Share

Nov 28, 2019

மிசா ராமசாமி


என்னோடு இருந்த மற்றொரு நண்பர்
சுகுமார் மூலமாக,
நாங்கள் குடியிருந்த வீட்டில் தங்குவதற்காக,
ராமசாமி வந்து சேர்ந்தார்.
அந்த எங்கள் நண்பருக்கு ஒரு பேங்க்கில் வேலை. அதே பாங்கில் வேலைக்கு வந்தவர் இந்த ராமசாமி.
அவருடைய உடல் அமைப்பில் பிள்ளையாரின் அம்சங்கள் முழுமையாய் இருந்தன. உயரமும் குறைவு.
குண்டு ராமசாமி.
இன்னொரு பேங்கில் வேலை பார்த்த ஒருவரும் எங்களோடு அப்போது இருந்தார். அவர் திருமணமானவர்.
ராமசாமி ஐயர் ஒரு பேங்க்கில் வேலை பார்த்தவர்.
பேங்க் வேலையில் சொந்த ஊரில் இருந்த போதே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். எமர்ஜென்ஸிக்கெதிராக தீவிர அரசியல் செயல்பாடுகளில் இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் காரரான ராமசாமி ஐயர் மிசாவில் சிறையில் அடைக்கப்பட்டார்..
மிசா கைதிகள் அனைவரும் விடுதலையான போது அவரும் விடுதலையானார்.
ரொம்ப சிரமத்திற்கு பிறகு தான் பேங்க் வேலை மீண்டும் அவருக்கு கிடைத்தது.
உடனே நான் உத்யோகம் பார்த்துக்கொண்டிருந்த இந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். நானும் அரசாங்க பணியில் புதிதாக அப்போது சேர்ந்திருந்தேன்.
அவர் எங்கள் குடியிருப்புக்கு வந்த பின் இன்னும் இருவர் எல். ஐ. சி உத்யோகத்தில் இருந்த நடுத்தர வயதினர் அந்த அறைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு குடும்பம் ரொம்ப தூரமான ஒரு ஊரில்.
இப்போது எங்கள் அறையில் ஆறு பேர். அனைவரிலும் நான் தான் இளையவன். எனக்கு மீசை கூட சரியாக அப்போது அரும்பவில்லை.
ராமசாமி திருமணமாகாதவர் என்றாலும் நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.
தி.க.காரரான அழகர் பால் கடை வைத்திருந்தார். பனங்கற்கண்டு பால் சூடாக தருவார். பிரட் போல ’பன்’ அவர் கடையில் இருக்கும்.
இரவு உணவு முடிந்தவுடன் அழகர் கடைக்கு போய் பால் சாப்பிடுவோம்.
அவர் ராமசாமியை ரமணி என்று அழைத்தார். இருவருக்கும் நெருக்கம். இந்த தி.க.காரர் அழகரும் ஆர்.எஸ்.எஸ் ராமசாமியும் ஒரே சிறையில் மிசாவில் இருந்திருக்கிறார்கள்.
அங்கே மிசா கைதிகளாய் இருந்த அரசியல்வாதிகள் அனைவருமே ராமசாமியை ரமணி என்று தான் அழைப்பார்களாம்.
ராமசாமி சொன்னார். அவருடைய ஊரில் அவருடைய சொந்த பந்தங்களும் ரமணி என்றே இவரை அழைப்பார்களாம்.
திராவிடர் கழகம் அழகரும், ஆர்.எஸ்.எஸ். ராமசாமியும் மிகுந்த கண்ணியம் கலந்த நட்புடன் பழகுவார்கள். அழகர் முதியவர்.
ரமணியும், அழகரும் எதிர் அரசியல் பேசவே மாட்டார்கள்.
வழக்கம் போல் இரவு பனங்கற்கண்டு பால் சாப்பிட அழகர் கடைக்குள் நுழைவோம்.
அழகர் ’வாங்கய்யா’ என்று எங்களை வரவேற்பவர்
அடுத்து “ரமணி, வாங்க” என்பார்.
ஒரே முறை என்னிடம் அழகர் “ராஜநாயஹம், நீங்க ரொம்ப சின்ன பையன். ரமணி ஆர்.எஸ்.எஸ்.காரர். அவர் சொல்ற அரசியல நம்பிடாதீங்க, வாலிபர்கள தான் ஆர்.எஸ்.எஸ் காரங்க மாத்த பார்ப்பாங்க” என்றார்.
ஆனால் ஒரு அதிசய ஆச்சர்யம். ரமணி அவருடைய கொள்கை, கருத்து எதையும் என்னிடம் பேசியதே இல்லை. இதை அழகரிடம் சொல்லி தெளிவு படுத்தினேன்.
ஆசுவாசமான அழகர் “நான் சொன்னத மறந்துடுங்க. ரமணி கிட்ட ’அழகர் இப்படி சொன்னார்’னு சொல்லிடாதீங்க. அவர் மனம் புண்பட்டு போயிடுவார். ரொம்ப நல்ல மனுஷன்.” என்றார்.
இருவருக்கும் நெருக்கம் இருந்தது. ’ரமணிக்கு திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும். பாவம் மிசாவில ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்’ என்று அழகர் கவலைப்படுவார்.
பெரியார் இறந்த அன்று நடந்த அரசியல் பற்றி நடுங்கும் குரலில் அழகர் வேதனைப்படுவார்.
”அய்யா இறந்த உடனயே, உடம்பு இருக்கும்போதே, ரெண்டு க்ரூப்பா உட்காந்துட்டாங்கங்க. எம்.ஜி.ஆர், திருவாரூர் தங்கராசு, எம்.ஆர்.ராதா ஒரு புறம். ஆமா, ராதா ஆதரவு தங்கராசுவுக்கு.
கருணாநிதி, மணியம்மை, வீரமணி இன்னொரு புறம்னு உக்காந்துட்டாங்க. ஏன் கேக்கறீங்க” தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அழகர் குமுறுவார்.
ரமணி எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க இருப்பார். நல்ல குண்டு. ’பெரிய தூரு’ என்று அவருடைய பட்டெக்ஸ் பற்றி பஜாரில் கடை வைத்திருந்த சர்புதின் பாய் சொல்வார். சர்புதினும் ரமணி போலவே குண்டு தான். என்றாலும் ரமணியை ரொம்ப கிண்டலடிப்பார்.
ரமணி இடுப்பில் அரிசிப்பையை கட்டி விட்டால் அவர் நடக்கும்போதே மாவாய் ஆகிவிடும் என்று சர்பு சொல்வார். க்ரைண்டர் ராமசாமி.
ரமணி இப்படி ஒரு ஜோக் அடித்தால் அவர் உடனே நின்ற இடத்தில் ஒரு அடி தள்ளி நின்று உற்று பார்ப்பார். அதன் பிறகு தான் முகத்தை மேலும் கீழும் ஆட்டி சிரிப்பார்.
நடக்கும் போது நான் ஒரு ஜோக் சொல்கிறேன் என்று வைத்துக்கொண்டால், உடனே ரமணி நின்று விடுவார். ஒரு அடி பின்னால் போவார். உற்று என் முகத்தை பார்ப்பார். மேலும் கீழும் உச்சி முதல் பாதம் வரை ஒரு ஆச்சரியப்பார்வை.
அப்புறம் தலையை ஆட்டி சிரிப்பார்.
சர்பு ஒரு நாள் சொல்வார் ”ராமசாமி, இன்னக்கி மரத்தில வால தொங்க விட்டு ஊஞ்சலாடுனியாமே”
மறு நாள் “ யோவ் ரமணி, இன்னக்கி தும்பிக்கய ஊணி நாலு காலயும் தூக்கி சங்கு சக்கரமா சுத்துனியாமேய்யா..மூன்றாந்தல்ல..” என்பார்.
இதெற்கெல்லாம் ரமணி தன் பாணியில் உள்ளூர் வியாபாரி சர்புதினை ஏற இறங்க பார்த்து விட்டு தலையை ஆட்டி சிரிப்பார்.
ராத்திரி நாங்கள் குடியிருப்பில் ஆறு பேரும் வரிசையாக படுத்திருப்போம்.
படபடவென்று சத்தமாக ரமணியின் Farting. சரம் பட்டாசு போல. ஆனால் ஒரு அதிசயம். அவருடைய அபான வாயு நாற்றமே எடுக்காது.
அணு குண்டு வெடிச்சத்தத்தில் அபான வாயு அவ்வப்போது வெளியேறும்.
ஒரு நாள் அவருக்கு வலது புறம் நானும், இடது புறம் சுகுமாரும் ஒரு பெரிய வெடி சத்தம் கேட்டு ஒரே நேரத்தில் பதறி இரு பக்கமும் எழுந்து விட்டோம்.
ரமணி “சாரி, நேக்கு தான் காஸ்ட்ரபிள். ஒன்னுமில்லை படுத்துண்டுடுங்க… சாரி.” என்று சொன்னார்.
ஒரு நாற்றம் எடுக்காத வெடி சத்த குசு.
வித்தியாசமான மறக்க முடியாத அனுபவம்.
மிசாவில் அவர் டூ டாய்லட் போகிற சூழல் பற்றி விவரிப்பார்.
மலக்கிடங்கு. சின்ன நீண்ட திண்டில் அங்கெங்கே அவ்வப்போது கைதிகள் வருவார்கள். உட்கார்வார்கள். உட்கார்ந்தவுடன் கீழேயுள்ள மலக்கிடங்கில் உள்ள ஈக்கள் எழுந்து இவரை மூடி விடும். முகத்தில் தேனடை போல ஈக்கள்.
”யாரு… யார் நீங்க..” சக கைதி கேட்கும் போது இவர் முகத்தில் உள்ள ஈக்களை இடது கையால் மழித்து (ஷேவ் செய்வது போல)
“என்ன தெரியலியா? நான் தான் ராமசாமி. ரமணிம்பேளே..” என்பாராம்.
சிறையில் எந்த அந்தரங்கத்திற்கும் மரியாதை, மதிப்பே கிடையாது.
இங்கே வேலைக்கு வந்த பின்பு, காலையில் எழுந்தவுடன் எங்கள் வீட்டில் இருந்து கிளம்பி,
ரமணி எப்போதும் ஊரில் இருந்த ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு போய் அங்கே இருக்கும் ஃப்ளஷ் அவுட் டாய்லட்டில் காலை கடன் முடிப்பார்.
நாங்கள் குடியிருந்த வீட்டில் எடுப்பு கக்கூஸ். தோட்டி வந்து சுத்தம் செய்வார். எவ்வளவோ முயற்சி செய்தும் ஃப்ள்ஷ் அவுட் டாய்லட் உள்ள வீடு எங்களுக்கு கிடைக்கவில்லை. ரொம்ப சொற்பம். அதுவும் சொந்த வீட்டுக்காரர்கள் தான் அப்போது அப்படி வீட்டில்.
இரவில் தாக சாந்தி செய்யும் எங்கள் நண்பர்கள் முன் முதலில் வேடிக்கை தான் பார்த்தார்.
நான் மது குடிக்காவிட்டாலும் மது போதையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய அத்தனை கலாட்டாவையும் செய்பவன்.
 ”என்ன, நாங்க தண்ணியடிச்சவங்க அமைதியா இருக்கோம். நீ ஏய்யா போதக்காரன் சேட்டையெல்லாம் பண்ற” என்பார்கள்.
ரமணியிடம் ஒரு நாள் “ஐயரே, கொஞ்சம் சரக்கு குடிச்சி பாக்கிறீங்களா?” என்று கேட்டார்கள்.
சித்தர் போல “ Why not?” என்றார்.
அவர்கள் ஒரு டம்ளரில் ஊற்றி கொடுத்தார்கள்.
இவர் தரையில் அமர்ந்து டம்ளரில் இருந்த பிராந்தியை மெதுவாக வாயில் வைத்து ’குடிகார அவசரமே இல்லாமல்’
ஏதோ பால் சாப்பிடும் குழந்தை போல,
இரண்டு கையாலும் கண்ணாடி டம்ளரை பிடித்துக் கொண்டு,
சர்பத் சாப்பிடுவது போல முக சுளிப்பே இல்லாமல்
நிதானமாக கண்ணை உருட்டி எல்லோரையும் பார்த்துக்கொண்டே குடித்தார்.
அடுத்து ஒரு டம்ளர் சரக்கையும் அதே பாணியில் தான்.
மது இப்படி அவரை ஆக்ரமித்து விட்டது.
நான் வேலையே பிடிக்காமல் ராஜினாமா செய்து விட்டு ஊரை விட்டு கிளம்பினேன். ஒரு வரி resignation letter. “ I resign my job as the nature of work does’nt suit my temporament”
ஒரு முறை ரயிலில் சென்னையில் இருந்து நானும் என் அப்பாவும் திரும்பி வரும்போது ராமசாமியை எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் சந்தித்தோம். அதே உற்சாகம். அதே சிரிப்பு.
என்னைப்பற்றி அப்பாவிடம் சொன்னார்: “தொர, துறு துறுப்பு. ஜாலியான டைப். ஊரில ஒவ்வொரு இடத்த பாக்கும் போது உங்க பையன் ஞாபகம் எப்போதும் வரும்.” மேலும் பெருமையாக சொன்னார்.
என் அப்பாவுக்கு நான் அரசாங்க வேலையை விட்டதில் கடும் அதிருப்தி. அந்த அதிருப்தியை ராமசாமியிடமும் கவலையுடன் தெரிவித்தார்.
ராமசாமிக்கு திருமணம் ஆனது. குழந்தைகள் பிறந்தார்கள்.
பின்னால் மதுரைக்கு வந்த சர்புதின் சொன்னார். ”ராமசாமி பேங்க் வேல முடிஞ்சி கெளம்பினாலே தண்ணி தான்யா. குடிச்சிட்டு அங்கங்க விழுந்து கெடக்கிறாப்ல.”
அடிக்ட் ஆகி விட்டார் ரமணி என்பது தெரிந்தது.
பின்னால் ஒரு துக்க செய்தி.
மனைவி குழந்தையை விட்டு விட்டு அகால மரணமடைந்து விட்டார்.
அரசியலில் உச்சம் தொட்ட பிரமுகர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினாராம்.
காரணம் பிரபல பிரமுகரின் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் ராமசாமி உழைப்பு இருந்ததாம்.
அவருக்காக ஊரில் ஓட்டு கேட்டு வீடு வீடாக படியேறி இறங்கியிருக்கிறார் ராமசாமி.
கல்லாய் உறைந்து போன ராமசாமி பற்றிய நினைவுகள்.
………..

Nov 27, 2019

பிடில் வாத்தியார்எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார்.
வயலின் வாசிப்பவர் அல்ல.
உடம்பை அடிக்கடி சொறிவார்.
அதனால் பிடில் என்று பெயர்.
இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?

Conjugation.'See' verb.
I see என்று present tenseல் ஆரம்பித்து future perfect continous tense வரை மாணவர்கள் எழுத வேண்டும்.

ப்ளாக் போர்டில் பிடில் To see எழுதி விட்டு கட்டை தொண்டையில் சொல்வார்.

“எழுது. Conjugation.
 ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’, ம்.. ம்... எழுது”
என்று future tense பற்றி மட்டுமே சொல்வார்.
திரும்ப திரும்ப I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ சொல்லி குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.

அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.

குனிய வைத்து முதுகில் பட,படவென்று பிடில் கையால் அடித்து ”முன்னால போய் முழங்கால் போடு”

நான் முழங்கால் போட்டவாறே காஞ்சுகேசன் எழுதும்போது

ஒரு பையன் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தான்.
“ சார். இந்த ப்ரசண்ட் பெர்ஃபெக்ட் கண்ட்டினுவஸ் டென்ஸ்ல..”

அவன் வார்த்தையை முடிக்கு முன்னரே “ அதத் தான் நான் சொல்லிக்கிட்டிருக்கேன்…இவனுக்கு சிரிப்பு வருது” என் முதுகில் மீண்டும் நான்கைந்து அடி.

”எழுது. ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’ எழுது”. கட்டைத் தொண்டையில் கத்தினார்.

உடம்பில் விலா பகுதியில் சொறிந்து விட்டு ”I’க்கும் ’We’க்கும் ’Shall’. மத்ததுக்கெல்லாம் ’Will’“

என் முதுகில் மீண்டும் ரெண்டு அடி.
’ஐ’க்குக்கும் ’வி’க்கும் ஷால். மத்ததுக்கெல்லாம் வில்.

வகுப்பில் முதல் வரிசை பெஞ்சில் இரண்டு குட்டை பையன்கள். இருவருக்குமே Funny face. ஒவ்வொரு வாரமும் ஒரு க்ளாஸ் Non – detailed.
சிலபஸில் ராபின்சன் குருசோ நாவல்.
அந்த இரண்டு பையன்களில் ஒருவனுக்கு குருசோ என்றும் இன்னொருவனுக்கு ஃப்ரைடே என்றும் பிடில் பெயர் வைத்தார்.
ராபின்சன் குருசோ பாட வகுப்பு என்றால் அந்தப் பையன்கள் இருவர் முகமும் அன்று முந்திய வகுப்புகளிலேயே பதட்டமாகி இருளடைந்து விடும்.

கதையில் ஃப்ரைடே செய்யும் முட்டாள் தனங்களுக்கு வகுப்பில் உள்ள ஃப்ரைடே முதுகில் அடி விழும்.

 இப்படி முட்டாப்பயல கூடவே வைத்திருக்கானே குருசோ என்று பிடில் கோபப்பட்டு புத்தகத்தை கீழே வைத்து விட்டு வகுப்பில் உள்ள குருசோ முதுகிலும் நாலு சாத்து சாத்துவார்.
“மூள கெட்ட பயல கூடவே ஏன் வச்சிக்கிட்டுருக்கற நீ? இடியட், ஃபூல், ராஸ்கல்.”

‘Presence of Mind’ வார்த்தையை பிடில் சொல்லி தான் முதலில் கேள்விப்பட்டோம்.

திருச்சியில் இருந்து பிடில் சென்னை போய் இருக்கிறார். பாரீஸ் கார்னர். ஹை கோர்ட் எதிரில் பிடில் போகும் போது எதிர் ப்ளாட்ஃபார்மில் ஒருவர் தெரிந்த ஆள் போல இருந்திருக்கிறார். நின்று, அவரைப்பார்த்து இங்கிருந்து கை தட்டியிருக்கிறார்.

கை தட்டல். எல்லோரும் திரும்பி பார்த்திருக்கிறார்கள். எதிர் ப்ளாட் ஃபார்மில் போய்க்கொண்டிருந்தவர்கள் மட்டுமில்லாமல் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டிருந்தவர்கள், மற்றும் இவர் நின்ற ப்ளாட்ஃபார்மின் பாதசாரிகளும் நின்று பார்த்திருக்கிறார்கள்.

(ந.முத்துசாமி சொல்வார் “ கைதட்டலுக்கு ராணுவ கட்டளைக்குள்ள பலம் இருக்கு.”)

மீண்டும் எதிர் ப்ளாட்ஃபார்மை பார்த்து பிடில் கை தட்டியிருக்கிறார். எதிர் ப்ளாட்ஃபார்மில் போய்க்கொண்டிருந்த ஒவ்வொருவரும் நின்று நானா? நானா? என்று கைச்சைகையால் கேட்டிருக்கிறார்கள்.

 இவர்
‘அந்த குடைக்காரர்’ என்று சைகைகளால் சொல்லியிருக்கிறார். குடைக்காரரும் ’நானா’ கேட்டுக்கொண்டிருந்தவர், மற்றவர்களால்
“ உங்களைத்தான்” என்று அறிவுறுத்தப்பட்டு சிரமப்பட்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்த அந்த பெரிய ரோட்டை க்ராஸ் செய்து இவரை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார்.

அவர் பாதி ரோட்டை க்ராஸ் செய்யும் போது பிடில் வாத்தியாருக்கு பகீர் என்று ஆகி விட்டது. அவர் தெரிந்த மனிதர் அல்ல. வேறு யாரோ?

உடனே பிடில் ‘Presence of Mind’ வேலை செய்ய ஆரம்பித்தது. கையில் சுளுக்கு போல நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முக பாவத்தில் வேதனை வரவைத்து அவரை நோக்கியே கை தட்டி, மேல் நோக்கி குடை போல் நீட்டி, கை விரல்களை மடக்கி கையை நீவி, நீவி விட்டிருக்கிறார். திரும்ப, திரும்ப கை தட்டி, மேல் நோக்கி நீட்டி, கை தட்டி கையின் முன் பகுதியை நீவி, நீவி விட்டு..

குடைக்காரர் பக்கத்தில் வந்து உற்று பார்த்து விட்டு, மீண்டும் ரோட்டை க்ராஸ் செய்து கொண்டே முனகியிருக்கிறார். “ பாவம் கையில சுளுக்கு. அங்க இருந்து பாக்க கூப்பிடுவது போல தெரிஞ்சிருக்கு “

வகுப்பில் பிடில் தலைப்பொட்டில் தட்டிக்காண்பித்து ”ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் வேணும்டா”

ஸ்கூல் பிக்னிக் ஒன்றிற்காக அதிகாலை ஆறரை மணிக்கு திருச்சி டவுன் ஸ்டேசனில் ரயிலில் ஏறி ஒரு நூறு பேர் உட்கார்ந்திருக்கிறோம்.

ஒருத்தன் “ டேய் பிடில் பார்றா. வெளிக்கி இருக்குதுடா”

எட்டிப்பார்த்தால் ஸ்டேசனை ஒட்டிய முள் காட்டில் பிடில் வாத்தியார் ‘Nationalize’ பண்ணிக்கொண்டிருந்தார்.

”பிடில் மாமா, பிடில் மாமா இங்க பாருங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க” என்று கோரஸாக பாடும் போது தான் கவனித்து எழுந்து ஒரு முள் மரத்தின் பின் ஒளிந்து மறைந்து கொண்டு ரயிலில் எவனெல்லாம் பாடுறான், சிரிக்கிறான்னு நோட்டம் விட்டார்.

எனக்கு என் அப்பாவிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் மணியார்டர் வருவதுண்டு. பாக்கெட் மணி. பிடில் பீரியடில் மணியார்டர் வந்தால் தொலைந்தேன். பீரியட் முடிந்ததும் முழங்கைகளை சொறிந்து கொண்டே பிடில் “ சம்பளம் வாங்க கையெழுத்து போடணும். பணம் தேவை”

கணிசமாக என்னிடம் இருந்து பணம் கறந்து விடுவார்.

இவர் சம்பளம் வாங்க கையெழுத்து போட பணம் தர வேண்டுமா? அதற்கு நான் ஏன் தர வேண்டும்? இப்படி ஒரு எச்சிக்களைத்தனம் பிடிலுக்கு உண்டு. பணத்தை திருப்பி தரவே மாட்டார்.

கோபமாய் அடிக்க வரும்போது அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு எட்டணா போட்டு விட்டால் அடிக்க மாட்டார்.

நீதி போதனை வகுப்பில் ஜெரால்ட் ஒரு பேனாக்கத்தி வைத்திருப்பதை கண்டு பிடித்த ஆசிரியர் ஒருவர் அதை பிடுங்கி மேஜையின் டிராயரை திறந்து உள்ளே வைத்து விட்டார்.

அடுத்த வகுப்பில் உள்ளே வந்த பிடில் டிராயரை திறந்தவர், கத்தியை நைசாக இடுப்பில் வேட்டியில் செருகிக்கொண்டார். இதை எல்லோருமே பார்த்து விட்டார்கள்.

ஜெரால்ட்டை அடுத்த வகுப்பில் மன்னித்த நீதி போதனை ஆசிரியர் கத்தியை திருப்பி தர ட்ராயரை திறந்தால் கத்தியில்லை. அவர் க்ளாஸ் டீச்சரிடம் கம்ப்ளெயின்ட் செய்ய வலியுறுத்தி விட்டு சென்றார்.

 பிடில் வந்ததும் க்ளாஸ் லீடர் சொன்னான். “ சார் எவனோ ட்ராயர்ல இருந்த கத்திய தேட்டா போட்டுட்டான் சார்”

பிடில் நீளமாக அட்வைஸ். கையையும் காலையும் சொறிந்து கொண்டே ”டேய் இந்த வயசில தேட்டைய போடுற புத்தி இருந்தா உருப்பட மாட்ட. மரியாதயா உண்மைய சொல்லு”

குண்டு நஸீருதின் எழுந்து “ அத தேட்டா போட்டவன் கை குஷ்டம் பிடிச்சிடும் சார். அழுகிப்போயிடும்.”

பிடிலுக்கு ஜிவ்வென்று கோபம். ”இங்க வா” மலை போல எழுந்து ஆடி ஆடி முன்னால் வந்த நஸீருதினை அடி வெளுத்து விட்டார். “உன்ன கேட்டனா நான்? அதிக ப்ரசங்கி”

மூக்கு கண்ணாடியை கீழிறக்கி, பிடில் ஒவ்வொருவர் பெயராக சொல்லி அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது “ப்ரசண்ட் சார்” சொல்வதற்கு பதிலாக “ போட்டுக்க சார்” வேகமாக பையன்கள் சொன்னால் என்ன சொல்கிறான் என்பதெல்லாம் அவருக்கு புரியாது. ப்ரசண்ட் தான் சொல்கிறான் என்று நினைத்து அட்டென்டண்ஸ் ரிஜிஸ்டரில் மெக்கானிக்கலாக ’டிக்’ அடிப்பார்.

பேனாக்கத்தி தொலைந்த நிகழ்வுக்கு பிறகு ஊட்டி குண்ணூர் சிரில் வின்சண்ட் “ தேட்டா போடாத சார்” என்று படுவேகமாக சொல்வான். அதற்கும் ‘டிக்’ அடித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் சிரிப்பதை கண்டு பிடித்து விட்டார்.

சிரில் வின்சண்ட் பெயரை சொல்லி விட்டு காதை தீட்டி ஒரு நாள் கவனம் செலுத்தினார். இது எங்க கண்டு பிடிக்கப்போகுது என அன்று சிரில் வின்சண்ட் ரொம்ப அழுத்தம் கொடுத்து ஒவ்வொரு வார்த்தையாக, நிதானமாக கொஞ்சம் ராகம் போட்டுசொன்னான் “ தேட்டா.. போடாத.. சார்..”

பிடில் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரை கீழே வைத்து விட்டு மூக்கு கண்ணாடியை கழற்றி வைத்து விட்டு
“ இங்க வா.” அழைத்தவர் குரலுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் சிரில் வின்சண்ட்டுக்கு. பிடில் அடி வெளுத்து விரிய கட்டி விட்டது.

English Hand writing note bookல் என்ன எழுதப்பட்டுள்ளது என்று வாசிக்காமல் கையெழுத்து போடுவார்.

 ’பிடில் மாமா பிடில் மாமா எங்க போறீங்க, உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க’ என்பதை  இங்க்ளீஷில் அப்படியே fiddle mama fiddle mama enga poreengaன்னு எழுதி நான் கையெழுத்து வாங்கி எல்லோருக்கும் காட்டியிருக்கிறேன்.

மறக்க முடியாத ஆளுமை பிடில் வாத்தியார். நகைச்சுவை உணர்வு மிக அதிகம்.
வயதானவர் தான். ஆனாலும் பெருமையோடு சொல்வார்.”டேய். உங்க எம்.ஜி.ஆர் என்ன விட வயசானவன்டா.”

......

பிடில் வாத்தியார் நல்ல நீலவான நிறத்தில் பளிச்சென்று சட்டை அயர்ன் செய்து அணிந்திருப்பார். கறுப்பு ஃப்ரேம் சின்ன வட்ட சைசில் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார்.
தோளில் ரெண்டாக  மடித்த  துண்டு ஒரு பகுதியை கழுத்துக்கு அந்தப்புறம் முதுகில் தொங்கும்படி விட்டிருப்பார். தினமும் ஷேவ் செய்திருப்பார்.

ஒல்லியான உடல் வாகு. நல்ல உயரம்.
அமிதாப் பச்சனை பற்றி அறிந்திருந்தால் ஒரு வேளை “டேய் உங்க அமிதாப்பை விட நான் ஹைட்டுடா” என்று கட்டை தொண்டையில் சொல்லியிருப்பார்.

 அவருடைய குரல் நிச்சயம் எம்.ஆர் ராதா குரலல்ல என்றாலும் அது விசேஷமான கரகரத்த கணீர் குரல். ரிட்டயர்ட் ஆன பிறகும் பள்ளியில் சில ஆசிரியர்களுக்கு நிர்வாகம் தொடர்ந்து வேலை தருவதுண்டு. அப்படி ஒருவர் தான் பிடிலும்.

’பிடில் மாமா, பிடில் மாமா, பிடில் வாசிங்க,
உங்க பிடில் கம்பி அந்து போனா என்ன பண்ணுவீங்க.’

தமிழ் வாத்தியார் ஒருவர் ரொம்ப அள்ளி விடுவார். அவர் பெயர் அல்ப்பி.

திருச்சியில் ரீல் ஓட்டுனா வட்டார வழக்கு ’அல்ப்பி.’ மதுரையில் கதை விட்டா ’குதாம் குல்ஃபி’.

அல்ப்பி குட்டையாக இருப்பார்.

அல்ப்பியும் பிடிலும் ஒரு வகையான love and hate relationshipபில் எப்போதும் இருப்பார்கள். குட்டையான அல்ப்பியின் தோளில் பிரியத்துடன் கையை போட்டுக்கொண்டு படியில் ஏறி பிடில் வரும் காட்சி கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அல்ப்பி வகுப்பு நடத்தும்போதே அவருடைய நண்பர்கள் அவரை காண வருவதுண்டு. மாணவர்களும் ரசிக்கட்டும் என்று அவர்களிடம் பேசும் போதே ’கவனிங்கடா’ என்று முகத்தை திருப்பி மாணவர்களை பார்த்து சிரிப்பார்.

வந்த நண்பர்கள் கிளம்பும் போது “ நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க” என்று நாடகத்தனத்துடன் பாடுவார்.

நான் இது தான் சாக்கு என்று வகுப்பின் முன் வந்து அந்த பாட்டிற்கு டான்ஸ் ஆடுவேன். வந்தவர்கள் எப்போதும் வெட்கப்பட்டு, முகமெல்லாம் சிவந்து தான் பிரியா விடை பெறும்படி இருக்கும்.

”ஐயா, மல வேதனை, பிரசவ வேதனை, மரண வேதனை இம்மூன்றும் அடக்கவே முடியாது. தாங்க முடியாதது” என்பார். அதனால் அவரிடம் பையன்கள் எப்போதும் வகுப்பில் பாடம் நடத்தும் போது ”ரெண்டுக்கு வருதுய்யா” என்று சொல்லி வெளியேறி சுற்றுவார்கள். வகுப்பு முடியும் வரை வரவே மாட்டார்கள்.

பிடிலுக்கும் அல்ப்பிக்கும் அடிக்கடி மனஸ்தாபம் வந்து விடும். அல்ப்பி தமிழ் வகுப்பில் “ பனை மரம் மாதிரி வளந்தவனுக்கு  உடம்பெல்லாம் விஷம். விஷப்பய. அயோக்கிய பயல நம்புனேன். கழுத்தறுத்துட்டான்.”

பிடில் “ டேய் கள்ளன நம்பலாம். ஆனா குள்ளன நம்பக்கூடாது. வாயில வர்றதெல்லாம் பொய் தான்டா. அவன் புழுத்துத்தான் சாவான்.”

இந்த அரசியல் பற்றி விளக்க எந்த கழுகாரும் தேவையேயில்லை.

பசங்க இடைவேளையில் பேசிக்கொள்வோம். “டேய் பிடிலுக்கும் அல்ப்பிக்கும் சண்டடா. அதான் இப்படி திட்டிக்குதுங்க.”

அடுத்த மாதம் பிடில் அல்ப்பியின் தோளிலும், அல்ப்பி அதே சமயம் பிடிலின் இடுப்பிலும் கை போட்டுக்கொண்டு சிரித்து பேசிக்கொண்டே ஃபேகல்ட்டி ரூமில் இருந்து வெளி வருவார்கள்.

பசங்க”டேய், பிடிலும் அல்ப்பியும் மறுபடியும் சேந்துடுச்சிங்கடா”

பள்ளிக்கு இன்ஸ்பெக்ஷன் என்றால் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஒரு மாதத்திற்கு முன்னிருந்து ஆசிரியர்கள் படு சீரியஸ் ஆகி விடுவார்கள்.

இன்ஸ்பெக்டர் வருகிற தேதியில் இன்று இல்லை. இன்னும் நான்கு நாள் கழித்து வருகிறார் என்று தகவல் வரும். டிரஸ் கோட். வெள்ளை சட்டை, மெரூன் ட்ரவுசர் அயர்ன் செய்து போட்டுக்கொண்டு வரவேண்டும். காலுக்கு ஷாக்ஸ் போட்டு வெள்ளை கான்வாஸ் ஷூ படு சுத்தமாக இருக்க வேண்டும்.
ப்ளே க்ரவுண்ட்டுக்கு போகிற P.T க்ளாஸ் கூட கேன்சல் ஆகி விடும். இன்ஸ்பெக்டர் வகுப்பறைக்கு தான் வருவார் என்பது வழக்கமாய் இருந்ததாம்.

ஒவ்வொரு சப்ஜெக்ட் டீச்சரும் ரெடிமேடாக சில கேள்வி பதில்களை முதல் தர மாணவர்களை வைத்து தயார் படுத்துவார்கள்.
இன்ஸ்பெக்டர் வரும்போது வகுப்பறைகளுக்கு வெள்ளையடிக்கப்பட்டு ப்ளாக் போர்ட் கறுப்பு சேர்க்கப்பட்டு பிரமாதமாய் இருக்கும். இன்ஸ்பெக்டர் வந்தால் நடக்க வேண்டிய விதம் பற்றி ரிகர்சல் கூட நடத்தப்படும்.
தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து ஆசிரியர்களை எச்சரித்துக்கொண்டே இருப்பார். மாணவர்களிடம் கேள்விகள் கேட்பார். இத்தனைக்கும் பள்ளி மிகவும் பெயர் போன பள்ளி.
ஒவ்வொரு வருடமும் பொதுத்தேர்வில்
நல்ல ரிசல்ட் தரும் பள்ளி.

சரியாக எட்டாம் வகுப்புக்கு பிடில் வாத்தியார் க்ளாசில் தான் இன்ஸ்பெக்டர் வகுப்பறையில் அன்று நுழைந்தார். அவருடன் தலைமையாசிரியர் கூடவே. பையன்கள் அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றார்கள்.

நான்காவது வரிசையில் ஒரு மாணவன் டெஸ்க்கில் தலை வைத்துப் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தான்.

எல்லோரும் எழுந்து நிற்கும்போது ஒருவன் மட்டும் எழுந்து நிற்கவில்லை. அதோடு தூங்கிக்கொண்டும் இருக்கிறான்.

இன்ஸ்பெக்டர் அவனை கவனித்து விட்டார். தலைமையாசிரியர் அவமானத்துடன் பிடிலை கோபப்பார்வை பார்த்தார். அர்த்தம்: ‘யோவ், என்னய்யா க்ளாஸ் நடத்துற.’

அதற்குள் பல மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்தவனை பெயர் சொல்லி ”எழுந்திருடா டேய்” என்கிறார்கள். இரு பக்கத்தில் இருந்த இரு பையன்கள் அவனை தட்டி எழுப்புகிறார்கள். அவன் பதறிப்போய் எழுகிறான்.

பிடில் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் “ டேய் நீ படு, படுறா” என்கிறார். ”பேசாம படு”

பக்கத்தில் நின்று கொண்டிருந்த தலைமையாசிரியர் மெச்சாடோ திகைப்புடன் பிடிலை பார்க்கிறார்.

“ஃபாதர், அவனுக்கு ஃபீவர். ஹை ஃபீவர். சூசையிடம் ஒரு ரிக்ஷா கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். அவன வீட்டுக்கு அனுப்பனும். இன்ஸ்பெக்ஷன் என்பதால் காய்ச்சலோட ஸ்கூலுக்கு வந்துட்டான் முட்டாப்பய. ஒடம்பு ரொம்ப முடியலன்னா லீவு போட வேண்டியது தானே.
இன்ஸ்பெக்ஷன் அன்னக்கி லீவு போடக்கூடாதேன்னு பொறுப்பா வந்திருக்கான். பாவம்”

தலைமையாசிரியர் ஃபாதர் மச்சோடாவுக்கு ஆசுவாசம். பிடில் சமாளிப்பு அவருக்கும் புரிந்தது.

இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். சில பையன்கள் பதில் சொன்னார்கள். வெரி குட் சொல்லி விட்டு அடுத்த வகுப்பிற்கு கிளம்பினார்.

தலைமையாசிரியர் ஃபாதர் மெச்சாடோ கிளம்பு முன் தலையை ஆட்டி பிடில் கண்களைப்பார்த்து தன் கண்ணாலேயே நன்றி சொன்னார்.
நான் நன்றி சொல்வேன் உன் கண்களுக்கு.

தலைமையாசிரியருடன் இன்ஸ்பெக்டர் கிளம்பியவுடன் மாணவர்கள் ஆசுவாசமாக ஆகும்போது பிடிலின் திறனை உணர்ந்து சந்தோசமாக சிரித்தார்கள். பிடில் தன் வலது பக்க நெற்றிப் பொட்டில் கை வைத்து சொன்னார் “ Presence of Mind!”

எல்லா பையன்களும் சிரித்து ரிலாக்ஸ் ஆனோம். நாங்கள்  தூங்கிக்கொண்டிருந்த அந்த பால் மோகனைப் பார்த்து சிரித்தோம். அவனும் சிரித்தான்.
’நான் தான் இன்னக்கி இங்க ஹீரோ’ என்ற தோரணையில் பெருமையாக சிரித்தான். பிடிலைப் பார்த்தும் சிரித்தான்.

 பிடில் “ இங்க வா”. பால் மோகன் தலையை குனிய வைத்து முதுகில் பலமாக சட,சட என அடித்தார். ”நீயுமா சிரிக்கற. நீயும் சிரிக்கற.கொழுப்பு.”  விடவில்லை. அடி வெளுத்து விட்டார்.

....


Nov 22, 2019

ஆன்ம லாபம்
நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்?
மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்?
என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”

Vertigo ( 1958 movie )


ஜேம்ஸ் ஸ்டீவார்ட் (James Stewart) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றவர்.
எம்பையர் பத்திரிகை இன்று வரை வந்துள்ள நூறு திரை நாயகர்களில் இவரை பத்தாவது ரேங்கில் வைத்து கௌரவித்தது.
இசை ஞானம் உள்ளவர். அக்கார்டியன் வாசிப்பார்.
ஜேம்ஸ் ஸ்டீவார்ட் ஹாலிவுட் நடிகர்களில் மிக வித்தியாசமானவர். முதல் காரணம் அவர் மிகவும் எளிமையானவர். இரண்டாவது காரணம் தான் அவரை மற்ற ஹாலிவுட் நடிகர்களிடம் இருந்து மிகவும் வேறுபடுத்தி தனிமைப்படுத்தி காட்டுவது.
இவருக்கு ஒரே மனைவி.
இவர் விவாகரத்து செய்ததே கிடையாது.
இவர் மனைவி க்ளோரியா தான் இறக்கும்வரை நாற்பத்தைந்து வருடங்கள் ஸ்டீவார்ட் உடன் குடும்பம் நடத்தியவர்.
மனைவி இறந்து மூன்றே வருடங்களில் 1997ல் இறந்து விட்டார்.
ஜேம்ஸ் ஸ்டீவார்ட் நடித்த மற்றொரு முக்கியமான, அற்புதமான படம் It’s a wonderful life (1947 film).
வெர்டிகோ படத்தில் ஸ்டீவார்ட்க்கு
Acrophobia – fear of heights.

உயரமான இடங்களில் இருந்து கீழே பார்க்க பயம்.
High Anxiety என்ற பெயரில் பின்னால்1977 ல் Melbrooks இந்த Acrophobia கதாநாயகனாக நடித்த படம் சிரித்து வயிறு புண்ணாகி விடும்.
’வெர்டிகோ’ படு சீரியஸ்.
கிம் நோவாக் கதாநாயகி.
முதல் காட்சி யாரும் மிஸ் செய்து விடக்கூடாது.
ஹிட்ச்காக்கின் மர்ம திகில் படங்களில் ரசிகர்களுக்கு ஒரு த்ரில் உண்டு.
தன் படத்தில் தலை காட்டும் ஹிட்ச்காக்கை கண்டுபிடிக்கிற த்ரில்.
அவருடைய சஸ்பென்ஸ் விஷயங்களில் தலையாயது இது.
இந்த படத்தில் கதாநாயகியின் கணவர் கவின் எல்ஸ்டார் அலுவலகத்திற்கு கதாநாயகன்போகும்போது தெருவில் விறுவிறுவென்று ஹிட்ச்காக் நடந்து போவார்.
திகில் பட ரசிகர்கள் என்று இல்லை பொதுவாக நல்ல சினிமா தவறாமல் பார்த்து விடுபவர்கள் இந்த வெர்ட்டிகோ படத்தை மிஸ் பண்ணக்கூடாது.

Vertigo is a must- see classic by standard ! An amazing screenplay and arguably Hitchcock’s greatest directing venture.
கிம் நோவாக் படத்தில் ஜூடி என்ற பாத்திரமாக வருகிறார். ஆனால் அவர் மேடலின் என்ற பெண் ஆக ஸ்காட்டி முன் நடிக்கிறார்.
மேடலின் என்ற கவின் மனைவி தான் இறப்பதாக காட்சி. கவின் அவரை சர்ச் கோபுரத்திலிருந்து
ஜூடி பார்க்கும்போதே தள்ளி விடுவார்.
பின்னால் ஜூடியும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு கன்னிகா ஸ்திரியை திடீரென்று பார்த்து அதிர்ந்து போய் தானே தவறி விழுந்து இறக்கிறார்.
கதாநாயகி கிம் நோவாக் அப்படி பார்த்தால் ஒரு முறை தான் இறப்பார்.
' இந்த இரு பெண் ஒரு சாயலில் தோன்றுகிற திகில் குழப்பம், இறந்து போன காதலி, மனைவி மீண்டும் உயிரோடு வரும் த்ரில் ' என்கிற ஹிட்ச்காக் தீம் தமிழில் நகல்களாக பின்னாளில்
அப்போது
கலங்கரை விளக்கம் தவிர
ஜெய் சங்கர்,ஜெயலலிதா நடித்த "நீ”,
இந்த இருவருமே நடித்த "யார் நீ "
ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா நடித்த "இதயகமலம் " ஆகிய படங்களிலும் வந்துள்ளது.
'இதயகமலம் ' படம் தரமாக எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வந்தது.
கே ஆர் விஜயா அந்த காலங்களில் தான் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது என்று இதயகமலத்தை தான் குறிப்பிடுவார்.
...

Nov 21, 2019

டி.ஆர்.ராமண்ணா - பி.எஸ்.சரோஜா


கூத்துப்பட்டறையில் வகுப்பெடுக்கும் போது
மிக பிரபலமான அந்த கால இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் ’ஸ்திதப்ரக்ஞை’ பற்றி
நான் குறிப்பிட்ட போது விஜய் என்ற ஒரு மாணவன் முகத்தில் பிரகாசம்.
ஒரு இயக்குனராக இடி விழுந்தாலும் கலங்காத அற்புத மனிதர்.
இவர் பற்றி எழுதி தீராது.

ராமண்ணாவுக்கு மூன்று மனைவியர். முதல் மனைவி வித்யா என்பவர். இரண்டாவது மனைவி பி. எஸ். சரோஜா. மூன்றாவது மனைவி தான் ஈ. வி. சரோஜா

மறு நாள் வகுப்பு ஆரம்பிக்கு முன் அந்த பையன் தன் மொபைலில் ஒரு புகைப்படம் ஒன்றை காட்டினான்.
”சார் இவங்கள யாருன்னு தெரியுதா?”
பழம்பெரும் நடிகையும், இயக்குனர் ராமண்ணாவின் மனைவியுமான பி.எஸ்.சரோஜா.
எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் இணைந்து நடித்து ராமண்ணா இயக்கிய கூண்டுக்கிளி படத்தின் கதாநாயகி பி.எஸ்.சரோஜா.

ராமண்ணாவின் புதுமைப்பித்தனில் எம்.ஜி.ஆருடன் நடித்தவர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ’வண்ணக்கிளி’ பட பிரபலமான பாடல் ’அடிக்கிற கை தான் அணைக்கும்’ எல்லோருக்கும் நினைவிருக்கும்.

பி.எஸ்.சரோஜாவின் மகன் கணேஷ் ராமண்ணா.

பி. எஸ். சரோஜா அம்மையார் வயது இப்போது தொண்ணூறு தாண்டி விட்டார். 
மாணவன் விஜய், ராமண்ணா - பி.எஸ். சரோஜாவின் பேரன். மகளுடைய மகன்.


டி.ஆர் ராஜகுமாரி அத்தைப்பாட்டி.
விஜய் ராமண்ணாவின் அப்பாவின் அப்பா இயக்குனர் ஏ.பி.ராஜ்.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய இவர் நாகேஷ் கதாநாயகனாக நடித்த தமிழ் படம் ’கை நிறைய காசு’ இயக்குனர்.

இவருடைய மகள் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

சரண்யாவின் உடன் பிறந்த சகோதரர் தான் ராமண்ணா மகளின் கணவர்.
விஜயின் அத்தை சரண்யா.
ஒரு அக் மார்க் கலைக்குடும்ப வித்து
இந்த விஜய் ராமண்ணா.
............
......

Nov 19, 2019

ஆட்டு புழுக்கை, நாய் குரைப்பு, இளைய குடியா

கரிசல் இலக்கிய மன்னர் கிராவிடம் நேரில் பேசுவது மட்டுமல்ல தொலை பேசியில் பேசுவது கூட சுகமான சமாச்சாரம்.

நான் கவலையோடு சொன்னேன்.
'ஆடு புழுக்கை போடற மாதிரி கவிதையை அப்பப்ப மொத்தமா போட்டுடுறாங்கே. அதோட நம்மையும் அத மோந்து பார்க்க சொல்றானுங்க'

அவரிடம் இப்படி லேசா எடுத்து கொடுத்துட்டா போதும்.

கிரா சொன்னார்.

இப்போ புகைப்படம் எடுத்து பிரபலமாகி விட்ட இளவேனில் முதன் முதலாக ஒரு கவிதை தொகுப்பை போட்டு கொண்டு வந்து கிராவிடம் ஒரு முன்னுரை கேட்டாராம்.

'கவிதை தொகுப்பு போட பணம் எப்படி கிடைத்தது?'

'என்னோட அம்மாவோட சிறுவாட்டு பணம்.
அந்த பணத்தை திருடி கவிதை தொகுப்புக்கு சிலவு பண்ணேன் '

கிரா சொன்னாராம்
 " நீ கவிதை எழுதியது முதல் தப்பு.

அம்மாவோட சிறுவாட்டு பணத்தை திருடி அதை புத்தகமா போட்டது இரண்டாவது தப்பு.

என்னிடம் முன்னுரை கேட்டது மூணாவது தப்பு "

.......

கிரா விடம் அளவளாவும்போது, அவ்வப்போது
டி.கே.சி பிரசன்னமாகி
 (ரத்தமும் சதையுமாக ஜீவனோடு, சிரிக்கும் கண்கள்,மூக்கு ,மீசையோடு )விடுவார்.
அந்த அளவுக்கு கிராவோடு டிகேசி ஒன்று கலந்து விட்டார்.

கிரா அப்படி சொன்ன சுவை நிகழ்வு.

டி கே சி யோடு குற்றாலத்துக்கு கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி சந்தோசமாக ரயிலில் போய்கொண்டிருக்கும்போது தன் சந்தேகம் ஒன்றை கேட்டாளாம்
" தாத்தா தாத்தா ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் ஏன் குலைக்குது?"

டி கே சி சொன்னாராம் " எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

...

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்
பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது. இந்த பழமொழியை பாருங்கள் .

"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
கி ரா என்னிடம் சொன்னார்.

அவரே விளக்கம் சொன்னார்.

ருசி சம்பந்தப்பட்டது.

முக்கியத்துவம் குறித்தது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள்.
 நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும்.

இளைய குடியா - இரண்டாவது மனைவி,
அபிமான தாரம்.

மாகை - மாய்கை

அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம்,
சொக்குபொடி
- இதன் சக்தி,சுவை, முக்கியத்துவம் ..

'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு.

அப்பாவின் இளைய தாரத்தால்,
குழந்தையாக கிரா
(தன் தாயாரும் இருந்த போதும் கூட) படாத பாடு பட்டிருக்கிறார்.

...

The other woman is always powerful!

ராதாகிருஷ்ணன் ன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன்னு பேர் வச்சிக்கிரானா?
இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒரு முறை இப்படி கேட்டார்.

......

.

ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே.
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க
" வள்ளி -தெய்வானை"

.......


Nov 15, 2019

’இயக்குனர் திலகம்’ கே.எஸ் கோபாலகிருஷ்ணன்”படிக்காத மேதை” பெங்காலி கதை.
ஆஷா பூர்ணாதேவி எழுதிய ’ஜோக், பியோக்’ தான் படிக்காத மேதையின் மூலக்கதை.

ட்ரீட்மெண்ட் எல்லாம் தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமியே எழுதித் தயார் செய்திருந்தார்.

ஜி.என்.வேலுமணி அப்போது பாகப்பிரிவினை தயாரித்துக்கொண்டிருந்தார். 
அந்தப்படத்திற்கு மட்டுமல்லாமல். பீம்சிங் தான் படிக்காத மேதைக்கும் இயக்குனர்.
வேலுமணிக்கு ஒரு நியாயமான கவலை. பாகப்பிரிவினைக்கு வசனம் எழுதிக்கொண்டிருக்கும் எம்.எஸ்.சோலைமலையையே கிருஷ்ணசுவாமி தன் படத்திற்கும் ஏற்பாடு செய்து விட்டால் தன் படவேலையில் சிக்கல் ஏற்படுமே.

தற்செயலாக வேலுமணி ஒரு நாள் கிருஷ்ணசுவாமியை சந்திக்க நேர்ந்த போது
“ உடுமலை நாராயண கவி கூட ஒரு குட்டை கவி இருக்கானே. அவனை உன் படத்துக்கு வசனம் எழுதச்சொல்லலாமே!” என்று அனாவசிய ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

ஆனால் தன் சுய நலத்தோடு அவர் சொன்ன இந்த ஆலோசனை குட்டை கவி எனப்படும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாழ்வில் மிகப்பெரிய பொன்னான வாய்ப்பாக ஆகிப்போனது. இதற்குப்பிறகு தான் ’தெய்வப்பிறவி’க்கு வசனம் எழுத வாய்ப்பும் உடனே தேடி வந்தது.
குட்டை கவி அப்போது உடுமலை நாராயண கவிக்கு உதவியாளர்.
 கிருஷ்ணசுவாமியை ‘குனா,கானா கே.எஸ்.ஜி’ சந்திக்கிறார். 
படிக்காதமேதையின் ட்ரீட்மெண்ட்டைக்காட்டி கிருஷ்ணசுவாமி விளக்கியவுடன் கே.எஸ்.ஜி “முதலாளி!முதலாளி! இதுக்கு நானே வசனம் எழுதுறேன் முதலாளி..” என்று கெஞ்சிக்கொண்டே கையைப்பிடித்துக்கொண்டு விட்டார். 
வேறு யாரையாவது முடிவு செய்து விடக்கூடாதே என்ற கவலையும் தான் காரணம்.
முதல் முதலாக படம்பிடிக்கப்பட்ட காட்சி ரொம்ப பிரபலமான நெஞ்சை உருக்கும் காட்சி. ரெங்காராவ் வேலைக்காரன் சிவாஜியை வீட்டை விட்டு வெளியே போய் விடும்படி சொல்லும் காட்சி. “ மாமா… நிஜமாவே போகச்சொல்றீங்களா மாமா!’’
“இந்தக்காட்சியைத் தான் முதலில் படமாக்குவது என்று முடிவு செய்து விட்டோம். ம்ம்.. எழுது வசனம்….” என்று தயாரிப்பாளர் சொன்னவுடன் கதையை முழுக்க அசை போட்டு விட்ட கே.எஸ்.ஜி. பதறி, தழுதழுத்தக்குரலில் சொன்ன வார்த்தைகள்
 “ குடல புடுங்கி வக்க சொல்றீங்களே முதலாளி…”

பீம்சிங் இயக்கிய படிக்காத மேதையும், கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய தெய்வப்பிறவியும் 1960ல் தான் ரிலீஸ். ஏப்ரலில் தெய்வப்பிறவி, ஜூனில் படிக்காத மேதை.

வசனம் எழுதிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
அதன் பிறகு 1962ல் சாரதாவை இயக்கி பின்னர் உச்சம் தொட்டு ‘இயக்குனர் திலகம்’ என்ற பட்டம் பெற்றார்.
இயக்குனர் திலகம் எனும்போது துக்ளக் சோ கேள்வி பதில் ஒன்று நினைவுக்கு வருகிறது.
’தமிழகத்தின் இரண்டு திலகங்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’- இது வாசகர் கேள்வி.
இந்த கேள்வி மக்கள் திலகம், நடிகர் திலகம் குறித்தது என்பது வெளிப்படை.
ஆனால் சோவின் குறும்பான பதில்.
“ இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் சிறந்த இயக்குனர். திரை இசை திலகம் கே.வி.மஹாதேவன் சிறந்த இசையமைப்பாளர்.”

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படம் ’சாரதா’ வை இப்போது பார்க்கும்போது அந்தக்காலத்தில் எப்படி ஒரு புதிய இயக்குனர் இப்படி ஒரு வித்தியாசமான படம் எடுக்க முடிந்தது என்று தோன்றும்.

ஒரே நேரத்தில் இந்தியில் குருதத், தமிழில் எஸ்.எஸ்.ஆர் இருவரையும் கதாநாயகனாக வைத்து எடுத்தார். படம் ரிலீஸுக்கு முன்னரே குருதத் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார்.

ஸ்ரீதர் வசனகர்த்தாவாக இருந்த காலத்தில் அவருக்கு ’அமரதீபம்’ போன்ற படங்களில் வசனம் எழுத உதவியாளராக இருந்தவர் கே.எஸ்.ஜி. 

திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியிருக்கிறார்.
இவர் மீது நிறைய GOSSIP! இன்று சொன்னால் நம்பக்கூட மாட்டார்கள். பல பிரபல நடிகைகள் இவரோடு இணைத்து பேசப்பட்டார்கள்.
மல்லியம் என்ற கிராமம் சொந்த ஊர். இல்லை,பக்கத்தில் வேறு ஒரு கிராமம் என்று கும்ப கோணத்தில் சொல்வார்கள்.
இவர் படங்களுக்கு பெண்கள் அதிகம் வருவார்கள்.
கதைக்கரு என்பதைப்பொருத்தவரை இவர் எடுத்த ’செல்வம்’ முழுக்க பாலியலை சார்ந்தது. Carnal desire!
சிறந்த படம் என்பதை இன்று கூட அறிய முடியும். நாற்பது வருடங்களுக்கு முன் ’செல்வம்’ எதிர்கொண்ட கடும் விமர்சனம் சொல்லி முடியாது.
கிருஸ்தவ நிறுவனங்கள் திரைப்படங்களை பள்ளி மாணவர்களுக்கு காட்டுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள்.
திருச்சியில் ஒரு பாதிரியார் சொன்னார். “சிவாஜி நடித்த படம். கே.எஸ்.ஜி இயக்கம் என்பதால் குடும்பப் பாங்கான படமாயிருக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி பிரபாத்தில் ரிலீஸ் ஆகியிருந்த ’செல்வம்’ பார்க்க பள்ளிக்கூட விடுதி மாணவர்களை அழைத்துப்போய்விட்டோம்.மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.குடும்பப்பெண்கள் இடைவேளையில் தலை நிமிர்ந்து உட்காரமுடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை இன்றும் மறக்கமுடியவில்லை.”
ஒரு சிவாஜி ரசிகர். இப்போதும் சிவாஜி படம் தியேட்டரில் பார்க்காமல் இருக்கமாட்டார். அனேகமாக சிவாஜியின் ஒவ்வொரு படத்தையும் பத்து,இருபது முறை பார்த்து விடுவார்.
ஆனால் ’செல்வம்’ அந்தக்காலத்தில் ரிலீசான போது ஒரு முறை பார்த்த போது படத்தின் இடைவேளையோடு எழுந்து கோபத்தோடு வெளியேறியவர் அதன் பிறகு பழைய படமாக தியேட்டர்களில் போட்டாலும் சரி, இன்று வரை டி.வி.டியிலும் கூட பார்க்கவே மாட்டார்.
தாராபுரம் சுந்தர்ராஜன் ஜமுனாராணியுடன் பாடிய பாடல் “ உனக்காகவா, நான் உனக்காகவா! என்னைக்காணவா,என்னில் உன்னைக்காணவா!” பாடல்,
டி.எம்.எஸ்,சுசிலாவின் ”ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல” பாடல் எங்கேயாவது ஒலிக்கக் கேட்டால் கூட அவர் முகம் இறுகிப்போய்விடும்.
’சித்தி’ யில் பத்மினியிடம் கிளர்ந்தெழும் தாபத்தை எம்.ஆர். ராதா வெளிப்படுத்துவது விரசவிரகமாக இருப்பதாக சொன்னவர்கள் உண்டு.
கே எஸ் ஜி எனப்படும் இயக்குனர் கே எஸ் கோபால கிருஷ்ணன் உச்சத்தில் இருந்த காலத்தில் மிகுந்த வாய்த்துடுக்கு உள்ளவர்.
சிவாஜியிடம் கூட தன் வாய்த்துடுக்கை காட்டக்கூடியவர்.யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவார்.
விநியோகஸ்தர்களிடம் முகத்தில் அடித்தாற்போல பேசி விடுவார்.
சாதாரண கதாசிரியராய் இருக்கும்போதே ஏவிஎம் ஸ்டூடியோவில் சுவாரசியமாக கே எஸ் ஜி
டீ குடித்தவாறே ஒரு படத்தின் கதையில் குறிப்பிட்ட காட்சியொன்றை உணர்ச்சி வசப்பட்டு விளக்கமாக சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஏ வி எம் செட்டியாரிடம் மிக தற்செயல் அனிச்சையாக’எச்சில் கப்’பை கொடுத்து விட்டாராம்.
’கை கொடுத்த தெய்வம்’ படத்தில் எஸ் எஸ் ஆர் எழுதிய கடிதம். சிவாஜி வாசிக்கவேண்டும். முண்டா பனியன் நாலு முழ வேட்டியுடன் செட்டில் இயக்கும் கே எஸ் ஜி 'நீங்கள் கடிதத்தை வாசிக்கிற முகபாவம் கொடுத்தால் போதும்.ராஜேந்திரன் குரல் படத்தில் ஓவர்லேப் செய்து கொள்வேன்' என சொல்லியதும் " யோவ் குனா கானா நானே என் குரல்ல பேசிடுறேனே " (சிவாஜி செல்லமாக குனா கானா என்று தான் கே எஸ் ஜி யை கூப்பிடுவாராம்.குனா கானா என்றால் ’குட்டை கவி’! )என்றதும் மூக்குபொடியை உறிஞ்சிய குள்ளமான கே எஸ் ஜி ” இது என் படம், நான் டைரக்டர். நான் சொல்றபடி செய்யுங்க " என்றவாறே நிற்காமல் மற்ற விஷயங்களை கவனிக்கச்சென்றுவிட்டாராம். சிவாஜி சிரித்துவிட்டாராம்.
’பேசும் தெய்வம்’ ஷூட்டிங்கில் சிவாஜி ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறார். மற்ற நடிகர்களையெல்லாம் பத்மினி உள்பட நடிக்கிற போது பாராட்டும் கே.எஸ்.ஜி தன்னை மட்டும் பாராட்டுவதேயில்லை.
சிவாஜி நடித்து முடித்ததும் அடுத்த ஷாட் போய் விடுவார் இயக்குனர்.
குழந்தை போல ஏங்கி சிவாஜி கேட்டிருக்கிறார்:’ஏண்டா குனா கானா! என் நடிப்பை பாராட்ட மாட்டியா? மத்தவங்கள மட்டும் தான் பாராட்டுவியா?’
கே.எஸ்.ஜி. இவரை நிமிர்ந்து பார்த்து விட்டு கண் கலங்கிப்போய் சொன்னாராம். “நீங்க எப்பவுமே என் எதிர்பார்ப்புக்கும் மேலே மிகவும் அற்புதமாக, ரொம்ப பிரமாதமாக நடித்து விடும்போது உங்களை பாராட்ட எனக்கு என்ன தகுதியிருக்கிறது?”
சிவாஜி அழுது விட்டாராம்!
இவர் படங்களில் எஸ்.வி ரங்காராவ் மிகவும் பயன்படுத்தப்பட்டவர். சாரதா துவங்கி,தெய்வத்தின் தெய்வம் , கற்பகம் ,கைகொடுத்த தெய்வம்,பேசும் தெய்வம் ,கண்கண்ட தெய்வம் என்று எத்தனையோ படங்கள் ரங்கா ராவ் நடிப்பால் பெருமைப்படுத்தப்பட்டவை. இந்த ’கண் கண்ட தெய்வம்’ ரங்காராவ்,எஸ் வி சுப்பைய்யா,பத்மினி அருமையாக நடித்திருப்பார்கள் .
இந்த படம் மீண்டும் ரங்காராவ் ,சுப்பையா இருவரும் மறைந்த பின் (ரங்காராவ் 1974 ல் மறைந்தார்.1980ல் சுப்பையா மறைந்தார் )பலவருடம் கழித்து சிவாஜி, தேங்காய் சீனிவாசன்,கே.ஆர் விஜயா நடிப்பில் "படிக்காத பண்ணையார் " என பலவருடம் கழித்து
கே எஸ் ஜியால் இயக்கப்பட்டு வந்தது.
ரங்காராவ்,சுப்பையா இருவரும் எவ்வளவு சிறந்த மகத்தான நடிகர்கள் என்பதை உணர்த்துவதாக படிக்காத பண்ணையார் அமைந்து விட்டது.
பத்மினி இடத்தில் கே ஆர் விஜயா சகிக்கவில்லை. கண் கண்ட தெய்வம் படத்திற்கு உறை போட காணாது ’படிக்காத பண்ணையார்’.
கதை சொல்லும்போதும் சரி, காட்சியை விளக்கும்போது, நடிகர்கள் நடிக்கும்போதும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விடுவார். கோபத்தையும் மிக கடுமையாக வெளிப்படுத்துவார்.
ரங்காராவ் ’ஆதி பராசக்தி’ படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் காட்சி ஷூட்டிங் போது"கட் கட் " என கேமராவை நிறுத்தச் சொல்லி கே.எஸ்.ஜி "என்னய்யா,எருமை மாடு மாதிரி நிக்கிறியேய்யா " என ரங்காராவ் அவர்களை பார்த்து சத்தமாக திட்டினாராம். செட்டில் அப்போது இருந்தவர்களுக்கு இவ்வளவு பெரிய நடிகரைப்பார்த்து இப்படி சொல்லுகிறாரே என்று என்னமோ போலாகி விட்டதாம்.
கமல் ஹாசன் ’குறத்தி மகன் படத்தில் கே.எஸ்.ஜி என்னை ஒரு ஓரமா நிறுத்திட்டார் அண்ணே..’ என்று ஆர்.சி.சக்தியிடம் அழுதிருக்கிறார்.
சாவித்திரியை ’ஆயிரம் ரூபாய்’ படத்தில் குறத்தியாகவே நடிக்க வைத்தவர்.
’கை கொடுத்த தெய்வம்’ சாவித்திரிக்கு
முக்கியமான படம்.
பணமா பாசமா படத்தில் எஸ்,வரலட்சுமி, பகவதி, விஜய நிர்மலா மூவரும் பின்னியெடுத்திருப்பார்கள்.
அந்த பணத்திமிர் மாமியார் வரலட்சுமி பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
’அலேக்’ நிர்மலா என்று பேர் பெற்று ‘எலந்த பயம் எலந்த பயம்’ பாட்டின் மூலம் கொடி கட்டினார் விஜய நிர்மலா.
அமெரிக்கையான கண்ணியமான அப்பாவாக எல்லோர் மனதிலும் பகவதி இடம் பிடித்தார்.
அதன் பிறகு தமிழ்ப்படங்களில் சிலவருடங்கள் பிசியாக நல்ல ரவுண்டு வந்தார்கள்.
’பணமா பாசமா’ மாமியார் ரோலுக்கு எஸ்.வரலட்சுமி நடிப்பு முதலில் இயக்குனர் கே.எஸ்.ஜிக்கு கொஞ்சமும் திருப்தியே இல்லையாம்.
சாவித்திரியிடம் போய் “வரலட்சுமி சரியில்லை.நீ தான் அந்த ரோலை பிரமாதமாக செய்யமுடியும்” என்று கெஞ்சியிருக்கிறார்.
ஜெமினி கணேசனுக்கு மாமியாராக சாவித்திரி!
சாவித்திரி பதில்: வாத்யாரே! நான் தான் அந்த மாமியார் ரோல் செய்தே ஆக வேண்டும் என்று நீங்க நினைச்சா ஹீரோவ மாத்திடுங்க.
கே.எஸ்.ஜிக்கு ஹீரோவை மாற்ற விருப்பமே இல்லை. அந்த ரோலுக்கு ஜெமினி தான்
சரியான சாய்ஸ்.
சாவித்திரி உடனே ’வரலட்சுமியை மாற்ற வேண்டாம். நான் அவளுக்கு கவுன்சலிங் செய்கிறேன்.இனி பிரமாதமா அவ நடிப்பா’ என்று எஸ்.வரலட்சுமியை நேரில் சந்தித்து கோச்சிங் கொடுத்திருக்கிறார்.
கே.எஸ்.ஜியிடம் ’தண்ணீர்,தண்ணீர்’ கோமல் சுவாமிநாதன் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.
கற்பகம் ஸ்டூடியோ நிறுவப்பட்ட இடம் அப்போது இவருக்கு கே.ஆர் விஜயா கொடுத்தது.
மிக காஸ்ட்லி குருதட்சனை.அதை நெகிழ்ச்சியுடன் கே எஸ் ஜி குறிப்பிடுவார்.
இந்த உலகத்திலேயே சம்பாதித்த சொத்தை மற்றவருக்கு தானமாக கொடுத்தவர் கே.ஆர்.விஜயா தான் என கே.எஸ்.ஜி நன்றியோடு உணர்ச்சிவசப்பட்டு பரவசமாக குறிப்பிடுவார்.
எம்.ஜி.ஆர் ’சங்கே முழங்கு’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருக்கிறார். அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் படமாக கே.எஸ்.ஜி ’வாசனை’யே இல்லாமல் தான் இருந்தது.
கே.எஸ்.ஜி இயக்கிய படங்களை அவசியம் மறுபார்வைக்குட்படுத்த வேண்டும். அற்புதமான படைப்பாளி அவர் என்பதை நிச்சயம் இன்றைய தலைமுறை சினிமா உணரும்.
...

திரையுலகை முழுமையாக ஆக்கிரமித்த ஒரு துறுதுறுப்பான செயல் ஊக்கம் மிகுந்த இயக்குனர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி மக்கள் கவனத்திலிருந்து முழுமையாக விலகி மறைய முடிந்திருக்கிறது என்பது திரையுலகம் கண்ட விசித்திரங்களில் ஒன்று.
2015ம் ஆண்டு மறைந்தார்.
........................................
(தமிழ் ’தி இந்து’ செய்தித்தாள் இந்து டாக்கிஸில் 20.11.2015 அன்று எடிட் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது)
..........

Nov 12, 2019

கே.ராஜேஷ்வர்

அவள் அப்படித்தான் வசனத்தில் பங்கு சோமசுந்தரேஷ்வருக்கும்
( கே.ராஜேஷ்வர்) அனந்த்துவுக்கும் தான். வண்ண நிலவன் சிறு பகுதி. ருத்ரய்யாவின் பங்கு கொஞ்சமும் கிடையாது.
கதை ராகமஞ்சரி என்று டைட்டிலில் அப்போது வந்தது உண்மையில் ராகமஞ்சரி என்று யாருமே கிடையாது.
இப்போது மறைந்த அருண்மொழி இந்த 'அவள் அப்படித்தான்'  அசோசியேட் டைரக்டர் என்றெல்லாம் அபத்தமாக எழுதப்படுகிறது. உண்மை என்னவென்றால் இந்த படத்துக்கு ஒளிப்பதிவில் உதவியாக இரண்டு பேர். கேமரா நல்லுசாமிக்கும் ஞானசேகரனுக்கும். அவர்களுக்கு அஸிஸ்டெண்ட்கள் இருவரில் ஒருவராக அருண்மொழி இருந்தார். அவ்வளவு தான். அவர் அந்தப் படத்தில் உதவி இயக்குனர் கூட கிடையாது.
ருத்ரய்யாவின் கிராமத்து அத்தியாயம்
படு தோல்வியடைந்த படம்.
அந்த படத்தில் கே.ராஜேஷ்வர் கிடையாது.
கமல் ஹாசனை வைத்து ’யாரோ பார்க்கிறார்கள்’ என்று ருத்ரய்யா ஒரு படம் தயாரிக்க இருந்தார். கே.ராஜேஷ்வர் தான் அதன் ஸ்க்ரிப்ட், வசனமெல்லாம்.
சுஜாதாவின் “ இருபத்தி நான்கு ரூபாய் தீவு” தான் ’யாரோ பார்க்கிறார்கள்’.
அந்தப்படம் மேலெடுக்க முடியாமல் நின்று போனது.
ரகுவரனை வைத்து கே.ராஜேஷ்வர் ’வீதியெல்லாம் பூப்பந்தல்’ என்று ஒரு படம் இயக்கும் முயற்சி (’ஏழாவது மனிதன்’ தயாரிப்பில் இருந்த போது)
நிறைவேறாமல் போயிருக்கிறது.
கடந்த காலங்களில்
கடலோர கவிதைகள் துவங்கி, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி, கோவில் பட்டி வீரலட்சுமி வரை தொடர்ந்த பல படங்களில் பங்காற்றிய அற்புத மனிதர் ராஜேஷ்வர்.

அமரன் என்ற பிரமாண்ட பட இயக்குனர்.
சந்திரபாபு கதையை படமாக்கும் முயற்சியில் இப்போது ராஜேஷ்வர். இன்னும் பல ப்ராஜெக்ட்ஸ்.
கே.ராஜேஷ்வர் எழுதியுள்ள சந்திரபாபு நாவல் எனக்கு சென்ற ஜுன் மாதம்  அனுப்பியிருந்தார். ஒரே மூச்சில் படித்தேன். படமாக வேண்டிய அருமையான ஸ்கிரிப்ட்.
என்னிடம் பேசும் போது ஒரு விஷயம் சொன்னார்.
“ எனக்கு கவிஞர் வைரமுத்து சொன்னதை நான் உங்களுக்கு கடத்துகிறேன். ‘ உங்கள் வெற்றி தாமதப்படலாம். ஆனால் தவிர்க்க முடியாதது’ “
வைரமுத்து தனக்கு சொன்னதை ராஜநாயஹத்துக்கு தருகிறார்.
காலம் கனியும்.
..................

Nov 11, 2019

Woollen Elephantஎன்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு.
எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”

மையமாக ஒரு புன்னகை தான் என் பதில்.

பியரெத் ஃப்லுசியோ (Pierrette Fleutiaux) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய பிரஞ்சு நாவலை நேரடியாக தமிழுக்கு வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார்.  ’சின்ன சின்ன வாக்கியங்கள்’. க்ரியா வெளியீடு.
Short sentences.

“ எழுத்தாளர் ஒருவர் எதிர் கொள்ளும் கேள்விகளில் அடிக்கடி இடம் பெறுவது இந்த கேள்வி:
‘ நீங்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்வீர்களா?’ என்னுடைய பதில்: இல்லை, மனதில் ஒன்று தங்கவில்லையென்றால் அது முக்கியமானதில்லை என்று பொருள்.”
 நாவலின் 96ம் பக்கத்தில் பியரெத் ஃப்லுசியோ இப்படி சொல்கிறார்.

ரொம்ப பால்யத்தில், பள்ளிக்காலத்தில், கல்லூரி காலத்தில் அதன் பிறகும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பழகியவர்களைப் பற்றிக்கூட அவர்கள் பேசிய விஷயங்கள் பற்றி நான் சொல்லும்போது எப்போதும் பிரமித்துப் போய் கேட்பார்கள்.

 ’இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்திருக்கிறாய்?’

தாமரையிலைத் தண்ணீராய் ஒரு விலக்கம் என்னிடம் இருந்த போதிலும் நான் பழகிய எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுப்பவன்.
அதனால் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் மறக்காமல் சொல்ல முடிகிறது.

பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் போது ஒரு இளம் ஆசிரியர் புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர் எங்கள் வகுப்புக்கு தான் முதன்முதலாக பாடம் எடுத்தார்.
அன்று அவர் பதற்றத்துடன் இதை சொன்னார்.

நான் அவரை 20 வருடங்கள் கழித்து திருச்சி தெப்பக்குளத்தில் சந்தித்த போது முதன் முதலாக ஆசிரியராக அவருடைய maiden attempt எங்கள் வகுப்பில் தான் என நினைவு கூர்ந்தேன். புருவத்தை உயர்த்தினார்.

அது மட்டுமல்ல. அந்த முதல் நாள் அவர் ரோஸ் கலர் சர்ட், க்ரீன் கலர் பேண்ட் அணிந்திருந்ததையும் சொன்னேன்.
ஆச்சரியத்தில் மூழ்கி விட்டாரென்று சொல்லத்தேவையில்லை.

எனக்கே தெரிகிறது. எனக்கு ஞாபகத்தில் உள்ள விஷயஙகள் போல வேறு யாருக்குமே ஞாபகப்படுத்திக்கொள்வது அசாத்தியம்.

Memory is my fate. I’m sick of many griefs.

நான் அறியாத, அபூர்வ விஷயம் பற்றி அறிய வரும்போது இப்போது குறிப்பு எடுக்கிறேன்.
ஆனால் எழுதுவதற்காக எந்த குறிப்பையும் பயன்படுத்தியதில்லை.

Everything which exalts life adds at the same time to it’s absurditity – Albert Camus.

இடாலோ கால்வினோ ‘ love far from home’ சிறுகதையில் சொல்வது போல எல்லா கிறுக்கல்களும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான ’Woollen Elephant’ ஆக மாறியிருக்கிறது.

கம்பளி யானையாய்  என் எழுத்து? Catharsis.

பிக்காஸோவின் ஓவியங்கள் அவனுடைய உன்மத்தத்திற்கேயான Therapy.

ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா?


பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் ரொம்ப ஃபேமஸ்.
சர்புதினின் அண்ணன் ஒரு காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது வகுப்பு வரை தான் படித்தவர்.
ஆள் பார்க்க சிவாஜி சாயலில் நல்ல குண்டு.
ரொம்ப குண்டு. பஜாரில் எம்.என்.பி ஸ்டோர்ஸ் இவருடைய கடை.
இங்கிலீஷ் பேச ரொம்ப ஆசை.
கண்டினுவஸ் டென்ஸில்
A சேர்த்து நிறைய ஓவர் ஆக்ஷன் செய்து அவர் பேசுவது ரொம்ப ரசிக்கும்படியாக இருக்கும்.
அவர் மனைவி ரொம்ப கறார் கண்டிப்பு உள்ளவர்.
“ நேத்து செகண்ட் ஷோ பாத்திட்டு வீட்டுக்கு போறேன். The door was a opening!
The wife was a sleeping.
I was a தட்டிங்.. ’செல்லம்,செல்லம்’ தட்டிங்!
The wife was a angry.
The wife was a shouting? 'Why was a second show??' ”
’The’ ரொம்ப பயன்படுத்துவார்.
’யோவ் இப்ப கடைக்கு வந்துட்டு போனாரே. அவரு யாருய்யா. என்ன செய்றாரு.’
சர்புதின் பதில் – ’தி நெல்லு,
தி உருளைக்கிழங்கு,
தி மிளகாய்
இதுக்கெல்லாம் போடுவாங்கள்ள தி உரம்! அது தயாரிக்கிற
தி கம்பெனி வச்சிருக்கார்.'
ராத்திரி பஜாரில் கரண்ட் போய் விட்டால்
கடை பையன் மெழுகுவர்த்தியை பற்ற வைத்து எடுத்து வருவான்.
காற்றில் மெழுகுவர்த்தி அணைந்து விடாமல் இரு கையால் நெருப்புச்சுடரை மூடியவாறு சொல்வார்.
( ’பதற்றம்’ ஓவர் ஆக்‌ஷன்)
“ Candle.. Candle with care..Candle with care! ”
காலையில் நான் ஆஃபீஸ் போக கிளம்பி வருகிறேன்.
சர்புதின் கடையில் இருக்கிறார்.
கீழே அவர் மகன் ஒன்னாங்கிளாசு படிக்கும் மகன் நயினார் முறுக்கிக்கொண்டு நிற்கிறான்.
போ.. நான் போக மாட்டேன்.
சர்புதின் என்னைப் பார்த்ததும் நான் “ யோவ் சர்பு, என்னய்யா?”
சர்பு “ இங்க பாருய்யா.. நயினார் பள்ளிக்கூடம் போக மாட்டேங்கிறான். நீ கொஞ்சம் சொல்லி அனுப்பி வை இவனை.”
நான் பொறுப்பை சிரமேற்கொண்டேன்.
நயினார் கடும்பகையை தன் இரு கண்ணில் காட்டி என்னைப் பார்த்து ’முடியாது’ என்பதாக தலையை ஆட்டினான்.
நிச்சயம் என்னை ’போடா’ சொல்வான்.
சர்புதினே மகனுக்கு சமிக்ஞை செய்து ரகசியமாக வாயை விரித்து சத்தமில்லாமல் சொன்னார்
“ போடா சொல்லு…..”
நான் நயினாரைப் பார்த்து சொன்னேன்
“ நயினாரு, ஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா?
படிப்பு ரொம்ப முக்கியண்டா.
சொன்னா கேளு.
ஒன்னாங்கிளாசுலயே இப்படி பண்ணாத.
ஒங்க அத்தா மாதிரி ஏழாங்கிளாசு வரை படிக்க வேண்டாமாடா? ஏழா…..ங்கிளாசு..”
………

Interrogation
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் முதல் பகுதி.
மதுவிலக்கு அமுலில் இருந்தது.
பெருங்குடி மக்கள் அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தையே நம்பியிருந்தார்கள். ஏழைகள் (கலக்கு முட்டி)வார்னீஷ் குடித்தார்கள்.
மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் திரைப்பட இயக்குனர் டி.என். பாலு குடிபோதையில் கைது செய்யப்பட்டிருந்தார். மீண்டும் வாழ்வேன், ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இயக்குனர். தி.மு.க காரர். குடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி சிறை வைத்தார்கள்.
.............
சர்பு தன் நண்பர்களுடன் கள்ளச்சாராயம் கிடைத்தால் குடித்து மகிழ்வதுண்டு.
வடுகபட்டி பாண்டி தான் சாராய பாட்டில்கள் வாங்கி வந்து தருவான்.
அதற்கு அவனுக்கு கூலி, இரவு உணவுக்கு பணம் கொடுக்கிற வழக்கம்.
அந்த நேரத்தில் விலையும் கடுமை தான்.
அதோடு வாங்கி வருகிற பாண்டி எப்போதும் விலை ஏறி விட்டது என்று சொல்லி ஒரு எக்ஸ்ட்ரா தொகை கறந்து விடுவான்.
இப்படி ஒரு முறை பஜாரில் போய்க்கொண்டிருந்த வடுகபட்டி பாண்டியை கூப்பிட்டு டீல் செய்த போது
பாண்டி “ அண்ணே வேண்டாண்ணே. விலை இப்ப ரொம்ப ஏத்திட்டானுங்க. போலீஸ் தொந்தரவு வேற. என்ன விட்டுடுங்க..சிக்குனா எத்தனை மாசம் உள்ள இருக்கணும் தெரியுமில்ல”
அவனை சமாதானப்படுத்தி மிகப் பெருந்தொகை கொடுத்து(கூலியும் மிக அதிகமாய் கேட்டான்.) அனுப்ப வேண்டியிருந்தது.
கூட ரெண்டு பாட்டில். மொத்தம் நாலு பாட்டில். குடிப்பதற்கு அப்படி தவிக்க வேண்டியிருந்திருக்கிறது. At any cost சாராயம் வேண்டும்.
போன பாண்டி வரவில்லை. பஜாரில் கடை சாத்தியவுடன் கச்சேரி. அவனக் காணோம். விசாரிக்க ரெண்டு ஆளை அனுப்பிய பின்
வடுகபட்டி பாண்டி வேர்த்து, விறுத்து சைக்கிளில் வந்தான்.
சரக்கு எதுவும் சைக்கிளில் இல்லை.
சோகமாக பாண்டி பகர்ந்தான்.“போலீஸ் ரெய்டு. பாலத்திலிருந்து நாலு பாட்டிலையும் வாய்க்கால்ல வீசிட்டேன்.”
ஃப்ராடு. பொய் சொல்றான். நாலு பாட்டில் பெருந்தொகையை அடித்து விட்டு போலீஸ் ரெய்டு என்று அளக்கிறான்.
அவனை உடனே விட்டு விடவில்லை. குடிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்கு குடி மக்கள்
பாண்டியை அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
”நான் தான் சொல்றனுல்லங்க.. ரெய்டு.. சிக்கக்கூடாதுன்னு பாலத்தில இருந்து வீசிட்டேன். சிக்கியிருந்தா இன்னேரம் உள்ள இருப்பேன்.”
சர்புவின் குடிகார நண்பர் ஒருவர் அவனை அடிக்காமல், அவன் சட்டை பட்டன ஒவ்வொன்னா கழட்டி, கவனமா மிரட்டி, (கவனமில்லாம மிரட்டினா பாண்டி எகிறிடுவான்.குறுக்க திரும்பிடுவான்.)
கொஞ்ச நேரத்தில உண்மைய ஒத்துக்கிட்டான்.
’ரெய்டுல்லாம் ஒன்னும் இல்ல. நான் தான் பொய் சொன்னேன். வீட்டுல அரிசி இல்ல.’
”அரிசி இல்லன்னா இவ்வளவு பெரிய தொகைய ஆட்டய போடலாமாடா?”
………
’பாண்டி கல்லுளி மங்கனாச்சே. எப்படியா அவன் கிட்ட இருந்து உண்மைய கறந்தீங்க.’
இது மாதிரி சூழலில் சர்புவின் ஸ்டைலை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. இந்த interrogation பற்றிய சர்புவின் விவரிப்பு.
சர்பு பெருந்தோரணையுடன் “ The seriousity of the situation was so dangerable. சிவளை தான் அவன விசாரிச்சான்.
சிவளை : What are you?
பாண்டி : எங்கப்பா பேரு கண்ணுசாமிங்க. என் ஊரு வடுக பட்டிங்க.
சிவளை : Where are you?
பாண்டி : எடுபிடி வேலை எதுனாலும் செய்வேங்க. வீட்டுக்கு வெள்ள அடிப்பேன். காட்டு வேல எதுனாலும் கிடைச்சா செய்வேன்.
சிவளை: Why are you??
பாண்டி: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலீங்க. பொண்ணு கிடைக்கலீங்க.
சிவளை : Who are you?
பாண்டி: தாமரைக்குளத்தில தாங்க சாராயம் வாங்கினேன்.
சிவளை: When are you?
பாண்டி : சத்தியமா நான் நல்லவன் தாங்க. காச்சிற இடத்தில கொஞ்சமா குடிச்சேங்க.
சிவளை: ’Which’ are you?????
பாண்டி : தெரியாம பண்ணிட்டேங்க. மன்னிச்சிக்கங்கங்க..
பாண்டி கால்ல விழுந்துட்டான்.
ரெண்டு விரல அவன் கடவாய்க்குள்ள சிவள விட்டான். பய உண்மைய கக்கிட்டான்."
……………

Nov 10, 2019

கடைசியாக அருண்மொழியை நாசருடன் பார்த்தேன்

அக்டோபர் 24ம் தேதி ஸ்கூட்டரில் வளசரவாக்கத்தினுள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு டீக்கடையில் நடிகர் நாசர் நின்று டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அருகில் அருண்மொழி. இன்னும் சிலர்.
நான் நாசரை கவனித்தேன்.
அருண்மொழி அவரோடு நிற்பதை பார்க்கவில்லை.
சில நாட்களுக்கு முன் அதே வீதியில் என் எதிரே அருண்மொழி டூ விலரில் பின்னால் உட்கார்ந்து வந்த போது இருவரும் முகமன் கூறிக்கொண்டோம்.
ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நாசரை பார்க்க நெருங்கினேன்.

நாசர் எனக்கு பிடித்த நடிகர்.
நாசரை பலமுறை மிக அருகில் பார்க்க வாய்த்திருந்தது. ஆனால் அறிமுகம் இல்லை. ஸ்பேஸஸில் ஒரு நாடகத்திற்கு நாசர் வந்திருந்தார். அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன். ஒரு பூச்சி அவர் சட்டையில். நான் தட்டி விட்டேன். அவர் ‘என்ன?’ என்றார். ‘ஒரு பூச்சியை தட்டி விட்டேன் சார்.’ என்றேன்.
முத்துசாமி மறைந்த போது நாசர் கூத்துப்பட்டறை வந்து ரொம்ப நேரம் இருந்த போதும் நான் அவரோடு பேசவில்லை. என்ன, அறிமுகம் இல்லாத நிலை.
இப்போது டீக்கடையில் நாசரை நெருங்கி என்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பி
“ சார்” என்றேன்.
அப்போது தான் அருண்மொழியும் அவரோடு நிற்பதை கவனித்தேன்.” நீங்களும் இங்கே இருக்கிறீர்களா?” அப்புறம் நாசரிடம் சொன்னேன். “கூத்துப்பட்டறைக்கு நீங்கள் முத்துசாமி இறந்த போது வந்திருந்த போது கூட நான் அங்கிருந்தேன். பேச சூழல் இல்லை”
அருண்மொழி சொன்னார். “ ராஜநாயஹம் தான் ஹிண்டு தியேட்டர் ஃபெஸ்டிவலில் முத்துசாமி வண்டிச்சோடையை இயக்கியவர்”
அவரளவில் என்னைப்பற்றிய தனது ஜெனரல் நாலட்ஜ் ஒன்றை நாசரிடம் தெரிவித்தார்
” ராஜநாயஹம் கோணங்கியோடெல்லாம் பழகியவர்.”
அக்டோபரில் இந்த வருட விகடன் தீபாவளி மலரில் நாசர் லாரி பேக்கர் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். இதே தீபாவளி மலரில் நான் ரங்காராவ் பற்றி எழுதியிருக்கிறேன். இது பற்றி அன்று நான் பேசியிருக்கலாம்.ஆனால் பேசவில்லை.
டீக்கடையில் அவர்களோடு இருந்த மற்றொருவர் என்னுடைய வலைத்தள எழுத்தெல்லாம் தனக்கு தெரியும் என்றார்.
நான் நாசரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதை தெரிவித்தேன்.
 நாசர் உடனே அருண்மொழியிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தரலாமே என்பதை உடல் மொழியாலே சொன்னார்.

அருண்மொழியிடம் ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் நான் அட்டெண்டென்ஸ் கொடுத்திருந்தேன். ரெஸ்பாண்ஸ் இல்லை என்றேன்.
அருண்மொழி பழக்க வழக்கத்திற்கு எனக்கு நல்ல டைரக்டர்களிடம் சிபாரிசு எதிர்பார்த்திருந்தேன்.
நாசரிடம், என்னிடம் அருண்மொழி ‘நான் படம் எதுவும் செய்யவில்லையே. இன்னும் நாலு வருஷத்துக்கு படம் இயக்க சூழல் இல்லை”
அப்புறம்  ஒரு பிரபல நகைச்சுவை நடிகரின் சிரிப்பு நடிப்பில் தனக்கு சிரிப்பே வருவதில்லை என்பதை தெரியப்படுத்தினார்.

அருண்மொழி மேலும் நாசரிடம் சற்றே பரவசமாக சொன்னார்:“ ராஜநாயஹத்துக்கு வயசு அவ்வளவா தெரியல்ல. ட்ரெஸ் கூட ஒரு காரணமோ?” மாடர்னாக உடை உடுத்துகிறேனாம்.
நாசர் எப்போதும் தன் அந்தஸ்தைப் பற்றி அலட்டல் இல்லாதவர். தியேட்டர் விஷயங்களில் யார் அழைத்தாலும் நாடகம் பார்க்க செல்வார். இதைப் பற்றி நான் சொன்னேன்.

ஒருவர் நாசருடனான தன் பரிச்சயம் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்.
அவர் பெயரை நான் குறிப்பிட்ட போது நாசர் “யார் அவர்” என்று அந்தப் பெயரை ஒரு முறை உச்சரித்தார்.
ஆனால் அருண் மொழிக்கு அந்தப் பெயரில் இருவரை தெரிந்திருந்தது.
அப்படி அருண்மொழி விளக்கியது அதிர்ச்சியாய் இருந்தது. “ ஒருத்தர் செத்துட்டார் அவர் அல்ல.
இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவார்.அந்த சாகப்போறவர தான் உங்க கிட்ட ராஜநாயஹம் சொல்றார்”
இன்று அருண்மொழி மரணம் பற்றி கேள்விப்பட்டேன்.
அக்டோபர் 24ம் தேதி தான் அவருடனான கடைசி சந்திப்பு .

Nov 8, 2019

காவிச்சாயமும், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடமும்

’நானும் திருவள்ளுவரும் காவிக்குள் சிக்க மாட்டோம்’ என்று ரஜினி சொல்லியிருப்பது பெரும் வதந்தி ஒன்றிற்கு முற்றுப்புள்ளி என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் அரசியலில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் என்று அவர் சொன்ன போது ’அரசியலில் ஏற்கனவே குதித்து விட்ட கமல் ஹாசனையும் சேர்த்துத் தான் சொல்கிறாரா?’ என்று எந்த சேனலிலிருந்தும் ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை.
ஸ்டாலினையும் எடப்பாடியையும் குறி வைக்கும் விஷயம் ஆளுமையான தலைமை வெற்றிடம் என்ற வார்த்தை.
பாலச்சந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் ஒருவரை ஒருவர் பற்றி பாசப்பிணைப்போடு பேசிய விஷயங்கள்.
ரஜினி பேசும்போது கமல் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவை விட மாட்டார் என்ற அர்த்தத்தில் பேசினார். அரசியல் வெறுத்துப்போய், அரசியலில் தோற்றுப்போய் சினிமாவுக்கே திரும்பி விடுவார் என்கிறாரோ என்னமோ?
கமல் தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் இருக்கும் போது இன்னும் உள் நுழையாத ரஜினி தலைமை வெற்றிடம் பற்றி தீர்மானமாக சொல்கிறார்.
இந்த தலைமை வெற்றிடத்தை நிரப்புவதில் கமலின் பங்கு எப்படி என்று ஒருவரும் கேட்கவில்லை. கேட்டிருக்க வேண்டும்.

’மாபசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது.
1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.
தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை.
இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.
நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.
என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.
சிந்தனைச் சிற்பி சிற்றரசு.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.
பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம். ஒரு வகையில் ஆன்மீகம் கலந்த அரசியல்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.
மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க.
அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம்.
இந்த அரசியலானது
சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது.
இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.
முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்.
தம்பித்தலைவர்கள்!
சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள்.
கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். சிவஞானத்தின் மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு விட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரான ம.பொ.சியை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”
உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
’அண்ணா, மன்னித்துக்கொள்ளுங்கள்.
ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
”ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’!”
– இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை.
ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது.
குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை
தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும்
தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
ஞானக்கூத்தன் பெயர்க்காரணம் சிவஞானத்தை கண்டு கூத்தாடியவராகையால் ’ஞானக்கூத்தன்’ என்று பிரமிள் சொன்னதுண்டு.
ஞானக்கூத்தனின் உவமான வரி ஒன்று. ’வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்தது’. இப்படி ம.பொ.சி எனும் வலம்புரி சங்கு வாய்க்கால் சங்காக சிறுத்துப்போன காலமும் உண்டு.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
ஆளுங்கட்சிகளையே சார்ந்து இயங்கும் எந்த அரசியல் தலைவருக்கும் கொஞ்சம் மதிப்பு குறையும்.
மழுங்கிய ஒரு தன்மையும் மங்கலான பிம்பமும் ஏற்படும். அதற்கு ம.பொ.சியும் விலக்கல்ல.
கருணாநிதி - எம்.ஜி.ஆர் இருமை எதிர்வு அரசியலில் அன்று பிற தலைவர்களுக்கு இருவரில் ஒருவரை ஆதரிக்கும் போது மற்றவருக்கு எதிரி என்பது எழுதப்பட்ட விதி.
ம.பொ.சி. கருணாநிதி ஆட்சி காலத்தில் அவருக்கு ஆதரவாகவும்
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இவருக்கு ஆதரவாகவும் இருந்தார்.
இருவரின் ஆட்சிக்காலத்திலும் அரசாங்க நண்பராக இருந்தார்.
1970களில் ம.பொ.சிக்கு துக்ளக் பத்திரிக்கை கார்ட்டூன்களில் டவுசர் தான் மாட்டி விட்டிருப்பார். சின்னப்பையனாகத் தான் மீசை தொங்க துக்ளக் கார்ட்டூன்களில் தோற்றப்படுத்தப்பட்டிருந்தார்.
ம.பொ.சி அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு பெரிய ஜால்ராவாக இருந்ததால் இந்த நிலை. கருணாநிதிக்குப் பக்கத்தில் டவுசர் போட்டு கைகளை ஆட்டிக்கொண்டு, அவரை பரவசமாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு சந்தோஷமாக ஆடும் சிறுவனாக ம.பொ.சி நிற்பார்.சட்டையில்லாமல் வெறும் உடம்போடு டவுசர் போட்ட சிறுவனாய் சிலம்புச் செல்வர்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் இவருக்கு டவுசர் தான்.
இது பற்றி ஒருவர் சோவிடம் கேட்ட கேள்வி “என்ன இப்படி செய்கிறீர்கள். ம.பொ.சி எவ்வளவு பெரியவர். அவருக்கு இப்படி டவுசர் மாட்டி சின்னப் பையனாக கார்ட்டூனில் சித்தரிப்பது நியாயந்தானா?”
சோ பதில்“ அவருக்கு வேட்டி கட்டி ப்ரமோஷன் கொடுக்க நானுந்தான் தவிக்கிறேன். ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் டவுசர் மாட்டி கார்ட்டூன் போடுமளவுக்குத்தான் இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்.”
……………