Share

Aug 13, 2012

திருவாரூர் தங்கராசு

திருவாரூர் தங்கராசு திராவிடகழகத்தின் தூணாக பெரியார் காலத்தில் இருந்தவர். ரத்தகண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்.

 

பெரியார் இறந்தபோது தி.க உடைந்தது.
அய்யா இறந்து பிணம்  எடுக்குமுன்னரே  இரு கோஷ்டிகளும் தனித்தனியாக உட்கார்ந்துவிட்டனர் என்பதே உண்மை. மணியம்மையை முன்னிறுத்தி வீரமணிகோஷ்டி.திருவாரூர் தங்கராசு கோஷ்டி. இரு தி.க வாக உடைந்ததற்கு கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் தான் காரணம். தி.கவிலும் தி.மு.க.,அ.தி.மு.க அரசியல்.
திமுக மணியம்மைக்கு ஆதரவு. அதிமுக திருவாரூர் தங்கராசுவுக்கு ஆதரவு.
அந்த துக்க நிகழ்வில் ஒரு அதிசயம். எம்.ஆர்.ராதாவும் திருவாரூர் தங்கராசுவின் அபிமானியாதலால் எம்.ஜி.ஆரும் ராதாவும் ஒரே பகுதியில் அமர்ந்தனர்!
அரசியலில் எம்.ஜி.ஆரும் ராதாவும்1960களில் கூட சில விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்கள்.1964ல் எம்.ஜி.ஆர் ‘என் கடமை’ பட ரிலீசின் போது பகீரங்கமாக “காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி” என்றார்!(கொஞ்ச நாள் முன் ஜூவி கழுகார் பதில் ஒன்றில் இதை அப்படியே மாற்றி “ அண்ணா என் தலைவர்,காமராஜர் என் வழிகாட்டி” என்று எம்.ஜி.ஆர் சொன்னதாக தவறாக எழுதப்பட்டிருந்தது.இனி அது நூலாக வேறு வரும்!)

எம்.ஜி.ஆர் அப்படி சொன்னதை திமுகவில் யாரும் ரசிக்கவில்லை.காங்கிரஸில் இருந்தவர்அல்லவா எம்.ஜி.ஆர்.
’ என் கடமை’ படம் ஓடவில்லை. எம்.ஜி.ஆர் அப்போது காமராஜரை Glorify செய்தது தான் காரணம் என்றே சொல்லப்பட்டது.
ராதாவுக்கு பெரியார் மீது எந்த அளவுக்கு அன்பும் மரியாதையோ அதே அளவுக்கு காமராஜர் மேல் பக்தியே இருந்தது.1967 தேர்தலை ஒட்டி காமராஜரை கொல்ல சதி நடக்கிறது என்ற தகவல் காரணமாக ராதா ரொம்ப கோபத்தில் இருந்தார்.
பெரியார் பிறந்த தேதியில் செப்டம்பர் 17ல் எம்.ஆர்.ராதா இறந்ததும்(1979)  பின்னர் 
பெரியார் இறந்த தேதி டிசம்பர் 24ல்  எம்.ஜி.ஆர்(1987) இறந்ததும் வரலாற்று சுவாரசியம்.


பெரியார் மறைவுக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் தி.க.வின் கோட்டை என்பதால் தங்கராசு தி.கவும் வீரமணி தி.க.வும் தஞ்சை அரசியலில் முக்கியபங்கு வகித்தனர்.
1977 பொதுத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று முதல்வரானபோது சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் (ஐசரிவேலன் வெற்றி) தவிர மீதி 13 தொகுதிகளில் திமுக வெற்றி. தஞ்சைமாவட்டத்தில் 8 தொகுதிகள் தி.மு.க வுக்கு.
அப்போது  தஞ்சையில் தி.மு.க மேடையில் கருணாநிதி:
தஞ்சையிலே நஞ்சையுண்டு,புஞ்சையுமுண்டு.நன்கறிவேன்.(சற்று நிறுத்தி)நன்றியும் உண்டு என்று தெரிந்துகொண்டேன்!”

எம்.ஆர்.ராதா கடைசி காலத்தில் ’வேலும் மயிலும் துணை’,’கந்தர் அலங்காரம்’ என்று இரண்டு ‘பக்தி’ படங்களில் நடித்திருந்தார்.இரண்டுமே 1979ல் ரிலீஸ் ஆகியிருந்தன.
எம்.ஜி.ஆர் அப்போது திருவாரூர் தங்கராசு நடத்திய விழா ஒன்றில் கலந்துகொள்ளவில்லை. அது குறித்து கருணாநிதிக்கும்,வீரமணிக்கும் ஏளனம்.(எம்.ஜி.ஆர போயி நம்புனியே தங்கராசு!உனக்கு நல்லா வேணும்!)அரசியல் நோக்கர்கள் ‘சரிதான். தங்கராசுவை எம்.ஜி.ஆர் கை கழுவுகிறார் போல’ என்றே நினைக்க வேண்டியிருந்தது.

கம்யூனிஸ்ட் எஸ்.ஜி.முருகையன் கொலை செய்யப்பட்ட போது நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல்.
அப்போது திருவாரூர் தங்கராசு நாகையில் பேசிய மேடைப்பேச்சில் எம்.ஆர்.ராதா பற்றியும் எம்.ஜி.ஆர் பற்றியும் :

”நல்லா இருந்த மூதேவி இந்த எம்.ஆர்.ராதாவுக்கு சாகிற காலத்தில இப்படியா புத்தி கெட்டுப் போகனும். இவ்வளவு காலமும் பகுத்தறிவு பேசிக்கிட்டிருந்த மூதேவி இப்படி பண்ணுமுன்னு யார் நினச்சா? வேலும் நாயும் துணை! கந்தர் அலங்கோலம்! ம்ஹும்...அலங்கோலம்..கந்தர கோலம்..”

”எம்.ஜி.ஆர் ஏன் நான் நடத்துன விழாவுக்கு வரல்லேன்னு தெரியுமா? என்னமோ எனக்கும் எம்ஜி.ஆருக்கும் இனி உறவே இல்லன்னு அரசியல் பண்ணுறானுக. என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா? எனக்குத்தான் தெரியும். இப்ப சொல்றேன். நானும் எம்.ஜி.ஆரும் தான் கார்ல ஒன்னா கிளம்பினோம். வான்கோழி பிரியாணியோ என்னவோ எம்.ஜி.ஆருக்கு ஒத்துக்கல. வழியில என்ன நடந்துச்சு தெரியுமா? கரும்புக்காட்டில எம்.ஜி.ஆரு வெளிக்கி போனாருன்னா நம்புவியா?வயித்தால  சும்மா பீச்சிக்கிட்டு அடிக்குது . சர்..சர்னு. டே யாராவது நம்பமுடியுமா? முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
கரும்புக்காட்டுல வெளிக்கி போனாரு. ஒரு தடவை ரெண்டு தடவை இல்ல. சும்மா தண்ணியா பீச்சிக்கிட்டு போகுது.
நான் தான் சொன்னேன்.’ நீங்க விழாவுக்கு வரவேண்டாம். ஓய்வெடுங்க’ன்னு அனுப்பிவச்சேன்.தெரிஞ்சிக்க”

http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_18.html

3 comments:

  1. சுவாரசியமான தகவல்கள்...

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. அறியாத தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  3. இவரது தலைமையில்தான் என் பெற்றோர் திருமணம் நடந்தது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.