Share

Aug 17, 2012

சந்திரஹாசன்

மீள் பதிவு   05- 09 - 2008

திருச்சியில் நான் குடியிருந்த வயலூர் ரோடு பகுதியில் குமரன் நகரில் சந்திர ஹாசனின் வீடு. சந்திரஹாசன் எப்போதும் நடந்து போவதை அங்குள்ள எல்லோரும் பார்க்க முடியும். கமல் ஹாசனின் இரண்டாவது அண்ணன்.சின்ன அண்ணா.எப்போதும் இவர் நடந்து போவதை தான் பார்த்திருக்கிறேன்.காரில் போகும்போது பார்த்ததே இல்லை.நடை ..நடை ...நடை ....
Angels whisper to a man when he goes for a walk.!

நான் அவருக்கு ஒரு நமஸ்காரம் சொல்லி எப்போதுமே ஒரு நான்கு வார்த்தை பேசுவேன்.சிரித்த முகமாக என் பேச்சை கேட்கும் போது கொஞ்சம் சீரியஸாக அவ்வப்போது மாறும். பின் புன்னகைத்து விட்டு மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்.

முதல் முறை நான் நமஸ்காரம் சொல்லிவிட்டு அவர் அந்த காலத்தில் நடித்த "கிராமத்து அத்தியாயம் "படம் பற்றி தொட்டு விட்டு பின் அவர் கதா நாயகனாக சுமலதாவுடன் நடிக்க ஆரம்பித்து நின்று போன "ராஜா என்னை மன்னித்து விடு " படத்தை குறிப்பிட்டேன். அவருக்கு ரொம்ப ஆச்சரியம் .நின்று போன படத்தை பற்றி கூட குறிப்பிட்டேன் என்பது .
" ராஜபார்வை "யில் கூட கமலுக்கு அப்பா ரோலில் தலையை காட்டியிருக்கிறார்.
அடுத்த முறை அவர் நடந்து வரும்போது அவரிடம் பேசிய விஷயம் என்னிடம் ஜெமினி கணேசன் சொன்னது .
 "கண்களின் வார்த்தைகள் புரியாதோ ." பாடல் சூட்டிங்கில் தான் கமலை தூக்கிண்டு அவனோட அண்ணா சந்திர ஹாசன் வந்தான். நான் தூக்கி கொஞ்சினேன் .சாவித்திரி தூக்கி கொஞ்சினா. ஏவிஎம் செட்டியார் பார்த்தார். ஹீரோ,ஹீரோயின் ரெண்டு பேருக்குமே பிடித்து விட்டது.இந்த பையனையே பிள்ளையா நடிக்க போட்டுடலாம்னுட்டார்! "

"ஹே ராம் " ரிலீசின் போது அந்த படம் எடுத்ததற்காக அவருக்கு என் பாராட்டை தெரிவித்தேன்.அவரும் அந்த படத்தின் தயாரிப்பாளர் . படத்திலும் கமலுக்கு மகனாக நடித்திருப்பார்.

ஸ்ருதியின் அம்மா சரிகா மாடியில் அனுஹாசனுடன் பேசிகொண்டிருக்கும் போது தான் கை நழுவிய செல்போனை பிடிக்க குனிந்து நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்து விட்டார். அது பற்றி அப்போது அவரிடம் கேட்டேன்.
'பிழைத்தது தெய்வாதீனம் '- என்றார் சந்திரஹாசன்.

கொஞ்ச நாள் கழித்து
சரிகா -கமல் பிரிவு விஷயம் அல்லோலகல்லோலபட்டபோது அது பற்றி அவரிடம் கேட்டதே இல்லை

"எப்போதும் நடந்தே போகிறீர்களே ?"-ஒரு நாள் கேட்டு விட்டேன்.முகம் சீரியசாகி பின் " நான் சாமானியன் தான் "-இது அவர் பதில்.
நான் சொன்னேன் " அப்படி சொன்னால் நான் நம்ப மாட்டேன் .' எனக்கு சந்திர ஹாசன் அண்ணா தான் ஆதர்சம் ' என்று கமலே ரொம்ப வருஷம் முன்னாலே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். '
மீண்டும் அவர் சீரியஸாக 'நான் சாமானியன் தான்' என்றா. இதற்கு நான் சொன்ன பதில் அவர் முகத்தை பிரகாசமாக்கியது.
" ஹாசன் குடும்பம் கபூர் குடும்பம் மாதிரி . இந்த குடும்பத்தில் யாருமே சாமானியர்கள் கிடையாது . எல்லோரும் தனித்துவம் உள்ளவர்கள் தான் ."

நான் சொன்னதில் மிகை கிடையாது . அனுஹாசனும் கூட இப்போது தனி பாணியில் பிரபலம் தானே! இந்த சுஹாசினி மகன் நந்தா! இப்ப கோவையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலக்கியிருக்கிறான். இந்த வயசில தனக்குன்னு தனிப்பாதை வகுத்துகிட்டான். அந்த முத்திரையை குத்துறான்!
சாருஹாசன்,சுஹாசினி இருவரும் கமல் போல தேசிய விருது வாங்கிவிட்டார்கள.

திருச்சியை விட்டு திருப்பூர் கிளம்பியதற்கு முதல் நாள் மாலை பிஷப் ஹீபர் கல்லூரி வாயிலருகில் நடந்து வந்துகொண்டிருந்த சந்திர ஹாசனை எதிர்கொண்டேன். நமஸ்காரம் சொன்னேன் .புன்னகையுடன் நமஸ்காரம் என்றார். ஊரை விட்டே கிளம்புகிறேன் என்பதை ஏனோ சொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை. மனசு லேசாக கனத்தது.இனி இவரை எங்கே பார்க்க போகிறேன் .திருப்பூரில் செக்கு மாடாக போகிறேன். தொடர்ந்து நான் மேலே நடந்தேன்.அவரும் எதிர் திசையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
Walking!
Walk!!

Angels whisper to a man when he goes for a walk.!


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_12.html


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_25.html

5 comments:

 1. நண்பரே...உங்களது எழுத்து நடையும் அதன் கருத்து ஆழமும் மிக நன்றாக உள்ளது ... வாழ்த்துக்கள் .....
  அன்புடன் ,
  ரகு.
  குறிப்பு :
  தளையசிங்கத்தின் தௌழுகை சிறுகதை படிக்க விரும்போருக்கான சுட்டி http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

  ReplyDelete
 2. மீண்டும் உங்களைப் படிக்க ஆரம்பித்ததில் இன்றைய நாள் எனக்கு உற்சாகமானது

  ReplyDelete
 3. உங்கள் பெயர் ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த பெயர் போல பரிச்சயமாக இருக்கிறது...

  நீங்கள் ஊடக தொடர்பான வேலை எதிலும் இருக்கிறீர்களா?

  கமல் திரைத்துறையில் பிரபலமும் பெயரும் எடுத்ததுதான் அவரது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு திரைத்துறையில் கிடைத்த வாய்ப்புகளுக்கும் புகழுக்கும் காரணம்.

  கமல் ஒரு நடிகராக இருந்திருக்கா விட்டால் அவர்கள் ஏதாவது ஒரு வேலையில் செட்டிலாகி இருப்பார்கள் !

  ReplyDelete
 4. http://rprajanayahem.blogspot.in/2009/12/what-piece-of-work-is-man.html

  ReplyDelete
 5. நாங்கள் திருப்பூர் வந்தது சூழ்நிலை காரணம், தாங்கள் திருப்பூர் வந்ததும் சூழ்நிலையே காரணமாக இருக்கலாம், ஆனால் தங்கள் நட்பு எனக்கு கிடைத்தது பெறுமையாக உள்ளது. திருப்பூர் வந்ததற்காக வருந்த வேண்டாம்.

  சிவராஜ் மோகன் & ராஜேஸ்வரன்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.