Sep 24, 2008
'பல்த்தசார் 'என்ற
பிரஞ்சு படத்தை தழுவியது தான் 'அக்ரகாரத்தில் கழுதை 'என விமலாதித்த மாமல்லன்
என்னிடம் கூறினார்.
அக்ரகாரத்தில் கழுதை படத்திற்கு வெங்கட் சாமிநாதன் வசனம்
எழுதியிருந்தார்.
சுந்தர ராம சாமி அதன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க
ஆசைபட்டிருந்தார். ஆனால் நடக்கவில்லை.
எம்பி சீனிவாசன் நடித்தார். சாவித்திரி
நடித்தார். விருது வாங்கிய படம்.அதன் இயக்குனர் ஜான் ஆபிரஹாம்.
ஜான் ஆபிரஹாமை
நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது விருது பட இயக்குனர் என அவர் ஏ
வி எம் ஸ்டுடியோவில் பிரபலம். ’அம்மே அறியான்’ பட எடிட்டிங் வேலை என்று
நினைக்கிறேன். எடிட்டிங் காக ஏவிஎம் மிற்கு வருவார்.
நான் அவரை நான்கைந்து முறை
பார்த்த போதும் ஒரே சம்பவம் தான்அல்லது ஒரே மாதிரி சம்பவம்
நடந்தது.
நீட்ஷேயின் “The eternal
recurrence of the same event”
ஆட்டோ வந்து நிற்கும். ஜான்
ஆபிரஹாம் சீட்டில் உட்கார மாட்டார். கால் வைக்கிற இடத்தில் வெளிக்கி இருப்பது போல்
குந்தி இருப்பார். அவர் கூட வருபவர் இறங்க சொல்லி கெஞ்சுவார். ஆபிரஹாம் ரொம்ப
அழுக்காக ஆடை யுடன் எப்போதுமே குளிக்காதவர் என்று பார்த்தவுடன் தெரியும்படி உடலும்
ரொம்பவே அழுக்காக இருப்பார். ஆட்டோவில் சிரித்துகொண்டே குந்திய நிலையில் இறங்க
மறுப்பார். ஆட்டோகாரன் கத்துவான். இவர் இறங்க மாட்டார். எடிட்டிங் ரூமிலிருந்து
இவருடைய எடிட்டரும் வந்து மலையாளத்தில் இறங்கும்படி கெஞ்சுவார் . இவர்
சிரித்துகொண்டே மறுப்பார். வெகு பிரயாசைக்கு பின் இவரை சிலர் ஒன்று சேர்ந்து
வலுக்கட்டாயமாக ஆட்டோ விலிருந்து இறக்குவார்கள்.
அடுத்த முறையும் அதற்கடுத்த
முறையும் அதற்கடுத்த முறையும்
ஆட்டோ வந்து நிற்கும் .நான் காண நேர்வது அதே
காட்சி தான். “Recurrence of the same
event!”
நான் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த படத்தின் இயக்குனர் '
ராஜநாயஹம் ! அவார்டு வாங்கனும்னு ஆசைப்பட்டா கடைசியில் இப்படி தான். தரைக்கு இறங்கி
வா. நீயும் வித்தியாசமா படம் பண்ணனும்னு நினைக்கிறியா ? பார்த்துக்க.உனக்கும் இது
தான் கதி ' என எல்லோரும் அங்கே ஜான் ஆபிரகாமை வேடிக்கை பார்க்க கூடியிருக்கும் போது
என்னை பார்த்து உற்சாகமாக சத்தம் போட்டு சொல்வார். வெராண்டாவில் உள்ளவர்கள்
சிரிப்பார்கள் .
'மோகமுள் நாவலை படமாக்கனும். கோபல்ல கிராமத்தை படமாக்கனும்,
தந்திர பூமி சினிமாவாக எடுக்க முடியுமா,புளியமரத்தின் கதை கட்டாயம் நான் தான்
இயக்கி வெளிவரணும், வண்ணநிலவனின் ’கடல்புரத்தில்’நாவலை படமாக்கனும் ' இப்படி கனவு
கண்டு கொண்டிருந்த என்னுள் ஜான் ஆப்ரஹாம் நிலை இடி போல் உரத்து
இறங்கியது.
வேதனையை சொல்லி முடியாது. ஜான் ஆப்ரஹாமின் கால் தூசு பெறாத
சினிமாக்காரன் எல்லாம் இப்படி அவரை ஏளனமாக பார்த்தான்.
ஒரு
சம்பவம்
கொச்சிகோட்டையில் பரிக்ஷா ஞாநியை அறிமுகம் செய்தபோது ஜான்
சிரித்தபடி சொன்ன பதில்
' நான் அஞ்ஞானி! '
...............................................
Where is Abel ? Bible
ஜான் எங்கே ?
ஜான் !
ஸல்ஃப்யுரிக் அமிலத்தால் நிரம்பி வழிகிற
உன் இதயமான
அந்தத் தட்டு தான் எங்கே ?
வெறுமையான
கல்லறை இதனருகே
புகை அங்கிக்குள்
எரிந்து கொண்டிருக்கும்
சகோதரத்துவத்தைக்
குலுக்கிப் போட்டுக்கொண்டு விட்ட
உன் நிர்வாண ஜுவாலை
எங்கே எங்கே
- பாலச்சந்திரன்
சுள்ளிக்காடு
மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் சச்சிதானந்தன் மொழிபெயர்த்தை
தமிழில் மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன்
மீட்சி 35 1991
.................................................................................................
Sep 27, 2008
நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்,சொந்த அனுபவங்கள்
தாண்டி ஜானின் சினிமாவைப் பார்க்க வேண்டிவரும் போது ஆச்சர்யமாக இருக்கும் என்பது
சரிதான்.
உங்கள் அனுபவமும் அப்படித்தானிருக்கிறது..
ஜானின் 21-ஆம் நினைவு நாளை ஒட்டி நான் எழுதிய நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை என்ற மூன்று பதிவுகள் இதோ
http://nagarjunan.blogspot.com/2008/06/1.html
http://nagarjunan.blogspot.com/2008/06/2.html
http://nagarjunan.blogspot.com/2008/06/3.html
September
27, 2008 12:03 AM
Sep 29, 2008
ஞாநி விளக்கம்
வணக்கம்.
நான் ஜான் ஆபிரஹாமை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். சங்கீத நாடக அகாதமியின் நாடக விழா எர்ணாகுளத்தில் நடந்தபோது, கூத்துப்பட்டறையின் நாடகமும் இடம் பெற்றது. அதற்கு வந்திருந்த தமிழக நாடகக்காரர்கள் சிலர் அப்போது அம்மெ அறியன் படத்துக்கு மக்களிடம் நிதி திரட்டும் பணியை தொடங்க இருந்த ஜானை சந்திக்கச் சென்றோம். ஜானும் அவர் குழுவினரும் கையால் எழுதிய சுவரொட்டிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.கொச்சி கோட்டை சுவரில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஜான் பேசி உண்டியல் குலுக்கி நிதி திரட்டுவதைத் தொடங்கி வைத்தார். அதை நான் எடுத்த புகைப்படமும், அன்றே படகுத்துறையில் ஜானையும் ஒரு குழந்தையையும் நான் எடுத்த புகைப்படமும் ஆர்.ஆர்.சீனிவாசன் வெளியிட்ட ஜான் பற்றிய நூலில் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. சுவரொட்டி எழுதும் இடத்தில் ஜானிடம் என்னை ஞாநி என்று அறிமுகம் செய்தபோதுதான், ஜான் சிரித்தபடி தான் அஞ்ஞானி என்று சொன்னார்.பின்னர் அன்று முழுவதும் நாங்கள் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தோம். பின்னர் எப்போதும் நான் ஜானை எங்கேயும் சந்திக்கவில்லை. ஜான் படங்களில் அ.கவும் அ.அ.வும் எனக்குப் பிடித்த முயற்சிகள். செரியச்சனோட குரூர நிருத்யங்களில் சில காட்சிகள் நன்ராக அமைந்திருக்கும். ஜான் உருவாக்கிய அக்ரஹாரத்தில் கழுதையில் நடித்த இசை மேதை எம்.பி.சீனிவாசன் என் மதிப்புக்குரிய நண்பர். ஜானுடன் ஒடெசா திரைப் பட இயக்கத்தில் பங்கேற்ற பிரகாஷ் மேனனும் என் நண்பரே. பிரகாஷ் மேனன் இன்றும் சென்னையில் மலையாள டி.வி தொடர் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இப்போது தொடர்பு இலை. ஜான் பற்றிய ஜெயமோகனின் ஒரு குறிப்பு முற்றிலும் உடன்பட முடியாதபோதும் நம் பரிசீலனைக்குரியது. அக்ரஹாரத்தில் கழுதை திரைக்கதை வசன நூலை அடிப்படையாகக் கொண்டு பரீக்ஷாவின் மேடை நாடகமாக்கலாம் என்று ஒரு முறை நினைத்தோம். அது கைகூடவில்லை.
.............
யமுனா ராஜேந்திரன்
முற்றிலும் உடன்படமுடியாதபோது எதற்கு
மறுபரிசீலனை செய்ய வேண்டும்? ஜான் பற்றிய சீனிவாசனின் நூலில் எனது இரு கட்டுரைகள்
உள்ளன. ஓரு கட்டுரை ஜெயமோகனுக்கான எதிர்விணை. பிறிதொன்று அம்மா அறியான் படம்
குறித்தது. ஞானி விரும்பினால் அவரது உத்தேச மறுபரீசீலனையை ஒரு விவாதமாக
முன்னெடுப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது.
யமுனா ராஜேந்திரன்
http://rprajanayahem.blogspot.in/2008/10/pd.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_7735.html
http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post_12.html
முற்றிலும் உடன்படமுடியாதபோது எதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும்? ஜான் பற்றிய சீனிவாசனின் நூலில் எனது இரு கட்டுரைகள் உள்ளன. ஓரு கட்டுரை ஜெயமோகனுக்கான எதிர்விணை. பிறிதொன்று அம்மா அறியான் படம் குறித்தது. ஞானி விரும்பினால் அவரது உத்தேச மறுபரீசீலனையை ஒரு விவாதமாக முன்னெடுப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது. யமுனா ராஜேந்திரன்
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா ...
ReplyDeleteஒரு நல்ல கலைஞன் வியாபார சமரசங்களுக்கு உட்படாவிட்டால் இதுதான் நேர்ந்து விடுகிறது.
ReplyDeleteஅக்ரகாரத்தில் கழுதை திரைப்படம் வெளிவரக்கூடாது என்று பாடுபட்டது ஒரு கூட்டம். வெற்றியும் பெற்றது.
அந்தப் படம் எப்படியாவது பார்க்கக் கிடைக்குமா என்று ஏங்குகிறேன். டீவிடீ கிடைத்தாலும் சிறப்பே.
கோபல்ல கிராமமும் புளியமரத்தின் கதையும் திரைப்படங்களாக உருவானால் எப்படியிருக்கும். ஆகா. ஆனால் அதை உருவாக்கவும் இன்று ஆளில்லை. ரசிக்கவும் ஆளில்லை. சாப்பாட்டில் மட்டுமல்ல திரைப்படங்களிலும் தமிழர்கள் மசாலாவிழுங்கிகளாய் மாறி விட்டார்கள்.