Share

Mar 31, 2018

Golden Chance?


காதலிக்க நேரமில்லை (1964) படத்திலேயே வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி பின் ரொம்ப சின்னப்பெண்ணாக இருப்பதாக தீர்மானித்து ’கேன்சல்’ ஆனதாக நிர்மலா பேட்டிகளில் சொல்வார்.
வெண்ணிற ஆடை படத்தில் ஹேமாமாலினி புக் ஆகி பின் ஸ்ரீதர் திருப்தியில்லாமல் உதட்டை பிதுக்கி கேன்சல் செய்தார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் நடித்து பெயர் பெற்ற விஷயம் எல்லோரும் அறிந்தது.
அவர் நடிப்பதற்கு முன் என் பெரிய மாமனார் எஸ்.எம்.டி. அங்குராஜ் நடித்து “ உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா? உதவிக்கு வரலாமா?” பாடல் ஷூட் செய்யப்பட்டது.
அந்த படத்தில் அந்த ரோலுக்கு முதலில் புக் செய்யப்பட்டவர் எஸ்.எம்.டி. அங்குராஜ். என் மாமனாரின் அண்ணன். ஆனால் தாத்தா எஸ்.எம். தங்கமுடியாபிள்ளைக்கு இதில் கொஞ்சமும் உடன்பாடில்லை.


என் மாமனார் தன் தகப்பனாரை சகல விஷயத்திலும் எதிர்த்து நின்றவர். ஆனால் அங்குராஜ் மாமா அப்படிப்பட்டவரல்ல. சினிமா மீது மிகுந்த பிடிப்பு உள்ளவராயினும் தகப்பனாருக்கு பணிந்தார்.
He has lost a golden chance என்று தான் நினைப்பார்கள். அவருக்கு சினிமா மூலம் நடிகராக பிரபலம் கிடைக்கவில்லை.
ஆனால் வசதி, வாய்ப்பு, அந்தஸ்து விஷயத்தில் அங்குராஜ் நிச்சயம் ரவிச்சந்திரனை விட மிகப்பெரிய கோடீஸ்வராக வாழ்ந்தவர்.

ஜெமினி கணேசனின் நண்பர். ஜெமினி இவரைப்பற்றி எல்லோரிடமும் நண்பர் என்று சொல்ல மாட்டார்.
“ Anguraj is my relative” என்பார்.
என்னிடமே ஒரு கல்லூரி முதல்வர் “ ஜெமினி கணேசன் உங்க மாமாவை ’Anguraj is my relative’ னு சொல்றாரே”ன்னு ஆச்சரியப்பட்டு கேட்டார்.
ஜெமினி கணேசன் 1987ல் ஒரு செய்திப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில்
“காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரனுக்கு முன் எஸ்.எம்.டி. அங்குராஜ் தான் ஒப்பந்தமானார்.ஆனால் பெரியவர் தங்கமுடியாபிள்ளை அதற்கு மறுத்து விட்டார். அதன் பின் தான் ரவிச்சந்திரன் நடித்தார்” என குறிப்பிட்டு சொன்னார்.
..........................................................
புகைப்படங்கள்
ஜெமினியுடன் ராஜநாயஹம்
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1972)
எஸ்.எம்.டி.அங்குராஜ் (1980)

Mar 27, 2018

எஸ்.எஸ்.வாசன் மீதான அசோகமித்திரனின் கசந்த நினைவுகள்


ஜெமினி ஸ்டுடியோ பற்றி எஸ்.எஸ்.வாசன் பற்றி எத்தனை சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். ’மானசரோவர்’ ஸ்டுயோ முதலாளியும் வாசனே.
மிகக் கடுமையான வார்த்தைகளால் ’வண்ணங்கள்’ கதையில் ஜெமினி முதலாளியைப் பற்றி “தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க. வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க. காரு வாங்கிக்கொடுத்தாங்க. எங்களுக்குப் பத்தணா கொடுக்க பிசிநாறித்தனம்..”
”எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையையும் வாங்கிக் கட்டிட்டாங்க. அந்த படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.”
ஜெமினி ஸ்டுடியோவில் ஆஃபிஸ் பாய் அந்தோணியின் சாபம்.

”பதினெஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச் சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியில போறப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே..எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி”
”லிங்கிச்செட்டி தெருவிலே, பதினாறு வருஷம்.. அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான் தெரியுமா? இருபத்தைந்தாயிரம்!”
அசோகமித்திரனின் கதைகளில் நூறு கதைகள் படித்து விட்டு ஒரு கதையைக்கூட மறக்கத்தான் முடியுமா?
‘.
ஜெமினி ஸ்டுடியோவில் தன் மனமும், உடலும் அனுபவித்த தாள முடியாத வியாகுல துயரங்களைப் பற்றி எவ்வளவு கதைகளில் கோடிட்டிருக்கிறார்.

பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்க காலம் தேவைப்படுகிறது.’ என்பார் அசோகமித்திரன்.
காலத்தையும் மீறித்தான் அசோகமித்திரனின் மனம் பழைய நினைவுகளால் குதறிப்போடப்பட்டிருக்கிறது.
சும்மா யாருன்னாலும் “ There is no wound that time cannot heal” என்று சொல்லிக்கொள்ளலாம் தான். புண் உமிழ் குருதி. சீழ் கோர்க்கும் புண்களாய் கடந்த கால கசந்த நினைவுகள்.
’வண்ணங்கள்’ கதையில் எஸ்.எஸ்.வாசன், ஜெமினி ஸ்டுடியோ மீதான தன் தீராத கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வண்ணங்கள் தொடும் பரிமாணங்கள் தான் எத்தனை?
அந்தோணிக்கு சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேய், பிசாசு இருக்கிறது என்பதைப்பற்றி தீர்மானமான அபிப்ராயம்.
அசோகமித்திரன் “ நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தர்றவன்னு இருக்கே. இந்த அமைப்பு. இது தான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயிண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்ற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும்..”
‘அப்போதெல்லாம் எங்கள் முதலாளி தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற்சட்டங்கள் மீது மிகுந்த சந்தேகம் உடையவராக இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள்.’
அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், முனுசாமி, நாயர்…
“ இவர்கள் எல்லோருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம்” என்று போட்டு உடைக்கிறார் அசோகமித்திரன்.
தவிர பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள், தோட்டிகள், வாச்சுமென்கள், தோட்டவேலைக்காரர்கள் என்று ஒரு சைன்யம்.
இவர்களுக்காக கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங்கள், பதினைந்து நாட்கள் காணாமல் போய் விட்டதற்கு மனமுருகும் மன்னிப்பு கடிதம்...என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணீரையூற்றி எழுதினேன். கண்ணீரை வரவழைக்க வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று அசோகமித்திரன் எத்தனை கதைகளில் எழுதி விட்டிருக்கிறார்.
ஜெமினி ஸ்டுடியோவின் Sister concern ஆனந்த விகடனில் இவர் வேலை பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்குமா? ஒரு மகத்தான இலக்கியவாதியாக கணையாழியில் தன் எழுத்துக்கு மேடை கண்ட அசோகமித்திரன்.
சினிமா ஸ்டுடியோவில் இளமை கழிவதற்கு பதிலாக பத்திரிக்கையில் தானே ஒரு எழுத்தாளன் சேர்ந்திருந்திருக்க முடியும்.
ஆனால் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய ஜெமினி வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்திருக்காதே.

Mar 26, 2018

சுப்புவும் வைத்தியும்


கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.
இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.
கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.
இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.
பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.
”தேவியர் இருவர் முருகனுக்கு”
இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.
சிட்டிபாபுவின் வீணை.
முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.
கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”
நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.

இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.
எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.
சுப்பையா, முத்துராமன் தூங்கு மூஞ்சித்தனமாக நடிப்பு.
நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form! இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.
“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”
’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.
...................................

மாலியின் கச்சேரி ஒன்று நடந்து கொண்டிருக்கும் போது அவருடைய தந்தை அந்த சபாவுக்குள் நுழைகிறார். மாலி புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தி விட்டார். மூட் அவுட். சரியான கோபம். “ அவரை போக சொல்லுங்கள். அவர் போனால் தான் வாசிப்பேன்.” 
மாலியின் அப்பாவை அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பி வைத்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர் வெளியேறிய பின்னர் தான் புல்லாங்குழல் மீண்டும் இசைத்திருக்கிறது.

வீணை எஸ். பாலசந்தருக்கும் கூட அவருடைய அப்பாவிடம் இப்படி விரோத மன நிலை இருந்திருக்கிறதாம்.

கலைக் கோவில் படத்தில் இப்படி ஒரு காட்சி உண்டு.
வீணை வாசிக்கும் முத்துராமன் அரங்கத்தை விட்டு எஸ்.வி.சுப்பையாவை வெளியேற்றச் சொல்வார்.
ஸ்ரீதர் இந்த மாலி சமாச்சாரம் பற்றி கேள்விப்பட்டு தான் அப்படி ஒரு காட்சி அமைத்திருப்பாரோ என்னவோ?
.....................................
Mar 25, 2018

கபாலி என்ற ஒரு ’மகேசன்’ தீர்ப்பு

டெலிபதி.. பேங்களூரிலிருக்கும் நெருங்கிய நண்பன் எம்.சரவணன் பற்றி காலையில் எழுந்ததிலிருந்து நினைத்துக்கொண்டிருக்கிறேன். 

சரவணனிடம் இருந்து
போன்.
’சென்னை வந்திருக்கிறேன். எக்மோர் ஃபோர்டெல் ஓட்டலில் தங்கியிருக்கிறேன்.’
சரவணன் பற்றி ஒரு தனி பதிவு எழுத வேண்டும்.
ஃபோர்டெல் ஓட்டலில் எட்டாவது மாடியில். கண்ணாடி ஜன்னல் வழியே ஆல்பட் தியேட்டர் தெரிகிறது. ’நாடோடி மன்னன்’ எம்.ஜி.ஆர் படம்.
சரவணனுடன் மதியம் அங்கே உள்ள ரெஸ்ட்ரண்ட்டில் மதியம் புல்கா, மட்டன் க்ரேவி, காஃபி.
பாருங்க...Restaurant. உச்சரிப்பு ரெஸ்ட்ரண்ட் தான். ரெஸ்’டா’ரண்ட் தவறு. Spoken English teacher ஆக இருந்த போது குழந்தைகளிடம் இதை நன்கு வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.
இருட்டிய பின் டாக்ஸியில் சரவணன் வழியனுப்பி வைத்த பின் டிரைவர் அரசியல் பேசும்படி திரிய கொளுத்தி போட்டேன்.
கவனமாக அவருடைய அரசியல் அபிப்ராயங்களை கேட்டேன்.
டிரைவர் பெயர் கபாலி. அந்த காலத்தில் பிறந்த குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் பெயரை உடனே,உடனே கபாலி என்று மாற்றி வைத்து மயிலாப்பூர், மந்தவெளி ஏரியாவில் உள்ள ஏழைகள் கபாலீஸ்வரரை “காப்பாத்து, கொழந்தய காப்பாத்து” என்று வேண்டுதல் செய்வார்கள். பொழச்ச கொழந்த அதற்கு பின் ஆயுசுக்கும் கபாலி தான்.

டாக்ஸிக்கு பேங்க் லோன். இந்த லோன் கட்டி முடிச்சதும் வீடு கட்ட லோன் வாங்கப் பாக்கணும்.
டிரைவர் கபாலி குடும்பமே ரஜினி ரசிகர்கள்.
’கமலுக்கு அய்யர்ங்க ஓட்டு தான் கெடைக்கும்...’
நான் ’கமல் கடவுளே இல்லங்கறாரெ. பிராமின் ஓட்டு கூட கெடைக்குமா? ப்ராமின் ஓட்ட வச்சு தமிழ் நாட்டில குப்ப கொட்ட முடியுமா? ’
டிரைவர் கபாலி டாக்ஸியில் வெங்கடாஜலபதி, முருகன், சிர்டி பாபாவெல்லாம் இருந்தார்கள்.
கபாலி ‘ கமல் சொல்றத விடுங்க.. எனக்கு இப்ப ரஜினி புரியல சார். இப்ப டிவியில பேச்ச கேட்டேன். அவரு மேல வருத்தமாயிருச்சி...என்னமோ ஒரு வார்த்த விட்டாரு...ஞானமா...எனக்கு அந்த வார்த்த வாயில வரமாட்டேங்குது... ஞானமா? என்ன வார்த்த...இந்த மாதிரி..’
நான் எடுத்து கொடுத்தேன்.” ஆன்மீக அரசியல்”
கபாலி “ ஆங்...அது தான்....எனக்கு பிடிக்கல...இன்னாது அது. இவரு பி.ஜே.பி சொல்ற மாதிரில்ல ஏதோ சொல்றாரு... இது நியாயமே இல்ல. பி.ஜே.பி மாதிரி இன்னொரு கட்சிங்கறாரா?...”
”தமிழ் நாட்டில தான் சார் முஸ்லீம்களோட, கிரிஸ்டீன்களோட நல்லது கெட்டதுல்லலாம் நாம கலந்துக்கிறோம். சொந்தக்காரங்க மாதிரி அவங்க இருக்காங்க... பி.ஜே.பி அதுல கொழப்பம் பண்ண பாக்கிறாங்க.. ரஜினியும் அவங்களுக்கு டப்பிங் பேசறாரேன்னு கோபம் வருது சார்.. ரஜினி படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் அரசியல் பேசறது கொஞ்சமும் இஷ்டப்படல எனக்கு..”
நான் “அதிமுக அரசியல்ல உங்களுக்கு யார பிடிக்கும்”
”எடப்பாடி- பன்னீர பிடிக்கல சார். தினகரன் சுயேச்சையா நின்னு ஜெயிச்சாரே சார். பன்னீர் குரூப் எடப்பாடிய எதித்து ஓட்டு போடலியா...அது சபாநாயகர் கண்ணுக்கு தெரியல... தினகரனோட பதினெட்டு எம்.எல்.ஏ மேல கை வக்கிறாரு... இன்னா அரசியல் சார்.. இவனுங்களுக்கு தினகரன் மேல் சார்.. தினகரன் பணம் கொடுத்தாரு சரி.. எடப்பாடி கொடுக்கலன்னு சத்தியம் பண்ண முடியுமா? ”
நான் ”ஏங்க... மன்னார்குடி கும்பல ஒதுக்குனது எடப்பாடி சாதன தானே?”
டிரைவர் கபாலி “ ஒரு லட்சம் கோடியா சசிகலா, தெனகரன் ட்ட இருக்கு. அம்புட்டு பணத்த என்ன பண்ண மிடியும்”
நான் “ முன்னூறு பங்கா பிரிச்சிப்பாங்க. கருணாநிதி குடும்பங்கள் முப்பதுன்னா மன்னார்குடி குடும்பங்க, சொந்த பந்தங்க முன்னூறு தலைக்கட்டு.”
எடிரைவர் கபாலி : ஆங்.. சரி எப்படியோ ஓட்டுக்கு எத்தன தொகுதின்னாலும் பணம் கொடுக்கற வசதி.....
நான் “ சரி! எலக்‌ஷன் வந்தா யாருக்கு ஓட்டு போடுவீங்க..? உங்க பேரெ கபாலி.”
“ என் ஃபேமிலியே ரஜினி ஃபேன்ஸ் சார்... அவரு பேச்சி புடிக்கல...அரசியல் அவருக்கு எதுக்கு சார்.. கலைங்கர் கட்சிக்கு போட்டா போடுவோம். ஸ்டாலின் பாவம். வரட்டுமே..நான் சொன்னா என் ஃபேமிலி சரின்னு சொல்வாங்க... இது வர ரெட்ட எலக்கு தான் போட்டோம்.. எடப்பாடி பன்னீர் கிட்ட ரெட்ட எல இருக்குன்னா எப்படி போடுறது. கலைங்கர் இல்லாட்டி தினகரனுக்கு தான் ஓட்டு. இப்ப சொல்ல மிடில.. பணம் கையில கிடைக்கும்போது அப்ப மனசு எப்டி மாறுமோ?”
........................................
புகைப்படம்
எம்.சரவணனும் நானும்

Mar 22, 2018

The relentless march of time


பாலாவின் "நாச்சியார்" படத்தின் கடைசி காட்சி ஒரு பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.
நானும் என் மனைவியும் பாண்டிச்சேரி போவதற்காக திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ட்ரையினில் பயணம். கீர்த்தி பழனியில் எல்.கே.ஜி முடித்திருந்தான். அப்போது அஷ்வத் பிறந்திருக்கவில்லை.
விழுப்புரத்தில் இறங்கி புதுவைக்கு போக வேண்டும்.
ஏசி கோச்சில் எங்கள் எதிரில் ஒரு வயதான தம்பதியர். ஒரு ஓய்வு பெற்ற பஞ்சாயத்து கமிஷனர், அவருடைய மனைவி இருவரும் சென்னை செல்கிறார்கள்.
அந்த அம்மையார் சுகவீனமான நிலையில். எங்களை பார்த்ததில் கொஞ்சம் உடல் உபாதை மறந்திருந்தார். எங்களை பற்றி தன் கணவரிடம் சொன்னார்: ”என்னங்க... இதுங்க ரெண்டுமே கொழந்தைகள். இதுங்களுக்கு ஒரு மூணு வயசு கொழந்தை.”

பஞ்சாயத்து கமிஷனர் என்னிடம் கேட்டார் :” இப்பவே சின்னப்பையனா இருக்கியேப்பா...கல்யாணத்தப்ப எப்படி இருந்திருப்ப. டவுசர் போட்டிருக்கும்போதே கல்யாணம் பண்ணிட்டியா?”

The relentless march of time.
காலம் தான் எப்படி ரயில் மாதிரி யாருக்கும் காத்திராமல் ஓடி விடுகிறது.

“ You can't do very much about old age. It creeps up on you at a snail's pace to start with, then gathers speed in your middle age, and before you know it, you are an old man."
- Khushwant Singh

”இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்”
- கவிஞர் கண்ணதாசன்
...........................................


I always avoid compulsive talkers.
I do not appreciate rhetorical comments. In fact I do not expect or await any comment for my write-ups.
...................................

"I get easily bored with people and would rather read a book or listen to music than converse with anyone for too long.
I do not have many friends because I do not set much store by friendship.
I have found that friends, however nice and friendly they may be, demand more time than I am willing to spare.
I have had a few very close friends in my time. When some of them dropped me, instead of being upset, I felt relieved."
- Khushwant Singh

Mar 21, 2018

அண்ணா அம்மா ஆட்டுக்குட்டி முன்னேற்ற திராவிட கழகம்


மட்டன் கடை பாய் ரொம்ப வருத்தத்துடன் “ ஏதாவது கட்சியில் என்னை சேத்தா இந்த கசாயு வேலைய விட்டிடுவேன்”ன்னு சொன்னார். 

நான் “ ஒரு கட்சி நான் ஆரம்பிக்கிறேன். அண்ணா அம்மா ஆட்டுக்குட்டி முன்னேற்ற திராவிடகழகம். நீங்க தான் பொதுச் செயலாளர்”
“ஏதாவது வேலை எனக்கு இருக்குமா?”

“ பொதுச்செயலாளருக்கு எந்த வேலையும் கிடையாது. நீங்க மட்டன் கடைய மூடவும் வேணாம்.
அரசியல்வாதின்னாலே பார்ட் டைம் தொழில் தான்.
முழுநேர அரசியல்னு ஒன்னு இல்லவே இல்லை. எல்லோருமே பல தொழில் செய்பவர்கள் தான்.
கட்சி பேர பாத்தீங்களா.. அண்ணா பேர் இல்ல, திராவிடம் இல்லன்னு எவனும் சலிக்கவும் முடியாது. அதோட உங்க தொழில் சமாச்சாரம். ஆட்டுக்குட்டி முன்னேறுனா ஆடு. ஆடு இருந்தா தான மட்டன் கடை.”

பாய் “ உங்களுக்கு நம்ம கட்சில என்ன வேல.”

“ என்ன பாய், கட்சிக்கு தூணே தொண்டன் தானே.வேட்டி சட்டை ரெண்டு செட் வச்சிருக்கேன்.”

.............................

Mar 20, 2018

Panorama


மண்டய போட்டுட்டா மகான்னு கொண்டாடி கொடமொடைச்சி
டுறானுங்க.
எல்லா கட்சி 
மேல் மூடிகளும் அந்தாளு கிட்ட நல்லா வாங்கி சாப்பிட்டிருக்கானுங்க...              ரஜினி : என் பின்னால் கடவுளும் மக்களும்.
விஜயகாந்து: என் டயலாக் ஆச்சே இது.. இப்படித்தான் ’ஆண்டவனோடயும் மக்களோடயும் மட்டும் கூட்டணி’ன்னு நானும் சொல்லிட்டு அப்புறமா பா.ஜ.க வோட சேந்திருந்திருக்கேனே.....


ரத யாத்திரை ஒரு ஏழர ரோதன என்பது சரி தான...


கமல் பேச்சு ‘வெளக்கெண்ணய எடுத்து குண்டி கழுவுன மாதிரி’ வழ,வழன்னு... 
’ஓலப்பாயுல நாய் மோண்ட மாதிரி’ சல,சலன்னு...


Mar 18, 2018

இது ரஜினி சமாச்சாரமில்ல


முதல் மனைவி முத்துக்கண்ணு. அப்படியிருந்தும் ஒரு strong affair. அதுவும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியோடு. ”ஏப்பா கேள்விப்பட்டனே.. மஞ்சுளாவோட சேர்க்கையா..உண்மையா” என கேட்ட சாண்டோ சின்னப்ப தேவரிடம் “என்னண்ணே! நீங்களுமா இதை நம்புறீங்க. அப்படியெல்லாம் நான் செய்வேனா? நம்ம ஜாதியென்ன? அப்படியெல்லாம் ஜாதிய தூக்கி போடுகிற ஆள் நான் இல்லண்ணே.” என்று சொன்ன விஜயகுமார்.
மஞ்சுளாவுக்கு எல்லா திரைப்பட நடிகைகளுக்குமுள்ள சிக்கல்கள் இருந்தது. கதாநாயகியாக நடித்த எங்கள் தங்கராஜா, உத்தமன் படங்களின் தயாரிப்பாளர் வி.பி.ராஜேந்திர பிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாகக் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடன் ஊட்டியில் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த போது ரிஸப்சனிஸ்ட்டிடம் கூட அப்படி மஞ்சுளா சொல்லியிருக்கிறார்.
ஆனால் இப்படி ஸ்டேட்மெண்ட் எல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்தாக மாறும். மன்மத பாணம் மாறி மாறி வெவ்வேறு விதமாக வீசப்படும் போது எப்படியெப்படியெல்லாமோ திசை மாறி விடும் காட்சிகள்.
An ever-shifting kaleidoscope ...............all patterns alter!

எம்.ஜி.ஆர் காதிற்கு விஜயகுமார் மஞ்சுளா காதல் விஷயம் தெரிய வந்த போது எது அவரை கோபப்படுத்தியதோ?
வாஹினி ஸ்டுடியோவில் மேக் அப் ரூமில் இருந்த எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி அந்த ஸ்டுடியோவில் நடித்துக்கொண்டிருந்த விஜயகுமார் அவரை பார்க்க பதட்டத்துடன் வருகிறார்.
மேக் அப் ரூமில் விஜயகுமார் நுழையு முன் அவருடைய தலைமுடியை பிடித்து உள்ளே எம்.ஜி.ஆரின் கை அவரை உள்ளே இழுப்பதை ஸ்டுடியோவில் இருந்த பலரும் பார்க்கிறார்கள்.
கவனிப்பு உள்ளே எப்படியிருந்திருக்கும் என்பதைப்பற்றி யூகிக்க அதிக சிரமமில்லை.
மண்டகப்படி முடிந்த பின் விஜயகுமாரிடம் சீப்பை கொடுத்து “தலை சீவிக்கொண்டு வெளியே போ” என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். விஜயகுமார் ரோஷத்துடன் சீப்பை அலட்சியப்படுத்தி விட்டு கலைந்த தலையுடனே மேக் அப் அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
There is no wound that time cannot heal!
”அண்ணா நீங்க நினைச்சபடி நடந்துருக்கு
புரட்சி தலைவர் கையில் நாடிருக்கு” என்ற பாடலுக்கு பின்னால் ஒரு படத்தில் அதிமுக கொடி பிடித்து விஜயகுமார் நடித்தார்.
உற்சாகமாக “கொடுக்கின்ற கை, துன்பம் துடைக்கின்ற கை, மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்போ அரசாளுது” என்று அடித்த கையை புகழ்ந்து லாலி பாடினார்.
எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்களெல்லாம் அவரை தூக்கி பிடிப்பது புதிதல்ல. அதிசயமுமல்ல.

Mar 15, 2018

Five Gundas


அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ’அளவான’ பெண் ஒருத்தி திடீரென்று நடந்து செல்வதை இளைய தலைமுறை பார்க்க நேர்ந்தது.
அளவான உயரம். அளவான கண், மூக்கு, முகம், இடுப்பு. ரொம்ப சிவப்பு கிடையாது. கறுப்பும் கிடையாது. மாநிறம்.
அளவான அவயவங்கள் ஒரு பெண்ணை அழகாக்கி விடுகிறது.
ஏரியாவுக்கு புது வரவு.
அங்கே நின்று கொண்டிருந்த எல்லோருக்குமே அவளை பிடித்தது. இப்படி ஒரு பெண் தான் காதலியாக வர வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
கிடார் எபி, கிடார் துரையென்று ரெண்டு பேர்.
கிடார் எபி ப்ளு பேர்ட்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவில் லீட் கிடாரிஸ்ட்.
நான் பாடப் பாட இவர்கள் இருவரும் கிடார் பழகினார்கள்.
அப்படி பழகியதில் கிடார் எபி மதுரையில் முக்கியமான கிடாரிஸ்ட் ஆன பின் “ நீ பாட, பாட தானே நான் கிடார் வாசிக்க பழகினேன்” என்று நன்றியுடன் என்னிடம் சொன்னான்.

இவன் அளவுக்கு கிடார் துரையால் வாத்தியத்தில் பாண்டித்யம் பெற முடியாமல் போனது.
ஆனால் இந்த ’அளவான’ பெண் விஷயத்தில் எல்லாம் கிடார் துரையால் பின் வாங்க முடியுமா?
கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு பேர் பார்த்த விநாடியில் களத்தில் இறங்க தயாராகி விட்டார்கள்.
கிடார் துரை அதன் பின் அந்தப் பெண் பார்க்க நேரும்போதெல்லாம் ரோட்டில் கிதாரில் ரிதம் வாசிக்க ஆரம்பித்தான். லீட் வாசிப்பதில் தான் அவனுக்கு சிக்கல்.
அவளை பின் தொடர்ந்து கோமஸ் பாளையத்தில் அவள் வீட்டை கண்டு பிடித்து விட்டான்.
நல்ல மார்கழி மாதம் அது.
விடிவதற்கு கொஞ்ச நேரம் முன் ’மசை கிளப்பல்’. தலைக்கு மஃப்ளர் கட்டிக்கொண்டு ஸ்வெட்டரை சட்டை மேல் போட்டுக்கொண்டு சைக்கிளில் தாட்டி வீட்டை நோக்கி ஒரு வெள்ளோட்டம் விட்டான் கிடார் துரை. பனியில் இவனுக்கு பல்லெல்லாம் தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டது. சரியான குளிர். வெட வெடன்னு வாடையில உடம்பு நடுங்க, நடுங்க அந்த மசை வீட்டின் வாசலில் சைக்கிளை செக் பண்ணுவது போல நிறுத்தியிருக்கிறான்.

வீட்டின் வெளி வராண்டாவில் ஐந்து கட்டிளங்காளைகள் கட்டாந்தரையில் பாய் கூட விரிக்காமல் படுத்துறங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அழகொட்ட அஞ்சு பயல்கள்.

லேசான விடியலில் இவன் மீண்டும் எண்ணிப்பார்த்திருக்கிறான். ஆமா…அஞ்சு குண்டர்கள்.. பார்த்தாலே சகோதரர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் சாயலில் தெரிகிறது.
இந்தக் கடுங்குளிரில் வெளி வராண்டா கட்டாந்தரையில் ஒரு சட்டை, ஒரு பனியன் கூட போட்டுக்கொள்ளாமல் வெறும் உடம்புடன் படுத்துறங்கும் ஐந்து குண்டர்கள்.
ஸ்வெட்டரும், தலைக்கு மஃப்ளரும் கட்டிக்கொண்டிருந்த கிடார் துரைக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது.
வீட்டிற்குள் இருந்து அந்த பெண்ணின் அம்மா சமையல் கட்டிலிருந்து “ அண்ணன்கள எழுப்பி விடும்மா. விடிஞ்சிடுச்சு“ என்று சத்தமாக, வெராண்டாவை ஒட்டியிருந்த ஹாலில் தூங்கி எழுந்து நின்று கொண்டிருந்த அந்த அழகான பெண்ணிடம் சொல்லியது இவன் காதில் விழுந்திருக்கிறது. வெராண்டா, ஒரு ஹால், அடுத்து சமையல் கட்டுள்ள வீடு.
இவன் அங்கிருந்து விட்டான் ஜூட்.
டேய், Five Gundas. அஞ்சு கட்டழகர்கள் கடும்பனியில்
கட்டாந்தரையில் படுத்துத் தூங்குறாங்கெ… அவளுக்கு அஞ்சு அண்ணன்கள்.
காதல் களத்தில் இறங்க ஆசைப்பட்ட பலரும், அப்படி அதற்காக ’களப்பலி’ ஆக வேண்டுமா? என்று விவேகமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மார்கழி பனியில் மட்டுமல்ல,தைப்பனி தரைய பிளக்கும். அப்பவும் தரையில் பாய் விரிக்காமல் படுத்திருந்த கல் நெஞ்சுக்கார அஞ்சு குண்டர்களை அஞ்சாமல் இருக்க முடியுமா?
அந்தப்பெண்ணின் பெயரே அதன் பிறகு அந்த ஏரியாவில் ’ஃபைவ் குண்டாஸ்’ தான். அவள் பெயர் என்னவோ? ஆனால் அவளைப் பார்த்தால், அவளை பற்றி பேசினால், அவளை அடையாளமிட ’ஃபைவ் குண்டாஸ்’.

...................................................................................

https://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_22.html


Mar 9, 2018

ரொம்ப செல்லம்


ரொம்ப நாள் காணாத படி பல நண்பர்கள் வாழ்விலிருந்து மறைந்து போவார்கள். திடீரென்று அவர்கள் தோன்றுவதுண்டு.
திருச்சியில் அப்படி ஒரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து போன் வந்தது. “கேபி! நானும் என் மனைவியும் வருகிறோம்.”
“Believe me. இனி நம்ப காலம் தான்.”
இவன் என்ன எனக்கு வழி காட்டப்போகிறான். ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழி.
நல்ல இளமையில் எப்போதும் நான் தான் இவனுக்கு செலவழித்திருக்கிறேன். He was a taker and sponger I met in my life.
மதுரையில் இருக்கும் போதும் சரி, சென்னையில் இருந்த போதும் சரி, என்னோடு இருக்கும்போது பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட் துவங்கி சாப்பிடுவது எல்லாம் என் செலவு தான்.

என்னை விளம்பர மாடல் ஆக்கப்போகிறானா? நிறைய விளம்பரப்படங்கள் நூற்றுக்கணக்கில் தயாரித்திருக்கிறேன் என்று போனில் சொல்கிறானே! ஆஹா! சினிமாவில் நடிகனாக முடியவில்லை என்றாலும் நான் விளம்பர மாடல் ஆகப்போகிறேன் போலுமா!

“என் மனைவியோட தம்பி மதுரையில் ஏற்பாடுகளை கவனிக்கிறான்.”
ஓ! மதுரையில் ஏதோ விளம்பரப் பட ஷூட்டிங் வேலைகள் நடக்கிறது போலுமோ?
“இது வரைக்கும் நடந்தத பத்தி ஒர்ரி பண்ணாத. இனி நம்ம காலம் ஆரம்பிக்குது!”
தனக்கு நல்ல காலம் என்று சொல்லாமல் நமக்கு என்று என்னையும் கூட சேத்துக்கிறானே! பரந்த மனசாயிருக்கும் போலும்.
நான் இப்படி யாராவது வாய்ப்பந்தல் போடும் போது சிலிர்க்கவே மாட்டேன்.

இது என்ன புஸ்வானமோ தெரியலையே?

சரி, ரொம்ப நாள் கழித்து ஒரு நண்பன் பார்க்க வருகிறான். அந்த அளவிற்கு மகிழ்ச்சி.
அவன் மீண்டும் போன் பண்ணி “கெக்ககெக்கக்கெக்கக்கே” என்று சிரித்தான்.
எனக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.
Amway ஆ இருக்குமோ? 

அந்த நேரம் இந்த Amway obsession பிடித்து பலர் சொக்கிப்போய் தேவராஜ்ஜியம் சமீபத்து விட்டது என்ற பிரமையில் இருந்ததை பார்த்திருக்கிறேன்.
திருச்சியில் ஆம்வே பேசிய சிலரை முகத்தாட்சண்யம் பார்க்காமல் நிராகரித்திருக்கிறேன்.
தடுக்கி விழுந்தால் ஆம்வே. இன்னும் ரெண்டு மூணு வருசத்தில சர்வ நிச்சயமா காரு வாங்கணும், பங்களா வாங்கணும், எஸ்டேட் வாங்கணும்னு தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்தான்கள்.
என் அப்பாவிடம் ஆம்வே சரக்குகளை சில ஆம்வே ஏஜண்ட்கள் தள்ளி விட்டு போயிருக்கிறான்கள்.
பெற்றோர் அப்போது வயலூர் ரோடு குமரன் நகரில். நான் என் குடும்பத்துடன் பிஷப் ஹீபர் காலேஜுக்கு எதிரே எம்.ஜி.ஆர் நகரில்.
மனைவியோடு வந்து சேர்ந்தான் நண்பன். தலை பெரும்பகுதி நரை.
எனக்கு நரையே இல்லை என்பதை பார்த்து டை அடித்திருக்கிறேனாக்கும் என்று அவன் மனைவி நினைத்து விட்டாள். இயற்கையாகவே அப்போது எனக்கு நரையில்லை.
இன்று வரை கூட நான் தலைக்கு டை அடித்ததேயில்லை. இப்போது எனக்கு நரை இருக்கிறது. முடி அடர்த்தி குறைந்து விட்டது.
அவன் மனைவியுடன் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் எதுவும் கேட்கவில்லை. அவன் ஆனால்
“ ஒளிமயமான எதிர்காலம்” பேசிக்கொண்டே தான் சாப்பிட்டான்.
“ ஆம்வே விஷயமா வந்திருக்கியா?”
“எப்படி கேபி கரெக்டா கண்டு பிடிச்சே”
நான் இதற்கெல்லாம் ஒத்துழைக்க மாட்டேன் என்பதை மெதுவாக சொன்னேன். அவனுக்கும் அவன் மனைவிக்கும் சுதி இறங்கி விட்டது.
ஆனால் அவன் மனந்தளராமல் மீண்டும் முருங்கை மரம் ஏறினான். என்னை எப்படியாவது பேசி கன்வின்ஸ் செய்து விடலாம் என்ற நம்பிக்கை.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் அடுத்தவனுக்கு வேலை பார்க்க வேண்டியதில்லை. நாமே சகல பலன்களையும் கொள்முதல் செய்வோம். இன்னும் அஞ்சு வருஷத்தில வாழ்க்கையில வசதி வாய்ப்போடு கைய கட்டிக்கிட்டு உக்காந்து சாப்பிடலாம்.
மறு நாள் ஆம்வே மீட்டிங்குக்கு நான் வரவேண்டும் என்று வலியுறுத்தினான். உயிரை எடுத்தான்.
விருந்தாளி. அதிதி தேவோ பவ.
அந்த மீட்டிங்கில் எனக்கான டிக்கெட் அவனை எடுக்க விடாமல் நானே பணம் கொடுத்து விட்டேன்.
சகிக்க முடியவில்லை. சரியான கூட்டம். எனக்கு எல்லாமே வேடிக்கை தானே.
அந்தக்கால தெலுங்கு நடிகர் மாதிரி மேக் அப்பில் மேடையில் ஒருவன் தோன்றி சொன்னான். “ ஆம்வேயினால் நான் இன்று பெருங்கோடீஸ்வரன். முன்பெல்லாம் என் மனைவிக்கு சல்மான்கானைத் தான் பிடிக்கும். இப்போது உன்னுடைய ஹீரோ யார் என்று என் மனைவியை கேளுங்கள். ‘என் புருஷன் தான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்.”
இப்படி பெரிய ட்ராமா நடத்தினான் ஆம்வே கம்பெனிக்காரன். இதை நம்பி கூட்டம் பெரும் கரகோஷம்.
Obsession is the single most wasteful human activity.
- Norman Mailer

வீட்டிற்கு வந்தவுடன் நான் தீர்மானமாக நிராகரித்து சொன்னது அவனுக்கு ரசிக்கவில்லை.
தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்களிடம் ஆம்வே பொருட்கள் நிரம்பிய 4500 ரூபாய் கிட் ஒன்றை விற்க வேண்டுமாம். Chain Circulationல் ஒரு வருடத்திலிருந்து பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். நான் கோணிக்குள்ள கட்டோ கட்டு என்று கட்டப்போகிறேன்.
அவனிடம் ஆம்வே பற்றி என் பதில் இப்படி சொன்னேன். “ நான் என் நண்பர்கள், சொந்தக்காரர்கள் யாரையும் Exploit பண்ண மாட்டேன்.
“பெந்தகோஸ்ட் ப்ரேயர் கும்பல் போலத்தான் உங்க ஆம்வே பைத்தியமும்.”

அவனை விட அவன் மனைவி முகம் சுண்டினாள்.

” இன்னும் சில வருடங்கள்ல (நீ என்னப் பாத்து) ரொம்ப வருத்தப்படுவே.” என்று சாபம் கொடுத்தான். அதாவது இவர் பெரிய கோடீஸ்வரன் ஆன பின் இவனைப் போல ஆகவில்லையே என்று வருத்தப்படுவேனாம்.
அவன் மனைவி என் தர்ம பத்தினியிடம் “ அண்ணி, நீங்க அண்ணனுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறீங்க. செல்லம் கொடுத்தே கெடுத்து வச்சிட்டீங்க”
என் மனைவியின் விருந்தோம்பலுக்கு நன்றியாக இந்த Compliment.

இன்னும் இரண்டு வருடத்தில் ஆம் வே வருமானத்தில் இருபத்தைந்து லட்சம் ஒதுக்கி சினிமா படம் நிச்சயம் எடுக்கப்போவதாக அவன் மனைவியின் சவடால்.

மறு நாள் கிளம்பினார்கள்.
தனிப்பட்ட முறையில் நான் என் அப்பாவிடம் அவர் காரை என் உபயோகத்திற்கு ஒரு நாளும் கேட்டதேயில்லை.
இவனுக்காக காரை கேட்டேன். என் அப்பாவின் காரில் இவர்கள் இருவரையும் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தேன்.
மூன்று நாள் என் வீட்டில் விருந்துண்டவன் மீண்டும் எனக்கு அதன் பிறகு ஒரு போன் போடவேயில்லை. கோபம்.

திருப்பூரில் நான் வேலை பார்த்த போது மீண்டும் போன் லைனில் டயலாக் விட்டான். ஆம்வே கேனங்களின் டயலாக் தான்: ”உனக்காக ஆம்வேல சம்பாதிக்க மாட்டேன்ன. இப்ப எவனோ ஒரு முதலாளிக்கு சம்பாரிச்சு கொடுத்துக்கிட்டிருக்கிற.“
குத்திக் காண்பிக்கிறான். ’உனக்காக ஆம்வே கதவ திறந்து விட்டேன். Golden chance. நீ அத ஒதுக்கி வீணா போயிட்டே. எவன் கிட்டயோ மாச சம்பளத்துக்கு கை கட்டி அடிமையா சேவகம் பண்ணுற’ என்று அர்த்தம்.
சென்னையில் (15 வருடம் கழித்து) சென்ற வருடம் தற்செயலாக சந்தித்தேன். அவனுடைய Super Ego அப்படியே அவனிடம் இன்னும் எஞ்சியிருக்கிறது.
அப்படி ஒன்றும் பங்களா, கார், வசதியெல்லாம் இருக்கவில்லை. நண்பர்கள், உறவு யாரோடும் இணக்கமாகவும் அவன் இல்லை. ஏதோ தலைமறைவு வாழ்க்கை போல பிறர் அபிப்ராயப்பட்டார்கள்.
மனைவியையும் அவன் பிரிந்து விட்டதாக மற்ற ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். பாவம், பிரிவு தாற்காலிகமாக இருந்தால் நல்லது.

I see men's judgments are a parcel of their fortunes, and things outward
Do draw the inward quality after them
To suffer all alike.
- Shakespeare in 'Antony and Cleapatra'


………………………………………………