Share

Sep 21, 2014

ஜிகர்தண்டா



மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த போது சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றேன்.  ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னால் இன்றும் மறக்கமுடியாத விஷயம் ஒன்று. ஓட்டுக் கேட்டு கும்பிட்டு நடந்து வந்து கொண்டிருந்த என்னைத் தூக்கி தன் தோளில் உட்கார வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த கஜராஜ். ஒரு முறை அல்ல. இப்படி பலமுறை.  அந்தத் தேர்தலில் நான் தோற்றேன்.


தோல்வியடைந்த பின் கண் கலங்கிய நண்பர்களைத் தேற்ற  நான் பாடிய பாடல்கள் அவர்களை மேலும்  நெகிழ்த்த, இந்த நெகிழ்வான சம்பவத்தை அங்கு வந்திருந்த எங்கள் நண்பன் மில்டன் இதயகுமார் தன் டைரியில் விரிவாக எழுதிய விஷயமும் இன்று வரை நினைவில் நிழலாடுகிறது.

சில வருடங்களுக்குப் பின் ஒரு இறுதி ஊர்வலம்.  'சடசட' வென்று நல்ல மழை..  முன்னால் நீர்மாலை போட்டு  வேகமாக நடந்து வந்த கஜராஜ். கஜராஜின் தகப்பனாரின் இறுதி ஊர்வலம்.

ரொம்ப காலத்திற்குப் பின் 1994 மே மாதம் டவுன் ஹால் ரோடு ஹோட்டல் டைம்ஸில் நான் தங்கியிருந்த போது வெளியே போய் விட்டுத் திரும்பிய போது அங்கே ரிஷப்சன் ஹாலில் பிசினஸ் விஷயமாக வந்திருந்த கஜராஜைப் பார்க்கிறேன். 'ரூமுக்கு வாங்க' என்று அழைக்கிறேன். ' இல்ல கேபி! அவசரமாக போக வேண்டியிருக்கிறது.' என்று கிளம்பிச்சென்ற கஜராஜ்.

திருப்பூரில் சில வருடங்களுக்கு முன் மில்டன் இதயகுமார் என்னிடம் கஜராஜின் மகன் சுப்பாராஜ் ' நாளைய இயக்குனர்' டி.வி நிகழ்ச்சியில் கலக்குவதைப் பற்றி சொன்னார்.

 
(மில்டன் இதயகுமார்)

அமெரிக்காவில் சாப்ட்வேர் எஞ்சினியர் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுப்பாராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு சினிமா உலகில் நுழையும் முயற்சியில் இருப்பதை கேள்விப்பட்ட போது கொஞ்சம் கவலையாகக் கூட இருந்தது.

மில்டன் அடுத்து சொன்ன விஷயம். சிவாஜி மகன் ராம்குமார் மகனுடன் சினிமா முயற்சியில் இருப்பதாக. ராம்குமார் மகன் சினிமா நடிகராக தோற்றவன். அவனுடன் சுப்பாராஜ் சேர்ந்து படமுயற்சியில் இருப்பதும் அவ்வளவு சிலாக்கியமாகத் தெரியவில்லை.

தொடர்ந்து கஜராஜ் மகனுக்கு திருமணம் நடப்பதைச் சொல்லி கஜராஜிடம் என் மொபைல் எண்ணை க் கொடுத்திருக்கிற விஷயத்தை மில்டன் தெரிவித்தார்.

கஜராஜ் செல்பேசியில் பேசியபோது  நான் " யாருங்க" என்று புரியாமல் கேட்ட போது அவர் தன் பெயரை சொல்கிறார். நான் " ஜெயராஜுன்னு யாரையும் எனக்குத் தெரியாதே." என்றேன். மீண்டும் கஜராஜ் தன் பெயரைச் சொல்கிறார். எனக்கு ஜெயராஜ் என்றே காதில் விழுகிறது.சிக்னல் சரியாக கிடைக்காததால் குழப்பம்............
" ஜெயராஜுன்னா யாருன்னு தெரியலியே?"
மீண்டும் "கேபி! நான் கஜராஜ்" பொறுமையாகச் சொல்கிறார்.கஜராஜ் என்று அவர் சொன்னது எனக்கு ஜெயராஜ் என்று காதில் விழுந்திருக்கிறது.

கல்லூரி கால நண்பர்கள் என்னை இன்றும் "கேபி" (Gabie) என்று தான் அழைப்பார்கள்.
உறவினர்கள் என்னை எப்போதும் "துரை" என்று தான் அழைப்பார்கள்.

"சாரி கஜராஜ்! சொல்லுங்க. மில்டன் சொன்னாப்ல. மகனுக்கு கல்யாணமா?!"
"ஆமாம் கேபி! உங்க அட்ரஸ் சொல்லுங்க!"
ராஜநாயஹத்தை  கார்த்திக் சுப்பாராஜ் திருமணத்திற்கு அழைக்கும் திருமண பத்திரிக்கை வந்தது.
என் துரதிருஷ்டம்! நல்ல விஷயங்கள் பொதுவாக எனக்குக் கொடுத்து வைப்பதில்லை. ஏன் அந்தத் திருமணத்திற்கு எதனால் போக முடியவில்லை என்ற விஷயங்களை இங்கே குறிப்பிடுவது அபத்தம்.

அந்தத் திருமண நிகழ்வில் கார்த்திக் சுப்பாராஜின் பெற்றோர், மணப்பெண்ணின் பெற்றோர் சினிமா ஆசை வேண்டாம். மீண்டும் சாப்ட்வேர் எஞ்சினியராக அமெரிக்கா செல்வது தான் உசிதம் என்று புத்திமதி சொன்னதாகவும் கஜராஜின் நண்பர்கள் உட்பட பலரும் இதையே சுப்பாராஜிடம் வலியுறுத்தியதாகக் கேள்விப்பட்டேன்.

நான் சினிமா முயற்சிகளில் இருந்த போதும் எனக்கும் இப்படி அட்வைஸ் செய்திருக்கிறார்கள்,
"சினிமாவை நம்பாதே! என்ன இருந்தாலும் சினிமா என்பது முழங்காலில் கட்டிய தாலி தான்."


அப்புறம்  இரண்டே வருடத்தில் " பீட்சா" வெளி வந்தது.

இதோ இப்போது "ஜிகர்தண்டா"

 நண்பனின் மகன் இயக்குனராக திரையுலகில் அபாரவெற்றி கண்ட சந்தோஷம் ஒரு புறம் இருக்கட்டும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா கஜராஜ் இந்த இரண்டு படங்களிலும் நடிகராக இருப்பது.
 மிஸ்கினின் "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்திலும்
"முண்டாசுப்பட்டி"யிலும் நடிகராக கஜராஜ்!

கஜராஜை நான் இந்தக் கோணத்தில் எண்ணிப்பார்க்க வாய்த்ததில்லை.
அந்தக் காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் அமெரிக்கையான, அமைதியான, அதிகம் பேசாத, டீசண்டான ஒரு பையனாகத் தான் கஜராஜை நான் அறிந்திருக்கிறேன்.

http://img.dinamalar.com/data/gallery/gallerye_104036441_1015344.jpg




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.