Share

Jul 31, 2012

சப்தஸ்வரங்களும் நாரதரும்

மீள் பதிவு  21-09-2009ல் எழுதப்பட்டது
 


நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார்.'ஸ்வரார்ணவம் ' என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள் 'ஸ்வரார்ணவம்' கிடைக்கப் பெற்ற தியாகராஜா மூலம் அதன் பின் கொடையாக கிடைத்தன. இது ஐதீகம்.சங்கீதம் ஐந்தாவது வேதம்.கந்தர்வ வேதம்.சாஸ்திரீய சங்கீதம் நாரதருக்கே கூட அத்தனை எளிதாக கைகூடி விடவில்லை. Not a cakewalk for Him even. Classical Music is not an easy accomplishment. ரொம்ப அவமானப் பட்டிருக்கிறார்.
         


மிகவும் பெருமையாக வீணை வாசித்துக்கொண்டிருந்தார் நாரதர். பனி சூழ்ந்து வீணையை மீண்டும் எடுக்கவே முடியவில்லை. ஹனுமான் பாடிய ராமகீர்த்தனை தான் பனியை உருகவைத்து வீணையை திரும்பவும் நாரதர் கையில் எடுக்க வகை செய்தது.

 
 சங்கீத கலாநிதி நாரதருக்கு சங்கீத ஞானம் அவ்வளவாக இல்லாத ஹனுமான் பாடிய கீர்த்தனை தான் உதவியது என்பது ருசிக்கவில்லை.நாரதருக்கு கொஞ்சம் வருத்தம் தான்.


ஒருமுறை சிவன்,பார்வதியோடு சங்கீத சாம்ராட் நாரதர் ஒரு சின்ன ' வாக் ' போகும்போது எதிரே சப்தஸ்வரங்களும் கை வேறு, கால் வேறு, தலை வேறு பிய்ந்த நிலையில் பார்க்க நேர்ந்து விட்டது.
ஏழு ஸ்வரங்களும் தேம்பியழுதவாறு பார்வதியிடம் முறையிட்டன " எங்கள் கதியை பார்த்தீர்களா? நாரதன் எங்களை அக்கறையின்றி அலட்சியமாக கையாண்டு விட்டதால் இப்படி சின்னா பின்னப் பட்டுபோய் விட்டோம். தேவி! நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அருளினால் நாங்கள் முழு உருவம் பெறுவோம்."
 பார்வதி நாரதரை முறைத்து " என்ன நாரூ! இதெல்லாம்.. ?" என்று கடிந்து கண்டித்து விட்டு சப்தஸ்வரங்களையும் ஆசீர்வாதித்து ஒவ்வொரு ஸ்வரமும் முழு உருவமாக மீண்டும் வழி வகை செய்தாள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

    (தாராசுரம்" கோயில் தரும் சப்தஸ்வரங்கள் !) 

தும்புருவுடன் சங்கீத சவாலுக்குப்போனபோது கூட போட்டி என்பதால் நாரதர் சங்கீதத்தை பதற்றத்துடன் கையாள நேர்ந்து விட்டது. அப்போதும் சப்தஸ்வரங்கள் படுகாயப் பட்டு சிதைந்து குற்றுயிரும் குலையுயிரும் ஆகிப் போனதை கண் கூடாக நாரதரே காண வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுப் போனது.
 

அவமானத்தால் குன்றிப் போய்விட்ட நாரதரை மகாவிஷ்ணு தான் " கொஞ்சம் பொறுப்பா பாடனும்ப்பா நாரூ! சரி சரி விடு.இனியாவது சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒழுங்கா நல்லா பயிற்சி செய்து ஆலாபனையிலிருந்து கவனமா செய்யப் பாருப்பா. "என்று தேற்றினாராம்.

பிறகு நாரதர் மனிதனாகவே பிறக்கிறார்! எங்கே? பிருந்தாவனத்தில்.
 

கிருஷ்ணாவதார யுகம்.கிருஷ்ணனின் கைடன்சில் முறைப்படி முழுமையாக லாங் ட்ரைனிங் மூலம் தான் சாஸ்த்ரீய சங்கீதத்தில் விற்பன்னர் ஆகி அங்கீகாரம் பெற முடிகிறது.

.. ..... ...........................


ஒரு பிரபல வித்துவான் கச்சேரி நடக்கையில்,திஜாவின் நண்பரும் குபராவின் சிஷ்யர்களில் ஒருவரும் ஆகிய சுவாமிநாத ஆத்ரேயன் அவர்கள் பாபநாசம் சிவன் அருகில் அமர்ந்திருந்தாராம்.

சிவன் சொன்னாராம் "கீர்த்தனைகளுக்கும் ஜாதகம் உண்டு "சுவாமிநாத ஆத்ரேயனுக்கு முதலில் புரியவில்லை. பாபநாசம் சிவன் என்ன சொல்லவருகிறார்? சிவன் தொடர்ந்தாராம் " இந்த கீர்த்தனை எந்த வேளையில் இயற்றப் பட்டதோ பாவம். இந்த வித்துவான் வாயில் என்ன பாடு படுகிறது பாருங்கள்! "

உண்மை தான். ஹம்சத்வனியை இப்போது ஹிம்ச த்வனியில் பாடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.சுப்புடு சொல்வார் : ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியே தான் நிற்பார்கள் . "உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை " என்பது போல.


http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2009/11/blog-post_2432.html


http://rprajanayahem.blogspot.com/2008/12/blog-post_02.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_7994.html


http://rprajanayahem.blogspot.com/2008/11/blog-post_5186.html


http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_06.html


Jul 30, 2012

Christ never laughed

"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.

Library - The place of Forbidden Knowledge!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்  விலக்கப்பட்ட கனி.

Heaven எப்படிப்பட்ட இடம் என்று தீர்க்கமாய் யோசித்து அது நிச்சயம் ஒரு Library யாகத்தான் இருக்க முடியும் என்றே அனுமானித்தார் போர்ஹே.


பஸோலினி  1964ல் எடுத்த  இத்தாலிய படம் “The Gospel According to St.Matthew" பார்ப்பது ஏதோ கால யந்திரத்தில் ஏறியது போல ஒரு விஷேச அனுபவம். இந்தப் படத்தில் கூட ஜீசஸ் வாய் விட்டு ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.
 பஸோலினி ஏன் மேத்யு எழுதிய சுவிஷேசத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர் கண்ணோட்டத்தில் லூக் எழுதிய சுவிஷேசம் ரொம்ப sentimental. மார்க் எழுதிய சுவிஷேசமோ ரொம்ப vulgar.ஜான் எழுதியது மிகையான mystical சுவிஷேசம்.

Jesus was alright, but his disciples were thick and ordinary.It's them twisting it that ruins it for me.
-John Lennon

Christmas eve eve என்றால்’ டிசம்பர் 23ந்தேதி.’ The day before Christmas Eve.
கிறிஸ்தவ மேலைய நாடுகளில்  எல்லோருமே கிருஸ்துமஸ் ஷாப்பிங் டிசம்பர் 23ந்தேதி தான் செய்வார்கள். டிசம்பர் 24ந்தேதி கடை வீதி ரொம்ப கூட்டமும் நெருக்கடியும் பற்கடிப்புமாய் இருக்கும் என்ற பதற்றம் காரணமாக..அதனால் அந்த23ந்தேதி தான் Busiest shopping day of the year!

’பைபிளுக்கு இதுவரை மிகச் சரியான மொழிபெயர்ப்பு வரவில்லை.’ - டி.என்.ராமச்சந்திரன்.

.......
(”டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும்” என்று கிருஷ்ணமூர்த்தி.எஸ் ப்ளாகில்  Dyno buoy எழுதியிருக்கிறார்.
Dyno buoy அனலைஸ் நியூ ஜெர்சிக்கு மட்டுமானதா? அல்லது ஒட்டுமொத்த U.S., மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சேர்ந்தே தானா?)

Dyno buoy's Reply:" நான் டேடா அனலைஸ் செய்தது உலகின் பெரிய க்ரெடிட் கார்ட் நிறுவனத்திற்காக. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சேர்த்துதான். உலகின் அதிக சேல்ஸ் ஆகும் நாள் க்ருத்துமஸுக்கு முந்தைய சனி. நாங்கள் அனலைஸ் செய்யும் போது வாரயிறுதி முழுவதற்கும் கணக்கிடுவோம்.
அதுதவிர அதிக மக்கள் கடைகளுக்கு போகும் நாள் தாங்ஸ் க்விங் டேக்கு அடுத்து வரும் ப்ளாக் ப்ரைடே. Lot of people usually get confused between most traffic and most sales. During Black Friday we have more people walking into store and not all of them translate to sale. Where as the Saturday before Christmas translates into sales and hence the highest sale world over. இது உலகம் முழுவதற்கும். அமேரிக்காவில் கடத்த பத்தாண்டுகளில் (2010க்கு முன்) மூன்று முறை ப்ளாக் ப்ரைடே சேல்ஸ் க்ருஸ்துமஸுக்கு முந்திய சனிக்கிழமை சேல்ஸை ஓவர்டேக் செய்துள்ளது."

http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/sasthi-brata-my-god-died-young.html

http://rprajanayahem.blogspot.in/2009/07/ailing-popes-are-not-unusual.html


Jul 29, 2012

கலைந்த ஒப்பனை

மீள் பதிவு     30-11-2008அந்த படத்தில் ஏற்கனவே இரண்டு முறை எனக்கு கதாபாத்திரம் இயக்குனரால் ஒதுக்கப்பட்டு நான் மேக்கப் முடித்து ஷூட்டிங் ஸ்பாட் போனபின் கடைசி நிமிடத்தில் வேறு நிர்பந்தங்களால் வேறு யாராவது ஒருவர் அதற்கு நடிக்கும்படி யானது .
அப்போதே அந்த யூனிட்டில் R P ராஜநாயஹம் நடிப்பதற்கு ஏன் இப்படி ஏதாவது தடை வருகிறது என பலரும் பேசும் நிலை ஆனது.
அதன் பின் ஒரு இன்ஸ்பெக்டர் ரோல் கொஞ்சம் வித்தியாசமான ரோல் . நான்இன்ஸ்பெக்டர் ஆக வந்து கதாநாயக இயக்குனர் , கதாநாயகி , காமெடியன் ஆகியோரிடம் சும்மா சரம் பட்டாசு போல வெடிக்கும் படியாக காட்சி படமாக்கப்பட்டது.


ஷூட்டிங் ஆறு முறை ஒத்திபோடப்பட்டது.
ஒரு முறை கிளம்பும்போதே ஒரு அசோசியட் டைரெக்டர்
  இயக்குனர் கதாநாயகனிடம் " சார்ஒரு நல்ல நடிகர் செய்ய வேண்டிய ரோல் !ராஜநாயஹம் இதை செய்வது கடினம் . ஷூட்டிங் இன்னொரு நாள் ஒரு நல்ல நடிகரை வைத்து செய்தால் என்ன ?" என்று கதாநாயக இயக்குனர் காரில் ஏறும்போது காதை கடித்தான் ."ராஜநாயஹம் செய்வாரு யா ." இயக்குனர் இப்படி சொல்லி காரில் ஏறி ஷூட்டிங் ஸ்பாட் போன பின் கூட அன்று நான் காக்கி டிரஸ் போட்டு நடித்து ஒரு ஷாட் எடுத்த பின் கேமரா மேனுக்கு உடம்பு சரியில்லை என்று பேக் அப் ஆனது . அடுத்து ஆறு முறை ஷூட்டிங் கான்செல் ஆனது . ஒவ்வொரு முறையும் ஒரு காரணத்தால் தடங்கல் ! தடை !

ஒரு வழியா அருணாசலம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்யப்பட்டு நான் நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்கப்பட்டது . அன்று ஷூட்டிங் பார்க்க வந்த ஒரு கதாநாயக நடிகரின் தம்பி ( இவர் சினிமாவில் ஸ்ரீதர் ,பாலச்சந்தர் படங்களில் வில்லனாக நடித்தவர் ) என்னிடம் " பிரமாதம் சார் ! நீங்க இப்படி நடிப்பதை மற்றவர் செய்ய முடியாது .ரொம்ப கஷ்டம் .என்னாலே செய்ய முடியாது " என்றார் .

ராஜநாயஹம் சீன் என்றே அதற்கு பெயர் . இன்ஸ்பெக்டர் பேட்ஜ் கூட R.P.Rajanayahemஎன்றே எழுதி காக்கி டிரஸ் இல் குத்தப்பட்டு வசனத்தில் கூட நான்
”இந்த இன்ஸ்பெக்டர் R P ராஜநாயஹம் ”என்று என்னை குறிப்பிட்டு கதாநாயகனிடம் மிரட்டுவேன் . இரண்டு ஜீப்பில் பன்னிரண்டு கான்ஸ்டேபிள் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் சகிதம் வந்து நான் செய்யும் ரைட் தான் அந்த காட்சி !

எடிட்டிங் செய்ய போனபோது
'ராஜநாயஹம் சீன் 'மூவியாலாவில் போட்டவுடன் மூவியாலா Out of order!
தடை தடங்கல்!R P ராஜநாயஹம் நடிப்பது தான் தடைபட்டது . எடிட்டிங் கில் கூட தடை வருகிறதே ! எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள் .

எடிட்டிங் முடிந்து டப்பிங் பேச டப்பிங் தியேட்டர் வந்து 'ராஜநாயஹம் சீன் ' புரஜக்டரில் மாட்டப்பட்டவுடன் புரஜெக்டர் Out of order!
எல்லோருக்கும் புல்லரித்து விட்டது ! இது தற்செயல் கிடையாது .
 எனக்கு மனம் சோர்ந்து போனது .
 ஒரு வழியாக புரஜெக்டர் சரி செய்து ராஜநாயஹம் சீன் ' ஓடிய போது அசோசியட் இயக்குனர் ரிகார்டிங் அறையிலிருந்து இண்டெர்காமில் தியேட்டரில் உள்ள அனைவருக்கும் கேட்கும்படியாக சொன்னான் "ராஜநாயஹம்! நம்ம கதாநாயக இயக்குனருக்கு கூட நேச்சுரல் ஸ்கின் கலர் கிடைக்காது .உங்களுக்கு தான் கிடைச்சிருக்கு . க்ளோஸ் அப் எல்லாம் லட்டு மாதிரி வந்திருக்கு "

அந்த படத்தில் கதாநாயகியின் தந்தை ரோல் பண்ணியவருக்காக டப்பிங் பேச வந்தவர் சொன்னார்." நான் நாற்பத்தைந்து படங்கள் உதவி இயக்குனராய் வேலை பார்த்தவன் . நானூறு தமிழ் படம் பார்த்திருக்கிறேன் . தமிழ்த்திரையில் இன்னைக்கு தான்Young Smart ஆ ஒரு இன்ஸ்பெக்டர் ஐ நான் பார்க்கிறேன். இவர் யாரோ எனக்கு தெரியாது .இவரை முகஸ்துதி செய்ய எனக்கு அவசியமும் இல்லே . ஆனா நான் உணர்ந்ததை சொல்றேன் "

டப்பிங் தியேட்டரில் லஞ்ச் சாப்பிடும் போது என்னிடம் சௌன்ட் எஞ்சினியர் சொன்னார் " சார் . நான் சாதரணமா சீன்ஸ் ரசிப்பதில்லை . லூப் மாற்றி வாய்ஸ் பதிவது மெக்கானிகல் வொர்க் பாருங்க . ஆனா உங்க ரோலையும் சீனையும் ரொம்ப ரசிச்சேன் . நீங்க நடிகர் முரளி மாதிரி Soft romantic rolesசெய்யலாம் சார் "

ஒருபோலீஸ் டெபுடி கமிசனர்(அப்போது சட்டம் ஒழுங்கு )பெயர் பாஸ்கர் (இவர் மூன்று வருடம் முன் இறந்து விட்டார் )கதாநாயக இயக்குநரிடமே சொன்னார் " 'ராஜநாயஹம் இன்ஸ்பெக்டர் ரோல் தான் நல்லாருக்கு . இன்னொரு ரெண்டு இன்ஸ்பெக்டர் சகிக்கலே . மூணு இன்ஸ்பெக்டர் ரோலும் ராஜநாயஹம் செய்திருக்கணும் .ஒரு ஊர்லே மூணு இன்ஸ்பெக்டர் ஆ ? அது எப்படி ?"

ப்ரிவியூவின் போது பலரும் படத்தில் என் காட்சியை பார்த்து விட்டு பாராட்டினார்கள் .கை கொடுத்தார்கள் . அந்த யூனிட்டில் இருந்த ஒரு ஆள் ' இந்த மாதிரி ஒரு ரோல் எனக்கு கொடுக்கமாட்டாரா டைரக்டர் என்று தான் பன்னிரண்டு வருடமாக இவர் கிட்டே வேலை செய்யறேன் " என்றார் .

இயக்குனரே சொன்னார் ' 'ராஜநாயஹம் மாதிரி ஒரு சீன்லே வந்தாலும் நிக்கணும்யா ! படம் பூரா நிறைய பிரேமுலே சிவராமன்,செல்லத்துரை மாதிரி வந்து என்ன புரயோஜனம் ?"

கதாநாயக இயக்குனர் ஏனோ கொஞ்சநாளில்என்னிடம் என் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ' ராஜநாயஹம் ! ரோல் (எதிர்பார்த்த அளவு )நல்லா செய்யலையே ' என்றார் !

கடைசியில் படத்தில் நீளம்-Footage காரணமாக அந்த 'ராஜநாயஹம் சீன் ' நீக்கப்பட்டது .

இந்த விஷயம் தீபாவளி ரிலீஸ் போது பலரும் பார்த்துவிட்டு வந்து என்னிடம் நான் நடித்த காட்சி படத்தில் இல்லை என்று சொன்ன போது தான் எனக்கு தெரிந்தது .

இன்றைக்கு பதினாறு வருடம் ஓடி விட்டது !

படத்தின் பெயர் ராசுக்குட்டி ! அந்த கதாநாயக இயக்குனர் கே .பாக்ய ராஜ் .

இப்போதும் படத்தில் டைட்டில் ஓடும்போது 'ராஜநாயஹம்' என்று பெயர் வரும்!
ஆனால் சீன் இருக்காது !!


நான் எவ்வளவோ வாழ்க்கையில் இழந்திருக்கிறேன் . ஆனால் இப்போதும் ஏதேனும் ஓர் சேனலில் அந்த படம் ஓடும்போது மனத்தில் ஒரு வேதனையும் தன்னிரக்கமும் வர தான் செய்கிறது !

Everything for me becomes Allegory .

- Baudelaire


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_03.htmlJul 28, 2012

Illegetimate Child

மீள் பதிவு  28-12-2009


'ரஷிய கம்யூனிசம்' என்பது கார்ல் மார்க்சுக்கு பிறந்த illegetimate child என்று அந்நாளில் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் ஆட்லீ தாக்கினார்.

பழைய ஹாலிவுட் படம் A man for All Seasons.” இதில் ஒரு Witty dialogue.
“Every second bastard born is fathered by a priest.”

தேவ குரு என்ற பிரகஸ்பதி தன் சகோதரன் மனைவியுடன் கள்ள உறவு கொண்டதன் மூலம் பிறந்தவர் தான் பரத்வாஜ முனிவர். துரோணரின் மூதாதை பரத்வாஜ முனிவர்.

தாஸ்தயேவ்ஸ்கி யின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இந்த சகோதரர்களின் அப்பா பியோதருக்கு ஒரு illegetimate sonஉண்டு. பியோதரிடம் சமையல் வேலை செய்கிற வேலைக்காரனாக இருப்பான் அந்த முறை தவறிப் பிறந்த மகன் பாவல் ஸ்மார்டியாகோவ் .

சமீபத்தில் ஆந்திர playboy கவர்னர் 'என்.டி. திவாரியின்illegetimate child நான் ' என 29வயது டெல்லி லாயர் ஒருவர் தன்னைப் பற்றி கூறினார். அவர் பெயர் ரோஹித். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். பத்து வருடம் முன் மேஜர் ஆன உடனே வழக்கு தொடராமல் இப்போது தாமதமாக தொடரப்பட்ட வழக்கு என நீதிமன்றத்தில் ரோஹித் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஒரு இளைஞன் ' ஒரு மாணவி என் காதலி ' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தான். அந்த இளைஞனின் பெயர் கூட ரோஹித் தான் ! அந்தப் படம் வெளி வரவே இல்லை. ஆனால் அவன் வேறு ஒரு விதமாக பிரபலமானான். " ஜெமினி கணேசன் என் தந்தை. என் தாயார் லண்டனில் ஒரு டாக்டர். அவருடன் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட காதலில் நான் பிறந்தவன்.ஜெமினி கைவிட்டதால் என் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு ஆளானார் " என வலம்புரி ஜான் ஆசிரியராய் இருந்த
' தாய்' பத்திரிகையில் பேட்டி கொடுத்தான். ஜெமினி இதை"அப்பட்டமான பொய்.நான் அவனில்லை " என வன்மையாக மறுத்தார். உடனே அந்த இளைஞன் " சிங்கப்பூரில் எனக்கு நிறைய சொத்து இருக்கிறது. நான் சொத்துக்காக ஜெமினியின் மகன் என பொய் சொல்லவில்லை.என் நண்பர்களிடம் என்னைப் பற்றி கேட்டுப் பாருங்கள். Rohit is a gemஎன்று சொல்வார்கள். நான் ஜெமினிக்கு பிறந்தவன் என்பது உண்மை " என்று வலியுறுத்தி மீண்டும் சொன்னான். ஏனோ அதன் பிறகு அந்த விஷயம் பற்றி வேறு எந்த செய்தியும் வெளிவரவே இல்லை.

அன்றைக்கு ஜெமினி வாழ்வில் ஒரு ரோஹித். இன்றைக்கு திவாரி வாழ்வில் வேறொரு ரோஹித்! பெயர் ஒற்றுமை ஒரு coincidence!


நாற்பது வருடங்களுக்கு முன் ' சாவன் பாதன் 'இந்தி படத்தில் நடித்த ரேகா பேட்டி கொடுத்தார். " என் தந்தை பிரபல தமிழ் நடிகர். "
இதில் பெரிய ரகசியம் ஏதும் இல்லை. சினிமாப் பத்திரிகை நிருபர் ஒருவரிடம் உடனே ஜெமினி கணேசன் நாற்காலியை திருப்பிப்போட்டு உட்கார்ந்து " ஆமாம் பிரதர்! புஷ்பவல்லி யும் நானும் காதலித்து ஒன்றாக வாழ்ந்த போது பிறந்தவள் தான் ரேகா! நாங்கள் டைவர்ஸ் செய்துகொள்ளத்தேவையில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நானும் புஷ்பவல்லியும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளவே இல்லை." என்று கூலாக சொன்னார்!

“There are illegetimate parents,
but I don't believe there are any illegetimate children.”

-Rick Warren

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_29.htmlJul 27, 2012

பண்டிட் பீம்ஷென் ஜோஷி

மீள் பதிவு 01.11.2008

நான் திருச்சியில் எட்டாண்டுகளுக்கு முன் மெடிக்கல் டிரன்ஷ்க்ரிப்சன் கோர்ஸ் படித்து ஒரு சர்டிபிகேட் வாங்கினேன் . அந்த கோர்ஸ் நான் படிக்கும் போது எனக்கு ஒரு விரிவுரையாளர் இருந்தார் . அவர் பெயர் ஜோஷி . அவர் தன் தங்கையின் கல்யாண பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார் . அது இதே போல நவம்பர் மாதம் .முகூர்த்த தேதி 28.11.2000. கல்யாணம் கர்நாடகா பெல்காமில் . என்னை கல்யாணத்திற்கு வர வேண்டும் என அழைத்தார் . அவரது ஒரே தங்கை .
நான் ஆசுவாசமாக அந்த பத்திரிக்கையை பிரித்தேன் . என் கண்களை நம்ப முடியவில்லை .
Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you என அழைப்பிதழ் ஆரம்பித்ததை கனவு என்பதா ?
என் விரிவுரையாளர் ஜோஷிக்கு என்னுடைய ஆதர்ச ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் பண்டிட் பீம்சன் ஜோஷி சொந்த பெரியப்பா ! ஜோஷியின் மறைந்து விட்ட தந்தையின் உடன் பிறந்த சகோதரர் .

நானோ சாதாரணமாக Hyper Sensitive!
என்னுடைய அந்த நேர உணர்வுகளை சொல்ல இப்போதும் என்னிடம் வார்த்தைகளே இல்லை . பீம்சன் ஜோஷி ஆடியோ கேசட் இருபதுக்கு மேல் சேகரித்து வைத்திருப்பவன் . பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை என்னை அவர் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் ! என்ன ஒரு மகத்தான கௌரவம் !இந்த மாதிரி சந்தோசத்தை அனுபவிக்க எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது .

என்னால் அந்த திருமணத்திற்கு போக இயலவில்லை . ஆனால் மணப்பெண்ணுக்கு என் அன்பளிப்பை என் விரிவுரையாளர் ஜோஷியிடம் கொடுத்தனுப்பினேன் . இவர் போய் அவர் பெரியப்பா பீம்சன் ஜோஷியிடம் அவருடைய Ardent Fan R.P.Rajanayahem பற்றி தன்னுடைய மாணவர் என்பதையும் சொல்லியிருக்கிறார் .பண்டிட் தன் ஆசியை எனக்கு சொல்லியனுப்பினார் .

அந்த திருமண பத்திரிக்கையை பத்திரமாக ஒரு பொக்கிஷம் போல வைத்திருக்கிறேன் . நேற்று அவருடைய பிருந்தாவன் சாரங்கா கேட்டுக்கொண்டு இருக்கும்போது அந்த அழைப்பிதழ் என் கையில் .

Mrs&Mr Pandit Bhimshen Joshi invites you

....................

பாரத ரத்னா பண்டிட் பீம்ஷென் ஜோஷி

மீள் பதிவு 05.11.2008

பண்டிட் பீம்ஷன் ஜோஷிக்கு இந்திய அரசு நேற்று(04.11.2008) பாரத ரத்னா விருது அறிவித்து உள்ளது .
பாரத ரத்னா விருதும் இப்போது அவருக்கு கிடைத்து விட்டது .
"பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை" என்று நவம்பர் ஒன்றாம் தேதி தான் எழுதினேன் !

Music is the proper task of life!

..................


Three comments :

Chandra said...
"...பாரத ரத்னா தவிர இதர உயர் விருதுகள் அனைத்தையும் பெற்று விட்ட இசை மேதை..."He got that too today! Wooow - what a timing you wrote about him!
Wednesday, 05 November, 2008


Krishnan said...
I too recalled your post about Bhimsen Joshi when I heard the news that he has been conferred Bharat Ratna. What a timing !
Wednesday, 05 November, 2008
D.R.Ashok said...
ஒரு வேளை ஞானம்முனு சொல்றாங்களே அது உங்களுக்கு வந்துடுச்சா! (எழுத்து ஞானம் இல்லை.. வெறும் ஞானம்) .... தலைவா பேசாம சாமியாரா ஆகிடுங்க... நல்லா துட்டு பாக்கலாம் :-)
keep calaking....

Jul 26, 2012

பூதாகரமான பிப்லப் சௌதுரிஜெமினி வாசன் இயக்கத்தில் 1948ல் வந்த படம் ’சந்திரலேகா’.பிரமாண்டம் என்பதை தமிழ் ரசிகர்கள் உணர்ந்தது இப்படத்தில் தான். M.K.ராதா கதாநாயகன்,ரஞ்சன் வில்லன், கதாநாயகி T.R.ராஜகுமாரி. பின்னால் இந்தப் படம் இந்தியில் டப்பிங் செய்யப் பட்டு வெளி வந்து சக்கை போடு போட்டது.

ஒரு காட்சியில் வில்லன் தன் அடியாளின் கையாலாகாத்தனத்தை கண்டித்து கடுமையுடன் “ இப்படி மீண்டும் நடந்தால்” என்று எச்சரித்து திரும்பிப் பார்ப்பான். அங்கே பூதாகரமாக ஒரு முரட்டு உருவம் சவுக்கை வைத்துக்கொண்டு வில்லனுக்கு நமஸ்காரம் செய்வான். இந்த இடத்தில் கொட்டகை அதிரும். வில்லன் காட்டும் சவுக்குடன் கூடிய முரட்டு உருவத்தைக் கண்ட அடியாள் நடுங்கி மண்டியிடுவான். எங்கிருந்தாலும் ஒரு வாரத்துக்குள் அவளைப் பிடித்து இழுத்து வரவேண்டும்” என்று எச்சரித்து விட்டு “போ” என்பான். வில்லனின் நாய் அப்போது டைமிங்குடன் “லொள்” என்று குரைக்கும். மீண்டும் கொட்டகை அதிரும்.

அசோகமித்திரன் தன் ’இருட்டிலிருந்து வெளிச்சம்’ நூலில் ‘ரொம்ப நாளாச்சு’ கட்டுரையில் மேற்கண்ட ’சந்திரலேகா’ காட்சி பற்றி எழுதியுள்ளார்.

பின்னால் இந்த மாதிரி வில்லனின் எச்சரிக்கை எத்தனை தமிழ்,இந்தி, தெலுங்கு டப்பிங் படங்களில் இடம் பெற்று இருக்கும்!
தெலுங்கு டப்பிங் பட வில்லன் தன்  கெட்ட கூட்டத்தின் மெம்பர் ஒருவனைப் பார்த்து ‘ உடனே அந்த ஃபார்முலாவை கொண்டு வரவேண்டும்.கொண்டு வராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்று எச்சரித்து விட்டு அதே கெட்ட கூட்டத்தின் இன்னொரு மெம்பரை தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றே விடுவான். மீண்டும் தான் எச்சரித்த மெம்பரைப் பார்த்து சொல்வான்  You can go."    தியேட்டரில் கிண்டல் சிரிப்பு கேட்கும்.

சந்திரலேகாவில் வரும் அந்த காட்சியில் வரும் சவுக்குடன் கூடிய பூதாகரமான முரட்டு உருவம் பிப்லப் சௌதுரி பற்றி ஒரு சிறுகதை கூட அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்!’ பிப்லப் சௌதுரியின் கடன் மனு’
’ ஒரு முறை ஒருவனின் திறமையின்மைக்காக வில்லன் கடுமையாக அவனை வைது விட்டு “ இன்னொரு முறை இப்படி நடந்தால் இது தான்” என்று திரும்புவான். அங்கு அரக்கனைப் போன்ற பிரமாண்டமானதொரு உருவம் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும். அது தான் பிப்லப் சௌதுரி. அந்தத்திரைப் படத்தின் 170 நிமிடங்களில் அவன் அந்தப் பத்து கணங்கள் தான் தோன்றினான்.ஆனால் கொட்டகையே கலகலத்து விடும். எனக்கு அவனை எப்போது பார்த்தாலும் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும் காட்சி தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு அவன் திரும்பத் திரும்ப எங்கள் முதலாளியின் மூடிய கதவுக்கு வெளியே காத்து நிற்பான்.’

ஜெமினி ஸ்டுடியோவின்இந்த எக்ஸ்ட்ரா நடிகர் அங்கு வேலை செய்யும் இந்த கதை சொல்லிக்கு  ஒரு சிறு டைரி அன்போடு கொண்டு வந்து தருகிறான். “ நீ சவுக்கு தான் தருவேன்னு நினைச்சேன்.”
கதை சொல்லியிடம் கடன்  மனு எழுதித்தரும்படி பிப்லப் கேட்கிறான். ’உனக்கா? ‘
‘ஆமாம்ப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு’
‘ஒரு ரோல் தரமாட்டேங்கறாங்கப்பா,ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு பூதம் வேஷம். உடம்பு மேலே கறுப்பு எண்ணெ பூசிக்கிட்டு நாளெல்லாம் நின்னேன். அந்த எண்ணெயைக் கழுவ நாலு நாளாச்சு. இதோ பாரு கையிலே, இன்னும் கூடச் சரியாப் போகலே.” அவனுடைய கை நகக்கண்கள் நிரந்தரமாகக் கறுப்பாகிக் கிடந்தன.

கதை சொல்லி -’எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முன்னூறு பேரில் இருநூற்றைம்பது பேருக்கு மனுக்கள் எழுதித்தந்திருப்பேன்.கடனுக்காக.
நான் திரும்பத் திரும்ப பிப்லப் சௌதுரிக்கு மனுக்கள் எழுதித்தந்தேன்.பிறருடைய துக்கங்களையும் என்னுடையதாக்கி எழுத்தில் வடிக்கும் கனம் தாங்காமல் தான் போலும் ,நான் ஒரு நாள் அந்த ஜெமினி ஸ்டுடியோவை விட்டு ஓடியே விட்டேன்’

’பிப்லப் சௌதுரியின் வீட்டின் தரித்திரத்தைக் கண் கொண்டு சகிக்க முடியாது.அது ஏழ்மையில்லை. தரித்திரம்.’

‘நிஜம் எதுவாக இருந்தாலும் எழுத்து வடிவில் அதை முற்றிலும் தெரிவிக்க முடிவதில்லை.’

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_955.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2416.html


Jul 24, 2012

T.R.ராமச்சந்திரன்

பேக்கு கதாநாயகன் - முழு நீள சிரிப்பு படம் -இப்படியெல்லாம் தமிழ் திரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இன்றும் மாறாத விதி.
 இதற்கு முன்னோடி நடிகன் என்று T.R.ராமச்சந்திரன்.
”ஞே” என்று முழித்துக்கொண்டு ..“கேனம்” மாதிரி பேசிக்கொண்டு..

ராமச்சந்திரன் என்ற பெயரிலும் சில நடிகர்கள் தமிழில் புகழ் பெற்றார்கள்.

நகுலனின் கவிதை

”ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.”

T.R. ராமச்சந்திரன், M.G.ராமச்சந்திரன்,
T.K.ராமச்சந்திரன்.(இவர் வில்லன் நடிகர்)

 அவர்களிலும் முதலில் புகழ் வெளிச்சம் கண்டவர் T.R.ராமச்சந்திரன் தான்.

1941ல் T.R.ராமச்சந்திரன் ’சபாபதி ‘யில் கதாநாயகன்.

ஒய்.ஜி.மஹேந்திரனோடு ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்திருப்பாரா? ஜனகராஜோடு ஜெயப்ரதா ஜோடியாக நடித்ததுண்டா?

 ஒரு தமிழ் சிரிப்பு நடிகர் மிக முன்னணி நடிகைகள், அன்றைய கனவுக்கன்னிகளுக்கு கதாநாயகனாக நடித்தார் என்றால் அவர் T.R.ராமச்சந்திரன் மட்டும் தான்.
இன்றைக்கு இந்த சிரிப்பு நடிகருடன் இந்த நடிகை நடிக்க மறுத்து விட்டார் என்று செய்திகள் வருகிறது.ஆனால் T.R.ராமச்சந்திரன் யோகக்காரன்.

பின்னால் அகில இந்திய நடிகையான வைஜயந்திமாலாவுக்கு முதல் படத்தில் முதல் நாயகன் இவர் தான்.1949ல் ஏ.வி.எம் மின் “வாழ்க்கை” படம்!

நடிகையர் திலகம் சாவித்திரி 1953ல் நாகேஸ்வரராவுடன் “தேவதாஸ்” ஜெமினியுடன் ”மனம் போல் மாங்கல்யம்”முடித்து 1955ல் ஜெமினியுடன் நடித்த”மிஸ்ஸியம்மா”  வெளிவந்தது.அதே வருடம் சாவித்திரி கதாநாயகியாய் நடித்த படம் “கோமதியின் காதலன்”. இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் சிரிப்பு நடிகர் T.R.ராமச்சந்திரன்.

அதே 1955ல் பின்னால் அகில இந்திய நட்சத்திரமாகி, ராஜ்கபூருடன் கலக்கிய
நாட்டிய பேரொளி பத்மினி நடித்த ’’கதாநாயகி’’படத்தின் கதாநாயகன் இதே T.R.ராமச்சந்திரன்.

1960ல் தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றான “ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் அஞ்சலிதேவியின் கதாநாயகன் T.R. ராமச்சந்திரன் தான்.

சிவாஜி கணேசன் ’பராசக்தி’யில் அறிமுகமாகி,அடுத்த வருடம் ’திரும்பிப்பார்’அதற்கடுத்த 1954ல் மனோகரா, தூக்கி தூக்கி,எம்.ஜி.ராமச்சந்திரனுடன் கூண்டுக்கிளி போன்ற படங்கள். அதே வருடம் அவர் ஒரு படத்தில் செகண்ட் ஹீரோ வாக நடித்தார். அதில் ஹீரோ T.R.ராமச்சந்திரன். அந்தப் படம் ”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.”

இந்தப் படத்தில் சிவாஜிக்கு பின்னணிப் பாடல் ஒன்றை சந்திரபாபு பாடினார். கவிஞர் கம்பதாசன் எழுதிய “ஜாலி லைஃப்!ஜாலி லைஃப்! தாலி கட்டினால் ஜாலி லைஃப்!” சந்திர பாபு பாடிய பல பாடல்கள் அவர் வாழ்வின் அபத்தத்தைப் பார்த்து சிரித்தன்!

”கதாநாயகி”, ”அடுத்த வீட்டுப் பெண்” இரண்டுபடங்களிலும் இரண்டாவது ஹீரோ K.A.தங்கவேலு. இந்தப் படங்களில் A.கருணாநிதியும் நடித்திருந்தார்.

“புனர்ஜென்மம்” (1961) படத்தில் ராமச்சந்திரன் டியூசன் வாத்தியாராக தங்கவேலு மகள் ராகினிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்.
தங்கவேலு: என்ன படிச்சிருக்கீங்க
ராமச்சந்திரன்: ம்..ம்.. B.A.,
தங்கவேலு : (ஆச்சரியப்பட்டு) ஆ.. பி.ஏ யா?
ராமச்சந்திரன்: ம்..ம்.. பி.ஏ. படிக்கலாமுன்னு நினைச்சேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது அப்பா செத்துப்போயிட்டார்.
தங்கவேலு: ஓஹோ..போகும்போது புஸ்தகத்தையெல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாரா?

நாகேஷ் காமடியனாகவும் கதாநாயகனாகவும் கொடி கட்டிய காலம்.
“ நாம் மூவர்” என்ற படத்தில் மூவராக ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,நாகேஷ்.இந்தப் படத்தில் அந்த இரண்டு ஹீரோ நடிகர்களை விட நாகேஷுக்குத் தான் சம்பளம் அதிகம். அந்த வருடம் ஜெமினி கணேஷ் நடித்த “சின்னஞ்சிறு உலகம்“ படத்தில் நாகேஷின் ஜோடி K.R.விஜயா. அந்த 1966ல் கலக்கிய மற்ற படங்கள் அன்பே வா, அண்ணாவின் ஆசை, மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான், மற்றும் சாது மிரண்டால்””மதராஸ் டு பாண்டிச்சேரி”.

”சாது மிரண்டால்” படத்தில் கதாநாயகன் T.R.ராமச்சந்திரன்.
இந்தப் படத்தில் பாலமுரளியின் அருமையான பாடல்” அருள்வாயே,நீ அருள்வாயே, திருவாய் மலர்ந்து அருள்வாயே” T.R.ராமச்சந்திரனுக்குத் தான்.

“அன்பே வா” படத்தில் நாகேஷ்-T.R.R காமெடி
 “ராமையா தின்னுகெட்ட பரம்பரைன்னு என் பரம்பரைக்கே பேருடா!’’
“சார்! உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்தத்தொடர்பு உங்கள் குடும்பத்துக்கு த் தெரிந்தால் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள்!நான் தண்டிக்கப் படுவேன்! நம்முடைய அருமையான இந்த உணவுத்தொடர்பு துண்டிக்கப் படும்! இது தேவையா?”

..................


மகள் வீட்டுக்கு நிரந்தரமாக அமெரிக்காவுக்குசெல்லவேண்டியிருப்பதை ராமச்சந்திரன் தன் நண்பர் K.A.தங்கவேலுவிடம்சொல்லி விடை பெற்றபோது எப்படி இருவரும் முதுமையில் நெகிழ்ந்திருப்பார்கள்! அமெரிக்காவிலேயே 1990ல் T.R.ராமச்சந்திரன் மரணமடைந்தார்.


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_5112.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/ka.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_11.html
Jul 22, 2012

நடிகர் முத்துராமன்கிரிக்கெட்டில் ஃபார்ம் போல சினிமாவிலும் நடிகர்கள் ஃபார்ம் வரும்போது பிரமாதமாக கலக்குவார்கள்.
முத்துராமன் நாடக நடிகர். சிறு கதாபாத்திரங்களில் தான் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்தவர். 1956ல் ரங்கூன் ராதா படத்தில் ஒரு வக்கீல் ரோலில் வருவார். சகஸ்ரராமத்தின் சேவாஸ்டேஜ் நாடகங்களில் நடித்திருக்கிறார்.வைரம் செட்டியார் நாடக கம்பெனியின் நடிகர். சினிமா வாய்ப்புக்காக  முயற்சித்தவர். ஜூபிடர் சோமுவின் அஸ்தமன படம் அரசிளங்குமரி(1961)யில் எம்ஜிஆரின் ஸ்டண்ட் நடிகர் கே.பி.ராமகிருஷ்ணனுக்கு ஒரு ரோல் கிடைத்த போது அந்த ரோலை அவர் நாடக நடிகர் முத்துராமனுக்கு பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்தார். எம்.ஜி.ஆருடன் ஏற்றம் இறைத்துக்கொண்டே ’தந்தனத்தானே ஏலேலோ தந்தனத்தானே ஏலேலோ பாட்டில் சீர்காழியின் “ வேலை செஞ்சால் உயர்வோம் என்ற விவரம் மண்டையில் ஏறனும்” வரிக்கு முத்துராமனின் performance எம்ஜிஆர் தேஜஸான அழகுக்கும் அவருடைய நடிப்புப்பாணிக்கும்   சற்றும் பொருந்தாமல் under acting என்ற அளவில் இருப்பதை இன்றும் காணமுடியும். எம்.ஜி.ஆருடன் ஒரு பாடல் காட்சியில் நடித்த பெருமை மட்டும் தான் அன்று.

ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படத்தில் வாழ்வு கொடுத்தார். போலீஸ்காரன் மகள் படத்தில் ’இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’பிபிஎஸ் ஜானகி மாஸ்டர்பீஸ் பாடலில் கூட
’ பரவசம்’உணர்வை கண்ணை செயற்கையாக உருட்டி பூரிப்பை விசித்திரமாக வெளிப்படுத்துவார். ”சுமைதாங்கி” படத்தில் ஜெமினி கணேசனுக்கு அண்ணனாக நடித்தார்,ஜெமினியின் flair இவரை காணாமல் அடித்தது. எஸ்.எஸ்.ஆரின்’வானம்பாடி’ படத்தில் ‘நில்,கவனி,புறப்படு’ பாடலில் அந்த முதல் மூன்று வரிக்கும் இவருடைய  Expression இன்று பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது. சினிமாவில் நாடக நடிப்பின் செயற்கைத்தன்மையை இவரால் ஆரம்பகாலத்தில் உதறவே முடியவில்லை.

ஒரு நாடக நடிகையைத்தான் முத்துராமன் காதல்திருமணம் செய்துகொண்டார். இயக்குனர் (தேவராஜ்) மோகனின் சகோதரி.

”எதையும் தாங்கும் இதயம்’’(1962) எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி படம்.சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய”எனக்கும் உனக்கும் வெகு தூரமில்லை. நான் நினைக்காத நேரம் இல்லை” பாடல் இந்தப் படத்தில் தான். இதில் முத்துராமனுக்கு வயதான கதாபாத்திரம்.முதலியார் பாத்திரம். நன்றாக நடித்திருந்தார்.

முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த முத்துராமனுக்கு சினிஃபீல்டில் மொதலியார் என்றே பட்டப்பெயர்.முத்துராமன் முக்குலத்தோர் மாநாடுகளில் கலந்துகொண்ட ஜாதி அபிமானி.

காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் ஒரு அதிசயம். இவர் கிழவர் வேடம் போட்டு வருகிற நேரங்களில் பாலையா,நாகேஷ் இருவருக்கும் பிரமாதமாக ஈடுகொடுத்தார். ”டெண்ட்?” என்று அந்த கிழவர் வேட ஆரம்ப வசனம் துவங்கி
”எனக்கு மட்டும் என்னய்யா” (பாலைய்யா ‘அதானே’ அதானே’ என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் தலையாட்டுவார்)” ம் ஒரே பிள்ளை! ம்..”
நாகேஷிடம்” நஷ்டம் வந்தா கூட நான் கவலைப் படமாட்டேன்”
’’அசோக் இவங்களை வெளியெ அனுப்பி கதவ சாத்து”
 கலக்கிவிடுவார்!பாலைய்யாவை முத்துராமன் படுத்தும் பாடு.
இதே போல் தான் ’எதையும் தாங்கும் இதயம்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை படாத பாடு படுத்துவார். ஒரு நாயை ட்ரீட் பண்ணுவது போல “ச்சீ..ச்சீ..போய்யா” என்பார் முத்துராமன்.எம்.ஆர். ராதாவுக்கு கேட்கவேண்டுமா? கல்லையெடுக்கும் ஆளைப் பார்த்த நாய்  ஈனமாக முனகல் குரல் கொடுத்து தவிக்குமே, அதே போல முத்துராமனிடம் பம்முவார்.

சிவாஜியுடன் “ அன்னை இல்லம்””பார் மகளே பார்””திருவிளையாடல்” “கர்ணன்” ”பழனி” என்று ஆரம்பித்து பின் பெரும்பாலான படங்கள்.. ஊட்டி வரை உறவு,சிவந்தமண்,அருணோதயம்,இருதுருவம், சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள்,மூன்று தெய்வங்கள், ராஜராஜசோழன்,வைரநெஞ்சம்,அவன் தான் மனிதன்...இன்னும்..இன்னும்

ஜெய்சங்கர் படங்களில்  சப்போர்ட்டிங் கேரக்டர் ரோல் செய்த  இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. ( ’வீட்டுக்கு வீடு’ படம் தவிர.ஏனென்றால் அந்தப் படத்தில் லட்சுமிக்கு ஜோடியாக ஜெய்சங்கர் அம்மாஞ்சியாக அட்டகாசமாக நடித்திருப்பார்.பஞ்சவர்ணக்கிளியில் ரெட்டை வேடத்தில் ஜெய் நடிப்பு இவரை விட நன்றாகவே  இருக்கும்)
பெண் தெய்வம்,கண்ணன் வருவான்,நிலவே நீ சாட்சி,சூதாட்டம், மாணவன் போன்ற  படங்களில் முத்துராமன் இனணந்து நடித்தார். ’முத்துராமன் தான்யா நல்லா நடிச்சிருக்கான்’ என்று தரை டிக்கட் ரசிகர்கள் படம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே சொல்வார்கள்.

AVM ராஜனுடன் ‘’ பூவும் பொட்டும்’’, ”இருளும் ஒளியும்” பதிலுக்கு பதில்”

அதே காலங்களில் எம்.ஜி.ஆருடன் “கண்ணன் என் காதலன்” என் அண்ணன்” ”ஒரு தாய்மக்கள்”
ஜெமினியுடன்’பூஜைக்கு வந்த மலர்’ ’வாழ்க்கை படகு’’அவளுக்கென்று ஓர் மனம்’ ‘புன்னகை’’சுடரும் சூறாவளியும்’  போன்ற படங்கள்.

பின்னால் தான் இவருக்கு தனிக்கதாநாயகனாக மார்க்கெட்டில் மதிப்பு வந்தது.
“மயங்குகிறாள் ஒரு மாது” ,”தீர்க்க சுமங்கலி” ,’‘உறவு சொல்ல ஒருவன்”,திக்கு தெரியாத காட்டில்”, சூரிய காந்தி”,

நடிகர் சிவகுமாரின் மனைவியும் சூரியா,கார்த்தி இருவரின் தாயாருமான லட்சுமி அம்மணிக்கு அந்த காலகட்டத்தில் முத்துராமனின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சிவகுமார் ’ என் மனைவி முத்துராமனின் ரசிகை’ என அப்போது குறிப்பிடுவார்.

Wig வைத்து நடிக்க ஆரம்பித்த பின் தான் முத்துராமனுக்கு லட்சணமே வந்தது. அது வரை பார்க்க ஏதோ உரித்த கோழி போலத்தான் இருந்தார்.
முத்துராமனுக்கு தலையில் Wig பிரமாதமாக பொருந்தும். பின்னால் சத்யராஜுக்கு Wig பொருந்தியதைப்போல. குரல் கூட சத்யராஜின் குரல் சில சமயங்களில் முத்துராமன் குரல் போல இருக்கும்.

கே.ஆர்.விஜயாவுடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் முத்துராமன் தான்.
கே.ஆர் விஜயாவின் நூறாவது படம் நத்தையில் முத்து (1973) படத்திலும் ஜெயலலிதாவின் நூறாவது படம் திருமாங்கல்யம்(1974) இரண்டு படங்களின் கதாநாயகன் முத்துராமன் தான்.

’காசே தான் கடவுளடா’ படம் வெளியான போது ஒரு சுவாரசியம். தேங்காய் சீனிவாசன் கட்-அவுட்  ஒன்று பிரமாண்டமாக பைலட் தியேட்டரில் வைக்கப்பட்டது. முத்துராமன் அதைப் பார்த்து விட்டு அந்தப்பட இயக்குனர் சித்ராலயா கோபுவிடம் போய் ‘ என்ன கோபு, இப்படி செய்யலாமா? நான் தான் படத்தின் கதாநாயகன். ஆனால் தேங்காய் கட் அவுட் வைத்தது எனக்கு அவமானம் இல்லையா’ என்று வருத்தப்பட்டார். ’படத்தில் தேங்காய்க்குத்தான் பயங்கர அப்ளாஸ்.இதற்கு நீங்கள் வருத்தப்பட்டு பயனில்லை’என்று கோபு சமாதானப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர்,சிவாஜி,ஜெமினி சாதனை முத்துராமனால் எட்டமுடியாத விஷயம்.
ஆனால்
அவர் ஜெய்சங்கர்,AVM ராஜன்,ரவிச்சந்திரன்,சிவகுமார் ஆகியோரை விட நல்ல நடிகர்.

பிபிஎஸ் பாடல்களில்  இவருக்கு வாய்த்தவை.

’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’

’முள்ளில் ரோஜா,கள்ளூரும் ரோஜா’

’மதுராம் நகரில் தமிழ் சங்கம்’

’சந்திப்போமா?சந்திப்போமா’

’போகப் போகத்தெரியும் இந்தப் பூவின் வாசம் தெரியும்’

’மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்’

‘கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’

‘உன்னழகை கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்’

‘எங்கெல்லாம் உன் வண்ணம், அங்கெல்லாம் என் எண்ணம்’

எஸ்பிபி யின்  பாடல்கள்

‘சம்சாரம் என்பது  வீனண’

‘கேட்டதெல்லாம் நான் தருவேன்,எனை நீ மறவாதே’ (எஸ்.பி.பி மனைவிக்கு பிடித்த பாடல்)

’நான் என்றால் அது அவளும் நானும்’

கே.ஜே.ஜேசுதாஸ் பாடல்
‘மோகனப் புன்னகை ஊர்வலமே, மன்மத லீலையின் நாடகமே’

‘மலைச்சாரலில் இளம்பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில்’

‘இனங்களிலே எந்த இனம் பெண்ணினம்’


கதாநாயகனாக மார்க்கெட்டில் இருந்து இவருடைய  சரிவும் மோசமாய்த்தான் இருந்தது. ‘நினைவில் ஒரு மலர்’ போல 90% சூட்டிங்,எடிட்டிங் நிறைவடைந்த நிலையிலும் எத்தனையோ படங்கள் முடிக்கவே முடியாமல் பரிதாபமாய் முடங்கிப்போய் விட்டன! ஃபைனான்சியர்கள்,வினியோகஸ்தர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்தார்கள். ஆறுமுகம் செட்டியார் போல எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடித்துப் போனார்கள்.

 முத்துராமனை வைத்து ‘உயிர்’(1971), ‘எங்கள் குல தெய்வம்’(1974) போன்ற படங்கள் இயக்கிய பி.ஆர்.சோமு ‘நினைவில் ஒரு மலர்’படத்தில் இவரை கதாநாயகனாகவும் ரவிச்சந்திரனை இரண்டாவது கதாநாயகனாகவும் வைத்து படம் இயக்கி விட்டு பிசினஸ் செய்ய முடியாமல் சலித்து
1980ல்புலம்பினார். “இவன் ஒரு சப்பை, அவன் ஒரு லாப்பை. விளங்குமா?”

அதே நேரம் முத்துராமன் நியூ காலேஜில் படித்துக்கொண்டிருந்த  மகன் கார்த்திக்கை (அப்போது கார்த்திக் பெயர் முரளி)தயாரிப்பாளராக்கி ‘பணம்,பெண்,பாசம்’ படம் எடுத்து வெளியிட்டார்.

மகன் கார்த்திக் பாரதிராஜா படத்தில் கதாநாயகனாக ஒப்
பந்தமானார். இவர் வில்லனாக ரஜினி படம் ‘போக்கிரிராஜா” வில் நடிக்க ஆரம்பித்தார். சரி இவரும் ஒரு  ரவுண்டு வரப்போகிறார் என்றே எல்லோரும் எண்ணியிருந்தார்கள்.
கார்த்திக் நடித்து ‘அலைகள் ஓய்வதில்லை’ வெளியாகி சக்கைப்போடு போட்டது.
 முத்துராமன் ஊட்டிக்கு ஒரு பட சூட்டிங் போனவர் அதிகாலை ஜாக்கிங் போகும்போது உயிர் விட்டார். ( ஒரு படத்தில் நாகேஷ் வசனம்”உயிரை விட்டா ஊட்டியில் தான் உயிரை விடனும்”)
வெறொரு படத்திற்காக வந்திருந்த கமல் ஹாசன் தான் கீழே விழுந்து கிடந்த முத்துராமனைப் பார்க்க நேர்ந்தது. அவர் உடல் தூக்கியபோது அவ்வளவு திடகாத்திரமாக  இருந்ததை கமலால் உணரமுடிந்திருக்கிறது.
சிவகுமார் இது குறித்து தான் எழுதிய ’இது ராஜபாட்டையல்ல’ புத்தகத்தில்  ’சட்டென்று எழுந்து தன் வெடிச்சிரிப்புடன் முத்துராமன் ‘நல்லா ஏமாந்தீங்களா” என சொல்லமாட்டாரா’ என்று தனக்குத் தோன்றியதாக எழுதியிருக்கிறார்.

ரஜினி படம் இவருக்கு வேறொருவர் டப்பிங் பேசி வெளியானது.

முத்துராமனின் திடீர் மரணத்தின் போது  அதிர்ச்சி தான். அதே காலகட்டத்தில் தான் சாவித்திரி, கண்ணதாசன் மரணங்களும்.கே.ஆர் விஜயா இன்றும் தன்னை மிகவும் பாதித்தவிஷயம் முத்துராமனின் திடீர் மரணம் தான் என்பார்.

எம்.ஜி.ஆர்.சிவாஜி,ஜெமினி,எஸ்.எஸ்.ஆர், அவர்களுக்கு பின் வந்த
AVM ராஜன்,ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் Second Hero வாக நடித்தே வாழ்வின் பெரும்பகுதியை கழித்தவர் முத்துராமன். இந்திப் படங்களில் ராஜ்குமார் இப்படி குணச்சித்திர கதாபாத்திரங்கள் செய்தவர்.நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தியில் முத்துராமன் ரோல் அவர் தான் செய்தார். வாழ்க்கை படகு இந்தியில் கூட முத்துராமன் ரோல் ராஜ்குமார் தான்.

ஹீரோவாய் சினிமாவில் கிடைக்கும் luxury அசாதாரணமானது. அதோடு அவர் மகன் கார்த்திக் சொன்னது போல ஹீரோ நடிகனின் வாழ்வு Erotic ஆக அமைந்தே தீரும்.
ஆனால் பாவம் முத்துராமன் தொழில்ரீதியாக மட்டுமல்லாமலும் கூட துர்பாக்கியசாலி. தமிழில் மற்ற கதாநாயகர்களை விடவும்.

எஸ்.எஸ்.ஆர் இன்று 84 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

AVM ராஜனுக்கு  இன்று 78 வயது. அல்லேலூயா! ஏசுவின் அடிமை! பெந்தகோஸ்து கிறிஸ்தவ போதகராய் வெள்ளுடையில் பிரச்சாரம் செய்துகொண்டு.... மகமாயி..மகமாயி..என்று சினிமாவில் ஒவ்வொரு டயலாக்கிலும் சொன்னவர் இன்று ...அல்லேலூயா.. அல்லேலூயா..உம்மை ஜெபிக்கிறோமைய்யா..  ஏசுவின் அடிமை...
 இப்ப சத்தத்தையே காணோமே. ஒருவேளை தாய்மதம் திரும்பிவிட்டாரா??

எம்ஜிஆருக்கு சாகும்போது official age 70!சிவாஜி மரணமடைந்த போது 74 வயது.ஜெமினி கணேஷ் 85 வயதில் இறந்தார்.ஜெய் சங்கருக்கு சாகும்போது 62 வயது.ரவிச்சந்திரன் மரணம் 71 வயதில்.
52 வயதில் வாழ்க்கையை முடிக்க முத்துராமன் நோயாளியுமல்ல.அலைகள் ஓய்வதில்லை தவிர்த்து மகன் கார்த்திக் நடித்த  படங்களை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கார்த்திக் சிவாஜி மகன் பிரபுவை விடவும் சிறந்த நடிகன்.சிவகுமார் தன் மகன்களின் சிறப்பைக் கண்டு களிக்கும் பேறு பெற்றிருப்பது போல முத்துராமனுக்கு வாய்க்கவில்லை.

அப்போது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இரங்கல் : அரசியல், சமுதாயத்தொண்டு என்றெல்லாம் முத்துராமனைப்பற்றி பேச ஒன்றும் இல்லையென்றாலும் கூட ‘நட்பு,பழகும் தன்மை’ இவற்றைப் பொறுத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்லவேண்டும்”

http://rprajanayahem.blogspot.in/2008/06/blog-post_1413.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/carnal-thoughts-6.html


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_03.html