Share

Nov 10, 2019

கடைசியாக அருண்மொழியை நாசருடன் பார்த்தேன்

அக்டோபர் 24ம் தேதி ஸ்கூட்டரில் வளசரவாக்கத்தினுள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு டீக்கடையில் நடிகர் நாசர் நின்று டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அருகில் அருண்மொழி. இன்னும் சிலர்.
நான் நாசரை கவனித்தேன்.
அருண்மொழி அவரோடு நிற்பதை பார்க்கவில்லை.
சில நாட்களுக்கு முன் அதே வீதியில் என் எதிரே அருண்மொழி டூ விலரில் பின்னால் உட்கார்ந்து வந்த போது இருவரும் முகமன் கூறிக்கொண்டோம்.
ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு நாசரை பார்க்க நெருங்கினேன்.

நாசர் எனக்கு பிடித்த நடிகர்.
நாசரை பலமுறை மிக அருகில் பார்க்க வாய்த்திருந்தது. ஆனால் அறிமுகம் இல்லை. ஸ்பேஸஸில் ஒரு நாடகத்திற்கு நாசர் வந்திருந்தார். அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன். ஒரு பூச்சி அவர் சட்டையில். நான் தட்டி விட்டேன். அவர் ‘என்ன?’ என்றார். ‘ஒரு பூச்சியை தட்டி விட்டேன் சார்.’ என்றேன்.
முத்துசாமி மறைந்த போது நாசர் கூத்துப்பட்டறை வந்து ரொம்ப நேரம் இருந்த போதும் நான் அவரோடு பேசவில்லை. என்ன, அறிமுகம் இல்லாத நிலை.
இப்போது டீக்கடையில் நாசரை நெருங்கி என்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பி
“ சார்” என்றேன்.
அப்போது தான் அருண்மொழியும் அவரோடு நிற்பதை கவனித்தேன்.” நீங்களும் இங்கே இருக்கிறீர்களா?” அப்புறம் நாசரிடம் சொன்னேன். “கூத்துப்பட்டறைக்கு நீங்கள் முத்துசாமி இறந்த போது வந்திருந்த போது கூட நான் அங்கிருந்தேன். பேச சூழல் இல்லை”
அருண்மொழி சொன்னார். “ ராஜநாயஹம் தான் ஹிண்டு தியேட்டர் ஃபெஸ்டிவலில் முத்துசாமி வண்டிச்சோடையை இயக்கியவர்”
அவரளவில் என்னைப்பற்றிய தனது ஜெனரல் நாலட்ஜ் ஒன்றை நாசரிடம் தெரிவித்தார்
” ராஜநாயஹம் கோணங்கியோடெல்லாம் பழகியவர்.”
அக்டோபரில் இந்த வருட விகடன் தீபாவளி மலரில் நாசர் லாரி பேக்கர் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். இதே தீபாவளி மலரில் நான் ரங்காராவ் பற்றி எழுதியிருக்கிறேன். இது பற்றி அன்று நான் பேசியிருக்கலாம்.ஆனால் பேசவில்லை.
டீக்கடையில் அவர்களோடு இருந்த மற்றொருவர் என்னுடைய வலைத்தள எழுத்தெல்லாம் தனக்கு தெரியும் என்றார்.
நான் நாசரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதை தெரிவித்தேன்.
 நாசர் உடனே அருண்மொழியிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தரலாமே என்பதை உடல் மொழியாலே சொன்னார்.

அருண்மொழியிடம் ஏற்கனவே வாட்ஸ் ஆப் மூலம் நான் அட்டெண்டென்ஸ் கொடுத்திருந்தேன். ரெஸ்பாண்ஸ் இல்லை என்றேன்.
அருண்மொழி பழக்க வழக்கத்திற்கு எனக்கு நல்ல டைரக்டர்களிடம் சிபாரிசு எதிர்பார்த்திருந்தேன்.
நாசரிடம், என்னிடம் அருண்மொழி ‘நான் படம் எதுவும் செய்யவில்லையே. இன்னும் நாலு வருஷத்துக்கு படம் இயக்க சூழல் இல்லை”
அப்புறம்  ஒரு பிரபல நகைச்சுவை நடிகரின் சிரிப்பு நடிப்பில் தனக்கு சிரிப்பே வருவதில்லை என்பதை தெரியப்படுத்தினார்.

அருண்மொழி மேலும் நாசரிடம் சற்றே பரவசமாக சொன்னார்:“ ராஜநாயஹத்துக்கு வயசு அவ்வளவா தெரியல்ல. ட்ரெஸ் கூட ஒரு காரணமோ?” மாடர்னாக உடை உடுத்துகிறேனாம்.
நாசர் எப்போதும் தன் அந்தஸ்தைப் பற்றி அலட்டல் இல்லாதவர். தியேட்டர் விஷயங்களில் யார் அழைத்தாலும் நாடகம் பார்க்க செல்வார். இதைப் பற்றி நான் சொன்னேன்.

ஒருவர் நாசருடனான தன் பரிச்சயம் பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்.
அவர் பெயரை நான் குறிப்பிட்ட போது நாசர் “யார் அவர்” என்று அந்தப் பெயரை ஒரு முறை உச்சரித்தார்.
ஆனால் அருண் மொழிக்கு அந்தப் பெயரில் இருவரை தெரிந்திருந்தது.
அப்படி அருண்மொழி விளக்கியது அதிர்ச்சியாய் இருந்தது. “ ஒருத்தர் செத்துட்டார் அவர் அல்ல.
இன்னொருத்தர் சீக்கிரம் செத்துடுவார்.அந்த சாகப்போறவர தான் உங்க கிட்ட ராஜநாயஹம் சொல்றார்”
இன்று அருண்மொழி மரணம் பற்றி கேள்விப்பட்டேன்.
அக்டோபர் 24ம் தேதி தான் அவருடனான கடைசி சந்திப்பு .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.