Share

Showing posts with label கக்கன். Show all posts
Showing posts with label கக்கன். Show all posts

Sep 23, 2018

நடராஜ மூர்த்தி


மனநோய் என்பது எவ்வளவு கொடுமையானது. சமூகத்திலும் குடும்பத்திலும் இவர்களுக்கு எந்த கருணையும் கிடைப்பதில்லை. நோயாளிக்கு பச்சாத்தாபம் குடும்பத்தினரிடம் உண்டு. மனநோயாளிக்கு அடியும் மிதியும் இல்லாமல் போவது அபூர்வம். ஒரு குடும்பத்தில் ஒரு மனநோயாளி இருந்தால் பெரு நரகமாக மற்றவர்களின் வாழ்க்கை மாறிப்போகும். இது ஒரு Social Stigma என்பதாக பாவிக்க வேண்டி நேர்கிறது. மனநோயாளியால் அக்கம்பக்கத்தாரிடம் ஏற்படும் முகச்சுளிப்பு குடும்ப உறுப்பினர்களை முறித்துப் போட்டு விடும்.
அசோகமித்திரனின் மூத்த சகோதரி ஒருவர் மனநோயாளியாக இருந்ததால் அவர் அனுபவித்த வியாகூலம் சொல்லி முடியாது.
மனநோயாளியின் மரணம் எப்போதும் குடும்பத்தாரை நிம்மதியடையச்செய்கிறது.
நடராஜ மூர்த்தி என்பவர் ஒரு டாக்டர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தவர். அப்போது சென்னை துறைமுகத்தில் தற்காலிக வேலை கிடைத்திருந்திருக்கிறது. ஆனால் ஆறே மாதத்தில் வேலையை விட்டு விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தார் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சேர்த்து விட்டார்கள்.
2014ம் ஆண்டு ஒரு செய்தி பத்திரிக்கையில் நடராஜ மூர்த்தி பற்றிய செய்தியொன்றில் அப்போது 25 ஆண்டுகளாக மன நல காப்பகமே இவரது நிரந்தர இருப்பிடமாகி விட்ட சோகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். அவரோடு பிறந்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தாலும் இவரை பற்றிய அக்கறை, ஆதரவு எதுவும் தரத்தயாராய் இல்லாதவர்களாக அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
பெற்றோருக்கு ஐந்து மகன்கள். நடராஜ மூர்த்தி தான் கடைக்குட்டி.
நான்கு வருடங்களுக்கு முன், ஐம்பத்தெட்டு வயதாகியிருந்த நடராஜ மூர்த்தி நிருபரிடம் சொல்லியிருக்கிறார் : ”என் அம்மா சுவர்ணம் பார்வதி என்னை எப்படி பார்த்துக்கிட்டாங்க! அவர் இருந்திருந்தா, என் நிலையே வேற மாதிரி இருந்து இருக்கும்.”
இப்போதும் இவர் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் தான் இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா?
நடராஜ மூர்த்தியின் அப்பா பிரபலமான ஒரு அரசியல் வாதி. நேர்மைக்கும், தூய்மைக்கும் இவரைத்தான் உதாரணமாக சொல்வார்கள். தமிழகத்தில் அமைச்சராய் இருந்தவர். காங்கிரஸ்காரர்களுக்கு இவர் மூலதனமாக ஆகி விட்டவர். ’எங்கள் கட்சிக்காரராக்கும்’ என்று மார் தட்டிக்கொள்வார்கள்.
ஆம், கக்கன் பெற்ற மகன் தான் நடராஜ மூர்த்தி.


https://rprajanayahem.blogspot.com/2009/03/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post.html

புகைப்படத்தில் இருப்பது ராஜநாயஹம்