Share

Mar 27, 2018

எஸ்.எஸ்.வாசன் மீதான அசோகமித்திரனின் கசந்த நினைவுகள்


ஜெமினி ஸ்டுடியோ பற்றி எஸ்.எஸ்.வாசன் பற்றி எத்தனை சிறுகதைகளில், நாவல்களில், கட்டுரைகளில் கூட குறிப்பிட்டிருக்கிறார்.அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நாவலில் வருகிற ராம ஐயங்கார் பாத்திரம் ஜெமினி அதிபர் வாசன் தான். ’மானசரோவர்’ ஸ்டுயோ முதலாளியும் வாசனே.
மிகக் கடுமையான வார்த்தைகளால் ’வண்ணங்கள்’ கதையில் ஜெமினி முதலாளியைப் பற்றி “தேவடியாளுக்கெல்லாம் கொட்டி அளந்தாங்க. வீடு வீடாக் கட்டிக் கொடுத்தாங்க. காரு வாங்கிக்கொடுத்தாங்க. எங்களுக்குப் பத்தணா கொடுக்க பிசிநாறித்தனம்..”
”எத்தினி தொழிலாளிங்க வயத்தெரிச்சலையும் வேதனையையும் வாங்கிக் கட்டிட்டாங்க. அந்த படுபாவிங்க! அவுங்க வம்சமே உருப்படாமத் தெருத் தெருவா நாறும்.”
ஜெமினி ஸ்டுடியோவில் ஆஃபிஸ் பாய் அந்தோணியின் சாபம்.

”பதினெஞ்சு வருஷம் என் பொண்டாட்டி பிள்ளையைச் சாகக் கொடுத்து உழைச்சேன், வெளியில போறப்போ கையிலே ஆயிரம் ரூபா கூடத் தரலே..எட்டு நூறு ரூபா கொடுத்தான் அந்த முதலாளி”
”லிங்கிச்செட்டி தெருவிலே, பதினாறு வருஷம்.. அந்த மார்வாடி எவ்வளவு கொடுத்தான் தெரியுமா? இருபத்தைந்தாயிரம்!”
அசோகமித்திரனின் கதைகளில் நூறு கதைகள் படித்து விட்டு ஒரு கதையைக்கூட மறக்கத்தான் முடியுமா?
‘.
ஜெமினி ஸ்டுடியோவில் தன் மனமும், உடலும் அனுபவித்த தாள முடியாத வியாகுல துயரங்களைப் பற்றி எவ்வளவு கதைகளில் கோடிட்டிருக்கிறார்.

பழைய நினைவுகள் மனதைக் குதறிப் போடாமலிருக்க காலம் தேவைப்படுகிறது.’ என்பார் அசோகமித்திரன்.
காலத்தையும் மீறித்தான் அசோகமித்திரனின் மனம் பழைய நினைவுகளால் குதறிப்போடப்பட்டிருக்கிறது.
சும்மா யாருன்னாலும் “ There is no wound that time cannot heal” என்று சொல்லிக்கொள்ளலாம் தான். புண் உமிழ் குருதி. சீழ் கோர்க்கும் புண்களாய் கடந்த கால கசந்த நினைவுகள்.
’வண்ணங்கள்’ கதையில் எஸ்.எஸ்.வாசன், ஜெமினி ஸ்டுடியோ மீதான தன் தீராத கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வண்ணங்கள் தொடும் பரிமாணங்கள் தான் எத்தனை?
அந்தோணிக்கு சென்னையில் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேய், பிசாசு இருக்கிறது என்பதைப்பற்றி தீர்மானமான அபிப்ராயம்.
அசோகமித்திரன் “ நிஜமான பிசாசு எது தெரியுமா? இவன் பணக்காரன், இவன் ஏழை, இவன் எஜமானன், இவன் வேலைக்காரன், இவன் சம்பளம் தர்றவன்னு இருக்கே. இந்த அமைப்பு. இது தான் நிஜமான பிசாசு. இந்தப் பிசாசு இல்லேன்னா அரை வயத்துக்குச் சாப்பிட்டாக்கூட நீயும் நானும் எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். இந்தப் பிசாசுக்கு ஆயிரக்கணக்கான வருஷம் வயசாயிருக்கு. அது பெரிசாயிண்டே போறது. இந்தப் பிசாசை ஒழிச்சுட்டா நீ சொல்ற பிசாசெல்லாம் தானாகவே செத்துப்போயிடும்..”
‘அப்போதெல்லாம் எங்கள் முதலாளி தொழிற்சங்கம், அரசு அமல்படுத்த விரும்பிய தொழிற்சட்டங்கள் மீது மிகுந்த சந்தேகம் உடையவராக இருந்தார். யூனியன், கம்யூனிஸ்ட் இதெல்லாம் அங்கு தொடர்ந்து வேலையிலிருக்க வேண்டுமானால் அபாயகரமான சொற்கள், சிந்தனைகள்.’
அந்தோணி, மாணிக்கராஜ், மாணிக்க வாசகம், முனுசாமி, நாயர்…
“ இவர்கள் எல்லோருக்கும் நான் அதிகாரி என்று தோன்றினாலும், நடைமுறையில் நாங்கள் எல்லாரும் ஒரே மாதிரி வேலை, ஒரே அளவு வேலை பார்த்தோம்” என்று போட்டு உடைக்கிறார் அசோகமித்திரன்.
தவிர பத்து டிரைவர்கள், இரண்டு கிளீனர்கள், பெருக்குபவர்கள், தோட்டிகள், வாச்சுமென்கள், தோட்டவேலைக்காரர்கள் என்று ஒரு சைன்யம்.
இவர்களுக்காக கடன் விண்ணப்பங்கள், சம்பள அட்வான்ஸ் விண்ணப்பங்கள், பதினைந்து நாட்கள் காணாமல் போய் விட்டதற்கு மனமுருகும் மன்னிப்பு கடிதம்...என் பேனாவில் மையூற்றி எழுதவில்லை. கண்ணீரையூற்றி எழுதினேன். கண்ணீரை வரவழைக்க வெங்காயச்சாறு நிரப்பி எழுதினேன் என்று அசோகமித்திரன் எத்தனை கதைகளில் எழுதி விட்டிருக்கிறார்.
ஜெமினி ஸ்டுடியோவின் Sister concern ஆனந்த விகடனில் இவர் வேலை பார்த்திருந்தால் நன்றாயிருந்திருக்குமா? ஒரு மகத்தான இலக்கியவாதியாக கணையாழியில் தன் எழுத்துக்கு மேடை கண்ட அசோகமித்திரன்.
சினிமா ஸ்டுடியோவில் இளமை கழிவதற்கு பதிலாக பத்திரிக்கையில் தானே ஒரு எழுத்தாளன் சேர்ந்திருந்திருக்க முடியும்.
ஆனால் பின்னால் தமிழ் இலக்கியத்திற்கு அவருடைய ஜெமினி வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்திருக்காதே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.