Share

Jul 24, 2012

T.R.ராமச்சந்திரன்

பேக்கு கதாநாயகன் - முழு நீள சிரிப்பு படம் -இப்படியெல்லாம் தமிழ் திரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இன்றும் மாறாத விதி.
 இதற்கு முன்னோடி நடிகன் என்று T.R.ராமச்சந்திரன்.
”ஞே” என்று முழித்துக்கொண்டு ..“கேனம்” மாதிரி பேசிக்கொண்டு..

ராமச்சந்திரன் என்ற பெயரிலும் சில நடிகர்கள் தமிழில் புகழ் பெற்றார்கள்.

நகுலனின் கவிதை

”ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை.”

T.R. ராமச்சந்திரன், M.G.ராமச்சந்திரன்,
T.K.ராமச்சந்திரன்.(இவர் வில்லன் நடிகர்)

 அவர்களிலும் முதலில் புகழ் வெளிச்சம் கண்டவர் T.R.ராமச்சந்திரன் தான்.

1941ல் T.R.ராமச்சந்திரன் ’சபாபதி ‘யில் கதாநாயகன்.

ஒய்.ஜி.மஹேந்திரனோடு ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்திருப்பாரா? ஜனகராஜோடு ஜெயப்ரதா ஜோடியாக நடித்ததுண்டா?

 ஒரு தமிழ் சிரிப்பு நடிகர் மிக முன்னணி நடிகைகள், அன்றைய கனவுக்கன்னிகளுக்கு கதாநாயகனாக நடித்தார் என்றால் அவர் T.R.ராமச்சந்திரன் மட்டும் தான்.
இன்றைக்கு இந்த சிரிப்பு நடிகருடன் இந்த நடிகை நடிக்க மறுத்து விட்டார் என்று செய்திகள் வருகிறது.ஆனால் T.R.ராமச்சந்திரன் யோகக்காரன்.

பின்னால் அகில இந்திய நடிகையான வைஜயந்திமாலாவுக்கு முதல் படத்தில் முதல் நாயகன் இவர் தான்.1949ல் ஏ.வி.எம் மின் “வாழ்க்கை” படம்!

நடிகையர் திலகம் சாவித்திரி 1953ல் நாகேஸ்வரராவுடன் “தேவதாஸ்” ஜெமினியுடன் ”மனம் போல் மாங்கல்யம்”முடித்து 1955ல் ஜெமினியுடன் நடித்த”மிஸ்ஸியம்மா”  வெளிவந்தது.அதே வருடம் சாவித்திரி கதாநாயகியாய் நடித்த படம் “கோமதியின் காதலன்”. இந்தப் படத்தில் அவருக்கு கதாநாயகன் சிரிப்பு நடிகர் T.R.ராமச்சந்திரன்.

அதே 1955ல் பின்னால் அகில இந்திய நட்சத்திரமாகி, ராஜ்கபூருடன் கலக்கிய
நாட்டிய பேரொளி பத்மினி நடித்த ’’கதாநாயகி’’படத்தின் கதாநாயகன் இதே T.R.ராமச்சந்திரன்.

1960ல் தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றான “ அடுத்த வீட்டுப் பெண்” படத்தில் அஞ்சலிதேவியின் கதாநாயகன் T.R. ராமச்சந்திரன் தான்.

சிவாஜி கணேசன் ’பராசக்தி’யில் அறிமுகமாகி,அடுத்த வருடம் ’திரும்பிப்பார்’அதற்கடுத்த 1954ல் மனோகரா, தூக்கி தூக்கி,எம்.ஜி.ராமச்சந்திரனுடன் கூண்டுக்கிளி போன்ற படங்கள். அதே வருடம் அவர் ஒரு படத்தில் செகண்ட் ஹீரோ வாக நடித்தார். அதில் ஹீரோ T.R.ராமச்சந்திரன். அந்தப் படம் ”கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.”

இந்தப் படத்தில் சிவாஜிக்கு பின்னணிப் பாடல் ஒன்றை சந்திரபாபு பாடினார். கவிஞர் கம்பதாசன் எழுதிய “ஜாலி லைஃப்!ஜாலி லைஃப்! தாலி கட்டினால் ஜாலி லைஃப்!” சந்திர பாபு பாடிய பல பாடல்கள் அவர் வாழ்வின் அபத்தத்தைப் பார்த்து சிரித்தன்!

”கதாநாயகி”, ”அடுத்த வீட்டுப் பெண்” இரண்டுபடங்களிலும் இரண்டாவது ஹீரோ K.A.தங்கவேலு. இந்தப் படங்களில் A.கருணாநிதியும் நடித்திருந்தார்.

“புனர்ஜென்மம்” (1961) படத்தில் ராமச்சந்திரன் டியூசன் வாத்தியாராக தங்கவேலு மகள் ராகினிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வருவார்.
தங்கவேலு: என்ன படிச்சிருக்கீங்க
ராமச்சந்திரன்: ம்..ம்.. B.A.,
தங்கவேலு : (ஆச்சரியப்பட்டு) ஆ.. பி.ஏ யா?
ராமச்சந்திரன்: ம்..ம்.. பி.ஏ. படிக்கலாமுன்னு நினைச்சேன். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது அப்பா செத்துப்போயிட்டார்.
தங்கவேலு: ஓஹோ..போகும்போது புஸ்தகத்தையெல்லாம் எடுத்துட்டுப்போயிட்டாரா?

நாகேஷ் காமடியனாகவும் கதாநாயகனாகவும் கொடி கட்டிய காலம்.
“ நாம் மூவர்” என்ற படத்தில் மூவராக ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,நாகேஷ்.இந்தப் படத்தில் அந்த இரண்டு ஹீரோ நடிகர்களை விட நாகேஷுக்குத் தான் சம்பளம் அதிகம். அந்த வருடம் ஜெமினி கணேஷ் நடித்த “சின்னஞ்சிறு உலகம்“ படத்தில் நாகேஷின் ஜோடி K.R.விஜயா. அந்த 1966ல் கலக்கிய மற்ற படங்கள் அன்பே வா, அண்ணாவின் ஆசை, மேஜர் சந்திரகாந்த்,யாருக்காக அழுதான், மற்றும் சாது மிரண்டால்””மதராஸ் டு பாண்டிச்சேரி”.

”சாது மிரண்டால்” படத்தில் கதாநாயகன் T.R.ராமச்சந்திரன்.
இந்தப் படத்தில் பாலமுரளியின் அருமையான பாடல்” அருள்வாயே,நீ அருள்வாயே, திருவாய் மலர்ந்து அருள்வாயே” T.R.ராமச்சந்திரனுக்குத் தான்.

“அன்பே வா” படத்தில் நாகேஷ்-T.R.R காமெடி
 “ராமையா தின்னுகெட்ட பரம்பரைன்னு என் பரம்பரைக்கே பேருடா!’’
“சார்! உங்களுக்கும் எனக்கும் உள்ள இந்தத்தொடர்பு உங்கள் குடும்பத்துக்கு த் தெரிந்தால் நீங்கள் கண்டிக்கப்படுவீர்கள்!நான் தண்டிக்கப் படுவேன்! நம்முடைய அருமையான இந்த உணவுத்தொடர்பு துண்டிக்கப் படும்! இது தேவையா?”

..................


மகள் வீட்டுக்கு நிரந்தரமாக அமெரிக்காவுக்குசெல்லவேண்டியிருப்பதை ராமச்சந்திரன் தன் நண்பர் K.A.தங்கவேலுவிடம்சொல்லி விடை பெற்றபோது எப்படி இருவரும் முதுமையில் நெகிழ்ந்திருப்பார்கள்! அமெரிக்காவிலேயே 1990ல் T.R.ராமச்சந்திரன் மரணமடைந்தார்.


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_5112.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/ka.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_11.html
2 comments:

  1. //சந்திர பாபு பாடிய பல பாடல்கள் அவர் வாழ்வின் அபத்தத்தைப் பார்த்து சிரித்தன!// வரிசையாக நீங்கள் எழுதிய முத்து முத்தான வரிகளை படித்துக்கொண்டே வரும்போது திடீர் திடீர் என்று ஒரு வைரம் இடறுகிறது, இது போல. என்ன சொல்ல! நான் கொடுத்து வைத்தவன்!

    ReplyDelete
  2. //ஒய்.ஜி.மஹேந்திரனோடு ஸ்ரீ தேவி கதாநாயகியாக நடித்திருப்பாரா? ஜனகராஜோடு ஜெயப்ரதா ஜோடியாக நடித்ததுண்டா?//

    வெள்ளை மனசு என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானபோது அவருடன் ஹீரோவாக நடித்தவர் YG மகேந்திரா.

    ரம்யாவின் முதல் சுற்று முடிவில் கவுண்டமணியுடன் (ஹீரோ) ஜோடியாக நடித்தார்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.