Share

Aug 22, 2020

தி. ஜா. புஷ்கரணி சிறுகதையில்

 இனி எங்கே தி. ஜானகிராமன் எழுதிய, 

ஆனால் நாம் படிக்காத கதைகள் படிக்க கிடைக்கப்போகிறது என்ற வருத்தம் 

சரவணன் மாணிக்க வாசகத்திற்கும்

 எனக்கும் இருந்ததுண்டு. 


 காலச்சுவடு கொண்டு வந்துள்ள 'கச்சேரி' அப்படிப்பட்ட தொகுக்கப்படாத தி. ஜானகிராமன் கதைகள். 


'புஷ்கரணி ' கதையில் தி. ஜானகிராமன் 


1. காசிவாசிக்கும் கங்கைக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லை என்று சொல்லலாம். 

காச்மீரியும் கன்னிமுனையானும் கங்கையில் 

ஒரு முழுக்குப் போட்டு 

கோடி கல்பங்களில் கட்டிய பாப மூட்டைகளை எல்லாம் அவிழ்த்து உதிர்க்கும்போது, 

 காசி வாசி மட்டும் ஸ்னானத்திற்கு வெந்நீர்        அடுப்பைக் கண் கலங்க ஊதிக்கொண்டிருக்கிறான். 


2. பார்வதியும், பரமேச்வரனும் வானத்தில் செல்லுகையில் ஒரு நாள் கங்கை வழியாகப் போனார்கள். பார்வதி கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதைப் பார்த்து, தன் வழக்கம் போலக் கேட்டாள். "நாதா, இவ்வளவு ஜனங்கள் ஸ்னானம் செய்கிறார்களே, இவ்வளவு பேருக்கும் கங்கா நதியின் பாவத்தன்மையில் பூரண நம்பிக்கையுண்டா?" என்று. 

"இரு சொல்லுகிறேன் "என்றார் பரம சிவன். 


உடனே கங்கைப் படித்துறையில் இரண்டு தொண்டு கிழங்கள் - புருஷனும் மனைவியும் - இறங்கினர். இறங்கின சுவடோடு ஆண் கிழம் கால் வழுக்கி ஆற்றோடு கலந்து இரண்டு வாய் தண்ணீரும் குடித்து விட்டது.


" ஐயோ, ஐயோ " என்று கிழவி அலறினாள். 


பாதி முழுகுகிறவர்கள், தலையைப் பாதித் துவட்டிக்கொண்டிருந்தவர்கள் - இப்படியாக பலர், போகும் கிழவரை மீட்கப் போனார்கள். 


உடனே " ஐயோ, ஜன்மாவில் ஒரு பாபம் கூடச் செய்யாதவர்கள் தான் அவரைத் தொடலாம் "

என்று அலறினாள்.


 அவ்வளவு பேரும் திடீரென்று நின்று விட்டார்கள். பாபமே இல்லாதவர்கள் என்று எப்படி மனதறிந்து                 பொய் சொல்வது என்று 

நினைத்தான் ஒவ்வொருவனும். 


கிழவன் போய்க்கொண்டேயிருந்தான். 


கிழவி இன்னும் பரிதாபமாகப் புலம்பினாள். 


யாரோ தெருவில் போய்க்கொண்டிருந்தவன், புலம்பலைக் கேட்டு அங்கு வந்தான். 

சூரியோதயம் ஆகி நாலைந்து நாழியாகியும்

 பல் கூட தேய்க்கவில்லை. வாய் நிறையப் புகையிலை. எங்கேயோ தாசி வீட்டில் இரவைக் கழித்து விட்டு வருகிறான். கண் கூச்சம் கூடத் தெளியவில்லை. 


"இந்தக் கூட்டத்தில் ஒரு பாபம் செய்யாதவன் கூட இல்லையா இந்த கிழவரைக் காப்பாற்ற" என்று கிழவி அலறினாள்.


விட புருஷன் திடீரென்று ஒரு முழுக்கு போட்டான். 


  வேகமாக நீந்திப் போய்க் கிழவரை கர கரவென்று கரையில் இழுத்துப் போட்டு விட்டான். 


முழுக்கில் பாபம் தொலைந்தது. கிழவரும் பிழைத்து விட்டார் என்று

 அந்த விடனின் நம்பிக்கை. 


நாள் தவறாமல் கங்கையைக் கலக்கி நீராடும் கர்மிஷ்டர்களின் முகத்தில் ஈயாடவில்லை. 

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.