Share

Showing posts with label தஞ்சை ப்ரகாஷ். Show all posts
Showing posts with label தஞ்சை ப்ரகாஷ். Show all posts

Apr 3, 2021

தஞ்சை ப்ரகாஷ் என்ற அற்புத ஆளுமை

 தஞ்சை ப்ரகாஷ் என்ற அற்புத ஆளுமை 

- R.P. ராஜநாயஹம் 

'பொறா ஷோக்கு' தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை. 

ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா. 

ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'. 

மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட சேத்து விடுறா. 

காலம் தான் என்னமாக ப்ரகாஷ் கைவண்ணத்தில் ஓவியமாக தீற்றப்பட்டு விடுகிறது. 

பல பிள்ளைகளை பெற்று விட்ட ஷம்ஷாத்தும், எலிசும் பருவ வயது மகள்களின் வாழ்வை எத்தகைய வசதியான பெரிசுகளான காசீமோடும், சாளியோடும் இணைத்து இயல்பாய் தீர்வு காண்கிறார்கள். 

'மிஷன் தெரு ' குறுநாவல் காட்டும் சரித்திர காலம். 

எஸ்தர் இதில் லாசரஸை மணமுடிக்கும் நிர்ப்பந்தம். 

எஸ்தர் தன் பருவத்தில் காணும் வெள்ளைக்காரன் ஸ்டோன் துரை, மற்றும் காதலன் வில்லி, 

மஸ்தானோடு ஓடிப்போகும் ஜைத்தூன்,

பாண்டிப்பயலோடு கல்லறைத் தோட்டத்தில் படுக்கும் லிடியா. 

காசீம், சாளி, சேடிஸ்ட் லாசரஸ் மூவரும் அந்த குமருகளின் அந்தரங்கத்தை அறிந்த பின்னரே பெண்டாள்கிறார்கள். 

தஞ்சை ப்ரகாஷ் என்ற அதி மானிடனை நான் முதன் முதலாக கி. ரா மூலமே அறிந்தேன். 

சந்தித்த உடனேயே நான் தி. ஜானகிராமனுக்கு வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டினார். "சரியான நேரத்தில செஞ்சீங்க" 

கி. ரா. வுடைய கன்னிமை, அம்பையின் 'சிறகுகள் முறியும்', க. நா. சு. வோட 'பித்தப்பூ' எல்லாத்துக்கும் ப்ரகாஷ் தான் பப்ளிஷர். 

அந்த புத்தகங்கள் என்னிடம் இருந்ததால் அவரை பல காலமாக அறிந்திருந்தேன். 

அப்புறம் கி. ரா வருகை தரு பேராசிரியராக புதுவை பல்கலை கழகத்தில் நடத்திய' நாட்டுப் புறக்கதைகள் ' பற்றிய கருத்தரங்கத்தில். 

ப்ரகாஷ் அதில் ஒரு கட்டுரை வாசித்தார்.

அங்கே கி. ரா. பற்றி என்னிடம் ப்ரகாஷ் கரிசனத்துடன் சொன்னார் : " நைனா மெலிஞ்சிட்டார். சுகர் அவர படுத்துது." 

மூன்றாவதாக அவரை 

டாக்டர் ச.வீரப்பிள்ளை வீட்டில் 

அசோகமித்திரன் படைப்புகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வில். 

அவரைப் பற்றி ஒரு தெளிவான நினைவு என்னில் இன்றும் உண்டு. எப்பேர்ப்பட்ட ஆளுமை. 

இன்னும் அதிகமாக அவரோடு பழகி நட்பு பாராட்ட முடியாம‌ல் போனது துரதிருஷ்டம். 

அதனாலென்ன. அவருடைய படைப்புகள் இருக்கின்றன. எஞ்சிய என் காலத்தில் அவரோடு உரையாட அவை போதும்.

"தஞ்சை பிரகாஷ் பற்றி  நான் நினைத்து வியக்காத நாளே கிடையாது. நிஷ்காம்ய கர்மம் என்று ஒன்று சொல்வார்கள். அப்பதத்துக்கு எனக்கு அவரைத்தான் நினைக்கத் தோன்றுகிறது" - அசோகமித்திரன் கணையாழியில் 2000 ஆண்டு ஜனவரியில் இப்படி எழுதினார்.

https://m.facebook.com/story.php?story_fbid=3027628227450623&id=100006104256328

.......

Apr 19, 2020

தஞ்சை ப்ரகாஷ் பதிப்புரை

கிரா கன்னிமை, அம்பை சிறகுகள் முறியும் போன்றவை தஞ்சை ப்ரகாஷ் பதிப்பித்தவை.

ப்ரகாஷ் பிரசுரித்த க. நா. சு. வின் 'பித்தப்பூ'
நாவலுக்கு ஒரு பதிப்புரை எழுதியிருந்தார்.
 இதில் அவர் வாசகனை மிரட்டுகிறார் என்று அந்த காலத்தில் கிண்டலும் ஏளனமுமாக இலக்கிய பத்திரிக்கையிலேயே எழுதப்பட்டிருக்கிறது.

ப்ரகாஷ் பதிப்புரையை படித்துப் பார்த்தால் அவருடைய பரிதவிப்பு, ஆதங்கம், உன்னத நோக்கம் சார்ந்த துயரம் தான் காணக்கிடைக்கும்.

நேரில் அவர் வாய் விட்டு சொல்லாத தன் போராட்டமான முன்னெடுப்புகளைப் பற்றிய Tormentation.

" நல்ல ஒரு வாசகனைத் தேடியடையும் இன்பத்துக்காகவே நான் பதிப்பாளனானேன்.

மனிதர்களிடம் மனிதனைத் தேடுவது அத்தனை சுலபமாயில்லை.

நல்ல புஸ்தகங்களை வாசகர்களுக்குத் தேடித்தர பல ஆண்டுகளாய் முயன்று வருகிறேன். ஆனால் உருப்படியான தொழிலாய் வெற்றியாய் இதுவரை வாழ முடியவில்லை என்பது தான் கண்ட பலன்.

நல்ல பதிப்பாளர்கள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். (என்னையும் சேர்த்து தான்.)
நல்ல படைப்பாளிகள் இனியும் படைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.
நீங்கள் யாருமே ஆதரிக்காவிட்டாலும் கூட
இவை நிகழ்ந்து எரிந்து கொண்டே தானிருக்கும்.

விமர்சகராகிய க. நா. சு. வுக்கு விமர்சகரில்லை.

புதுமைப்பித்தன் எழுதினார் - ' தமிழ் இலக்கிய உலகம் பாரிச வாதமும், பக்க வாதமும் போட்டலையும் அவதி'

விற்பனை சாத்தியமற்ற சூழலில் வியாபாரம் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாய்ப் பணம் கொடுத்து வாங்க தமிழில் இருநூறு பேர் கூட இல்லை.

க. நா. சு வின் இந்த புதிய நாவல் 'பித்தப்பூ' வை நீங்கள் ரசித்து படிக்க வேண்டும். நிறைய சிந்தித்து நாலுபேருக்கும் சொல்ல வேண்டும்.
நான் வெளியிட்ட வெளியீடு வெற்றி பெற வேண்டும்.

மேலும் நல்ல புது இலக்கியங்களை வாழும் காலத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்ய எனக்கு வாசகரின் துணை வேண்டும்.

பதிப்பாளன் என்கிற என் வாழ்வின் தளம் அத்தனை சுகமானதோ, சுலபமானதோ அல்ல. "

ப்ரகாஷின் மேற்கண்ட பதிப்புரை மற்றுமொருமுறை இப்போது படித்த
என்னை வெகு நேரம்
 செயலோயச் செய்து விட்டது.

....

1990ல் நான் புதுவையில் இருந்த போது
பல்கலைக்கழக துணைவேந்தர் வேங்கட சுப்ரமணியம் 'பித்தப்பூ' நாவலை படிக்க எண்ணி முயன்றிருக்கிறார். கிடைக்கவில்லை. 1987ல் வெளிவந்த நாவல்.
இந்திரா பார்த்தசாரதி வீட்டிற்கே போய் உரிமையுடன் "பித்தப்பூ நாவல எடுங்க" என்று வலது கையை நீட்டியிருக்கிறார்.
இ.பா சொன்னாராம் " பித்தப்பூ என்னிடம் இல்லையே..
உங்க எதிர் விட்டில தான் ராஜநாயஹம் இருக்கிறாரே.
கையில வெண்ணெயை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையிறீங்களே."

வீட்டிற்கு வந்தவுடன் துணை வேந்தர்
எனக்கு
ஒரு கடிதம், பித்தப்பூ கேட்டு

'அன்பு மிக்க அறிஞர் ராஜநாயஹம் ' என்று விளித்து

நான் வந்த அட்டெண்டரிடம் பித்தப்பூவோடு
 ஒரு பதில் கடிதம் ரெண்டு பேரா எழுதி கொடுத்தனுப்பினேன்.
' என்னைப் போய் அறிஞர் என்கிறீர்களே '

இன்னொரு கடிதம் சுடச்சுட எழுதி கொடுத்தனுப்பினார்.

"ராஜநாயஹம், அறிந்தவர் அறிஞர். நீங்கள் அறிஞர் என்பதற்கு உங்கள் கடிதமே சாட்சி.
சரி, துணை வேந்தர் தானே பட்டம் கொடுக்க முடியும்? "

அவர் படித்து விட்டு திருப்பித் தந்த பித்தப்பூ
 என் கையில் இதோ இருக்கிறது.

முன்னாள் துணை வேந்தர் வேங்கடசுப்ரமணியனும் இப்போது இல்லை.
பதிப்பித்த ப்ரகாஷும் இல்லை.

Apr 12, 2020

தஞ்சை ப்ரகாஷ் மிஷன் தெரு மன்னார்குடி

நான் மன்னார்குடியை பார்த்ததேயில்லை.

அரசியல் காரணங்களுக்காக 'மன்னார்குடி'
பல முறை உச்சரிக்கப்பட்டும், எழுதப்பட்ட வார்த்தையாகவும் இருந்திருக்கிறது.

தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி கிராமம்
மன்னார்குடி அருகில் உள்ளதாம்.

மன்னார்குடி என்றால்
அ.மார்க்ஸ் ஞாபகமும் வரும்.

'மிஷன் தெரு' குறுநாவலில் தஞ்சை ப்ரகாஷ் மன்னார்குடி பற்றி சொல்வது நூறு வருஷத்திற்கு முந்தைய ஊர்.

"எங்கு பார்த்தாலும் குளங்களும், ஏரிகளும்,
பசுமை யான வயல்களும், தோப்புகளும், துறவுகளுமாய் மனத்திற்கு இன்பமான அற்புத பூமியாய் மன்னார்குடி இருந்தது. "

" தீவுப்பிரதேசம் போல் மன்னார்குடி.
 அறுபது குளங்களின் நடுவில் ஊர்.
எப்படிப் போனாலும் எதிர் படும் ஒரு குளம். "

தஞ்சை ப்ரகாஷ் பற்றி என் ஞாபக அடுக்குகளை சிக்கெடுத்து பார்க்கும் போது தன் இலக்கிய செயல் பாடு பற்றி, எழுத்து பற்றி எதுவுமே பேசியதில்லை.
'என் எழுத்து படிச்சிருக்கீங்களா? விகடன்ல என் கதை.. சுப மங்களாவில நான் எழுதின கதை..' இப்படி அவர் எதுவுமே பேசியதில்லை.

'இப்ப ஒரு நாவல்
எழுதிக்கிட்டிருக்கேன் 'ன்னெல்லாம் மூச்சு கூட விட்டதேயில்லை'

பதிப்பாளராக அவருடைய போராட்டங்கள் பற்றியும் புலம்பியதில்லை.

பிரபஞ்சனை இலக்கியம் எழுத்து என்று ஆளாக்கியவர் ப்ரகாஷ் என்பதை பிரபஞ்சன் புதுவையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

வேறு யாராயிருந்தாலும் " நம்ம பய தாங்க  பிரபஞ்சன்" என்று பீற்றியிருப்பார்.
ஆனால் ப்ரகாஷ் அப்படி ஒரு வார்த்தையும் சொன்னதில்லை.

அந்த ஆஜானுபாகுவான மனிதரின்
 இந்த இயல்பு காணக்கிடைக்காதது.

Apr 3, 2020

தஞ்சை ப்ரகாஷ்

'பொறா ஷோக்கு' தஞ்சை ப்ரகாஷ் சிறுகதை.
ஷம்ஷாத் பேகம் தன் மகள் 17 வயசு ஜைத்தூனை காசீம் மொகைதீன் ராவுத்தரோட கோர்த்து விடுறா.

ப்ரகாஷூடைய இன்னொரு கதை 'அங்கிள்'.
மிஷன் தெரு எலிசு தன் மகள் லிடியாவை சாமி பிள்ளையோட சேத்து விடுறா.

காலம் தான் என்னமாக ப்ரகாஷ் கைவண்ணத்தில் ஓவியமாக தீற்றப்பட்டு விடுகிறது.

பல பிள்ளைகளை பெற்று விட்ட ஷம்ஷாத்தும், எலிசும் பருவ வயது மகள்களின் வாழ்வை எத்தகைய வசதியான பெரிசுகளான காசீமோடும், சாளியோடும் இணைத்து இயல்பாய் தீர்வு காண்கிறார்கள்.

'மிஷன் தெரு ' குறுநாவல் காட்டும் சரித்திர காலம்.
எஸ்தர் இதில் லாசரஸை மணமுடிக்கும் நிர்ப்பந்தம்.

எஸ்தர் தன் பருவத்தில் காணும் வெள்ளைக்காரன் ஸ்டோன் துரை, மற்றும் காதலன் வில்லி,

மஸ்தானோடு ஓடிப்போகும் ஜைத்தூன்,

பாண்டிப்பயலோடு கல்லறைத் தோட்டத்தில் படுக்கும் லிடியா.

காசீம், சாளி, சேடிஸ்ட் லாசரஸ் மூவரும் அந்த குமருகளின் அந்தரங்கத்தை அறிந்த பின்னரே பெண்டாள்கிறார்கள்.

தஞ்சை ப்ரகாஷ் என்ற அதி மானிடனை நான் முதன் முதலாக கி. ரா மூலமே அறிந்தேன்.
சந்தித்த உடனேயே நான் தி. ஜானகிராமனுக்கு வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலுக்காக பாராட்டினார். "சரியான நேரத்தில செஞ்சீங்க"

கி. ரா. வுடைய கன்னிமை, அம்பையின் 'சிறகுகள் முறியும்',  க. நா. சு. வோட 'பித்தப்பூ' எல்லாத்துக்கும் ப்ரகாஷ் தான் பப்ளிஷர்.
அந்த புத்தகங்கள் என்னிடம் இருந்ததால் அவரை பல காலமாக அறிந்திருந்தேன்.

அப்புறம் கி. ரா வருகை தரு பேராசிரியராக புதுவை பல்கலை கழகத்தில் நடத்திய' நாட்டுப் புறக்கதைகள் ' பற்றிய கருத்தரங்கத்தில்.
ப்ரகாஷ் அதில் ஒரு கட்டுரை வாசித்தார்.
அங்கே கி. ரா. பற்றி என்னிடம் ப்ரகாஷ் கரிசனத்துடன் சொன்னார் :" நைனா மெலிஞ்சிட்டார். சுகர் அவர படுத்துது. "