Share

Mar 6, 2018

பாப்ஜி


நடிகை புஷ்பவல்லியின் மூத்த மகன் பாப்ஜியை ஹிந்தி நடிகை ரேகாவின் சகோதரர் என்று சொன்னால் இன்று புரியும்.

வெங்கடேஷ் சக்ரவர்த்தி, குட்டி பத்மினி இருவரின் மூத்த சகோதரி விஜயலட்சுமி அவர்களின் கணவர்.
அழகானவர் பாப்ஜி என்று சொல்லத் தேவையில்லை. புஷ்பவல்லி தமிழ் திரை கண்ட மிக அழகான நடிகைகளில் ஒருவர்.
பாப்ஜியின் அப்பா யார்? ஜெமினி ஸ்டுடியோவில் நட்சத்திரமாக ஜொலித்தவர் புஷ்பவல்லி. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தான் பாப்ஜியின் அப்பா என்ற சந்தேகம் கூட இன்றும் உண்டு.
ஒரு இயக்குனரின் மனைவியாக புஷ்பவல்லி இருந்திருக்கிறார். அவர் யார் என்று தெரியவில்லை.
பாப்ஜியின் பாஸ்போர்ட்டில் அவருடைய தந்தை பெயராக ஜெமினி கணேசன் பெயர் தான் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஜெமினி கணேசன் முதல் மனைவி பெயர் கூட பாப்ஜி தானே!)
பாப்ஜியின் இளைய சகோதரிகள் ரேகா, ராதா என்ற இரு குழந்தைகள் ஜெமினி கணேசனுடன் வாழ்ந்த போது புஷ்பவல்லிக்கு பிறந்தவர்கள்.
ஜெமினி கணேசனை விட்டு பிரிந்த பின் புஷ்பவல்லிக்கு ஒரு மியூசிக் டைரக்டருடன் வாழும்படியான நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மியூசிக் டைரக்டருக்கும் புஷ்பவல்லிக்கும் தனலட்சுமி, ஷேசு என்று இரண்டு புத்ரங்கள்.
அந்த தெலுங்கு மியூசிக் டைரக்டர் பெயர் பிரகாஷ் ராவ் என்று கேள்வி.
இயக்குனர் வேதாந்தம் ராகவையாவின் மனைவி நடிகை சூரிய பிரபா தான் புஷ்பவல்லியின் உடன் பிறந்த தங்கை.
சூரிய பிரபாவின் மகள் சுபா தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்தவர் தான். பட்டிக்காடா பட்டணமாவில் சிவாஜி “ என்னடி ராக்கம்மா” என்று இவரை பார்த்து தான் பாடுவார்.
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் கண்ணாடி போட்டு மூத்த சகோதரியாக சுபா நடித்திருக்கிறார்.
பாப்ஜி தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் தான்.
வியட்நாம் வீடு படத்தில் சைக்கிளில் வந்து சிவாஜி கணேசனின் மகளை காதலிப்பது பாப்ஜி தான்.
குல விளக்கு படத்தில் சரோஜாதேவியின் தம்பியாக மெடிக்கல் கல்லூரி மாணவராக நடித்திருப்பவர் பாப்ஜி.
பட்டிக்காடா பட்டணமா படத்தில் ஜெயலலிதாவுக்கு Fix செய்யப்பட்ட மாப்பிள்ளையாக நடித்திருக்கிறார்.
கவனிக்கும்படியான நல்ல கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைக்கவில்லை.
பாப்ஜி ஒரு Multi-dimensional person.
பாப்ஜி கதாநாயகனாகவும் குட்டி பத்மினி கதாநாயகியாகவும் நடிக்க ஒரு படம் 1970களின் முன் பகுதியில் தயாரானதுண்டு.

“அவளில்லாமல் நானில்லை”
படத்தின் தயாரிப்பாளர் பாப்ஜியின் மாமனார் சக்ரவர்த்தி.
’அவளில்லாமல் நானில்லை’ படத்திற்கு கதை வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எல்லாமே பாப்ஜி தான்.
திரைப்படம் எடுப்பதே ஒரு Herculian Task. இந்த பெருமுயற்சியில் சக்ரவர்த்தியாலும் பாப்ஜியாலும் வெற்றி பெறவே முடியவில்லை.
விஜயலட்சுமியின் சொந்த சித்தி முன் முன். இவருடைய மகள் உஷாவின் கணவர்
டி.ராஜேந்தர் 1980களில் சாதிக்க முடிந்ததை ஒரு பத்து வருடம் முன் விஜயலட்சுமியின் கணவரால் சாதிக்க முடியவில்லை.

பாப்ஜியின் மாமியார் ரூத் என்ற ராதாபாய் அவர்கள் சரோஜா தேவி, சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா ஆகியோரின் ஹேர் ட்ரஸ்ஸர் ஆக இருந்தவர். 
பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ரேகா ’சாவன் பாதன்’ இந்தி படத்தின் மூலம் அகில இந்திய நடிகையாக உயர்ந்த பின் பாப்ஜியை உயர்த்த முயற்சித்திருந்தால் ஒருவேளை இவர் தன் திரை முயற்சிகளில் ஜெயித்திருக்கலாம். ஆனால் அப்படி தெரியவில்லை.
எத்துனை பின்புலம் இருந்தாலும், எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திரையுலகில் ஏன் ஜொலிக்க முடியவில்லை என்கிற புதிருக்கு விடையில்லை.
………………………………………………..
பாப்ஜி உணவு உண்ணும் போதே அவருக்கு உயிர் பிரிந்திருக்கிறது. விஜயலட்சுமி இன்று பெந்தகோஸ்ட் கிறிஸ்தவராக முதுமையில் வாழ்கிறார்.
பாப்ஜியின் புகைப்படம் கிடைக்கவில்லை.
இந்த Write up எழுத வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் உதவியும் கிடைத்தது. அவருக்கு என் நன்றி

……………………………………




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.