Share

Aug 20, 2012

நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன்
நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர்.டி.ஆர் மஹாலிங்கம்,சிவாஜி கணேசன் மாதிரி,பின்னால் வந்த ஜெய்சங்கர் மாதிரி திரையில் முதல் படத்திலேயே கதாநாயக அந்தஸ்து பெற்றவர் அல்ல.எஸ்.எஸ்.ஆர் மாதிரி,ஏ.வி.எம் ராஜன் போல,ஸ்பெஷல் அறிமுகமாக ரவிச்சந்திரன் நுழைந்தது போல செகண்ட் ஹீரோ அந்தஸ்தில் அறிமுகமானவரும் அல்ல.படித்த நடிகர் ஜெமினி கணேசன் போல சொற்ப காலம் சில படங்களில் சின்ன ரோல் செய்து விட்டு கதாநாயகன் ஆனவர் அல்ல எம்.ஜி.ஆர். சிவகுமார் போல சற்று கௌவரமான சிறுபாத்திரங்களில் நடித்து ( அப்படி சிறு பாத்திரங்கள் செய்யும்போதே ‘தாயே உனக்காக’ படத்தில் கதாநாயகனாகவும்,கந்தன் கருணையில் டைட்டில் ரோலிலும் நடித்தவர் சிவகுமார்!சிவாஜி இந்தப்பாட்டில் நடித்திருந்தால் காட்சி சிறப்பாய் இருந்திருக்குமே என்று ரசிகர்களை அங்கலாய்க்கச்செய்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் பிரபலமான ’என் கேள்விக்கென்ன பதில்’பாடல் கூட சிவகுமாருக்கு கிடைத்தது.  )பின் கதாநாயகனாக உயர்ந்தவரும் அல்ல.

எம்.ஜி.ஆர் போராட்டம் நீண்டது.கதாநாயகனான பின் எம்.ஜி.ராம்சந்தர் என்றே ஆரம்ப கால வெற்றிப் படங்களில் அவர் பெயர் டைட்டிலில் வரும்.மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி வெற்றிகளுக்குப் பின் கூட அவருக்கு எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்தது.இந்த சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல 1952ல் சிவாஜியின் புயல் பிரவேசம் பராசக்தி மூலம்.1953ல் ஜெமினியின் மனம்போல்மாங்கல்யம்.மும்முனைப்போட்டி ஆரம்பம்.


சிவாஜியின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் 1950,60களில் இருவர். எம்.ஜி.ஆரும் ஜெமினிகணேசனும். 1950களில் எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெமினி என்றுமூவேந்தர் தோற்றம் கொண்ட சினிமா பின் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு திலகங்களிடம் மையம் கொண்டுவிட்டது.

 சிவாஜிக்கு செகண்ட் ஹீரோவாக ஜெமினி ’பெண்ணின் பெருமை’யில் துவங்கி (கதாநாயகனாகவும் வெள்ளிவிழா நாயகனாகவும் ஜ்வலித்த காலத்திலேயே) கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன் அதோடு பீம்சிங்கின் பதிபக்தி, பாசமலர்,பந்தபாசம்,ஏ,பி.என் படங்கள் சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் இன்னும் இன்னும்  பல படங்களில் நடிக்கும்போதே எம்.ஜி.ஆர் வருத்தப்பட்டு “ஜெமினி இப்படி தனித்தன்மையை விட்டுத்தருகிறாரே” என வருத்தப்பட்டார். ஜெமினி வல்லவனுக்கு வல்லவன் படத்தில் அசோகனுக்கே வில்லனாக நடித்தார். இனி என்ன என்று எம்.ஜி.ஆர் சலித்துப்போய் தான் நடித்த தேவரின்’முகராசி’ படத்தில்ஜெமினியையும் நடிக்கவைக்கும்படியானது.ஆனால் ஜெமினி பின்னால் வந்த ஏ.வி.எம்.ராஜன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,முத்துராமனுக்கெல்லாம் கூட செகண்ட் ஹீரோ வாக ஈகோ பார்க்காமல் நடித்தார். இத்தனைக்கும் அந்த கால கட்டத்தில் கூட பணமா பாசமா வெள்ளிவிழா கண்ட படம். இருகோடுகள்,சாந்திநிலையம்,காவியத்தலைவி போன்ற படங்கள் வந்த காலம்.
ஜெமினிக்குப்பின் சிவாஜி கணேசன்படங்களில் ஜெமினி செய்த அதே மாதிரி ரோல்களை முத்துராமன் செய்தார்.ஆனால் ‘சிவந்த மண்’ முத்துராமனுக்கு வித்தியாசமான படம்.
எம்.ஜி.ஆர் ’கூண்டுக்கிளி’படத்தில் மட்டும் சிவாஜிகணேசனுடன் நடித்தார்.
இவ்வளவும் சொல்ல காரணம் எம்.ஜி.ஆரின் தனித்தன்மை. அவர் மலைக்கள்ளன்,குலேபகாவலி,அலிபாபாவும் நாற்பது திருடர்களும்,மதுரைவீரன்,மகாதேவி என்று தாண்டி நாடோடி மன்னனை அவரே இயக்கினார்.
 எம்.ஜி.ஆர் கால் உடைந்தது. சரிதான் எம்.ஜி.ஆர் ஜேப்டர் குளோஸ்! என்றார்கள்.
 மன்னாதிமன்னன்,திருடாதே, பாசம்,(பாசம் படத்தில் அவர் இறந்து போவார்!)தாய் சொல்லைத்தட்டாதே,தாயைக்காத்த தனயன்.பணத்தோட்டம்,கொடுத்து வைத்தவள்
அதன் பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்தார்,
பொதுவாகவே அவர் சரோஜாதேவியுடன் நடித்த படங்கள் விசேசமானவை.
படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை,அன்பேவா.
அவர் நடித்த அந்தக் கால சரித்திரப் படங்களும் தொடர்ந்துவந்த படங்களும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.

 
எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுவே தான் ஜெயலலிதாவுடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன், குடியிருந்த கோவி்ல்,அடிமைப்பெண்,மாட்டுக்கார வேலன்.

எம்.ஜி,ஆருக்கு நடிக்கத்தெரியாது என்று சிவாஜி ரசிகர்கள் பரப்பிய அவதூறு.
சிவாஜி மாதிரி எம்.ஜி.ஆருக்கு நடிக்கவேண்டிய அவசியமே இல்லை. அவரிடம் சிவாஜியின் பாணி துளி கூட கிடையாது என்பது தான் உண்மை.பெற்றால் தான் பிள்ளையா அவருடைய தனித்துவமான பாணியின் உச்சம்.


மந்திரிகுமாரி, மர்மயோகி, மகாதேவி,நாடோடி மன்னன்,ராணி சம்யுக்தா,மன்னாதி மன்னன் போன்ற படங்களில் மட்டுமல்லாமல் பெற்றால் தான் பிள்ளையா வரை அவர்  வசனங்கள் பற்றி  சொல்லவேண்டுமானால் என்னிடம் ‘வெண்கலமணி அடித்தாற்போல,உச்சரிப்பு சுத்தமா’ என்று  மனோரமா சொன்னார். ஒருமுறை 1950களில் தி.நகர் வாணிமஹாலில் ஒரு கூட்டம். மனோரமா தன் தாயாருடன் உள்ளே நுழைகிறார்.” எங்க அண்ண்ன் பேசிக்கிட்டிருந்தாரு. வெண்கலக்குரல்.கணீர்னு மணியடிச்சாப்பல எங்க அண்ணன் குரலுப்பா.அந்தக்குரல் குண்டடிபட்டபிறகு காவல்காரன் படத்தில் “ பா(ர்த்)தேன் சுசிலா பா(ர்த்)தேன் இந்த ’றெண்டுகன்னால’ பாதேன்” என்று விகாரமாய்  என் காதுல விழுந்தப்ப அப்படி அழுதேன்யா.அப்படி அழுதேன்.” என்றார்.

சிவாஜிகணேசன் தன் தோரனணயால் வெள்ளைக்காரன் போல மாறிக்கொண்டிருந்த போது மலையாளி எம்.ஜி.ஆர் எப்படியாவது தமிழனாக மாறிவிடமாட்டோமா என்று தவித்தார்.

 திடீரென்று  எதிர்பாராத அதிர்ச்சி ஏதேனும் ஏற்பட்டால் உடனே அவர் வாயிலிருந்து வரும் வார்த்தை “ முருகா!” 


இவ்வளவிலும் அவர் படங்களில் பாடல்கள்,வசனம் அவர் எதிர்கால தலைவர் என்பதை அறிவிக்கும் வண்ணம்  தான் இருந்தன.
குண்டடிபட்டபின் கூட ‘ஒரு நடிகனுக்கு குரல் முக்கியம். அதையே இழந்தபின் என்ன செய்யப்போகிறார்,பாவம்’என்றவர்கள் வாயடைக்கும்படி அவருக்கு செல்வாக்கு மிகவும் அதிகமாகியது. வசூல் சக்கரவர்த்தி என்பது நிரந்தரமானது. சிவந்தமண் பிரமாதமான பரபரப்புடன் வெளியான நேரத்தில் சத்தமே இல்லாமல் வெளியான நம் நாடு பெரிய வெற்றி பெற்றது.

பின்னால் வந்த படங்களில் அவருடைய கனவு சீன் பப்பள பளபள ஆடைகள், கனவு சீன் இல்லாத போது கூட அவர் ட்ரெஸ் சென்ஸ் ரொம்ப காமெடியாயிருந்தது.(அந்த ட்ரெஸ் விஷயம் மட்டும் தான் ராமராஜன் அவருடமிருந்து எடுத்துக்கொள்ளமுடிந்தது!)அவருடைய நடிப்பு எல்லாம் அதுவும் 1972லிருந்து வந்த படங்கள் அவரை கேலி செய்யும்படியாக ஆனது. அவர் சீரியஸாகத்தான் நடித்திருப்பார்.கொஞ்சம் தள்ளி நின்று வேறு கோணத்தில் ரசித்தால் சிரித்து வயிறு புண்ணாகி விடும்.


பாடல் காட்சிகளில் அவர் அனுபவித்து நடித்தார். அதனால்முன்னர் டி,எம்.எஸ் பாடல்களில் அவர் எந்த அளவுக்கு அப்பீலிங்காக தெரிந்தாரோ அதே மாதிரி தான் குண்டடிபட்ட பின்னும் கூட எஸ்.பி.பி பாடல்களிலும், ஜேசுதாஸ் பாடல்கள் அனைத்திலும் கடைசிவரை பாடல் காட்சிகளில் சோடை போனதேயில்லை என்பதை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை செக் செய்து பார்த்துக்கொள்ளலாம். பாடல்களில் அவர் பிரத்யேக அசைவுகளை இப்போது யாராவது நடித்துக்காட்டும்போது அந்தக் கால மனிதர்களுக்கு கண்ணில் நீர் கோர்த்து விடும். ஸ்டண்ட் காட்சிகளில் அவரிடம் இருந்த quickness, டான்ஸில் அவரிடம் இருந்த quickness அலாதியானது. பாடல்களுக்கு அவர் வாயசைக்கும் அழகு.

 மற்ற கதா பாத்திரங்கள் சொல்லும் முக்கிய விஷயங்களை மிக கவனமாகக் கேட்டு விட்டு தலையை மெதுவாக ஆட்டுவார்!

ஐம்பது,அறுபதுகளில் அவர் முகத்தில் இருந்த களை அன்று மட்டுமல்ல, இனி எந்த நடிகனிடமும் எந்தகாலத்திலும் காணவே முடியாது.இன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம்  வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டு்ம்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும்.
தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம்!
அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.விஜயபுரி வீரன் படத்தில் ஆனந்தன் அறிமுகமான போது கத்திச்சண்டையில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றார்கள். ஆனந்தன் எம்.ஜி.ஆரின் கால் தூசுக்குப் பெறமாட்டார். ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என்று பேர் பெற்றபோது எம்.ஜி.ஆரிடமே ‘ஜெய்சங்கர் தான் உங்கள் வாரிசா? “ என்று கேட்கப்பட்டது. மு.க.முத்து கான மயிலாட கண்டிருந்த வான்கோழியாக அப்படியே எம்.ஜி.ஆர் பார்முலாவில் நடித்துப் பார்த்தார். முத்து சிரிப்பு மட்டும் எம்.ஜி.ஆர் மாதிரியே சிரிப்பார். ஆனால் அது இமிடேசன்.
எம்.ஜி.ஆர் சிரிப்பு பின்னால் சத்யராஜ் சிரித்துக்காட்டினார். சத்யராஜ் எம்.ஜி.ஆர் பாணியை எல்லோருமே ரசிக்கும்படி செய்த ஒரே நடிகர். சத்யராஜ் எம்.ஆர்.ராதாவின் வக்கிரத்தையும் தன் வில்லன் நடிப்பில் வெளிப்படுத்திய அற்புத நடிகன்!
மு.க.முத்து உங்கள் வாரிசா என்று கூட எம்.ஜி.ஆரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் குடும்பத்திலிருந்தே எம்.ஜி.சி.சுகுமார் நடிக்கவந்தார்.சினிமாவில் சக்கரபாணி மகன் வரவு படாஃபட் ஜெயலட்சுமியின் காதலுக்கும் தற்கொலைக்கும் மட்டுமே காரணமானது.
கடைசியில் எம்.ஜி.ஆர் தன் ஐடியல் ஹீரோ பாணிக்கு சற்றும் பொருந்தாத பேக்கு பாக்யராஜை ஏன் தன் கலையுலக வாரிசாக அறிவித்தார் என்பது தான் ஜீரணிக்கவே முடியாத Irony! 
அதன் பிறகும் தான் 'Nigger MGR விஜயகாந்த், சினிமாவுக்கே சம்பந்தமேயில்லாத சுதாகரன் கூட சின்ன எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் சிரிப்பு பற்றி 1960களில் தமிழ்வாணன் கேள்விபதிலில்-  ”ஒரு குழந்தை முன் பல புகைப் படங்களைப் போட்டுப்பாருங்கள். அந்த்க் குழந்தை எம்.ஜி.ஆர் படத்தைத் தான் எடுக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆரிடம் தான் உண்மையான சிரிப்பு இருக்கிறது.”

M.G.R's Beaming Smile !

வயது முதிர்ந்தபின் சிவாஜி தொடங்கி சிவகுமார் வரை எல்லோரும் வேறு துணைப்பாத்திரங்களில் நடித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர்  கடைசி வரை கதாநாயகனாகவே நடித்தார். அதே போல வயதானவராக எம்.ஜி.ஆர் மாறுவேஷம் தான் போட்டிருக்கிறாரே ஒழிய முதியவராக படங்களில் நடித்ததே இல்லை.எல்லாப்படங்களிலும் எம்.ஜி.ஆர் ‘இளம் வாலிபர்’ தான்!
அவருக்கு முன் எம்.கே.டி பாகவதரும்,பி.யூ.சின்னப்பாவும் கதாநாயகர்களாக மட்டும் நடித்தவர்கள். அப்படிப் பார்த்தால் ஜி.என்.பியைக் கூடத்தான் இந்த லிஸ்டில் சேர்க்கவேண்டியிருக்கும்.
(எஸ்.எஸ்.ஆர் கூட வயதானவராக நடிக்கவில்லை. இளைஞனாக மட்டும் நடித்தவர்.ஆனால் அவர் செகண்ட் ஹீரோவாக நிறைய படங்களில் நடித்தவர். அவருடைய கடைசி படங்கள் உள்பட.’வைராக்கியம் ‘ படத்தில் ஜெமினியுடன். ’எதிரொலி’யில் சிவாஜியுடன்.) அதே போல பெண்ணுக்கு வலை வீசும் ஷோக்குப் பேர்வழியாக எல்லா கதாநாயகர்களும் நடித்திருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர் மட்டுமே ஸ்த்ரிலோலராக நடித்ததேயில்லை.

 குடி, சிகரெட் விஷயங்களில் நடிக்கும்போது அவர் காட்டிய பிடிவாதமான கண்ணியம். அந்தமான் கைதி படத்தில் ஒரு காட்சியில் புகைபிடித்துக் கீழே போட்டு விட்டு வீட்டுக்குள் நுழைவார்.’  டே எம்.ஜி.ஆர் பார்டா!’ என்று ஆச்சரியப்பட்டு ரசிகர்கள் அலறுவார்கள்.( ஆமாம்.அலறுவார்கள்! தமிழகமக்களுக்கு எம்.ஜி.ஆர் ஒரு புனிதர்.)

Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.
தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமா?ஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா? அவர்சினிமா நடிப்பைக் கைவிட்டபிறகுகூட அவர் அடைந்த புகழ் இனி யாருக்கும் கிடைக்குமா?
எம்.கே.தியாகராஜபாகவதருக்கு ஜனவசியம்  இருந்தது. ஆனால் அவர் அதிகாரம் என்பதை பார்க்கமுடிந்ததில்லை. அவர் வாழ்க்கையின் பின் பகுதியில் மிகுந்த சீரழிவைக் கண்டவர்.பாகவதருக்கு பால்ய யோகம்! வாழ்வின் முன் பகுதி சிறப்பானது.எம்.ஜி.ஆருக்கு விருத்தாப்பிய யோகம்!வாழ்வின் பின் பகுதி மிகவும் விஷேச சிறப்பானது.

முழுக்க இது நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனைப் பற்றிய பதிவு. என்றாலும் அரசியல்வாதி எம்.ஜி.ஆர், அதிமுக தமிழகமுதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி எவ்வளவோ தான் கடுமையான விமர்சனங்கள். ஆயிரம் பக்கங்களில் கூட எழுதலாம் தான்.
ஆனால் அவர் ஜனவசியம் தமிழகத்துக்கு செய்த நன்மை. அவர் வெற்றி மேல் வெற்றி கண்டு மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரான காலங்களில் இவ்வளவு ஜாதிக்கட்சிகள் கிடையாது. மதக்கட்சிகள் கிடையாது.எம்.ஜி.ஆருக்கு ஓட்டு போட்ட பாமர மக்கள் இன்றைக்கு ஜாதிக்கட்சிகளில் தமிழ்நாடெங்கும் சிதறிப்போய்விட்டார்கள். 

22 comments:

 1. Well written! //Charisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர்.// Exactly my thought:)

  ReplyDelete
 2. Excellent writeup
  I read ur blog in one single night during 2010
  I missed ur writeup. Glad that u are writing again

  ReplyDelete
 3. சூப்பர்...அசத்தலான உங்கள் நடையில்...அபாரம்

  ReplyDelete
 4. நல்ல அலசல் ஐயா...

  தங்கள் ரசித்து எழுதியதை நானும் ரசித்தேன்...

  நன்றி...

  ReplyDelete
 5. எப்படியோ தமிழ்நாட்டை ஆண்டு குட்டிச் சுவராக்கிய பெருமையில் ஒரு பங்கு எம்.ஜி.ஆரையும் சாரும். தமிழகப் பாமரர்கள் சினிமாவையே உண்மை என்று நம்பி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள், வாழப்போகிறவர்கள்.

  ReplyDelete
 6. அருமையான பதிவு! எம்.ஜி.ஆர். ரசிகன் எனக்கு இதை வாசிக்கவாசிக்க உற்சாகமாகவும்; ஆச்சி சொன்னது, முடிவில் நீங்கள் சொல்வது வாசிக்கையில் வருத்தமாகவும் இருந்தது.

  ReplyDelete
 7. எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆர் பற்றி இவ்வளவு தெளிவாக எழுதியது நீங்கள் மட்டுமே.
  ……
  //அதே போல வயதானவராக எம்.ஜி.ஆர் மாறுவேஷம் தான் போட்டிருக்கிறாரே ஒழிய முதியவராக படங்களில் நடித்ததே இல்லை.//

  …அரசிளங்குமாரி படத்தில் எம்.ஜி.ஆரின் தந்தையாக வருவது எம்.ஜி.ஆர் என்று நினைகிறேன். ப்ளேஷ்பேக்கில் சண்டைபோட்டு தோற்று தற்கொலை செய்து கொள்வார்.

  //எங்கவீட்டுப்பிள்ளை எந்த ஒரு ஹீரோ நடிகனும் பார்த்து ஏங்கும் படம்.அன்பே வா நூறு தடவை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. //

  நூற்றில் ஒரு வார்த்தை.

  ……ரிக்ஷாகாரனில் எனக்குப் பிடித்த கடைசி சண்டைக்காட்சி.

  …http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg&feature=player_embedded

  …சுருள்பட்டை சுற்றுவது சற்று கடினம். எம்.ஜி.ஆர் சண்டை செய்வதை மிகவும் எளிமையாக செய்வார்.


  …//எம்.ஜி.ஆர் தன் பாணிக்கு சற்றும் பொறுந்தாத பேக்கு பாக்யராஜை ஏன் தன் கலையுலக வாரிசாக அறிவித்தார் என்பது தான் ஜீரணிக்கவே முடியாத Irony! //

  …என்னோட அப்பாவும் இதைச் சொல்வார்.

  ReplyDelete
 8. எம்.ஜி.ஆரின் பல அரிய புகைப்படங்கள், சில தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.

  ReplyDelete
 9. எம்.ஜி.ஆர் பற்றிய அரிய புகைபடங்கள் இந்த தளத்தில் உள்ளன.

  www.…mgrroop.blogspot.com

  ReplyDelete
 10. எம்ஜிஆர் ஒரு அரிய பொக்கிஷம்...

  ReplyDelete
 11. ராஜநாயஹம் ஐயா,
  கருப்பு எம்ஜியார் என்று விஜயகாந்த் தன்னைத்தானே அழைத்துக் கொள்வதை குறிக்க Nigger எம்ஜியார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதன் அர்த்தம் நீக்ரோ என்பதே.
  அமெரிக்காவில் இன்று African American என்றழைக்கப்படும் கருப்பினத்தவர்களை முன்பு இழித்துக் கூறப்பயன்பட்ட சொல் அது. It is neither used nor tolerated in USA today. அவ்வார்த்தையை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 12. ஸ்ரீராம் சார்! நமஸ்காரம்,நீங்கள் சொல்கிற விஷயம் எனக்கு தெரியாதென்றா நினைக்கிறீர்கள்.
  ரொம்ப அலசி ஆராயிஞ்சி 'கருப்பு எம்.ஜி.ஆர்.' க்கு ஆங்கில மொழிப்பெயர்ப்பு நுட்பமா பண்ணிருக்கேன் - NIGGER M.G.R !
  Nigger means 'extremely offensive name for a Black person' என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

  'கருப்பு' என்ற நிறத்தை கேவலப்படுத்துவதாக தயவு செய்து யாரும் நினைத்து விடக்கூடாது. தன்னை எம்ஜியாராக பாவித்து தன் நிறத்தை வைத்து classify செய்யும் விஜயகாந்தின் அகங்காரத்தை இப்படித்தான் எதிர்கொள்ளவேண்டும்.
  கருப்பாக இருக்கும் வேறு யாரும் இதற்காக வருத்தப்பட காரணமே இல்லை.தேவையே இல்லை.
  எம்ஜியாருக்கும் விஜயகாந்துக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லை.இருவருக்கும் உள்ள நூற்றுக்கணக்கான வேறுபாடுகளைபற்றி எழுதத்தேவையும் இல்லை.எல்லாமே உள்ளங்கை நெல்லிக்கனி.
  சின்ன எம்ஜியாரு சுதாகரனுக்கு கூட பெயரை லேசா விரிவாக்கம் செய்யலாம்.
  "சின்னத்தனமான எம்ஜியார்"!

  ஆங்கில மொழிபெயர்ப்பு -TRIVIAL M.G.R.!

  இதற்காக சின்னபுத்திக்காரங்க எல்லாம் எங்களை எப்படி கேவலப்படுத்தலாம் என்று கோபப்பட முடியுமா.. 'சில்லறை புத்தியினம் ' வெகுண்டு எழுந்திடலாகுமோ

  ReplyDelete
 13. nigger mgr மிகவும் ரசித்து சிரிக்க வைத்தது,வேறெங்கும் இதை கேட்டதில்லை,காபிரைட் உங்களுக்கே சார்

  ReplyDelete
 14. அருமையான இடுகை.

  இந்த வாரக் கல்கி பேட்டி: வசனகர்த்தா ஆருர் தாஸ் அவர்கள் தான் ஏதோ படப்பிடிப்பில் வசனத்தை 'எடுத்துக் கொடுத்ததற்கு' காட்சி முடிந்த பின்னால் MGR அவரை அழைத்து இனிமேல் அவ்வாறு prompt செய்ய வேண்டாமென்றும், அதை தான் விரும்பவில்லை என்றும், இதுவே வேறொருவராயிருந்தால் இப்படி தண்மையாகச் சொல்லாமல் அவரை ஒதுக்கி வைத்துவிடுவேன் என்றாராம்.

  ஒருவேள அவரு வேற ஆளாயிருந்தா தனியாக் கூப்பிட்டு நாலு அப்பு அப்பியிருப்பாரோ?

  ReplyDelete
 15. அதே பேட்டியில் ஆருர் தாஸ் MGR மன்றாடியார் பரம்பரை என்ற போது இந்த இடுகை நினைவுக்கு வந்தது :)

  ReplyDelete
 16. மிக அருமையான கட்டுரையை வாசிக்க தந்தமைக்கு நன்றிகள் சார். நீங்கள் எம்ஜிஆர் ரசிகரா சார்?

  ReplyDelete
 17. ரசனைக்குரிய தொகுப்பு அருமை..த .ம 1

  ReplyDelete
 18. இன்று முரசு சானலில் பாடல்கள் தொகுப்பு ஒரு எம்.ஜி.ஆர் பாடல், அதைத் தொடர்ந்து ஒரு மு.க.முத்து பாடல்.

  செத்தும் கொடுத்த சீதக்காதி!.

  முத்துவுக்கு காஸ்ட்யூம் வாங்கும்போது 1 முழுக்கை சட்டை, 1 வெள்ளைப் பேண்ட், கழுத்தில் சுத்திக் கொள்ள 1 பிங்க்/ஆரஞ்சு ஜாக்கட் பிட் என வாங்குவார்களோ?

  ReplyDelete
 19. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81988/language/ta-IN/article.aspx

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.