ஜெமினி வாசன் இயக்கத்தில் 1948ல் வந்த படம் ’சந்திரலேகா’.பிரமாண்டம் என்பதை தமிழ் ரசிகர்கள் உணர்ந்தது இப்படத்தில் தான். M.K.ராதா கதாநாயகன்,ரஞ்சன் வில்லன், கதாநாயகி T.R.ராஜகுமாரி. பின்னால் இந்தப் படம் இந்தியில் டப்பிங் செய்யப் பட்டு வெளி வந்து சக்கை போடு போட்டது.
ஒரு காட்சியில் வில்லன் தன் அடியாளின் கையாலாகாத்தனத்தை கண்டித்து கடுமையுடன் “ இப்படி மீண்டும் நடந்தால்” என்று எச்சரித்து திரும்பிப் பார்ப்பான். அங்கே பூதாகரமாக ஒரு முரட்டு உருவம் சவுக்கை வைத்துக்கொண்டு வில்லனுக்கு நமஸ்காரம் செய்வான். இந்த இடத்தில் கொட்டகை அதிரும். வில்லன் காட்டும் சவுக்குடன் கூடிய முரட்டு உருவத்தைக் கண்ட அடியாள் நடுங்கி மண்டியிடுவான். எங்கிருந்தாலும் ஒரு வாரத்துக்குள் அவளைப் பிடித்து இழுத்து வரவேண்டும்” என்று எச்சரித்து விட்டு “போ” என்பான். வில்லனின் நாய் அப்போது டைமிங்குடன் “லொள்” என்று குரைக்கும். மீண்டும் கொட்டகை அதிரும்.
அசோகமித்திரன் தன் ’இருட்டிலிருந்து வெளிச்சம்’ நூலில் ‘ரொம்ப நாளாச்சு’ கட்டுரையில் மேற்கண்ட ’சந்திரலேகா’ காட்சி பற்றி எழுதியுள்ளார்.
பின்னால் இந்த மாதிரி வில்லனின் எச்சரிக்கை எத்தனை தமிழ்,இந்தி, தெலுங்கு டப்பிங் படங்களில் இடம் பெற்று இருக்கும்!
தெலுங்கு டப்பிங் பட வில்லன் தன் கெட்ட கூட்டத்தின் மெம்பர் ஒருவனைப் பார்த்து ‘ உடனே அந்த ஃபார்முலாவை கொண்டு வரவேண்டும்.கொண்டு வராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்று எச்சரித்து விட்டு அதே கெட்ட கூட்டத்தின் இன்னொரு மெம்பரை தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றே விடுவான். மீண்டும் தான் எச்சரித்த மெம்பரைப் பார்த்து சொல்வான் “ You can go." தியேட்டரில் கிண்டல் சிரிப்பு கேட்கும்.
சந்திரலேகாவில் வரும் அந்த காட்சியில் வரும் சவுக்குடன் கூடிய பூதாகரமான முரட்டு உருவம் பிப்லப் சௌதுரி பற்றி ஒரு சிறுகதை கூட அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்!’ பிப்லப் சௌதுரியின் கடன் மனு’
’ ஒரு முறை ஒருவனின் திறமையின்மைக்காக வில்லன் கடுமையாக அவனை வைது விட்டு “ இன்னொரு முறை இப்படி நடந்தால் இது தான்” என்று திரும்புவான். அங்கு அரக்கனைப் போன்ற பிரமாண்டமானதொரு உருவம் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும். அது தான் பிப்லப் சௌதுரி. அந்தத்திரைப் படத்தின் 170 நிமிடங்களில் அவன் அந்தப் பத்து கணங்கள் தான் தோன்றினான்.ஆனால் கொட்டகையே கலகலத்து விடும். எனக்கு அவனை எப்போது பார்த்தாலும் கையில் சவுக்குடன் வில்லனை வணங்கும் காட்சி தான் நினைவுக்கு வரும். அதன் பிறகு அவன் திரும்பத் திரும்ப எங்கள் முதலாளியின் மூடிய கதவுக்கு வெளியே காத்து நிற்பான்.’
ஜெமினி ஸ்டுடியோவின்இந்த எக்ஸ்ட்ரா நடிகர் அங்கு வேலை செய்யும் இந்த கதை சொல்லிக்கு ஒரு சிறு டைரி அன்போடு கொண்டு வந்து தருகிறான். “ நீ சவுக்கு தான் தருவேன்னு நினைச்சேன்.”
கதை சொல்லியிடம் கடன் மனு எழுதித்தரும்படி பிப்லப் கேட்கிறான். ’உனக்கா? ‘
‘ஆமாம்ப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு’
‘ஒரு ரோல் தரமாட்டேங்கறாங்கப்பா,ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு பூதம் வேஷம். உடம்பு மேலே கறுப்பு எண்ணெ பூசிக்கிட்டு நாளெல்லாம் நின்னேன். அந்த எண்ணெயைக் கழுவ நாலு நாளாச்சு. இதோ பாரு கையிலே, இன்னும் கூடச் சரியாப் போகலே.” அவனுடைய கை நகக்கண்கள் நிரந்தரமாகக் கறுப்பாகிக் கிடந்தன.
கதை சொல்லி -’எங்கள் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முன்னூறு பேரில் இருநூற்றைம்பது பேருக்கு மனுக்கள் எழுதித்தந்திருப்பேன்.கடனுக்காக.
நான் திரும்பத் திரும்ப பிப்லப் சௌதுரிக்கு மனுக்கள் எழுதித்தந்தேன்.பிறருடைய துக்கங்களையும் என்னுடையதாக்கி எழுத்தில் வடிக்கும் கனம் தாங்காமல் தான் போலும் ,நான் ஒரு நாள் அந்த ஜெமினி ஸ்டுடியோவை விட்டு ஓடியே விட்டேன்’
’பிப்லப் சௌதுரியின் வீட்டின் தரித்திரத்தைக் கண் கொண்டு சகிக்க முடியாது.அது ஏழ்மையில்லை. தரித்திரம்.’
‘நிஜம் எதுவாக இருந்தாலும் எழுத்து வடிவில் அதை முற்றிலும் தெரிவிக்க முடிவதில்லை.’
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_955.html
http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2416.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.