Share

Nov 19, 2019

ஆட்டு புழுக்கை, நாய் குரைப்பு, இளைய குடியா

கரிசல் இலக்கிய மன்னர் கிராவிடம் நேரில் பேசுவது மட்டுமல்ல தொலை பேசியில் பேசுவது கூட சுகமான சமாச்சாரம்.

நான் கவலையோடு சொன்னேன்.
'ஆடு புழுக்கை போடற மாதிரி கவிதையை அப்பப்ப மொத்தமா போட்டுடுறாங்கே. அதோட நம்மையும் அத மோந்து பார்க்க சொல்றானுங்க'

அவரிடம் இப்படி லேசா எடுத்து கொடுத்துட்டா போதும்.

கிரா சொன்னார்.

இப்போ புகைப்படம் எடுத்து பிரபலமாகி விட்ட இளவேனில் முதன் முதலாக ஒரு கவிதை தொகுப்பை போட்டு கொண்டு வந்து கிராவிடம் ஒரு முன்னுரை கேட்டாராம்.

'கவிதை தொகுப்பு போட பணம் எப்படி கிடைத்தது?'

'என்னோட அம்மாவோட சிறுவாட்டு பணம்.
அந்த பணத்தை திருடி கவிதை தொகுப்புக்கு சிலவு பண்ணேன் '

கிரா சொன்னாராம்
 " நீ கவிதை எழுதியது முதல் தப்பு.

அம்மாவோட சிறுவாட்டு பணத்தை திருடி அதை புத்தகமா போட்டது இரண்டாவது தப்பு.

என்னிடம் முன்னுரை கேட்டது மூணாவது தப்பு "

.......

கிரா விடம் அளவளாவும்போது, அவ்வப்போது
டி.கே.சி பிரசன்னமாகி
 (ரத்தமும் சதையுமாக ஜீவனோடு, சிரிக்கும் கண்கள்,மூக்கு ,மீசையோடு )விடுவார்.
அந்த அளவுக்கு கிராவோடு டிகேசி ஒன்று கலந்து விட்டார்.

கிரா அப்படி சொன்ன சுவை நிகழ்வு.

டி கே சி யோடு குற்றாலத்துக்கு கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி சந்தோசமாக ரயிலில் போய்கொண்டிருக்கும்போது தன் சந்தேகம் ஒன்றை கேட்டாளாம்
" தாத்தா தாத்தா ஒரு நாய் இன்னொரு நாயை பார்த்தால் ஏன் குலைக்குது?"

டி கே சி சொன்னாராம் " எல்லாம் நம்ம மனுஷங்க மாதிரி தான் ."

...

ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்
பழைய பழமொழிகளை கேட்கும்போது சில பழமொழிகள் புரியாது. இந்த பழமொழியை பாருங்கள் .

"ஏகாதசி தோசையும் இளையகுடியா மாகையும்"
கி ரா என்னிடம் சொன்னார்.

அவரே விளக்கம் சொன்னார்.

ருசி சம்பந்தப்பட்டது.

முக்கியத்துவம் குறித்தது.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முடியும்போது அந்த காலத்தில் தோசை சாப்பிடுவார்கள்.
 நல்ல பசியில் இருக்கும்போது சாப்பிடும் தோசை ருசி எப்படி இருக்கும்.

இளைய குடியா - இரண்டாவது மனைவி,
அபிமான தாரம்.

மாகை - மாய்கை

அபிமான தாரம் போடும் தலையணை மந்திரம்,
சொக்குபொடி
- இதன் சக்தி,சுவை, முக்கியத்துவம் ..

'என்ன மாயம் போட்டா .. இவன் ஆளே மாறிட்டானே '- கிழவிகள் முனுமுனுப்பு.

அப்பாவின் இளைய தாரத்தால்,
குழந்தையாக கிரா
(தன் தாயாரும் இருந்த போதும் கூட) படாத பாடு பட்டிருக்கிறார்.

...

The other woman is always powerful!

ராதாகிருஷ்ணன் ன்னு தானே பெயர் வச்சுகிறான் . எவனாவது ருக்மிணி கிருஷ்ணன்னு பேர் வச்சிக்கிரானா?
இந்திரா பார்த்தசாரதி என்னிடம் ஒரு முறை இப்படி கேட்டார்.

......

.

ரெண்டாவது பொண்டாட்டி பேரை தான் முதல்ல சொல்ற வழக்கம் இங்கே.
முருகனோட ரெண்டு பொண்டாட்டிங்க
" வள்ளி -தெய்வானை"

.......


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.