Share

Aug 31, 2020

எம். என். நம்பியார்

 நம்பியார் 'இளமைக்கால புகைப்படம் ஒன்று' பார்த்திருக்கிறேன். 

நம்பியார் பதின்பருவ வாலிபனாக வேட்டி கட்டிக்கொண்டு நிற்கிறார். 

சிவாஜி பன்னிரண்டு வயது சிறுவனாக கன்னத்தில் கை வைத்துக்கொண்டு. 

கூடவே டவுன் பஸ் கண்ணப்பாவும் சின்னப்பையனாக. 

அந்த புகைப்படம் கண்ணப்பா தான் 

எனக்கு காட்டினார். 

மறக்கவே முடியாத புகைப்படங்களில் அதுவும் ஒன்று.


 


எம்.ஜி.ஆர் இரண்டாவது திருமணத்தில் 

கலந்து கொண்ட நடிகர் நம்பியார்.


திரையுலகில் இருவரும் பிரபலமாவதற்கு முன்


இருவரும் எங்கோ ஒரு மலையேறி நீண்ட தூரம் போக வேண்டியிருந்த போது வெய்யிலில் நல்ல நிறமான நம்பியாரின்  உடல் முழுவதும் red patches ஏற்பட்டதை பார்த்து எம்.ஜி.ஆர் பதைத்திருக்கிறார். இது அவருடைய சுய சரிதை 

நான் ஏன் பிறந்தேனில் சொல்லியிருந்தார்.


எதற்கு இதை சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் இருவரும் சினிமாவில் பிரபலமாகும் முன்னரே

 நல்ல நண்பர்கள்.


 


நம்பியார் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் நகைச்சுவை பாத்திரங்கள் செய்தார். 

அப்புறம் வில்லன். வில்லன் என்றால் சாதாரண வில்லன் இல்லை. 

கொடூரமாக வில்லன் பாத்திரத்தில் கொடி கட்டியவர்.


வில்லனாக நடிக்கும்போதே மிஸ்ஸியம்மாவில் காமெடி செய்திருக்கிறார். ரொம்ப பின்னால் ’தூறல் நின்னு போச்சி’


அவருக்குள் இருந்த காமெடியன் பின்னாளில் கூட தலை காட்டிக்கொண்டிருந்தார். கே.சங்கர் இயக்கிய ஒரு பக்தி படத்தில் நிறைய ஸ்லாப்ஸ்டிக் காமெடி செய்திருந்தார்.


வில்லனாக மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு பெயர் பெற்றார் என்பதற்கு ஒரு உதாரணம்.


எம்.ஜி.ஆர் 1967 தேர்தல் பிரச்சாரம்.

 பரங்கி மலை தொகுதி. ஒரு முதிய பெண்மணி ஒரு குண்டு சோடாவை எம்.ஜி.ஆருக்கு தருகிறார். அதே வேகத்தில் ” கண்ணு, இந்த நம்பியார நம்பாதே, அவன் பார்வையே சரியில்லப்பா. 

அவன் நல்லவனே இல்ல. 

கவனமா இருந்துக்கப்பா.” என்று சொன்னவுடன் எம்.ஜி.ஆர் அந்த வயதான அம்மாவை உணர்ச்சி வசப்பட்டு தழுவிக்கொண்டார். அந்த புகைப்படம் அவருடைய மிக பிரபலமான புகைப்படம். சில நாளில் எம்.ஜி.ஆரை அவருடைய வீட்டிலேயே வைத்து எம்.ஆர்.ராதா சுட்டார்.


நம்பியார் ஒரு வில்லனாக செய்த சாதனைக்கு அந்த கிழவி நிகழ்வு ஒரு சிறந்த விருது போல.


இன்னொன்று


சுகுமாரன் நம்பியார் திருச்சியில் தேர்தலுக்கு நின்ற போது அதிமுகவினர் ஒரு பிரச்சாரம் செய்தார்கள்.


ஒவ்வொரு பகுதியாக செல்லும் போது பெண்களிடம் “ நம்ம தலைவர படங்கள்ள ரொம்ப தொந்தரவு பண்ணுவாருல்ல நம்பியார். அவரோட மகன் தான் இங்க ஓட்டு கேட்கிறார். அவரே அப்படி. இவருக்கு நீங்க ஓட்டு போடலாமா?” என்று கேட்டு சுகுமாரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர்.


Popular MGR was popular but infamous Nambiar. 


நம்பியாரின் வில்லன் நடிப்பு அவருடைய வாரிசின் அரசியல் வாழ்வில்  கூட இப்படி பாதித்தது.


சுகுமாரன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது வேட்டைக்காரன் படம் எடுக்க 

ஒரு வகை உதவி செய்தார்.


எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்குமான கௌபாய் உடைகள், கௌபாய் நடவடிக்கைகள் பற்றி ஃபாரின் மேகசின்ஸ், ஆங்கில படங்களில் உள்ள காட்சிகளை வைத்து விளக்கி உதவியவர். எம்.ஜி.ஆர் இதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டார். நம்பியாரே இதை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.


 


”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்தி சண்ட 

எந்த படத்தில?”


இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.


ரெண்டு பேருக்கும் கத்தி சண்டை இல்லாத படங்களுக்கு வர மாட்டேன் என்று 

பெற்றோரிடம் அடம் பிடிப்பான்.


 


இருவரும் கத்தி சண்டை போடும்போது  இரட்டையர்கள் போல தோன்றும்.


குழந்தைகள், சிறுவர்கள்  மனதில் ஆழமாக எம்.ஜி.ஆர் போலவே தவிர்க்கமுடியாமல் நம்பியாரும் அன்று ஆக்ரமித்தார்.


எம். ஜி. ஆர் படங்களில் மட்டுமல்ல. 


ஸ்ரீதர் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' நம்பியாரின் முக்கிய கதாபாத்திரம். 

'சிவந்த மண்' திவான். 


கே. எஸ். ஜியின் 'உயிரா மானமா' 


நம்பியார் பிரமாதமாக நடித்த படங்கள் பட்டியல் போட்டு முடியாது. 


இன்று எல்லோர் மனதிலும் 

நம்பியார் வில்லன் நடிகர் என்றாலும்

 அவர் ரொம்ப நல்லவர் என்று

 ஒரு saintly image ஏற்பட்டிருக்கிறது.


ஐயப்ப சாமிகளின் குருநாதர்.


https://m.facebook.com/story.php?story_fbid=2817468261799955&id=100006104256328

Aug 29, 2020

Anna Karenina

 Anna Karenina



Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.


Be bad, but at least don't be a liar, a deceiver!

Anything is better than lies and deceit!


Karenina  throws herself under a train.


Anna Karenina's dramatic suicide scene in different movies.


Anna karenina - 2012 - 1935 - 1948 - 1967 - 1997 - 2009 films


https://www.youtube.com/watch?v=fF5XJqpF4Lk


"And the light by which she had been reading the book of life, blazed up suddenly, illuminating those pages that had been dark, then flickered, grew dim, and went out forever"


 "Anna Karenina is flawless as a work of art " Fyodor Dostoyevsky


 "The flawless magic of Tolstoy's style," -Vladimir Nabokov


 "The best novel ever written." - William Faulkner


.......................

Aug 28, 2020

ஜம்பம்



ஒரு திருமணம். 

பெண், மாப்பிள்ளை இருவருக்குமே 

இரண்டாவது திருமணம். 


இருவருமே ஏற்கனவே விவாக ரத்து பெற்றவர்கள்.


 பெண் தான் எனக்கு உறவு. 


அதே ஊரில் பெரிய திருமண மண்டபத்தில் அவளுடைய முதல் திருமணம் 

ஐந்து வருடம் முன் தடபுடலாக நடந்திருந்தது.

இந்த இரண்டாவது திருமணம் 

அவள் பெற்றோருக்கு மட்டுமல்ல 

உறவினர் எல்லோருக்கும் 

ஆசுவாசத்தை தந்திருந்தது. 


திடீரென்று பெண்ணின் தகப்பனாரும் மற்றவர்களும் என்னை வாழ்த்தி பேச சொன்னார்கள். 

ஏற்கனவே பெண்ணின் தாத்தா, 

தாய் மாமன் பேசியிருந்தார்கள். 


நான் பேசினேன் " இது வழக்கமான கல்யாணம் அல்ல. ஒரு மீட்சி. Second Marriage is a grand success after a miserable experience.... 

a resurrection from the worst sorrow "


தொடர்ந்து பையனின் பெற்றோர், பெண்ணின் பெற்றோர் இவர்களுக்கு மன ரீதியாக ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து, 

பெண், பையன் இருவரின் கடந்த கால கசப்பு,

மன உளைச்சலுக்கும் இந்த மணவாழ்க்கை 

ஒரு விடுதலை என்பதையும் கூறி

 மணமக்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். 


பெண்ணின் அம்மா,சித்திமார்களுக்கு முகம் விளங்கவில்லை. 'இதையேன் பேசணும் '


மாப்பிள்ளை வீட்டில் அவருடைய அக்கா இந்த பேச்சுக்கு பின்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். "இது என்ன இப்படி பேசிவிட்டார். 

நாங்க பெண்ணுக்கு இது இரண்டாம் கல்யாணம் என்பதை எங்க தாய் மாமா குடும்பத்திற்கே தெரியப்படுத்தவில்லை. 


நாங்க பத்திரிகை கொடுக்கும் போது

 எங்கள் சொந்தக்காரர்கள் யாருக்குமே 

பெண் ஏற்கனவே திருமணமாகி விவாக ரத்து பெற்றவர் என்பதை மறைத்து தான் அழைத்திருந்தோம். 


எங்க தம்பிக்கு புதுசா ஒரு பெண் தான் என்று எங்க உறவெல்லாம் நம்பியிருந்தவங்க இனிமே 'பெண்ணும் உன் தம்பி மாதிரி ஏற்கனவே கல்யாணம் ஆனவள் தானாமே' என்று எங்களை குத்தி குத்தி கேட்பாங்களே. 

எங்க கௌரவமே போச்சே. 

எங்களுக்கு கேவலமாயிடுச்சு.

ஏன் இவர் இப்படி பேசினார்? யார் இவரு?

எப்படி இப்படியெல்லாம் பேசலாம்.... " 

பையனின் அக்கா சங்கு சக்கர சாமி வந்து

 திங்கு திங்குன்னு ஆடிய கதையாய் 

பெண் வீட்டாரிடம் ஆடி தீர்த்து விட்டடாராம். 


மாப்பிள்ளையின் அக்கா எடுத்த எடுப்பிலேயே எப்படி பெண் மீது சேறு அடிக்கிறாள். 

தம்பி மனைவி இவளிடம் என்ன பாடு படுவாள். 

Social stigmaவின் ஊற்றுக்கண்ணே இவள் தான். 


மணப்பெண் வாழ்க்கையை 

எப்படி தங்கள் வசதிக்கு திரிக்க முடியும்? 

பின்னால், ஏற்கனவே இந்த பெண் திருமணமானவள் என்கிற விஷயம்

 மாப்பிள்ளையின் தாய்மாமனுக்கும், இவர்களுடைய ஏனைய உறவுகளுக்கும் 

 தெரியவராமலா போய் விடும்? 


முழு பூசணிக்காயை காலாகாலத்திற்கும் 

மறைக்க முடியும் என்ற 

ஜம்பம், வரட்டு கௌரவம். 

Hypocrisy. False prestige. 


கண் மூடிக்கொண்ட பூனைகள். 


மாப்பிள்ளையின் பிராமண நண்பரின் மனைவி என்னிடம் வந்து

" என்ன இப்படி .. உங்க பேச்சு 

அவாளை ரொம்ப கோபப் படுத்திடுச்சு "


மாப்பிள்ளை வீட்டாருக்கு கோபம்... 

அதனால் பெண் வீட்டாருக்கும் 

ரொம்ப கோபமும் வருத்தமும் ..


ஊர் வந்து சேர்ந்த பின் பெண்ணின் அப்பா              போனில் தன் மனஸ்தாபத்தை வெளியிட்டார்


....

Aug 27, 2020

நானே Spend பண்ணி Loss பண்ணிக்கிறேன்

 ஒரு படத்தில் என்னுடன் இருந்த சக உதவி இயக்குனர் ஒருவன் சொன்ன வார்த்தைகள்:

  ”வீட்டில இருந்து மாசாமாசம் 

எனக்கு பணம் அனுப்புறோம்னு சொன்னாங்கங்க.                           நான் வேண்டாம்னுட்டேன்.

நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்.”


- நானே spend பண்ணி loss பண்ணிக்கிறேன்?? -


ம்… spend பண்ணா loss வரத்தானே செய்யும். 


'சொந்தக்கால்ல நின்னுக்கிறேன்'னு சொல்லிட்டானாம். 


................


இயற்கை சீற்றமோ, 

நெருப்போ, தாஸ்மாக் தாய்மார்கள் போராட்டமோ, கிளர்ச்சி,

 குடிதண்ணீருக்கான மறியலா? 

இந்த கரோனா லாக்டவுன் பெருந்துயரா? 

எதுவாக இருந்தாலும்,

 சோகமாக, கோபாவேசமாக பேசும் பெண்கள், ஆண்கள் பக்கத்தில் நின்று, 

சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து

டி.வி.யில் வீடியோ கேமராவைப் பார்த்து,

 கண்கள் மலர சிரிக்கும் சிறுவர்கள், சிறுமிகள்!                  இந்த குழந்தைகளை பார்ப்பது  காட்சி இன்பம்.


.....................

Aug 25, 2020

ஆதித்யா ராஜ் கபூர்

 ஆதித்யா ராஜ் கபூர்.


ஷம்மி கபூரின் மகன். கீதா பாலிக்கு பிறந்தவர். 

கபூர் வம்ச பரம்பரையில் ஓரளவு கூட அறியப்படாதவர் ஆதித்யா கபூர். 


ராஜ் கபூரின் பிள்ளைகள் ரண்திர், ரிஷி இருவரும் ஊரறிந்த இந்தி நடிகர்கள். 

மூன்றாவது மகன் ராஜீவ் அப்பா இயக்கிய 'ராம் தேரி கங்கா மெய்லி' யில் கதாநாயகனாக நடிக்கும் முன்னரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 

ஒரு நான்கு படங்களிலாவது மொத்தமாக 'கதாநாயகன் வேலை' பார்த்திருக்கிறார். 


சசி கபூர் பிள்ளைகள் வெள்ளைக்கார பெண்மணிக்கு பிறந்தவர்கள். 


குணால் கபூர் பொண்டாட்டி கிட்ட கேட்டீங்கன்னா 

'என் புருஷனும் கச்சேரிக்கு தான் போனாரு'ன்னு தான் சொல்லுவா. ஸ்க்ரீன் ஆக்டர் தான். கதாநாயகனாக மூன்று படம் நடித்தும், 

ஜ்வலிக்க முடியவில்லை. 


சசி பெற்ற இரண்டாவது மகன் கரண் மீது நிறைய எதிர் பார்ப்பு இருந்தது. இந்தி திரையுலகில் பெரிய ரவுண்டு வருவான் பையன்னு நெனச்சாங்க. 

நானும் நடிகன் தான்னு இப்பவும் சொல்வாரு. 

கதாநாயகனா நடிச்சிருக்கலாம் . அந்த படம் பற்றி கூகுள்ள தான் தேடனும். அட்வர்ட்டைசிங் மாடலா இந்தியா பூரா கரண் கபூர் பிரபலமாக முடிந்தது. 

Photographer. 

ஆங்கிலோ இந்திய சமூகம் பற்றி கரண் ரிசர்ச் செய்ததுண்டு. பல பத்திரிக்கைகளில் எழுதிய எழுத்தாளர். 


மகள் சஞ்சனா கபூர் அவ அம்மா போல தியேட்டர் பெர்சனாலிட்டி. பிரிட்டிஷ் நடிகைன்னும் சொல்லிக்குவா. 


ஷம்மி கபூர் மகன் ஆதித்யா ராஜ்கபூர் - the less discussed Kapoor. 


ராஜ் கபூரின் பாபி படத்தில் ரிஷி ஹீரோ. 

ஷம்மி மகன் ஆதித்யா ராஜ் கபூர் பாபியில் அசிஸ்டெண்ட் டைரக்டர். 


ரிஷியும், ராஜீவும் இருவரையுமே கதாநாயகனாக நடிக்க வைக்கும் முன் ராஜ் கபூர் தன் படங்களில் உதவி இயக்குநர் வேலை செய்ய வைத்திருக்கிறார். 


ஆதித்யா ராஜ் கபூர் தன் பெரியப்பா இயக்கி சித்தப்பா நடித்த சத்யம், சிவம், சுந்தரம் படத்திலும் 

உதவி இயக்குநர் வேலை பார்த்தவர். 


மதுரையில் அந்தக் காலத்தில் ஷம்மி கபூருக்கு பிள்ளையில்லை என்றே மொட்டயன், குருவி மண்டையன், கம்பு கூட்டன், ஆட்டு மூக்கன், தொல்லை எல்லோருமே கபூர் ஃபேமிலி பற்றி பேச்சு வந்தாலே "பாவம்யா, ஷம்மி கபூருக்கு தான் பிள்ளயில்ல" என்று பரிதாபப் பாடுவதுண்டு. 


ஒரு தடவ உதார் சட்டி மண்டையன்  "ஷம்மி கபூர் மகன் பேரு கம்மி கபூர்" ன்னு அள்ளி விட்டப்ப 

"அவனுக்கு மகனே கிடையாதுடா"ன்னு 

சீரியசா கம்பு கூட்டன் கட்டி உருண்டுட்டான். 

சட்டி மண்டையன் எப்பயும் தாப்புல ஏதாவது ரீல் சுத்திக்கிட்டே இருப்பான். 


"ரிச்சட் பட்டன் தம்பி நைலான் பட்டனும் எலிசபெத் டெய்லரும் நடிச்ச ஹாலிவுட் படம் ஒன்னு.. பேரு ஞாபகம் வர மாட்டேங்குதே.. நைலான் பட்டன் கௌபாயா வருவான்டா. ஆங்.. 'Danger and Dollars.' ஸ்டீவ் மக்வின் அண்ணன் டாவ் மக்வின் தான்           அதுல வில்லன்."



.. 


புகைப்படங்கள் 


1. ஷம்மி கபூர் மகன் ஆதித்யா ராஜ்கபூருடன் 


2, 3, 4. ஆதித்யா ராஜ் கபூர் 


..


https://m.facebook.com/story.php?story_fbid=2694927457387370&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2715973568616092&id=100006104256328



Aug 23, 2020

You speak of Lord Byron and me?!

 பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன்.


 கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.


கீட்ஸ் வித்துவச் செருக்கோடு

 தன்னையும் பைரனையும் 

வகைமைப் படுத்துவது இப்படி


 – “You speak of Lord Byron and me!? 

There is this great differnce between us. 

He describes what he sees 

– I describe what I imagine – 

Mine is the hardest task.”


கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் 

அவன் புகழுக்கு காரணமான 

கவிதைகளை எல்லாம் 

ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான்.


ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான். 

பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள். 

தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக       அப்பல்லோ சொல்வான். 

நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ 

தன் இலாக்காக்களுக்கான

 அதிகாரத்தை அடைகிறான். 

சக்தி உபயோகம் ஆரம்பம். 

இந்த இடத்தில் Celestial..என்று 

கீட்ஸ் அரைகுறையாக 

அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தி இருக்கிறான்.

 Fractional Hyperion. 


Perhaps life is Just that a dream and a fear 


பைரன் எழுதிய கடைசி காவியம்

" டான் ஹூவான் ". 

அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல்

 சதி செய்து விட்டது.

Incomplete Don Juan. 


கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து, திருப்தி இல்லாமல் நிறுத்தினான். 


மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் 

அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை. 


டான் ஹூவான் கரு என்ன?

வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம், மரணம்."


ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான்.

கொச்சையாக சொல்வதென்றால் 

பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள். 


"Truth is stranger than fiction!"

- இந்த பிரபலமான மேற்கோளை 

டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான். அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது.


"ஒரு கனவு, ஓரு பயம்..ஒருவேளை

 இது தான் வாழ்க்கையோ"

 - ஜோசப் கான்ராட்  இப்படி கவலைப்பட்டான்



Aug 22, 2020

தி. ஜா. புஷ்கரணி சிறுகதையில்

 இனி எங்கே தி. ஜானகிராமன் எழுதிய, 

ஆனால் நாம் படிக்காத கதைகள் படிக்க கிடைக்கப்போகிறது என்ற வருத்தம் 

சரவணன் மாணிக்க வாசகத்திற்கும்

 எனக்கும் இருந்ததுண்டு. 


 காலச்சுவடு கொண்டு வந்துள்ள 'கச்சேரி' அப்படிப்பட்ட தொகுக்கப்படாத தி. ஜானகிராமன் கதைகள். 


'புஷ்கரணி ' கதையில் தி. ஜானகிராமன் 


1. காசிவாசிக்கும் கங்கைக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை என்று சொல்லலாம். 

காச்மீரியும் கன்னிமுனையானும் கங்கையில் 

ஒரு முழுக்குப் போட்டு 

கோடி கல்பங்களில் கட்டிய பாப மூட்டைகளை எல்லாம் அவிழ்த்து உதிர்க்கும்போது, 

 காசி வாசி மட்டும் ஸ்னானத்திற்கு வெந்நீர்        அடுப்பைக் கண் கலங்க ஊதிக்கொண்டிருக்கிறான். 


2. பார்வதியும், பரமேச்வரனும் வானத்தில் செல்லுகையில் ஒரு நாள் கங்கை வழியாகப் போனார்கள். பார்வதி கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதைப் பார்த்து, தன் வழக்கம் போலக் கேட்டாள். "நாதா, இவ்வளவு ஜனங்கள் ஸ்னானம் செய்கிறார்களே, இவ்வளவு பேருக்கும் கங்கா நதியின் பாவத்தன்மையில் பூரண நம்பிக்கையுண்டா?" என்று. 

"இரு சொல்லுகிறேன் "என்றார் பரம சிவன். 


உடனே கங்கைப் படித்துறையில் இரண்டு தொண்டு கிழங்கள் - புருஷனும் மனைவியும் - இறங்கினர். இறங்கின சுவடோடு ஆண் கிழம் கால் வழுக்கி ஆற்றோடு கலந்து இரண்டு வாய் தண்ணீரும் குடித்து விட்டது.


" ஐயோ, ஐயோ " என்று கிழவி அலறினாள். 


பாதி முழுகுகிறவர்கள், தலையைப் பாதித் துவட்டிக்கொண்டிருந்தவர்கள் - இப்படியாக பலர், போகும் கிழவரை மீட்கப் போனார்கள். 


உடனே " ஐயோ, ஜன்மாவில் ஒரு பாபம் கூடச் செய்யாதவர்கள் தான் அவரைத் தொடலாம் "

என்று அலறினாள்.


 அவ்வளவு பேரும் திடீரென்று நின்று விட்டார்கள். பாபமே இல்லாதவர்கள் என்று எப்படி மனதறிந்து                 பொய் சொல்வது என்று 

நினைத்தான் ஒவ்வொருவனும். 


கிழவன் போய்க்கொண்டேயிருந்தான். 


கிழவி இன்னும் பரிதாபமாகப் புலம்பினாள். 


யாரோ தெருவில் போய்க்கொண்டிருந்தவன், புலம்பலைக் கேட்டு அங்கு வந்தான். 

சூரியோதயம் ஆகி நாலைந்து நாழியாகியும்

 பல் கூட தேய்க்கவில்லை. வாய் நிறையப் புகையிலை. எங்கேயோ தாசி வீட்டில் இரவைக் கழித்து விட்டு வருகிறான். கண் கூச்சம் கூடத் தெளியவில்லை. 


"இந்தக் கூட்டத்தில் ஒரு பாபம் செய்யாதவன் கூட இல்லையா இந்த கிழவரைக் காப்பாற்ற" என்று கிழவி அலறினாள்.


விட புருஷன் திடீரென்று ஒரு முழுக்கு போட்டான். 


  வேகமாக நீந்திப் போய்க் கிழவரை கர கரவென்று கரையில் இழுத்துப் போட்டு விட்டான். 


முழுக்கில் பாபம் தொலைந்தது. கிழவரும் பிழைத்து விட்டார் என்று

 அந்த விடனின் நம்பிக்கை. 


நாள் தவறாமல் கங்கையைக் கலக்கி நீராடும் கர்மிஷ்டர்களின் முகத்தில் ஈயாடவில்லை. 

.. 

ஏக பரத ஹிருதய நாஸ்தி

சகோதர உறவின் உன்னத சிகரம் பரதன். 


என்.  டி. ராமாராவ் ராமராகவும், 

பத்மினி சீதையாகவும், டி. கே. பகவதி ராவணனாகவும் நடித்த 

'சம்பூர்ண ராமாயணம்' படம் பார்த்து விட்டு 

ராஜாஜி சொன்னார் 


'பரதனை பார்த்தேன் '


பிரமித்து சொன்னார். 


பரதனாக நடித்தவர் சிவாஜி கணேசன். 


படத்தில் சிறிது நேரமே வரும் பரதன் தான் 

ராஜாஜியின் நெஞ்சில் நிலைத்தார். 



ஸஹஸ்ர ராம ஹிருதய


ஏக பரத ஹிருதய நாஸ்தி:


ஒரு லா ச ரா கதை.  படித்து ரொம்ப வருஷம் இருக்கும். எப்படியும் முப்பது  வருடத்திற்கு மேல்.  அந்த கதை சுவாரசியமானது. 

அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது. என் பாணியில் இதை இங்கே நினைவிலிருந்து எழுதுகிறேன். 


ஸ்ரீ ராமர் , ஹனுமன் இருவரும் அவர்களின் 

Retired Life ல் பேசிகொள்கிறார்கள்!


Nostalgia. 


“It’s very funny you and me ending up here”


இப்படித்தானே ராமர் ஆரம்பித்திருப்பார். 


பழைய நினைவுகளை அசை போடும் 

தொன்ம நாயகர்கள். 


ஸ்ரீ ராமர் பெருமூச்சு விட்ட படி சொல்கிறார் : போய்யா, என்ன பெரிய ராமாவதாரம். "


அனுமனுக்கு வியப்பு. அமைதியாக ராமனே சொல்லட்டும் என ஏறெடுத்து பார்க்கிறார். 


ஸ்ரீராமன் தொடர்கிறார் " குகன் தான் என்ன அழகாக Declare செய்தான். பட்டத்தை துறந்து கானகம் சென்ற என்னையும் லக்ஷ்மணனையும் சீதையையும் குகன் வரவேற்றான் .


அந்த நேரத்தில் என் தம்பி பரதன் படையோடு வருகிறான் என்றறிய வந்த போது

 துடித்து 

' பட்டத்தை அவனுக்கு விட்டுகொடுத்த அண்ணனை கானகத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் விரட்டி போரிட வருகிறான் பரதன் ' -இப்படி எண்ணி அவனை உண்டு இல்லை என்று பண்ணி விட போவதாக குகன் சவால் விட்டான்.


 பரதன் வந்து என் காலில் விழுந்து 

தன் அன்னை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு 

' நீ தான் மன்னன். வா நாட்டுக்கு ' என்கிறான்.


 குகன் அசந்து போய் நின்றான். 

நான் தந்தை கட்டளையை மீறாமல் மறுத்ததும்

 " உன் பாத ரட்சைகளை தா, 

அதை சிம்மாசனத்தில் வைத்து கொள்கிறேன்." கேட்டு வாங்கினான் பரதன். 


அப்போது தான் பரதன் அவன் மேன்மை பண்பால் ஸ்ரீராமாவதாரத்தை அற்பமாக்கி விட்டான். குகன் தான் தன்னை மறந்து பரவசமாய் Declare செய்தான்.


"ஆயிரம் ராமர் உனக்கு ஈடாவரோ "


போப்பா, என்ன ராமாவதாரம். 

பரதன் தான் 

தவிடு பொடியாக்கி விட்டானே.. 


.. 



... 



Aug 14, 2020

ஷேக்ஸ்பியர்

 ஷேக்ஸ்பியர்

- RP ராஜநாயஹம்


"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை 

 தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல்,        மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.


“We are such stuff as dreams


Are made on.”


- The Tempest.


மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி.

அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.


டெம்பஸ்ட்டின் 

We are such stuff as dreams

Are made on 

என்பதையும் மௌனியின் வரிகளுக்காக கணக்கில் எடுக்கத் தான் வேண்டும். 

 


இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும்.

பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.

தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் 

தானும் நடித்திருக்கிறார்.


ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.


52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த

 ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான். 


ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது. கிடைக்கவே இல்லை. 


சமீபத்தில் "Lost Play of Shakespeare 'Cardenio'  Discovered" என்று ஒரு  பரபரப்பு செய்தி அடிபட்டது. 


Racism, Anti-Semitismஎன பல prejudice

இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள

 செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு

 நிறைய உண்டு.


Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night.

-‘ Love’s Labour Lost’


ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன்.

ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.


யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை

 கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க 

காரணம் என வாதிடலாம்.


தன் நாடகங்களில் தற்கொலை என்பதை

 13தடவை பயன்படுத்துகிறார்.


ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது.


ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை.


 ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing. 


ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். 


ஹேம்லெட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. 


ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் 

அதிக தற்கொலைகள்.

மார்க் ஆண்டனி,  கிளியோபட்ரா,

சார்மியன், ஈரோஸ், ஐராஸ்....


முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார்.

 கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.


அவருடைய கவிதைகள் 154 sonnets. 

நிறைய சர்ச்சை கிளப்பியவை. 


முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை.

 கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை.


 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy

”...Shakespeare .... a BISEXUAL?


பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர்.

 இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே.

தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர். 

Anne Hathaway hath a way!


இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. 

இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. 

இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது.


 ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். 


ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது.

மனைவி ஹேத்தவேக்கு கிடைக்கவில்லை.

ஷேக்ஸ்பியரின் Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான்

 ஹேத்தவேக்கு கிடைத்தது. 


'வறுமையும் புலமையும் ' என்று 

ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது. 


18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.

அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை 

ஒரு பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.


ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள். 


ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள்

 பால் இல்லிட்ஜ் என்பவரால்

 நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.


..........


Portraits

1. William Shakespeare 

2. Shakespeare's wife Anne hathaway


..................

Aug 12, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி திருப்பூர் மா. சரவணன்



திருப்பூர் மா. சரவணன் பார்வையில் 

R. P. ராஜநாயஹம் பற்றிய மதிப்பீடு 


'முதல் முதலாக கனவு கூட்டத்தில் வாசித்த "தளையசிங்கத்தின் தொழுகை" கட்டுரையும்

 அதை நண்பர்கள் அனைவருக்கும் பிரதியெடுத்துக் கொடுக்கும் போது 

எனக்கும் ஒரு பிரதி என்று தான் பழக்கம்!.


மனிதரின் அறிவைக் கண்டு எப்பொழுதுமே 

ஒருப் பிரமிப்பு உண்டு.பிறகு ஒவ்வொருக் கூட்டத்திலும் ஒவ்வொருக் கட்டுரைப் பிரதியென்று இன்னும் கூட என்னிடம் 

ஒன்றிரண்டுப் பிரதிகள் உள்ளது.


அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை பூணூல் என்று தள்ளி வைக்க விழைந்த 

என் இடதுசாரி நண்பர்களின் மூலமாக இழந்தேன்.


இடையிடையில் வழியில் பார்க்கும் போதுக்கூட அவ்வளவுப் பெரிய மனுஷனிடம் என்ன பேசுவது என்று கவனிக்காததுப் போல 

கடந்துவிடுவது வழக்கம்.


அவ்வளவு அறிவிலும் உணர்வுப்பூர்வமாகப் பேசுவது..ஆச்சர்யத்தைத் தரும்.


ஒருமுறை சுரா படித்தவர்கள் அனைவரும் எழுதியே ஆகவேண்டுமா என்று கேட்டதையும் தான் அதிகம் படிப்பது மட்டுமே எழுதுவதில்லை என்றும் கூறிய ஞாபகம்.


இவ்வளவு அறிவுள்ளவர்கள் எல்லாம் எழுதாமலிருக்கும் போது நாமெல்லாம் எழுதக் கிளம்புகிறோமே என்ற குற்ற உணர்வில் சிறிதுகாலம் எழுதாமல் கூட இருந்தேன்...


அவரின் அலைக்கழியும் வாழ்வு 

திருப்பூரில் தான் முற்றுப்பெற்றிருக்கும் 

என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..


இன்றும் சென்னை என்று தொடர்கிறதுப் போல. 


 கிரா சொன்னதுதான் 

இந்த நள்ளாத்துக்காரன் இனியேனும் 

கருணை காட்டட்டும்.பல்லாண்டு!(...அப்படி நானும் ஒரு ஞாபக குறிப்பு எழுதிட்டேன் உங்களப்பத்தி😜.)'


....



Aug 10, 2020

தி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும்

 தி. ஜானகிராமனும் கீழ விடயல் கருப்பூரும் 


தி. ஜானகிராமன் பிறந்த ஊர் தேவங்குடி தான்.        அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 

அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். 

தஞ்சை ஜில்லா. 


அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.

 அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில் தான்.

 பள்ளிப்படிப்பு காலம். 

கல்லூரி படிப்பு கும்ப கோணத்தில். 


தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வரி, வரியா விளக்கி தமிழில் ஹரி கதா செய்வது தான் பிரவச்சனம். 


ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார். 


ஜானகிராமனுக்கு அண்ணன் பெயர் ராமச்சந்திரன். 

அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட். 

வேத பாடசாலையில் சம்ஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட். 


ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன் தான். 


'கமலம்' குறுநாவல் தொகுப்பை 

"இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் " என்று குறிப்பிட்டிருந்தார்.

 மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட போது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது. 


இந்த அத்திம்பேர் ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் 

வாழ்ந்த ஊர் தான் 'கீழவிடயல் கருப்பூர்'. 

அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர். 


முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில் தான் செட்டில் ஆனார்கள். 


ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குத் தான் பெற்றோரை காண்பதற்கு

 வர வேண்டியிருந்தது. 

ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர் தான். 


ஆனந்த விகடன் 5.8.20 இதழில் 

சி. ஏ. முத்து சொல்வது தகவல் பிழை. 

தி. ஜானகிராமன் பிறந்த ஊர் கீழவிடயல் கருப்பூர் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறார்.

..

Aug 6, 2020

ஒரே மெட்டு, ரெண்டு பாட்டு

ஒரே மெட்டு ரெண்டு பாட்டு
- R.P. ராஜநாயஹம்

'தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே ' என்ற எம் கே தியாகராஜ பாகவதர் பாடிய 'பெஹாக்' ராக பாடலின் மெட்டில் 
அப்படியே மாற்றம் இல்லாமல்
 மதுரை வீரனில் எம்ஜியாருக்காக
டி .எம் .எஸ் " ஏச்சு பொழைக்கும் தொழிலே சரி தானா " என்று ஒரு பாட்டு பாடியிருக்கிறார்.

இப்படி மெட்டு சுலபமாக கண்டு பிடிக்கும் விதமாக அப்படியே போடாமல், சில பாடல்கள் கொஞ்சம் புரியாதபடி திரும்ப போடப்படுவதுண்டு.

அப்படி ஒரு பாடலை மெலடியாக, மென்மையாக தன்னால் போடப்பட்ட பாடலை பின்னால் சரியான டப்பாங்குத்தில் போட்டு செம ஹிட் ஆக்கியிருக்கிறார் கே .வி . மகாதேவன். 1965 ல் வந்த படம் ' எங்க வீட்டுப் பெண் '. ஜெய்சங்கர் ,
ஏ .வி.எம் ராஜன் நடித்த படம் .அதில் இந்த பாடல் -

" கால்களே நில்லுங்கள். கண்களே சொல்லுங்கள்.
காதல் என்பது காவியமா? 
இல்லை கண்ணீர் வரைந்த ஓவியமா?"

இந்த பாடல் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

அதே படத்தில் பி .பி .எஸ் பாடிய நல்ல பாடல் 
" சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி ".
பி.பி .எஸ் பாடினாலே எந்த பாட்டும் ஹிட் தானே. 

1970ல் வந்து சக்கைப் போடு போட்ட எம்ஜியார் 
 " மாட்டுக்கார வேலன் ".

ஹிந்தியில் ஜிதேந்திரா நடித்த 'ஜிக்ரி தோஸ்த் ' படத்தின் ரீமேக். 
அந்த படத்தில் மகாதேவன் ஹிட் ஆகாத தன்
 ' கால்களே நில்லுங்கள்,கண்களே சொல்லுங்கள் ' மெட்டை நல்ல டப்பாங்குத்தில் போட்டு 
ஹிட் ஆக்கி காட்டினார்.
"பட்டிக்காடா?பட்டணமா? 
ரெண்டுங்கெட்டான் லட்சணமா!"

குமுதம் சௌகார் ஜானகி 
'மியா மியா பூனக்குட்டி, 
வீட்ட சுத்தும் பூனக்குட்டி'  
பிறகு சிவாஜி கணேசன் நடித்த  அன்புக்கரங்களில்
 'ஒன்னா இருக்கக்கத்துக்கணும்.
இந்த உண்மைய சொன்னா ஒத்துக்கனும்.'
 என்று மீண்டும் வந்தது.

இசையமைப்பாளர் வி குமார் ( ஏ .ஆர் .ரஹ்மானின் அப்பா சேகர் இவரிடம் உதவியாளராக இருந்தவர் ) பாலச்சந்தரின் படம் ' நூற்றுக்கு நூறு ' படத்திற்காக போட்ட பாடல்
" நித்தம், நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் 
நான் தேடுவேன்.
இளமை பொங்கும் எழில் தலைமை தாங்கும் உனை என்றும் நாடுவேன் "

இந்தப் பாடலின் மெட்டில் தான் ' ரயில் பயணங்களில்'
டி .ராஜேந்தர் பாட்டு _
"வசந்தம் பாடி வர, வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா?"

கமல் ஹாசன் -குட்டி பத்மினி ஆடிப்பாடும் பாடல் தேவரின் ' மாணவன் ' படத்தில் சங்கர் -கணேஷ் இசையில்
டி .எம் .எஸ் - எல் .ஆர் ஈஸ்வரி பாடியது
" விசிலடிச்சான் குஞ்சுகளா, குஞ்சுகளா,
 வெம்பிப் பழுத்த பிஞ்சுகளா, பிஞ்சுகளா"

இந்தப் பாடல் மெட்டு மீண்டும் எவ்வளவு வருடங்கள் கழித்து,உலகநாதன் பாடி ஹிட் ஆகி, ஊரே பாடிக்கொண்டு திரிந்தது. 
" வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் 
கல்யாணம் " 

எம்.ஜி.ஆரின் எங்கள் தங்கம்  
 "தங்க பதக்கத்தின் மேலே" பாடல் தான்
 "என்ன விலை அழகே" என காதலர் தினத்தில் வந்தது. 

"பேசும் மணி முத்து ரோஜாக்கள், பிள்ளைகள் ...." பாட்டும் 

"பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ, 
 சிவந்த கன்னங்கள் ..." பாட்டும் ஒரே மெட்டு தான்.

'நாளை உனது நாள் ' விஜயகாந்த் பாடும் 
"வெண்ணிலா ஆடுது, கண்ணிலே ஓடுது, 
என்னோடு தான் பாடுது "

' அண்ணாமலை ' ரஜினி காந்த் 
" கொண்டையில் தாழம்பூ, கூடையில் என்ன பூ? 
குஷ்பு " ஒத்தவையே. 

..................

Aug 5, 2020

ராஜநாயஹம் உரையுடன் zoom meeting

ஒரு நினைவூட்டல். 

நண்பர் வளன் அரசு 
அமெரிக்காவில் இருந்து நடத்த இருக்கும் 
Zoom meeting ல் ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய நேரம்  மாலை 6 மணிக்கு நான் உரையாற்ற இருக்கிறேன். 

வளன் அரசு நடத்த இருக்கும் Zoom meeting பற்றிய 
அவருடைய அறிவிப்பு கீழே :

 நம் தேசத்து
 செவ்வியல் இசை வடிவங்களைக் குறித்து
 R. P. ராஜநாயஹம் அவர்கள் உரையாடவிருக்கிறார். 

ராஜநாயஹம் அவர்களுடன் உரையாடியவர்களுக்குத் தெரியும், அவர் ஒரு பல்கலைக்கழகம். பல்வேறு தரவுகள் கொண்டு இயங்கும் நடமாடும் நூலகம். தேர்ந்த இசை ரசிகர்.

 எனவே இந்த உரையைத் தவறவிடவேண்டாம்.

 நம் செவ்வியல் இசையின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த உரை அமையும்.
ராஜநாயஹம் அவர்களின் உரையைத் தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கலாம். 

அதன்பின் நண்பர்கள் சாரு கொண்டாடும் பல்வேறு இசைக் கலைஞர்கள் குறித்து உரையாடலாம். 
இந்தப் பேரிடர் காலத்தில் இசையைக் குறித்து உரையாடுவதும் இசைக் கேட்பதும் மிகவும் அவசியம் எனக் கருதுகிறேன். 

எனவே தவறாமல் இணையுங்கள். 

ஆகஸ்ட் 7 இந்திய நேரம் மாலை 6 மணி.
Valanarasu Williamraj is inviting you to a scheduled Zoom meeting.
Topic: கலகம் காதல் இசை - சாரு நிவேதிதா
Time: Aug 7, 2020 08:30 AM Eastern Time (US and Canada)
Aug 7, 2020 06:00 PM (India)
Join Zoom Meeting
https://zoom.us/j/6662309299?pwd=d1JsSVJ2ZUJud0plc0ppcExnaFFtdz09
Meeting ID: 666 230 9299
Passcode: 5Bddgq

· முதல் முயற்சி என்பதால் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே ஒதுக்கியுள்ளேன்.

· மூன்று மணி நேரம் மட்டுமே இருப்பதால்                     ராஜநாயஹம் அவர்களின் உரை பிரதானமானதாக இருக்கும்.

....

Aug 2, 2020

திருநங்கை கொடுத்த ரெண்டு ரூவா

கோவை  எக்ஸ்பிரஸ். 

திருநங்கை கைதட்டி 'அப்பா' என்று கைநீட்டினாள். 

பத்து ரூபாய் கொடுத்ததை பெற்றுக்கொண்டபின்                                                   ஒரு இரண்டு ரூபாய் காயினைக்கொடுத்தாள்.

 'இதை பத்திரமா வச்சுக்கங்க அப்பா. 
செல்வம் கொழிக்கும். 
இத ஒங்க பூஜையறையில வைங்க. 
 உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம் பெருகும்.      தொலச்சிடாதீங்க. 
வீட்டுல பீரோக்குள்ற வச்சாலும் யோகம் தான். ஒங்களுக்கு பணக்கஷ்டமே வராது. நம்புங்க.' 
 
 நான் 'சரிம்மா'  
  
                                                                                        
அடுத்து ரயில்ல கை நீட்டிய ஒரு பாவப்பட்ட ஜீவனுக்கு அந்த ரெண்டு ரூவா காச கொடுத்தேன்.

..

இந்த ’ரெண்டு ரூவா’ சமாச்சாரத்தில் 
என் தர்மத்தில் ’அதியமான் நெல்லிக்கனி’, 
கர்ண கொடை ரேஞ்சுக்கெல்லாம் எதுவுமேயில்லை.

   
 தேய்ந்த சொற்களை அடுத்த இரண்டு வரியாக                              இங்கே உபயோகப்படுத்த வேண்டியுள்ளது. 
எனக்கு எப்போதும்மூட நம்பிக்கை கிடையாது. 
ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லை. 

திருநங்கை சொன்னதை நான் நம்பவேயில்லை.
தன் அன்பையும் மரியாதையையும் 
இப்படி வெளிப்படுத்தினாள். 
சற்றும் இது போன்ற விஷயங்களுக்கு புல்லரிக்காத இயல்பினால் 
அதை அடுதத பிச்சைக்காரருக்கு 
கொடுத்து விட்டேன்.   
Very simple incident.

...