ஒரு எளவும் வராது. அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும் ...இந்த வித்தையிலே இறங்கறவங்க - ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும் , இல்லே கட்டெல்லாம் அறுத்து எரிஞ்சுப்பிட்டு இஷ்டப்படி இருக்கணும் . நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்யம் இல்லே. இந்த வித்தை ரொம்ப வேடிக்கையான வித்தை.''
திரையுலகத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அந்தக்கால சங்கீத உலக Gossips.
ஜி.என்.பாலசுப்ரமண்யம் ’சகுந்தலை’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் ஜோடியாய் நடித்த போதே இருவருக்கும் காதல், தொடர்பு என்று சங்கீத உலகம் முணுமுணுத்தது.
'சகுந்தலை 'படத்தில் ஆணழகன் ஜென்டில்மேன் ஜி என் பாலசுப்ரமணியமும் இசைக்குயில் எம் .எஸ் சுப்புலக்ஷ்மியும் இணைந்து பாடும் காதல் பாடல்.
எம் எஸ் : பிரேமையில் யாவும் மறந்தேனே
ஜி என் பி : ஜீவனமுனதன்பே
எம் எஸ் : என் அன்பே
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.
ஜி.என்.பியை அவருடைய சிஷ்யை எம்.எல்.வசந்தகுமாரியுடன் இணைத்தே பேசப்பட்டதுண்டு.

There is an optical illusion about every celebrity.
நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம்பிள்ளைக்கு எம்.எஸ் மீது இருந்த sexual obsession. தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்புறம் தான் கல்கி சதாசிவம் கல்யாணம் செய்து கொண்டார் என்று மிகப்பெரியவர்களே இன்று சொல்வதுண்டு.
அந்தக்காலத்தில் Me too பரபரப்பு புகார்களுக்கு முகாந்திரம், மார்க்கமிருக்கவில்லை?
மதுரை மணி ஐயர்.
தி.ஜானகிராமன் இவருடைய ரசிகர். இதை திருச்சி ரசிகரஞ்சனி சபாவில் மெம்பராய் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்ரமண்யம் என்னிடம் உறுதிப்படுத்தினார். எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. தி.ஜா போலவே எனக்கும் மதுரை மணி ஐயர் பாட்டு ரொம்ப பிடிக்கும். அவருடைய பாடல் கேசட் இருபதுக்கு மேல் என்னிடம் இருந்தன. அவர் குரலில் வராளி கா வா வா, கரகரப்ரியாவில் சக்கனி ராஜா, மோகனம் கபாலி, சௌராஷ்ட்ரா ராக சூர்யமூர்த்தெ, இன்னும்.. எப்போ வருவாரோ, தாயே யசோதா..இப்படி கேட்க காதுகளுக்கு என்ன பாக்யம்.

மதுரை மணி ஐயர் இந்த பூவுலகில் ஒரு ஐம்பத்தாறு வருடங்கள் தான் இருந்தார். ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கையில் அந்த சாதனை இன்னமும் சுகிர்தமாக, சாசுவதமாக.
பிரபல கல்லூரி முதல்வராய் இருந்த ஒரு மாமி ஒரு தகவலை சொன்னார்.அவர் ரிட்டயர் ஆன பிறகு இன்னொரு தனியார் கல்லூரியில் முதல்வரானார். அவருடைய இளைய சகோதரர் கூட எனக்கு கல்லூரியில் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.
அந்த கல்லூரி முதல்வரின் பெற்றோர் மதுரையில் பெருமாள் கோவில் தெருவில் குடியிருந்திருக்கிறார்கள். குழந்தையாக இருக்கும் காலம் தொட்டு மதுரை வாசி அவர்.
 கல்லூரி முதல்வர்  சிறுமியாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கிற காலத்தில் அங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் ஒரு மாமி இருந்திருக்கிறார். அவர் சங்கீதம், பரதநாட்டியம் இவற்றில் தேர்ந்தவர். குழந்தைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். குழந்தையாய் இருந்த இந்த முதல்வருக்கு அந்த பக்கத்தாத்து மாமியை மிகவும் பிடிக்குமாம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே.
ஆனால் ஒரு சிக்கல். பிரின்சிபால் மாமியின் தாயாருக்கு அந்த குறிப்பிட்ட பக்காத்தாத்து மாமியை சுத்தமாய் பிடிக்காதாம். குழந்தையை “ எங்கடி போயிருந்தே அபிஸ்டு..சொல்லேன்டி ஜடம்” ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை முகம் கலவரமாகி என்ன சொல்லலாம் என்று தவிக்கும் போதே “வாயில என்னடி பட்சணம் ஒட்டிண்டிருக்கிறது. ஏண்டி அவ ஆத்துக்குத் தானே போயிருந்தே..கிரகசாரம்.” குழந்தை பயத்தோடு தலையை ஆட்டும். உடனே அதன் அம்மா தொடையில் நல்லா கிள்ளி விட்டு “ இனிமே அவ ஆத்துப்போவியா? எத்தன தடவ சொல்லியிருக்கேன். போகாதடின்னு..ஏண்டி” என்று மீண்டும் நறுக்கென்று தொடையில் கிள்ளி விடுவாராம்.
நான் கேட்டேன். “  ஒங்க தாயாருக்கு ஏன் அந்த பக்கத்தாத்து மாமி மேல இவ்வளவு துவேசம்”
காலேஜ் பிரின்சிபால்  சொன்னார். “ அந்த மாமி சங்கீத வித்வான் மதுரை மணி ஐயரின் Concubine. மணி ஐயர் அந்த மாமியை வச்சிண்டிருந்தார். His significant other. அவ ரொம்ப நல்லவ. எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா என்ன செய்ய. Social Stigma. குழந்தையா இருக்கறச்ச எனக்கு என்ன தெரியும். அப்புறம் ரகசியமா தான் அம்மாவுக்கு தெரியாம தான் அந்த மாமியை போய் பார்ப்பேன். அவ விளயாட்டு ஜாமானெல்லாம் எனக்கு தருவா. பட்சணமெல்லாம் ரொம்ப ருசியாயிருக்கும். நல்லா நெறய்ய கதைகள் சொல்வா. ரொம்ப நல்ல மாமி..”
இதை சொல்லும்போதே கல்லூரி முதல்வரின் கண்கள் குளம் கட்டி விட்டன. ’’மணி ஐயருக்கு குஷ்டம் உண்டு. அப்படியிருந்தும் எங்க தெருவில் இருந்த பக்கத்தாத்து மாமிக்கு அவர் மீது பிரேமை என்பதை விட பக்தி.. ரொம்ப நன்னாயிருப்பா. எவ்வளவு பெரிய தியாகம்”


தி.ஜானகிராமன் “மணம்” என்ற ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் என்பது ஏனோ நினைவுக்கு வந்தது.

மதுரை மணி ஐயரின் அபிமான ராதையின் அன்பில் திளைத்த ஒரு பரிசுத்த குழந்தையாகவே அந்த கல்லூரி முதல்வரை அப்போது நான் பார்த்தேன்.

https://rprajanayahem.blogspot.com/2018/01/blog-post_29.html


Jan 27, 2019

விஜய்காந்த்


அறிமுகமேயில்லாத ஒருவரை எப்போதும் பல கட்டங்களில் பார்க்க நேர்வது. அதிலும் அப்படிப்பட்டவர் ரொம்ப பிரபலமாகி விடும்போது அப்படிப்பட்டவரை சாதாரணமான மனிதராக, பார்த்த, சந்தித்த நினைவுகள் பசுமையானவை.  சம்பந்தப்பட்டவர் நினைவில் நான் கொஞ்சம் கூட நிலைத்து விடவில்லை.
 ஒரு எழுத்தாளனாக எனக்கு அந்த மனிதர் பற்றிய விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விடுகிறது.


’இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து முடித்து விட்ட பின் விஜய்காந்த் மதுரையில் “டேய், இவன் சினிமாவில் நடிச்சவன்டா” என்று சத்தமாக சொல்லுமளவுக்கு பிரபலம்.
அப்புறம் ரெண்டு மூனு ஓடாத படங்களில் இரண்டாவது கதாநாயகன். இவருடன் முக்கிய கதாநாயகனாய் நடித்த நடிகனையெல்லாம் பேர் சொல்லி இன்று புரியவைக்கவே முடியாது.
அப்போதெல்லாம் அவர் போட்டிருக்கும் வெள்ளை நிற சர்ட்டில் க்ரேய் டிசைன் செய்திருக்கும். ஒரு க்ரே கலர் பேண்ட். எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. ஒரு பைக் ராஜ்தூத்தாய் இருக்கலாம். அல்லது வேறு பைக்காகவும் இருக்கலாம்.
அடிக்கடி பாண்டி பஜார் ரோகினி இண்டர்நேஷனல் லாட்ஜுக்கு வருவார். நான் லாட்ஜின் முன் பகுதியில் அப்போதைய என் நண்பர்கள் ( மிகவும் முதியவர்கள். பெருமாள் நாயுடு, சுப்ரமண்ய ஐயர் போன்றவர்கள்) புடை சூழ சேரில் அமர்ந்திருப்பேன். விஜய் காந்த்தை நான் பார்க்க நேரும்போதெல்லாம் எப்போதும் என்னை கவனிப்பார். ஒரு பார்வை தீர்க்கமாய். ஒரு தடவை கூட என் மேல் விஜய்காந்த் பார்வை படியாமல் போனதேயில்லை.
கண்ணதாசன் வீட்டிற்கருகில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.
பின்னால் அவர் படங்களில் மெஷின் கன் தூக்கிக்கொண்டிருப்பதை ரசிக்க முடிந்ததில்லை.
’அகல் விளக்கு’ அன்னக்கிளி செல்வராஜ் படத்தில் ஷோபாவுடன் விஜய்காந்த். ஆஹா அந்தப்பாட்டு “ ஏதோ நினைவுகள், கனவுகள், மனதிலே மலருதே”. அகல் விளக்கு படு மோசமான தோல்விப்படம்.
’நூலறுந்த பட்டம்’ என்று ஒரு படம் அப்போது பூஜை போடப்பட்டது.  விஜய்காந்த் அதில் வில்லனா, இரண்டாவது கதாநாயகனா? சந்திரசேகர் கூட அந்தப்படத்தில் விஜய்காந்த்துக்கு குடை பிடிக்கிற ஒரு அல்லக்கை ரோல் செய்திருந்தார்.
எனக்கும் இன்விட்டேஷன் தரப்பட்டிருந்தது.
நடிகர்கள் லிஸ்டில் இரண்டாவதாக விஜய் காந்த் பெயர் போடப்பட்டிருந்தது.
(படம் ரிலீசான போது விஜய் காந்த் மார்க்கெட்டிற்கு வந்து விட்டதால் டைட்டிலில் முதலாவதாக பெயர் வந்திருந்தது.)
மாடியில் இருந்த என் அறைக்கு கீழ் தான் ’நூலறுந்த பட்டம்’ படம் எடுத்த படக்கம்பெனி ஒரு அறையில் இயங்கிக்கொண்டிருந்தது.

பூஜை நடந்த அன்று அதன் பின் மாலை நேரத்தில் தி.நகர் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே நான் தங்கியிருந்த மேன்சனின் பால்கனியும் அல்லாத மொட்ட மாடியுமல்லாத இடத்தில் ஒரு பத்து பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவர் விஜய்காந்த்.

அரைவட்டமாக அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் விஜய் காந்த் அப்போது ‘பழைய படம் ஒன்றில் லிஃப்ட்டில் ஒரு பாட்டு வரும். நல்ல பாட்டு. அந்த பாட்டு என்னன்னு எவ்வளவு யோசிச்சாலும் ஞாபகம் வர மாட்டேங்குது’ என்று குழம்பினார்.
நான் உடனே “ அந்த படம் ’நிலவே நீ சாட்சி’. எம்.எஸ்.வி பாடியிருந்தார். “நீ நினைத்தால் இன்னேரத்திலே ஏதேதோ நடக்கும்” நான் பாடியே காட்டினேன்.
விஜயகாந்த் முகம் ஆசுவாசத்துடன் மலர்ந்தது. அவருடைய அந்த பிரகாசமான கண்கள் விரிந்தன.. அந்த பிரத்யேக சிரிப்பு. ” இந்த பாட்டு தான் சார். இதே பாட்டு தான். லிஃப்ட்ல ஷூட் பண்ணியிருப்பாங்க.”
இந்த ஒரு சின்ன உரையாடல் தான் எனக்கும் விஜய்காந்த்துக்கும் நடந்த ஒரே interaction.
இயக்குனர் விஜயன் “தூரத்து இடி முழக்கம்” விஜய் காந்திற்கு ஒரு நல்ல படம்.
நான் மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய சவ்வாஸ் ரெடிமேட் கடைக்கு விசிட் செய்வேன். அப்போதெல்லாம் சினிமா நடிகரான பின்பும் விஜய்காந்த் ராதாஸ் கடையில் நின்று கொண்டிருப்பார். சவ்வாஸ் என் நண்பர்கள். ராதாஸ் ஜவுளிக்கடையில் அவருடைய நண்பர்கள். பின்னால் ராதாஸ் அவருடன் கடும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தார்கள் என்று அந்த ஏரியாவில் பரவலாக பேச்சு. அப்படி இல்லையென்றால் தான் அவர்கள் விஜய் காந்த் பட தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு இப்ராஹிம் ராவுத்தர் போல உயர்ந்திருப்பார்களே.
’சட்டம் ஒரு இருட்டறை’ அவரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தது. அப்படியும் ஒரு ரவுண்டு வந்த பின் இரண்டு வருடம் சும்மா வாய்ப்பில்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது. மீண்டும் “ சாட்சி” அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வைத்தது.
மூன்றாவது ரவுண்டு “ஊமை விழிகள்” படத்தில் ஆரம்பித்தது. அப்புறம் செம டாப்.
விஜய் காந்திற்கு ஒரு ரசிக பட்டாளம் கிராமங்களில் பரவலாக ஏற்பட்டதால் நட்சத்திர அந்தஸ்து.
பெரும் தடைகளை உடைத்துத் தான் மிகுந்த பிரபலத்தை அவர் கண்டடைந்தார்.

வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டையில் பார்க்க விஜய்காந்த் ரொம்ப பிரமாதமாக இருப்பார்.
கேப்டன் பிரபாகரன், ரமணா இரண்டும் அவருடைய மிக வெற்றி பெற்ற படங்கள். அந்த இரு படங்களைக் கூட நான் பார்த்ததில்லை.
கமல் ரசிகனுக்கு விஜய் காந்த் படங்கள் சுவைக்காது.

’விஜய்காந்திற்கு ஒரு போஸ்ட் மேன் வேடம் கூட என் படங்களில் கொடுக்க மாட்டேன்’ என்று மட்டம் தட்டிய பாரதிராஜாவின் ’தமிழ்செல்வன்’ படத்தில் கூட கதாநாயகன்.
அவர் படங்களில் நடித்த வில்லன்கள் மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் பிரபலமானார்கள். பிரபல வில்லன்கள் பலர் அவர் படங்களில் நடித்தார்கள். சரத்குமார் அவர் படத்தின் மூலம் தான் மார்க்கெட்டிற்கு வர முடிந்தது.
’ஏழை ஜாதி’ சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அவரை பார்த்தேன். அங்கு மனோரமாவை பார்க்க நான் போய் இருந்த போது என் மீது ஆர்க் ப்ரூட் லைட் வெளிச்சம் தற்செயலாக திருப்பப்பட்டது. அப்போது விஜய் காந்த் என்னை கவனித்துப் பார்த்தார். நல்ல மார்க்கெட்டில் இருந்த நேரம். என்னை முன்னர் அடிக்கடி பார்த்திருக்கிற பழைய மதுரைக்காரன் என்று அடையாளம் தெரிந்திருக்காது.
விஜய்காந்த் மார்க்கெட் டல்லானவுடன் அரசியலுக்கு வந்த போது அதை நான் சிலாகிக்கவில்லை. அவரை Nigger MGR என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.
மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாவிட்டாலும்
 அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதா தயவில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர முடிந்தது.  மோடியுடன் கூட்டணி போட முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்கு வந்தது. கம்யூனிஸ்ட்கள் கூட அவருக்கு வால் பிடித்தார்கள். வைகோவும், திருமாவளவனும் முதல்வர் வேட்பாளராக விஜய்காந்தை தூக்கிப்பிடித்தார்கள்.

தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..

அரசியலில் அவர் பெறப்போகும் சரிவு பற்றி சென்ற 2016 சட்டசபை தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் நான் தெளிவாக கணித்திருந்தேன்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

2009ம் ஆண்டு மதுரை டவுன் ஹால் ரோடு தாஜ் ஹோட்டலுக்கு  போய் இருந்தேன். தாஜ் பழைய சிறப்பை இழந்திருந்தது.

அப்போது மொஹிதின் பாய் அங்கே சர்வராய் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இருந்தாலும் என்னை பார்த்தவுடன் உற்சாகமாக எனக்கு பரிமாற ஆரம்பித்தார். என்னிடம் கேட்டார். “ஒங்களுக்கு ஞாபகமிருக்கா? நீங்க உங்க ஃப்ரண்ட்ஸோட இந்த டேபிள்ள உட்கார்ந்திருப்பீங்க. விஜய காந்து அவரோட ஃப்ரண்டுங்களோட அந்த டேபிள்ள உக்காந்திருப்பாரே. நினைவிருக்கா?”






Jan 22, 2019

A.K.ராமச்சந்திரன் என்ற ரவி

அன்றும் இன்றும்
அற்புதமான, உன்னதமான ஒரு நண்பன் ரவி. ரவி என்ற A.K.ராமச்சந்திரன். அமேசான் கிண்டிலில் வெளி வந்த ’தூறலாய் சாரல்’ நூலை A.K.ராமச்சந்திரன் என்ற ரவிக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
35 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவில் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு ரவி. 

நாங்கள் இருவரும் இப்போது இப்படியிருக்கிறோம்.


ஆனந்தமான, கொண்டாட்டமான, சுக சௌகரிய வாழ்க்கை ரவியுடையது. 
மிக மோசமான பொருளாதாரா சரிவு, பள்ளங்களை கண்டவன் நான்.
 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கிடைத்த நட்பு.
வகுப்பு தோழன்.


நேற்று ரவி பிறந்த நாள். ஜனவரி 21.
என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் 21.
இருவருமே கும்ப லக்னம்.
பிறந்த தேதியை வைத்து, லக்னத்தை வைத்து ஜோதிடம் சொல்வது எவ்வளவு அபத்தம் என்பதற்கு மாறுபட்ட எங்கள் இருவரின் வாழ்க்கையே உதாரணம். ஜோதிடமே பொய் தான்.

நானும் ரவியும் சேர்ந்திருக்கும் புகைப்படம் தினமணி மூலம் ஒரு முறை பிரபலமானது. என்னை தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள்.


Jan 20, 2019

#Ten_Years_Challenge

2009 - 2019


One man in his time plays many parts. - Shakespeare
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts.
- in 'As you like it' play.

We Know what we are,
But not we may be
- Shakespeare in 'Hamlet'


Age cannot wither me, nor custom stale my infinite variety.
- Shakespeare in 'Antony and Cleopatra'

Jan 19, 2019

துரத்துகிறார் துரைக்கண்ணு



 ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பிரபலம் காரணமாக சித்ராலயா பெயரில் ஒரு பத்திரிக்கையே நடத்தியிருக்கிறார். அந்த பத்திரிக்கை வடிவம் செய்திப்பத்திரிக்கை போல இருந்தது. ஆனால் சினிமா பத்திரிக்கை தான். தினசரி பத்திரிக்கையல்ல.

தமிழ் சினிமாவோடு இந்தி திரையுலகம் பற்றியும் சுவாரசியமான செய்திகள் அதில் படிக்க முடியும்.
ஷம்மி கபூர் ஒரு தமிழ் பாடலை அடிக்கடி வாய் விட்டு பாடுவாராம். அந்தப்பாடலில் உச்சரிக்க ஒரு விஷேச அம்சம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவர் தமிழ் அறிந்தவர் அல்ல. அந்த பாடல் பாவமன்னிப்பு படத்தில் வரும் ‘ அத்தான் என்னத்தான்” பாடல்.

இந்த செய்தித்துணுக்கு சித்ராலாயா பத்திரிக்கையில் தான் படித்தேன்.


சித்ராலயா கோபு. சினிமாக்காரராக அறியப்படும் கோபு ’ஹரிகதா’ எம்பார் விஜய ராகவாச்சாரியார் வம்ச பரம்பரையில் வந்தவர். எம்பார் இவருக்கு மாமா.


கோபுவின் காதலிக்க நேரமில்லை செல்லப்பா பாத்திரம் நாகேஷால் சிரஞ்சீவித்தன்மை பெற்றது. நாகேஷ் பாலையாவிற்கு கதை சொல்லும் காட்சிக்கு கோபு  பார்த்து ரசித்த தாதாமிராஸி ( புதிய பறவை படத்தை இயக்கியர் இவர் ) தான் ரோல் மாடல்.

ஸ்ரீதரின் பால்ய நண்பர் கோபு என்றாலும் இருவர் நட்பும் ஸ்ரீராமன் – ஹனுமன் நட்பு போல் இருந்திருக்கிறது. கோபுவின் குருபக்தி அளப்பரியது. ஸ்ரீதரின் யூனிட்டில் இருந்த பலரும் அவர் முதுகில் குத்தியவர்கள். கோபு மட்டுமே விசுவாசமான நட்புடன் கடைசி வரை இருந்திருக்கிறார். சினிமாவுலகில் இப்படி ஒரு நட்பு அபூர்வம்.

ஒரு படத்தில் பிரபல இயக்குனரின் அஸிஸ்டண்ட் என்றால் போதும். தனித்து ஒரு படம் இயக்குவது சர்வ சாதாரணம். ஆனால் சித்ராலயாவில் கோபு மிக பிரபலமாயிருந்தும் ஸ்ரீதர் நிழலிலேயே இருந்தார். ’உத்தரவின்றி உள்ளே வா’ படம் கூட என்.சி.சக்ரவர்த்தி தான் இயக்கினார்.

அன்றைய தமிழ் சினிமாவுலகில் பந்துலுவிடம் இருந்த சிங்கமுத்து, ஏ.பி.நாகராஜனிடம் இருந்த கே.கே.சம்பத்குமார், தேவர் பிலிம்ஸில் மாரியப்பன் போன்றோர் இப்படி இயக்குனரின் நிழலிலேயே தான் இருந்திருக்கிறார்கள். தனித்து இயக்குனராகவே இல்லை.


ஏ.வி.எம் காசே தான் கடவுளடா படத்திற்கு கூட முதலில் கோபு சிபாரிசு செய்தது சி.வி.ராஜேந்திரனைத்தான். ஸ்க்ரிப் ஒர்க் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால் ஏ.வி.எம் செட்டியார் தான் அந்தப்படம் கோபுவால் தான் இயக்கப்பட வேண்டும் என்று தீர்மானமாக சொல்லியிருக்கிறார்.

கோபு குமுதத்தில் ஒரு தொடர் எழுதினார்.’துரத்துகிறார் துரைக்கண்ணு’.
ஒரு லோக்கல் ரௌடி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கோபுவை துரத்துவார். அவர் மெட்ராஸ் சல்லி என்பதால் கோபு பயந்து போய் அவரை சமாளிக்க படாத பாடு படுவார். நகைச்சுவையாக எழுதினார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது ஜிகர்தண்டா படத்தின்  கதையை ஞாபகப்படுத்தும் விதமாக அந்த தொடர் இருந்தது. ஆனால் அதைப்பார்த்து இது காப்பி என்பதல்ல. அல்ல. இரண்டும் வேறு தான். மையக்கரு ஒற்றுமை இருக்கிறது. பாபி சிம்ஹா எப்படியெல்லாம் சித்தார்த்தை தன்னை வைத்து படமெடுக்க வற்புறுத்தி துன்புறுத்துகிறார். அது போல தான் கோபுவை ஆக்கிரமித்து துரைக்கண்ணு நச்சரிப்பும். துரைக்கண்ணுவின் வட்டார மெட்ராஸ் பாஷை.

’துரத்துகிறார் துரைக்கண்ணு’ நட்பு வட்டாரத்தில் ஒரு Vocabulary ஆனது. நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது இந்த 'துரத்துகிறார் துரைக்கண்ணு’வை பிரபலப்படுத்தினேன். அதாவது தர்மசங்கடப்படுத்தப்படும் விதமாக யாராவது அரைவேக்காடு தொடர்ந்து நச்சரித்தால், மிரட்டி ஏதாவது உதவி செய்யும்படி கேட்டால், அவ்வளவாக சிலாக்கியமானவராக இல்லாத ஒருவர் நட்பு நாடி வந்தால், அத்துமீறி ஆக்கிரமித்து உரிமை கோரினால், தொந்தரவு, தொல்லை செய்து கொண்டிருந்தால் இந்த வார்த்தை
‘ துரத்துகிறார் துரைக்கண்ணு’வை மதுரையில் பலரும் பயன்படுத்தும் அளவுக்கு அப்போது பிரபலமானது.






Jan 16, 2019

அது மனிதருக்கு தோழனடி – 3



எல்லியட்ஸ் பீச்.
ஆதாமின்ட தட்டு கட.
கலாச்சாரம் பேணும் மலையாளி புரோட்டா, புட்டு சாப்பிடும் கடை சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
என்ட பீடி மலபார் பீடி
என்ட மேளம் செண்ட மேளம்
என்ட கட ஆதாமின்ட தட்டு கட

ஆர்ம்ஸ்ட்ராங்க் முதல் முதலாக நிலாவில் கால் வைத்தவுடன் அங்கே ஒரு நாயர் கையில் டீ கெட்டிலுடன் கேட்டாராம். “எந்தா சாரே.. சாயா வேணுமோ? கட்டன் சாயா..”
ஆதாமின்ட தட்டு கடயில் புரோட்டா பீஃப் சாப்பிட்டு விட்டு பக்கத்து ஸ்டாலில் ஒரு காஃபி 
( ஸ்டால் பேர் Mud coffee.) மண் டம்ளரில் காஃபி குடித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த ஒரு டோனட் ஷாப் வாசலில் ஒருவர் பைக்கில் வந்து இறங்கினார். பைக்கில் அவருடன் ஒரு பக் டாக். Pug dog. A bundle of love gift-wrapped in fur. 
அந்த பக் நாயை அப்படியே பைக்கில் அமர வைத்து விட்டு கடைக்குள் அவர் கடைக்குள் போய் விட்டார்.
சமத்து. அப்படியே உட்கார்ந்திருந்தது.
டீ சர்ட், ஷாட்ஸ் போட்டு அசத்தலா இருக்கு. ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர்.
பைக் நின்ற இடத்தில் மண் தரையில் ஒரு
Stray dog படுத்திருக்கிறது. 
இதுவும் படு சமத்து தான். கால பைரவர்.
’சொர்க்கத்தில் இருந்து நரகம் வரை, இங்கு சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை. வர்க்கத்தில் இரண்டு வாழும் வரை இந்த மண்ணில் ஏது நல்ல நீதி முறை.’ சேடப்பட்டியானுக்கு கண்ணதாசன் பாடல். மதுரை பக்கமெல்லாம் எஸ்.எஸ்.ஆரை சேடப்பட்டியான் என்பார்கள்.

 தரையில் படுத்திருந்த தெரு நாய் கடலிலாவது என்றாவது குளித்திருக்குமா? There is always a stray dog somewhere that stops me being happy.
கூத்துப்பட்டறை தெருவில நம்ம வெள்ளக்கண்ணு இப்ப என்ன செய்யுதோ? That street dog Vellakannu is a nicer one than some other persons there. 
பக் நாய் பற்றி சுவாரசியமான ஒன்று சொல்லப்படுவதுண்டு. The Pug is a living proof that God has sense of humour.
மறக்க முடியாத வோடஃபோன் விளம்பரத்தில் பிரபலமானது கூட ஒரு பக் நாய்.
செல்வப்பரம்பரையினரால் சீராட்டி வளர்க்கப்பட்டாலும் பக் ஏன் ஏதோ பெரும் துக்கத்தில், மீளாத்துயரில் இருப்பது போல தோற்றம் தருகிறது?
’விரலுக்கு தகுந்த வீக்கம்ப்பா’ன்னு சொல்லுமோ? ’வீட்டுக்கு வீடு வாசப்படி. என் கஷ்டம் உனுக்கெப்பட்டி தெரியும்.எனுக்குத்தான் தெரியும்.’னு சொல்லுதோ? என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்?
’You should get into my shoes to know my sorrows. போப்பா..போ..’ 
இந்த செல்ல நாய்க்கு காலில் ஷூ போட ஏன் மறந்தார்கள்?
Speak to the animals, birds, reptiles and trees. They talk.