Share

Jun 27, 2017

Junior most Assistant Director


சினிமாவில் உதவி இயக்குனராக நான் இருந்த வெவ்வேறு காலங்களை திரும்பிப் பார்க்கும் போது இப்போது வேடிக்கையாக தெரியும் ஒரு விஷயம். அந்த படங்களின் அசோசியேட் டைரக்டர்கள், அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் என்று என்னோடு இருந்தவர்கள் காட்டிய துவேசம் தான்.

இரண்டு படங்கள். இரண்டிலுமே ஜூனியர் மோஸ்ட் நான் தான்.

முதல் பார்வையிலேயே தூக்கலாக Contempt, disdain, scorn. கண்ணிலேயே காரணமேயில்லாமல் வெடிக்கும் எள்ளும் கொள்ளும்.

இவன் யாரு? எதுக்கு இவன டைரக்டர் இப்ப அசிஸ்டெண்ட்டா சேக்கனும்.

இவனெல்லாம் சினிமாவில வந்து என்ன செய்யப்போறான்?

நாமெல்லாம் எத்தன வருஷமா கொட்ட போட்டுக்கிட்டு இருக்கோம்.

உடல் மொழியாலும் பார்வையாலும் இப்படி ஒவ்வொரு நிமிஷமும் காட்டிக்கொண்டே இருப்பார்கள்.
எப்படியாவது இவன காலி பண்ணணுமே என்று Mind voice என் காதிலேயெ விழும்படி overflow ஆகும்.


’அழைத்தால் வருவேன்’ படத்தில் தான் இப்படி என்றால்
 ’ராசுக்குட்டி’யிலும் இது பல மடங்காக நான் பார்க்க நேர்ந்தது.

மற்றவர்களையெல்லாம் டைரக்டர் டேய், வாடா போடா என்று சொல்லும்போது இவன மட்டும் வாங்க ராஜநாயஹம், எப்படி இருக்கீங்கன்னு மரியாதயா பேசறாரே.

ஒன்பது பேர் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த நிலை.
'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிக்கையிலும், 'ஜெமினி சினிமா'விலும் படம் பற்றிய கட்டுரையில் ஒரு நான்கு பேரை மட்டும் அஸிஸ்டெண்ட் என்று குறிப்பிட்டு பயில்வான் ரங்கநாதன் எழுதியிருந்தார். அந்த நான்கு பெயர்களில் ராஜநாயஹம் ஒன்று. அதோடு கூடுதலாக என்னைப்பற்றி ஒரு குறிப்பும். ”…..ராஜநாயஹம் போன்ற உற்சாகமிக்க இளைஞர்கள் உதவி இயக்குனர்களாக பணி புரிகிறார்கள். இவர்களில் ராஜநாயஹம் மட்டுமே திருமணமானவர்.”

இது பெயர் இடம்பெற்ற மூன்று பேருக்கும், பெயர் இடம்பெறாத ஒரு நான்கு பேருக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இப்படி தான் புகைந்து கொண்டே இருப்பார்கள்.


சரவணன் மட்டும் எனக்கு உரிய மரியாதை கொடுப்பான். இவனை மற்ற அசிஸ்டெண்ட்கள் படாத பாடு படுத்துவார்கள்.

சரவணன் : என்னங்க டைரக்டர் முகத்த மேக் அப் இல்லாம பாத்திருக்கீங்களாங்க.. கொடூரமா இருக்குமுங்க.”

”உங்கள எல்லோருக்கும் பிடிக்குமுங்க.. உங்களோட பழக எல்லோரும் பழக ஆசைப்படுவாங்க.”

சரவணன் : வீட்டுல இருந்து எனக்கு மாசாமாசம் பணம் அனுப்புறோம்னு சொன்னாங்கங்க… நான் வேண்டாம்னுட்டேன். நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேங்க!

சரவணன் தான் அப்போது சீமான் பற்றி அடிக்கடி என்னிடம் பேசியிருக்கிறான்.
”என் ஃப்ரண்டு சீமான் படம் பண்ணப்போறாருங்க.”


”எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லங்க….. போன ஷெட்யூல் முடிஞ்சவுன்ன ஊருக்கு போனேங்க. என் தங்கச்சி என்ன ஒரு கேள்வி கேட்டுச்சி. ’ஏண்ணே! அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. உனக்கு சினிமா தான் பெரிசா போச்சா’ன்னு நல்லா உறக்கிற மாதிரி கேட்டுச்சுங்க. என் மூஞ்சை எங்க கொண்டு வச்சுக்கறதுன்னு எனக்கே தெரியலீங்க…”

ஷூட்டிங் முடிந்து காரில் வரும்போது கலங்கிய கண்களுடன் ஒரு அஸோசியேட் பெயரை சொல்லி “ அவன் என்னை அடிச்சிட்டாங்க” என்று தேம்பினான்.

அடித் தொண்டையில் பாடுவான். ” ‘வானத்த போல மனம் படச்ச மன்னவனே…’ நல்லா பாடுவேங்க…”

கோபி செட்டிபாளையத்தில் ரூமில் இருந்த போது திடீரென்று ‘மூள திடீர்னு ஜில்னு இருக்குங்க… நம்ம ஏற்கனவே இந்த இடத்துக்கு வந்திருக்கோம்ங்க.. ஐஸ்கட்டி வச்ச மாதிரி மூள ஜில்னு எனக்கு ஆயிடுச்சுங்க…”
நான் சத்தியமா அந்த இடத்துக்கு இதற்கு முன் வந்ததேயில்லை என்று எத்தனை தடவை சொன்னாலும் ஒத்துக்கொள்ள சரவணன் மறுத்து விட்டான்.

(பின்னாளில் “ஒன்ஸ் மோர் படத்துக்கு என் கதைய திருடிட்டாங்க’ என்று குங்குமம் பத்திரிக்கையில் சரவணன் பேட்டி வந்திருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர்,விஜய்க்கு எதிரான பேட்டி.
கொஞ்ச வருடம் முன் சரவணன் ’விஜய நகரம்’ என்று ஏதோ ஒரு படம் இயக்கியதாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தெரிய வந்தது.)


ஏதோ ஒரு சமயம் ஷூட்டிங் போது என்னை பாக்யராஜ்
“ஏய்!” என்று சொல்லி விட்டு “சாரிங்க..ராஜநாயஹம்..உங்கள போய் டென்சன்ல ’ஏய்’னு சொல்லிட்டேன்.” என்றார்.

பேக் அப் சொன்னவுடன் அவர் காரில் ஏறி மேட்டூர் செல்லும் போது
“ ராஜநாயஹத்த போய் வாய் தவறி ’ஏய்’னு சொல்லிட்டேன்..சே..” என்று இரண்டு மூன்று முறை வருத்தப்பட்டிருக்கிறார்.
 நான் மேட்டூர் திரும்பி லாட்ஜ் வந்து குளித்து விட்டு ரூமில் சரவணன், கடுவனோடு இருந்த போது பாரதி சோமு வந்து என்னிடம் “ டைரக்டர் உங்க மேல எவ்வளவு மரியாதை வச்சிருக்கிறார் சார்!” என்று இதை சொன்னார். அப்போது அவர் பாக்யாவில் உதவி எடிட்டராக இருந்தார்.

(எட்டு வருடம் கழித்து இந்திரா பார்த்தசாரதி டாகுமெண்ட்ரி மூவி விஷயமாக ரவி சுப்ரமண்யன் என்னிடம் தொலைபேசியில் பேசிய போது ” நான் உங்கள பாத்திருக்கேன் ராஜநாயஹம். பாக்யா ஆஃபிஸில் பாரதி சோமுவை பார்க்க வந்திருந்த போது உங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்” என்று சொன்னது ஏனோ இப்போது ஞாபகம் வருகிறது. )

ஒரு நாள் மேக்அப் டிபார்ட்மெண்ட் டெக்னிசியன் ஒருவன் என்னிடம் வந்து ஒரு விஷயம் சொன்னான். “ நேத்து நைட் டிஸ்கஸன்ல அஸிஸ்டெண்ட்கள் ’சார்! ராஜநாயஹத்துக்கு டைரக்ஷன்ல இன்ட்ரெஸ்ட் இல்ல. எப்பவும் கல்யாண்குமார், மௌனிகா என்று ஆர்ட்டிஸ்ட்களோடு தான் பேசிக்கிட்டு இருக்கார். அவர ஆர்ட்டிஸ்டா மட்டும் வச்சுக்கலாமே’ன்னு போட்டு விடுறானுங்க சார்!’ என்றான்.
………………………………………………….

http://rprajanayahem.blogspot.in/2017/06/blog-post_25.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

Jun 25, 2017

புகை நடுவில்


அன்றைக்கு ரொம்ப சீக்கிரம் ஷூட்டிங் முடிந்து லாட்ஜிற்கு வந்தவுடன் குளித்து விட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கும் போது மாலை ஐந்தரை மணி. சரி ஒரு வாக்கிங் போய் விட்டு வந்து விடலாம் என்று நினைத்த போது, சக அஸிஸ்டெண்ட் டைரக்டர் சரவணன் ஓடி வந்தான். இவன் ஒருவன் தான் எனக்கு இணக்கமானவன். என்னிடம் நல்ல மரியாதை காட்டிய உதவி இயக்குனர்.

உதவி இயக்குனராக நான் பணி புரிந்த படங்களில் பெரிய துயர அனுபவம் சக உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் இவர்களால் தான். ஏதோ இவனுங்க சொத்த புடுங்க வந்தவன் போல ரொம்ப அல்லாடுவான்கள். Hostility, Contempt.
இயக்குனரால் பெரிய அவமானங்கள் நேராது. ஆனால் இந்த உதவி இயக்குனர்கள் படுத்தும் பாடு சகிக்க முடியாது. சீனியர் என்ற அந்தஸ்தில் இவன்கள் செய்யும் ஜபர்தஸ்து சொல்லும் தரமன்று. இன்று இவன்கள் எல்லாம் சவடால் விட்ட அளவுக்கு வளரவுமில்லை. காணாமல் போய் விட்டான்கள்.

சரவணனை இவன்கள் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டியதில்லை.
சரவணனும், நானும் ஒரே அறையில் தான் இருந்தோம். இன்னொரு விளங்காதவனும் அப்போது கூட இருந்தான். எப்போதும் சிகரெட் பிடித்துக்கொண்டு, காலை ஆட்டிக்கொண்டு, ’உங்களுக்கு நான் சீனியர்’ என்ற தோரணையை காட்டிக்கொண்டே இருக்கிற ஒரு கடுவன். என் மீது இருக்கிற வெறுப்பையும், கோபத்தையும் எப்போதும் சரவணனிடம் காட்டிக்கொண்டு இருக்கிற குரங்குப்பயல். இவனுக்கும் சீனியராய் இருந்த ஆறு பேர் பற்றி சொல்லவே தேவையில்லை.

சரவணன் லாட்ஜின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவன் புகை வருவதை பார்த்திருக்கிறான். அதே சமயம் நானும் புகை நாற்றத்தை ரூமில் உணர்ந்தேன். சரவணன் ஓடி வந்தவன் “ என்னங்க.. புகை வாசனை வருதுங்க.” என்றான். நான் அவனோடு மொட்டை மாடிக்கு போய் எங்கள் அறையை ஒட்டிய பகுதிகளை கவனித்த போது புகை எங்கள் அறைக்கு அடுத்த வலது பக்க அறையில் இருந்து வருவதை கண்டு பிடித்தேன்.

உடன் நான் மேலிருந்து கீழே இறங்கினேன். படியில் இறங்கி கீழ் பகுதியில் புலியூர் சரோஜா அறையில் பேசிக்கொண்டிருந்த ப்ரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் ஜெயக்குமாரிடம் சொன்னேன்.
அவரும் மற்றொரு ப்ரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் வடுக நாதனும் தான் அந்த புகை வந்த அறையில் அப்போது இருந்தவர்கள்.

வடுகநாதன் தான் அறைக்குள் அப்போது இருக்கிறார் என்பது தெரிந்தது.

ஜெயக்குமாரை பல டெக்னிசியன்களுக்கும் நடிகர்களுக்கும் அவ்வளவாக பிடிக்காது. சம்பளம் போடுவதில் ரொம்ப கறார் காட்டுவார் என்பார்கள். ஆனால் அவர் என்னிடம் எப்போதும் ரொம்ப கனிவாகவே பேசுவார்.
உடனே முதல் மாடியில் இருந்து ஜெயக்குமாருடன் நானும் சரவணனும் எங்கள் அறையிருந்த இரண்டாவது மாடிக்கு ஓடினோம். இதற்குள் பரபரப்பாகி கூட்டம் சேர்ந்து விட்டது. கதவை நானும் சரவணனும் மோதி உடைத்தோம். உள்ளே ஒரே நெருப்பும் புகையும்.

வடுகநாதனைக் காண முடியவில்லை. புகை நடுவில் எப்படி தேடுவது? பாத்ரூமில் உள்ளே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சரவணன் தூக்கினான். அறையில் இருந்த சூட் கேஸை எடுத்து உடனே ஜெயக்குமாரிடம் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் அதில் இருந்திருக்கிறது.

வடுகநாதனை தூக்கி வந்து எதிரே ஒரு அறையில் கிடத்தினோம். டாக்டர் வந்தார். அவருக்கு நெருப்புக்காயம் லேசாக இருந்தது.
குடித்து விட்டு படுத்திருந்திருக்கிறார். சிகரெட் கங்கு கட்டில் மெத்தையில் பட்டு தீப்பிடித்திருந்திருக்கிறது. படுத்திருந்த வடுகநாதன் நெருப்பு சூடு தாங்க முடியாமல் எழுந்து அறை கதவை திறப்பதாக நினைத்து பாத்ரூம் கதவை திறந்து உள்ளே விழுந்து விட்டிருக்கிறார்.


இவர் முன்னர் பாரதிராஜாவுடைய படங்களில் ப்ரொடக்சன் மேனேஜராக இருந்தவர். இப்போது பஞ்சு அருணாச்சலம் தயாரிக்கும் படங்களில் தயாரிப்பு நிர்வாகி. பஞ்சு அருணாச்சலத்தின் சகோதரி மகன் தான் வடுகநாதன்.
இவரை படத்தயாரிப்புக் காலத்தில் நான் பார்த்ததேயில்லை. பெரும்பாலும் சென்னை ஆஃபிஸிலேயே இருப்பார் போலும். ஜெயக்குமாரை மட்டுமே தெரியும்.

சரியான நேரத்தில் புகையை வைத்து கண்டு பிடித்துவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு விட்டது. நெருப்பை அணைக்கிற வேலை நடந்தது.
வடுகநாதன் உயிர் பிழைத்தது பெரிய அதிசயம் தான் என்று எல்லோரும் பேசினார்கள். அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது எங்கள் அறையில் இருந்த மற்றொரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் கடுவன் இரவு சாப்பாடு முடிந்தவுடன் சரவணனிடம் தத்து பித்து என்று உளறினான். “ஜெயகுமார் ஒரு க்ரிமினல். அவன் ப்ளான் தான் இந்த நெருப்பு. வடுகநாதனை கொல்லப் பார்த்திருக்கிறான். இனி அவன் இந்த ப்ளான் சக்ஸஸ் ஆகாத கடுப்பில் இதை கண்டு பிடித்த உங்க ரெண்டு பேரை பழி வாங்காமல் இருக்க மாட்டான்”.
புகைச்சல்!

..................................


நான் நடித்த காட்சி பல தடங்கல்களுக்கிடையில் ஒரு வழியாக அருணாச்சலம் ஸ்டுடியோவில் ஷூட் செய்து முடிந்த அன்று கலகலப்பாக ஜெயக்குமார் சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படியாக என்னிடம்
“அப்பாடா! ராஜநாயஹம் சீன் ஒரு வழியா நல்ல படியா எடுத்து முடிச்சாசே!’ என்றார்.
……………………………..

படம் முடிந்த பின் சம்பள பாக்கிக்காக பஞ்சு அருணாச்சலம் ஆஃபிஸ் போக வேண்டியிருந்தது. நான் போன போது நிறைய டெக்னிஷியன்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் சம்பள பாக்கிக்காகத் தான் ரொம்ப நேரமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள்.

நான் தயங்கியவாறு வெராண்டாவில் நின்றேன். ஜெயக்குமார் என்னை பார்த்து விட்டார். “ ராஜநாயஹம், உள்ளே வாங்க! வாங்க உள்ளே.” என்றார்.
நான் ஹாலிற்குள் நுழைந்தேன். ஜெயக்குமார் என்னை உடனே ஒரு அறைக்கு அழைத்துப் போனார். அங்கே வடுக நாதனை இரண்டாம் முறையாகப் பார்த்தேன். ”வடுகநாதன்! இவர் தான் ராஜநாயஹம்! ராஜநாயஹம்! அன்னக்கி மட்டும் இவர் இல்லன்னா இன்னிக்கி நீ உயிரோட இருந்திருக்க முடியாது. உன்ன காப்பாத்துன ராஜநாயஹம்!”
வடுகநாதன் என்னை பார்த்தார். ”நீங்கதானா ராஜநாயஹம்?”

உடனே என் சம்பள பாக்கியை வடுகநாதன் கொடுத்து விட்டார்.

…………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

http://rprajanayahem.blogspot.in/2014/10/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

Jun 23, 2017

வித்யாலட்சுமி


திருச்சி முதலியார் சத்திரம். அங்கே ஒரு முதிய பெண்மணி.
இவர் சங்கிலியாண்ட புரத்தில் பல வருடங்களுக்கு முன் இருந்தவர்.
இருட்டினால் எப்போதும் ஒரு
ரொம்ப பழைய காலத்து விஷயத்தை நினைவு கூர்வார்.( 1930களில் நடந்த விஷயம்) 

’ இன்னேரம் இருட்ட ஆரம்பிக்கிற நேரம் எப்பவும் சிவாஜி கணேசனுடைய அம்மா விளக்கு பொருத்த வேண்டி ஒவ்வொரு வீடா போய் ‘கொஞ்சம் விளக்குக்கு எண்ணை கிடைக்குமா அம்மா’ என்று கெஞ்சுவா…..’
அப்போது சிவாஜி உச்சத்தில் இருந்த காலம். ’குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்’ பாடலில் ஒரு வரி -
 “ராஜாமணி எனும் அன்னை முகத்தில் விளங்கிடும் மங்கலக் குங்குமம்”
தன் தாயை மகாராணியாக்கி விட்டார். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்.

அவருடைய வித்தை – நடிப்பு – அவரை எங்கோ கொண்டு போய் விட்டது. செல்வம், செழிப்பு, புகழ்.

சங்கிலியாண்டபுரத்திலேயே ஒரு சிவாஜி காலனியே இருந்தது. எம்.ஆர்.ராதா காலனியும் கூட.


……………………………………………..

’போடா போடா பொக்கே எள்ளுக்காட்டுக்கு தெக்கே’ ஜானகி பாட்டுக்கு ஒரு கிழவி நடித்திருப்பார். அந்த கிழவியின் கணவர் மணி என்று ஒரு வயசாளி ஒரு விஷயம் சொல்வார்.

சிவாஜி பராசக்தியில் நடிப்பதற்கு முன் இவரிடம் ஏக்கமும் விரக்தியுமாக கேட்பாராம் ‘ மணியண்ணே.. நானெல்லாம் என் வாழ்க்கையில ஒரு நூறு ரூபா நோட்ட கண்ணுல பாப்பனாண்ணே….’

சிவாஜி கணேசனின் பொருளாதார போராட்டமெல்லாம் அவருடைய இருபத்தி நான்கு வயதிற்குள்ளே தான். அதன் பின் வறுமை என்பதை அவர் எங்கே பார்த்திருப்பார்?

பராசக்தி படத்திற்கு பின் வித்யாலட்சுமியின் அருள் பரிபூர்ணமாக கிடைத்து விட்டது. He never looked back.

கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலக்ஷ்மிகளில் ஒருத்தியான வித்யாலட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம்!
சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஆகாது என்பார்கள். ஆனால் ’வித்யா லட்சுமி’யில் தான் இருவரும் இணைகிறார்கள். ’வித்யாலட்சுமி’யின் விசித்திர தனித்துவம் இது! 


………………………….

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

Jun 22, 2017

ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஒரு நாள்


ஏ.வி.எம்.ஸ்டுடியோ எடிட்டிங் பிரிவில் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
எடிட்டர்கள் பால்துரை சிங்கம், லெனின், விஜயன், கே.ஆர் ராமலிங்கம் இருந்த முன் பகுதி.

ஆர்.ஆர் தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடித்த ’மங்கலநாயகி’ படத்தின் மிக்ஸிங் வேலை. கம்பர் ஜெயராமன் இந்த வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

அந்தப் படத்தின் இயக்குனர் ( கிருஷ்ணன்) பஞ்சு அங்கிருந்து கிளம்பி எடிட்டிங் பகுதிக்கு வந்து கொண்டிருக்கும் போதே டைரக்டர் புட்டண்ணா கனகல் அவருடன் சேர்ந்து கொண்டார்.
புட்டண்ணா அப்போது கொஞ்ச காலம் முன் ஒரு சினிமாஸ்கோப் படம் கன்னடத்தில் பிரமாண்டமாக எடுத்திருந்தார்.

பஞ்சுவின் காலம் அப்போது தேய்ந்து மங்கிக் கொண்டிருந்தது. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் ஐ.வி.சசி, எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் – இப்படி திரைத்துறை சுழித்துப்போய் கொண்டிருந்த காலம்.

எடிட்டிங் பில்டிங் வெராண்டாவில் பஞ்சு கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலுடன் நுழைந்து நடக்கும் போதே எடிட்டிங் அறையில் இருந்த எடிட்டர்கள், எடிட்டிங் அஸிஸ்டண்ட்ஸ், அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் என்று எல்லா டெக்னிஸியன்களும் வெராண்டாவிற்கு வந்து மரியாதையாக நின்று கொண்டார்கள்.

பஞ்சு சார் புத்தம் புது முழுக்கை சட்டை பட்டன் ஒன்று கூட போடாமல் உள்ளே பனியன் தெரியத் தான் வந்தார். எப்போதும் திறந்த சட்டையுடன் தான் இருப்பார்.

முன் பகுதி பெஞ்சில் பஞ்சுவும், புட்டண்ணாவும் உட்கார்ந்தார்கள். புட்டண்ணா நல்ல கான்வர்ஸேசனலிஸ்ட். சிரித்த முகமாக பேசிக்கொண்டிருந்தார். பஞ்சு சிரித்தமுகம் கிடையாது. கொஞ்சம் சீரியசாக தெரிவார். ஆனால் தான் அதிகம் சிரிக்காமல் மற்றவர்கள் ரசிக்கும் படியாக பேசுவார்.
………….

பஞ்சு கோபம் ரொம்ப பிரபலம். மு.க.முத்து ’பிள்ளையோ பிள்ளை’ பட ஷூட்டிங் போது நடந்த பழைய விஷயம் ஒன்றை புரடொக்சன் அசிஸ்டெண்ட் எலி சொல்லியிருக்கிறான். ஃபீல்டில் ஒரு பெரிய கல் இருந்திருக்கிறது. எலி அது தேவையில்லையோ என்று அப்புறப்படுத்தியிருக்கிறான். பஞ்சு கத்தியிருக்கிறார். “ங்கோத்தா இங்க இருந்த கல் எங்கடா. நான் தானே இங்க போடச் சொன்னேன்.”
ஒரு ஆள் சொல்லியிருக்கிறார் ‘எலி தான் சார் தூக்கி வெளிய போட்டுட்டான்’
பஞ்சு ”எங்கடா அவன்? இங்க ஒன்னு நான் இருக்கணும். இல்ல அவன் இருக்கணும். ங்கோத்தா என்னடா சொல்றீங்க?”
………………..

இங்கே இப்போது எடிட்டிங் ஹாலில் பஞ்சு அங்கே நின்று கொண்டிருந்த ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவனை பார்த்து “ இங்கே வாடா “ என்றார்.
”இவன் பாருங்க. எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கான்.”
’என்னடா எல்லார் கிட்டயும் சொல்ற. சொல்லு’
ஒரு டெக்னிஸியன். அஸிஸ்டெண்ட் டைரக்டரா, எடிட்டிங் அஸிஸ்டெண்டா தெரியவில்லை.
அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. பஞ்சு போலவே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே நின்றான்.

பஞ்சுவே சொன்னார். “ இவனும் சிவாஜியும் ஒரே பேட்ஜுன்னு சொல்றான்.’நானும் சிவாஜி கணேசனும் பராசக்தியில ஒன்னா ஃபீல்டுக்கு வந்தோம். நான் தான் இங்க ஒங்களுக்கெல்லாம் சீனியர்’னு எல்லாரையுமே மிரட்டுறான் பாத்துக்கங்க.”

”பராசக்தியில இவன் தான் சிவாஜிக்கு தங்கையா நடிச்ச ஸ்ரீரஞ்சனியோட கைக்குழந்தை.”

…………………………………………………..
http://rprajanayahem.blogspot.in/2017/03/blog-post_21.html

Jun 21, 2017

ஒரு சினிமா தயாரிப்பாளர்


தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் எவ்வளவு பெரியவர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள். நாகிரெட்டி, L.V.பிரசாத், A.V.மெய்யப்ப செட்டியார்,சாண்டோ சின்னப்பா தேவர், கே.பாலாஜி, பஞ்சு அருணாச்சலம்….


அக்கரைப் பச்சை என்று ஒரு படம். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், லக்ஷ்மி, ஜெய சித்ரா, நாகேஷ் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் இயக்குனர் என்.வெங்கடேஷ். இவர் பின்னால் ஃபிலிமாலயாவில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ். இவர் சவடால் பேர்வழி. Uneducated crook என்ற வார்த்தையை வெங்கடேஷ் உபயோகித்து சீறியிருந்தார். தர்மராஜ் ஒரு பெரிய ஃப்ராடு என்பது அக்கரைப் பச்சை இயக்குனரின் ஸ்டேட்மென்ட். அக்ரிமெண்ட் போடும்போது கையெழுத்துப் போட தயக்கம் எல்லோருக்கும் இருந்ததாகவும் ஆனால் வெறும் ஆளான ஜி.கே. தர்மராஜ் துணிச்சலோடு கையெழுத்திட்டு தயாரிப்பாளர் ஆனது ஒரு விபத்து என்றும் பேட்டியில் இயக்குனர் கூறியிருந்தார். அந்தப் பேட்டியே ஒரு சின்ன உணவகத்தில் எடுக்கப்பட்டிருந்தது. படம் எடுக்கும்போதே பல தொந்திரவுகள் இவரால். ஃபைனான்ஸ் தொகை இன்ஸ்டால்மெண்ட்டில் கிடைத்த வேளைகளில் இவர் பணத்தை பெற்றதும் இவரை தேடும் நிலை கூட ஏற்பட்டதாகவும் வெங்கடேஷ் புலம்பியிருந்தார்.

ஆனால் பல வகையில் படம் ரிலீஸ் ஆன பின் தர்மராஜின் வாழ்க்கை தான் செழிப்பாக மாறியது.
The devil has better chance in this world!


ஜோதிடம் சொல்வதில் கொஞ்சம் சினிமாவில், அரசியல் உலகில் கூட பிரபலம் தர்மராஜுக்கு இருந்திருக்கிறது.
வடுகபட்டி ஜி.கே. தர்மராஜ். பெரிய குங்குமப் பொட்டு, மீசை.
ஒரு தயாரிப்பாளர் ஆக பரபரப்பாக சில வகையில் பிரபலமானார்.

சிவாஜி படம் ஒன்றை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
’இளைய தலைமுறை’யின் தயாரிப்பாளர் ஜி.கே.தர்மராஜ்.
’இளைய தலைமுறை படத்திற்கு தடை’ என்று தினத்தந்தியில் தலைப்புச் செய்தி.
தடை நீங்கி படம் ரிலீஸ் ஆனது
தர்மராஜ் இப்படியெல்லாம் சினிமாவை கலக்கினார்.


இதை விட பரபரப்பான செய்தியொன்று பின்னால் அகில இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படியாக செய்தது.
எம்.ஜி.ஆர் தன் வாழ்வில் எத்தனை தயாரிப்பாளர்களைப் பார்த்திருப்பார்.
முதலமைச்சர் ஆன பின் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.
ஆனால் எதனாலோ மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது!

சாதாரணமாகவே நடிகன் யாராயிருந்தாலும் கைக்கட்டு வாய்க்கட்டு கால்கட்டோடு பாடையில் போகும் போது தான் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் போகும்.

அதனால் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததை வினோதம் என்று சொல்ல இயலாது.
முதலமைச்சர் ஆன பின் அவர் நினைத்திருந்தால்
தான் கதாநாயகனாய் நடிக்கும் படத்தை தயாரிக்க பெரிய தயாரிப்பாளர் ஒருவரை அழைத்திருக்க முடியும்.

Dharmaraj fell into the honey pot! Excessive fortune!
What was the cap of his fortune?

தர்மராஜ் என்ன வசியம் செய்தாரோ, எப்படி எம்.ஜி.ஆரை கன்வின்ஸ் செய்தாரோ, யார் மூலமாக எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு சம்மதிக்க வைத்தாரோ?
தலைப்பு கூட தர்மராஜின் இலக்கு குறித்த குறிப்பாக இருந்ததே ஒரு அபத்தம்.
“ உன்னை விட மாட்டேன்”

கவிஞர் வாலி தான் டைட்டில் உபயம். அவர் தான் அவசரமாக அவசரமாக படத்துக்கு கதை உண்டு பண்ணியவர்.

சினிமாவுலகத்தை விடமாட்டேன் என்று அர்த்தமா? முதலமைச்சரானாலும் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்காமல் விடமாட்டேன் என்று அர்த்தமா?!

ஜி.கே. தர்மராஜ் தயாரிக்கும், இளையராஜா இசையமைக்கும், முதலமைச்சர்
 கதாநாயகனாய் நடிக்கும்
“ உன்னை விட மாட்டேன்.”
பாடல் பதிவுடன் பூஜை.
தினத்தந்தி தலைப்பு செய்தி மீண்டும்!

ஒரு முதலமைச்சர் சினிமாவில் நடிக்கலாமா? கடும் சர்ச்சை. அகில இந்தியாவே இந்த விசித்திர செய்தியை கவனித்தது.
எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டி விட்டு முதலமைச்சர் வேலையை மட்டும் அப்போது தொடர்ந்தார்.

……………………………

Jun 19, 2017

துன்பம் நேர்கையில் ஓர் அன்பிலா நெஞ்சு


என்னை ஒரு முதிய எழுத்தாளர் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டவர்.  பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார்.

மிக மோசமான கடுமையான சிக்கல்கள் வரிசை கட்டி நின்ற போது நல்ல நிலையில் இருந்த அவருடைய ஒரு மகனுக்கு போன் போட்டேன்.
அன்று அவருடைய அப்பாவுக்கு திதி என்று தெரிந்த போது சிலிர்ப்பு எனக்கு. அவர் ஆன்மா தான் தன் மகனுக்கு நான் போன் போடும்படி செய்கிறதோ. என் மீது மிகுந்த அன்பை கடைசி வரை பொழிந்த நல்ல ஆத்மா.

இறப்பதற்கு ஒரு வருடம் முன், தன்னுடைய தொண்ணூற்றைந்தாவது வயதில் தன் நடுங்கும் விரலால் நெகிழ்ந்து எழுதினார் :”நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்.”

“ அப்பாவுக்கு இன்னக்கி திதி கொடுக்கறீங்களா? சந்தோஷம்.”

”உங்க அப்பா என்னை  ’ராஜநாயஹம் கலியுக கர்ணன்’ என்பார்”

’ஆமாமாம்….ஹி…ஹி…ஹி…கெக்கேகெக்கேக்கே.....’.

”உங்க பையன் என்னைப் பற்றி எப்படி குறிப்பிடுவான் தெரியுமா? ’நூறு ரூபாய்க்கு காட்பரீஸ் சாக்லேட் வாங்கிட்டு வருவாரே. அந்த அங்கிள்!’ ”
 ( 1989ல் நூறு ரூபாய்!)

’ஆமாமாம்………..ஹி….ஹி….ஹி…..ஹி…ஹி….
கெக்கேகெக்கேக்கே..கெக்கே... ஞாபகமிருக்கு.’

கலகலப்பாக இது வரை அட்டகாசமாக சிரித்தார்.

என் சிரமம் பற்றி .. ’சின்ன உதவி என்றாலும் பரவாயில்லை. தங்களால் முடிந்ததை செய்யுங்கள்.’

சிரிப்பு காணவில்லை. அவருடைய பேச்சில் சுதி இறங்கி விட்டது.
’அப்பா திதி முடிந்ததும் பார்க்கிறேன்’ -போனை கட் செய்து விட்டார்.
அவ்வளவு தான். பாராமுகம். Negligence.

அல்லல் நீக்க மறுத்த ஓர் அன்பிலா நெஞ்சு.
....................................................

ஷேக்ஸ்பியரின் கிங்லியர் :“ Is there any cause in nature that makes these hard hearts.”

தி.ஜானகிராமன் : ”இந்த மனிதர்கள் தங்களின் நெஞ்சின் ஈரத்தை எந்த கைக்குட்டையால் துடைத்துக்கொள்கிறார்கள். நரகத்தில் நெய்த கைக்குட்டையாலா?”


………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_30.html


http://rprajanayahem.blogspot.in/2008/12/1988.html

Jun 17, 2017

What to do with the time given?


சார்த்தரின் நாடகம் No Exit. மீளமுடியுமா? என்ற பெயரில் தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்த பழைய க்ரியா வெளியீடு.

இந்த நாடகம் அந்தக்காலத்தில் மு. நடேஷ், கலைராணி நடிப்பில் அரங்கேறியதுண்டு.

வெளியேற வழி இல்லை.
புலி வாலைப்பிடித்தாற் போல என்று ஒரு சொலவடை.

நரகம் என்பது மற்றவர்கள் தான். பிரச்னையற்ற மனித உறவுக்கு வழியேயில்லை.

மற்றவர்களும், போலி மனசாட்சியும் நிரந்தர தொந்தரவு தான்.
எப்போதுமே சீக்கிரமாக சாக வேண்டியிருக்கிறது அல்லது ரொம்ப தாமதமாக காலம் கழித்து. முடிவு பெற்ற வாழ்க்கை ஒன்று உள்ளது. நீ என்பது உன் வாழ்க்கை மட்டுமே.


What to do with the time given?
…………….

’தூண்டில்காரனிடம்
சிக்கி விட்ட மீன்
நாசியில் ஊசி நுழைந்த வேதனையோடும்
புதிய நம்பிக்கையோடும்
மீதி வாழ்வின் முன் வாசலில்
மெல்ல நீந்திப் பார்க்கிறது
பாதியளவு நீர் நிரம்பிய தோள்பையுள்’

- பிரான்சிஸ் கிருபா

“Poetry is written with tears, fiction with blood, and history with invincible ink.”
- ’The shadow of the wind’ – a novel by Carlos Ruiz Zafon.

Jun 14, 2017

Interrogation


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் முதல் பகுதி.
மதுவிலக்கு அமுலில் இருந்தது.

பெருங்குடி மக்கள் அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தையே நம்பியிருந்தார்கள். ஏழைகள் (கலக்கு முட்டி)வார்னீஷ் குடித்தார்கள்.

மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் திரைப்பட இயக்குனர் டி.என். பாலு குடிபோதையில் கைது செய்யப்பட்டிருந்தார். மீண்டும் வாழ்வேன், ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இயக்குனர். தி.மு.க காரர். குடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி சிறை வைத்தார்கள்.

.............

சர்பு தன் நண்பர்களுடன் கள்ளச்சாராயம் கிடைத்தால் குடித்து மகிழ்வதுண்டு.

வடுகபட்டி பாண்டி தான் சாராய பாட்டில்கள் வாங்கி வந்து தருவான்.
அதற்கு அவனுக்கு கூலி, இரவு உணவுக்கு பணம் கொடுக்கிற வழக்கம்.
அந்த நேரத்தில் விலையும் கடுமை தான். அதோடு வாங்கி வருகிற பாண்டி எப்போதும் விலை ஏறி விட்டது என்று சொல்லி ஒரு எக்ஸ்ட்ரா தொகை கறந்து விடுவான்.


இப்படி ஒரு முறை பஜாரில் போய்க்கொண்டிருந்த வடுகபட்டி பாண்டியை கூப்பிட்டு டீல் செய்த போது
பாண்டி “ அண்ணே வேண்டாண்ணே. விலை இப்ப ரொம்ப ஏத்திட்டானுங்க. போலீஸ் தொந்தரவு வேற. என்ன விட்டுடுங்க..சிக்குனா எத்தனை மாசம் உள்ள இருக்கணும் தெரியுமில்ல”
அவனை சமாதானப்படுத்தி மிகப் பெருந்தொகை கொடுத்து(கூலியும் மிக அதிகமாய் கேட்டான்.) அனுப்ப வேண்டியிருந்தது. கூட ரெண்டு பாட்டில். மொத்தம் நாலு பாட்டில். குடிப்பதற்கு அப்படி தவிக்க வேண்டியிருந்திருக்கிறது. At any cost சாராயம் வேண்டும்.


போன பாண்டி வரவில்லை. பஜாரில் கடை சாத்தியவுடன் கச்சேரி. அவனக் காணோம். விசாரிக்க ரெண்டு ஆளை அனுப்பிய பின் வடுகபட்டி பாண்டி வேர்த்து, விறுத்து சைக்கிளில் வந்தான். சரக்கு எதுவும் சைக்கிளில் இல்லை.

சோகமாக பாண்டி பகர்ந்தான்.“போலீஸ் ரெய்டு. பாலத்திலிருந்து நாலு பாட்டிலையும் வாய்க்கால்ல வீசிட்டேன்.”
ஃப்ராடு. பொய் சொல்றான். நாலு பாட்டில் பெருந்தொகையை அடித்து விட்டு போலீஸ் ரெய்டு என்று அளக்கிறான்.

அவனை உடனே விட்டு விடவில்லை. குடிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்கு குடி மக்கள் பாண்டியை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
”நான் தான் சொல்றனுல்லங்க.. ரெய்டு.. சிக்கக்கூடாதுன்னு பாலத்தில இருந்து வீசிட்டேன். சிக்கியிருந்தா இன்னேரம் உள்ள இருப்பேன்.”

சர்புவின் குடிகார நண்பர் ஒருவர் அவனை அடிக்காமல், அவன் சட்டை பட்டன ஒவ்வொன்னா கழட்டி, கவனமா மிரட்டி, (கவனமில்லாம மிரட்டினா பாண்டி எகிறிடுவான்.குறுக்க திரும்பிடுவான்.)
கொஞ்ச நேரத்தில உண்மைய ஒத்துக்கிட்டான்.

’ரெய்டுல்லாம் ஒன்னும் இல்ல.  நான் தான் பொய் சொன்னேன். வீட்டுல அரிசி இல்ல.’

”அரிசி இல்லன்னா இவ்வளவு பெரிய தொகைய ஆட்டய போடலாமாடா?”
……………………….

’பாண்டி கல்லுளி மங்கனாச்சே. எப்படியா அவன் கிட்ட இருந்து உண்மைய கறந்தீங்க.’

இது மாதிரி சூழலில் சர்புவின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த interrogation பற்றிய சர்புவின் விவரிப்பு.

சர்பு பெருந்தோரணையுடன் “ The seriousity of the situation was so dangerable. சிவளை தான் அவன விசாரிச்சான்.

சிவளை : What are you?

பாண்டி : எங்கப்பா பேரு கண்ணுசாமிங்க. என் ஊரு வடுக பட்டிங்க.

சிவளை : Where are you?

பாண்டி : எடுபிடி வேலை எதுனாலும் செய்வேங்க. வீட்டுக்கு வெள்ள அடிப்பேன். காட்டு வேல எதுனாலும் கிடைச்சா செய்வேன்.

சிவளை: Why are you??
பாண்டி: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க. பொண்ணு கிடைக்கலீங்க.

சிவளை : Who are you?

பாண்டி: தாமரைக்குளத்தில தாங்க சாராயம் வாங்கினேன்.

சிவளை: When are you?

பாண்டி : சத்தியமா நான் நல்லவன் தாங்க. காச்சிற இடத்தில கொஞ்சமா குடிச்சேங்க.

சிவளை: ’Which’ are you?????

பாண்டி : தெரியாம பண்ணிட்டேங்க. மன்னிச்சிக்கங்கங்க..

பாண்டி கால்ல விழுந்துட்டான்.
ரெண்டு விரல அவன் கடவாய்க்குள்ள சிவள விட்டான். பய உண்மைய கக்கிட்டான்."
……………………………

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post.html

Jun 12, 2017

எடடா!


ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.

பாரதிதாசனுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு ஈ கிடந்திருக்கிறது. எல்லோரும் பதற்றமாகியிருக்கிறார்கள்.
பாரதி தாசன் அந்த ஈயை தூக்கி போட்டு விட்டு சாப்பிட்டிருக்கிறார்.


”என்னய்யா? கோழி, ஆடு, மீனுன்னு என்னன்னமோ சாப்பிடுறோம்.
ஒரு ஈ உணவில் கிடந்தால் என்ன கெட்டுப்போய் விட்டது?” என்றாராம்.


……………………………அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா (பின்னாளில் இவர் கல்லூரி முதல்வராய் இருந்தார்) தமிழ் வகுப்பில்
“ கொலை வாளினை எடடா! கொலை வாளினை எடடா......!
கொலை வாளினை எடடா!
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா!”
என்று உணர்ச்சிகரமாக பாரதி தாசன் கவிதையை சொன்ன போது
நான் வயதின் துடுக்குத்தனத்தோடு சொன்னேன் : “ஐயா! டா போடாதீங்க.. எடடான்னு. கொஞ்சம் மரியாதையா கொலை வாளினை எடுங்கன்னு சொல்லுங்க..”


……………………….

"எண்ணம் தானே கொப்பளிக்கிறதா, இல்லை நான் கல் விட்டெறிகிறேனா என்பதிலேயே தெளிவில்லை என்னத்தைச் சொல்ல" – பாதசாரி

.................................

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/04/blog-post_19.html

 

Jun 11, 2017

கொண்டாடி கொடமுடைச்சி………


ஊரும் உலகமும் சேர்ந்து ஒருவரை புனிதர் ஆக்கி கொண்டாடி கொடமுடைச்சி………
Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving.
- Shakespeare in ‘Othello’

திருச்சி செயிண்ட் ஜோசப்ஸில் எழுத்தாளர் சுஜாதாவின் க்ளாஸ்மேட் தான் அப்துல் கலாம்.

கலாமின் புகழ் அவர் தகுதிக்கு ரொம்ப அதிகம் என்பதாக சுஜாதாவே அவருடைய பாணியில் மேலோட்டமாக, கொஞ்சம் பூடகமாக ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். ’மிகையான புகழ்’.அப்போதும் அதை எவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சகா பற்றிய புகைச்சல், பொறாமை என்று நினைத்தவர்கள் கூட இருந்திருக்கலாம் தான்.
......


“மறுதுறை மூட்டம்” நூலில் நாகார்ஜுனன் சொல்வது:

” தமிழ் நாட்டில் பிறந்து எஞ்ஜினியரான ஒருவர் இந்திய அரசின் ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபட்டபோது, அவர் செல்லும் திசையை ’அக்னி’ பற்றிய என் கட்டுரையில் கணித்து எழுதினேன். அணுகுண்டு பரிசோதனை நடத்தியதில் பங்கேற்ற ஒரு technician என்ற நிலையில் இருந்த அவரை எல்லோரும் விஞ்ஞானியாக்கி விட்டார்கள்! இப்படி அவர் குடியரசுத் தலைவராகவே மாறினார். ஓய்வு பெற்றும் அணுமின்சக்தி வேண்டுமென்று சாகும்வரை பிரச்சாரம் செய்தார். தமிழ்நாட்டில் உள்ளவை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் அவர் ஹீரோ….இப்போது கடற்கரைச் சாலை ம்யூஸியத்தில் பங்கேற்கப் போகிறார். சில வேளையில் அவரைப் பார்த்த போது ஜெர்மனியின் Pied piper of Hamlin கதை வேறு நினைவில் வந்து தொலைத்தது…”

 (1.the hero of a German folk legend, popularized in The Pied Piper of Hamelin (1842) by Robert Browning. 2. (sometimes lowercase) a person who induces others to follow or imitate him or her, especially by means of false or extravagant promises.)


“ஊடக உலகில் உச்சமான பிபிஸியில் சேர்ந்து இயங்கிய நான் அதிலிருந்தும் விலகி, பிறகு சொந்த வலைப்பதிவைத் தொடங்கி அதையும் நிறுத்தி விட்டேன். மற்றவர்களுக்கோ ஊடக உலகுக்குள் நுழைய இன்று போட்டா போட்டி. நுழைய முடியாதவர்களுக்கு இருக்கிறது வலைப்பதிவும் முக-நூலும்,ட்விட்டரும்.. இவை தரும் பிரபல்யத்தில் தமிழ் எழுத்தாளர்கள் வரை இப்போது முழுமையாக மூழ்கி விட்டார்கள்….”


............................................................

http://rprajanayahem.blogspot.in/2014/08/blog-post.html


Jun 6, 2017

வெள்ளி தாம்பாளம்ஆறுமுகம் செட்டியார் தயாரிப்பாளர்.
பி.ஆர்.சோமு இயக்குனர்.
’தேவன் கோவில் மணியோசை’ – இந்தப்பெயரில் ஒரு படத்தை எடுப்பதாக முடிவு செய்யப்பட்டது.


பி.ஆர்.சோமு கதை சொல்வது பிரமாதமாக இருக்கும்.
படம் எப்படி உருவாகிறது என்பது வேறு விஷயம். கதை சோமு மாதிரி சொல்ல முடியாது. The only director who delivered his story with re-recording music effect.
சோமு கதை சொன்னா கடன் வாங்கி படம் எடுப்பாங்க.

பி.ஆர்.சோமு அழகா பேசுவார்.அளவுக்கு அதிகமாவும் பேசுவார்.

அந்த நேரத்தில் தெய்வ சங்கல்பம், உயிர், எங்கள் குலதெய்வம் போன்ற படங்கள் அவர் இயக்கத்தில் வந்திருந்தன. எல்லாப்படத்திலும் முத்துராமன் நடித்தார். தெய்வ சங்கல்பத்தில் ஏ.வி.எம் ராஜனும் நடித்திருந்தார்.

சோமு தீவிர சிவாஜி ரசிகர். அதனால் சிவாஜியை வைத்து ஒரு படம் இயக்க முடியாதா என்ற தவிப்பில் இருந்தவர்.

சிவாஜி  ’தேவன் கோவில் மணியோசை’ கதாநாயகன்!
கொஞ்சம் டல்லாய் இருந்த அவருடைய மார்க்கெட் ’தீபம்’ படம் ரிலீசான பின்  சம்பளம் அப்போது ஏழு லட்சமாக உயர்ந்திருந்தது.

அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும்.
யார் சொன்ன ஐடியாவோ? எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு லட்ச ரூபாயை கௌரவமாக கொடுக்க வேண்டும்.
கனமான பெரிய வெள்ளி தாம்பாளம் வாங்கியிருக்கிறார் ஆறுமுகம் செட்டியார்.

ஒரு பொருளை தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்தால் பொருளை எடுத்துக்கொண்டு தாம்பாளம் திருப்பிக்கொடுக்கப்படும்.

சிவாஜி வீட்டிற்கு போய் ஆறுமுகம் செட்டியாரும், பி.ஆர்.சோமுவும் லட்ச ரூபாயை அந்த வெள்ளித்தட்டில் வைத்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷமாக சிங்கத்தமிழன் பெற்றுக்கொண்டார்.

பணத்தோடு வெள்ளித்தட்டும் உள்ளே போய்விட்டது.
பணத்தை எண்ணிப்பார்த்து எடுத்துக் கொண்ட பின் தாம்பாளம் திருப்பித்தரப்படுமாக்கும் என்று எட்டி, எட்டிப்பார்த்திருக்கிறார்கள்.
தாம்பாளம் திரும்பி வரவில்லை. விடை கொடுக்கப்பட்டு தயாரிப்பாளரும், இயக்குனரும் கிளம்ப வேண்டியிருந்தது.

அப்போதைக்கு சிவாஜி கணேசனை வைத்துப் படம் பண்ணப்போகிற சந்தோஷம் போதுமானதாயிருந்தது.

ஜெயலலிதா கதாநாயகியாக புக் செய்யப்பட்டார்.

’உயிர்’ படத்தின் இசையமைப்பாளர் ரமணாஸ்ரீதர் எனப்படும் விஜய்ரமணி தான் ’தேவன் கோவில் மணியோசை’ இசையமைப்பாளர். இவரும் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகராயிருந்தவர். பின்னால் வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, விக்ரம் போன்ற படங்களில் இவர் ராகவேந்தர் என்ற பெயரில் நடிகராக பிரபலமானார்.

’தேவன் கோவில் மணியோசை’படம் ஒரு ஷெட்யூலோடு நின்றது. நின்றது நின்றே விட்டது.
 ஏதோதோ காரணம். சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் மனஸ்தாபம் என்றும் சொல்லப்பட்டது.

சோமு உடனே ஆறுமுகம் செட்டியாரை சமாதானப்படுத்தி இன்னொரு கதை பிரமாதமாக சொல்லி சின்ன பட்ஜெட்டில்
“நினைவில் ஒரு மலர்” படம் பூஜை. முத்துராமன், ரவிச்சந்திரன், சுமித்ரா, சுருளிராஜன், என்னத்தை கன்னையா நடிக்க, கிட்டத்தட்ட முழு படமும் முடிவடைந்த நிலையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் யாரும் வாங்கத் தயாராக இல்லாத நிலை. படம் வெளி வரவேயில்லை.

ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ’ அழைத்தால் வருவேன்’ படத்தை இயக்கிக் கொண்டிருந்த பி.ஆர் சோமுவை பார்க்க கவலை தோய்ந்த முகத்துடன், கவலை தோய்ந்த என்ன, பேய் அறைந்தாற் போல ஆறுமுகம் செட்டியார் வரும்போதெல்லாம் தாம்பாளமும் கை விட்டுப் போய் விட்ட சோகத்தை டைரக்டரே ஞாபகப்படுத்துவார்.

”சாதாரண தாம்பாளத்தில லெட்ச ரூபாய வச்சு கொடுத்திருக்கலாம். தப்பு பண்ணிட்டோம்.”
..............................................................

http://rprajanayahem.blogspot.in/2012/03/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/herculean-task.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_22.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_26.html

http://rprajanayahem.blogspot.in/2012/12/taste-differs.html

http://rprajanayahem.blogspot.in/2009/02/over-action.html

http://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_18.html
Calculated indecision


’புனிதமான பொது வாழ்வு’ என்று ஒரு வார்த்தை கொஞ்ச காலம் முன் கேட்ட நினைவிருக்கிறதா?

சசிகலாவின் குரலை நாமெல்லாம் முதல் முதலாக கேட்டோமே. அப்போது சசிகலா சொன்ன வார்த்தை! ‘ ஒரு புனிதமான பொது வாழ்வை நாம் மேற்கொள்வோம்.’

சிறையிலிருந்து மீண்ட தினகரனுக்கு எதிராக ஆளும் கட்சி மந்திரிகள் சண்டித்தனம்.
தினகரன் பெங்களூர் போய் சித்தியை சந்தித்து விட்டு வாய் மலர்ந்திருப்பது. “இன்னும் அறுபது நாள் பொறுத்திருந்து பார்ப்பேன்.”

Calculated indecision! When you make up your mind, you are full of calculated indecision!

ரெண்டு மாசம் உருட்டுற பணத்தை உருட்டுனா, மிரட்டுற வகையில மிரட்டுனா என்னென்னவோ, எவ்வளவோ சாதிக்க முடியுமே!


அதிமுக ஆட்சி கவிழ்வதில் சுணக்கம் தொடர்கிறது.

ஒவ்வொரு கட்சியின் தலைவர் மீதும் அந்தந்த கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஒரு புல்லரிப்பு, செடியரிப்பு, மரமரிப்பு இருக்கிறது.
அதிமுகவில் இன்று இதிலும் ஒரு மூன்று பிரிவாக பல்கி பெருகியுள்ளது.

இரண்டாம் கட்ட தலைவர்களின் புல்லரிப்பு வேஷம் நிறைந்தது. சுய நலம், தந்திரக்கணக்கு கொண்டது. எந்த நேரமும் பல்டியடிக்க தயாரான நிலையில் இருக்கக்கூடியது.

இந்தியாவில் எந்த சுகமும் காணாமல் கட்சித்தொண்டர்கள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள் என்று இருப்பது போல வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு lunatic fanaticism உண்டா!

.............................................

http://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html

http://rprajanayahem.blogspot.in/…/confusions-masterpiece.h…

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2017/02/1972-10.html

http://rprajanayahem.blogspot.in/2017/02/blog-post_18.html

Jun 2, 2017

Mixture


ஒரு படத்தில் என்னுடன் இருந்த சக உதவி இயக்குனர் ஒருவன் சொன்ன வார்த்தைகள்: ”வீட்டில இருந்து மாசாமாசம் எனக்கு பணம் அனுப்புறோம்னு சொன்னாங்க. நான் வேண்டாம்னுட்டேன்.
நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்.


நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்???
ம்… spend பண்ணா loss வரத்தானே செய்யும்!

சொந்தக்கால்ல நின்னுக்கிறேன்னு சொல்லிட்டானாம்!

.................................


இயற்கை சீற்றமோ, நெருப்போ, தாஸ்மாக் தாய்மார்கள் போராட்டமோ, கிளர்ச்சி, குடிதண்ணீருக்கான மறியலா எதுவாக இருந்தாலும், சோகமாக, கோபாவேசமாக பேசும் பெண்கள், ஆண்கள் பக்கத்தில் நின்று, சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து
டி.வி.யில் வீடியோ கேமராவை பார்த்து, கண்கள் மலர சிரிக்கும் சிறுவர்கள், சிறுமிகள்! இந்த குழந்தைகளை பார்ப்பது  காட்சி இன்பம்.

.....................


தெருவில் உள்ள டாங்க்கில் ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய். ஒரு வாட்டர் கேனில் தண்ணீர் பிடிக்க இரண்டு ரூபாய்.
ரொம்ப சுலபமாய் தெரிகிறது. ஆனால் என் வீடு இரண்டாவது மாடியில்.

எப்படியாவது புழக்கத்திற்கு தண்ணீர் வேண்டும். வேறு வழியே இல்லை.தினம் பத்து குடம் பிடித்துக்கொடுத்தால் ஐம்பது ரூபாய் கொடுத்து விடக்கூடத்தயாராகி விட்ட நிலை.
பக்கத்தில் உள்ள வேலை செய்கிற பெண்ணிடம் எடுத்துத்தரமுடியுமா? என்று விசாரித்ததில் தினம் ஐந்து குடத்திற்கு மாதம் ரூபாய் மூவாயிரம் வேண்டுமாம்.
ஏழை குசும்பு.


லோயர் மிடில் க்ளாஸ் வாழ்க்கை தான் இனி பரிதாபமானது. வீடு தேடினாலும் சிக்கல். நிர்ப்பந்தமாக வேலைக்கு ஆள் தேவைப்பட்டாலும் கிடையாது.

.....................................................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_31.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_26.html