Share

Jul 17, 2012

மானசரோவர்,கடன்,போட்டியாளர்கள்



ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தவர் என்பதால் அசோகமித்திரனுடைய இளமைக் கால ஹைதராபாத் எந்த அளவுக்கு அவரை பாதித்துள்ளதோ அதே அளவில் சினிமா அனுபவங்களும் அவரை ஆக்ரமித்திருக்கிறது.

“ மானசரோவர்” நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் Role Models மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனும்,ஹிந்தி நடிகர் திலீப் குமாரும் என்பது சுவாரசியமான விஷயம்.
ஆயிரமாயிரமாண்டு இந்திய மரபுத்தொடர்ச்சியில் ‘தோழன்’ என்பதன் சாசுவதம்! ராமன் - அனுமன், கிருஷ்ணன் - அர்ச்சுனன்,துரியோதனன் - கர்ணன், பரமஹம்சர்-விவேகானந்தர் என்று எவ்வளவு varieties!தலைவன் -தொண்டன் நிலை தாண்டிய தோழமைக்கு ராமனும் அனுமனும். மாப்பிள்ளை மச்சான் உறவைப் புறந்தள்ளும் கிருஷ்ணன் - அர்ச்சுனன் நட்பு, அந்தஸ்தை துச்சமாக்கிய துரியோதனனின் சிநேகிதம், குரு சிஷ்ய பாவத்தை மீறிய பரமஹம்சர்-விவேகானந்தர் நட்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மணிக்கொடியில் ‘சொத்துக்குடையவன்’, ஹாஸ்ய பத்திரிக்காசிரியன் போன்ற பல கதைகளை எழுதியவர் A.K.ராமச்சந்திரன் என்ற கி.ரா. ஒவ்வொரு மணிக்கொடி இதழும் வெளி வருவதற்கு கி.ராமச்சந்திரனின் ஒரே மோதிரம் அடகு வைக்கப்படும்.பின்னாளில் இவர் ஜெமினிஸ்டுடியோ கதை இலாகாவில் வேலைக்கு சேர்ந்தார். ஔவையார் படத்தில்,வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பெயரை டைட்டிலில் பார்க்கலாம்.

க.நா.சு தன் ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலை இவருக்கும் சேர்த்து சமர்ப்பணம் செய்திருக்கிறார். அந்த நூலில் மணிக்கொடி கி.ரா. பற்றி க.நா.சு சொல்வது ‘ கி.ராமச்சந்திரனின் சொந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமானதல்ல. அந்தக் காலத்தில் ஒரு சாமியார் ஒருவர் இருந்தார்.ஒரு சாரார் அவரை கயவன், அயோக்கியன் என்றும், அவர் மகான், சித்தர் என்று மறுசாராரும் அபிப்பிராயம் கொண்டிருந்தனர். அந்த சாமியாரிடம் மணிக்கொடி கி.ராமச்சந்திரனுக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது’

கி.ராமச்சந்திரனே கூட கடைசியில் ஒரு சாமியாராகவே மாறிவிட்டார்!தி.ஜானகிராமன் ஒரு முறை அவரை சாமியாராக சந்திக்க நேர்ந்து, பின் க.நா.சுவிடம் உயர்வாக ‘கனிந்த சாமியாராகத்தான் ராமச்சந்திரன் தெரிந்தார்’ என கூறியிருக்கிறார். அதன் பின்னாலொரு தடவை க.நா.சு வீட்டிற்கு வந்து கி.ரா பூஜையெல்லாம் செய்தாராம்.
புதுமைப்பித்தன்,கு.ப.ரா.,மௌனி,ந.பிச்சமூர்த்தி,
சி.சு.செ, சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் மரணம் பற்றியெல்லாம் நமக்குத்தெரியும்.சிட்டி தன் 96 வயதில் 2005ல் மறைந்தார்.
ஆனால் மணிக்கொடி கி.ராமச்சந்திரன் மாயமாய் மறைந்து விட்டார்.என்ன ஆனார்,அவருடையா மரணம் எப்படி,எப்போது சம்பவித்தது என்று யாருக்குமே தெரியாது.

யூசுப்கான் பாகிஸ்தானிலிருந்து வந்தவன்.ஹிந்தி திரையுலகில் இன்றும் கூட Living Legend திலீப்குமார் என்றுபிரபலமான யூசுப்கான் பாகிஸ்தானியா?இந்தியனா? சில வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் அரசு திலீப் குமாருக்கு பெரிய விருது வழங்கி கௌரவித்தது.இங்கே சிவசேனாவின் கண்டனம்.திலீப் குமாருக்கும் Identity Crisis உண்டு. 22 வயது சாய்ரா பானுவைத் திருமணம் செய்து கொண்ட போது திலீப்குமாருக்கு 44 வயது. சிவாஜி கணேசனிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் ‘ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ.ஹிந்தியில் யூசுப் பாய்’ என்று தான்  பதில் வரும்.

கி.ராமச்சந்திரன் மிகவும் துன்பத்துக்குட்பட்டவர்.புதுமைப்பித்தன்,கு,ப.ரா,
சி.சு.செல்லப்பா,தி.ஜா ஆகியோர் வாழ்க்கையிலும் சிக்கல்கள் இருந்தன. நாம் அறிவது, அறியக்கூடியது மிக மிகக் குறைவு. நடந்ததைப் பற்றி க.நா.சு கூறுவது போல என்றென்றுமாக கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தான் அசோகமித்திரன் சொலலகூடியவர். ஹிந்தி நடிகர் திலீப் குமாரிடமும் நல்ல குணங்கள் இருந்திருக்கத்தான் வேண்டும் என்றாலும், மணிக்கொடி கி.ராமச்சந்திரனுடன் நீடித்த உறவுக்கான மனம் இருந்திருக்குமா? சினிமாத்துறையில் ‘கண்டால் காமாட்சி நாயக்கர்  காணாட்டி வடுவப்பயல்’ ரீதியான விட்டேத்தியான உறவு தான் சகஜம்.

நாவல்,சிறுகதை போன்ற படைப்புகளில் கற்பனையை ஒருமுகப்படுத்துவதற்காகவேண்டி முன்மாதிரிகள் படைப்பாளிகளுக்கு அவசியம். உதாரணமாக அசோகமித்திரனின் ‘விரல்’ கதையில் வருவது எழுத்தாளர் ஜி.நாகராஜன். ஆனால் கதையில் உள்ள படி அசோகமித்திரனுக்கு அவர் பள்ளி நண்பன் அல்ல.
’மானசரோவர்’ நாவலில்1964ல் நேரு மரணமடைகிறதைப் பற்றிய பதிவு உண்டு.ஆனால் திலீப்குமார் ஜெமினி படங்களில் நடித்த ஆண்டுகள் 1955,அதன் பின்னர் 1959.பாத்திரங்களின் விரிவில் எது நிஜம், எது கற்பனை என்று வாசகன் பிரித்துப் பார்ப்பது சிரமம்.

’கரைந்த நிழல்கள்’ நாவலில் சிவாஜிகணேசன் பற்றி,இயக்குனர் பீம்சிங் பற்றி கடுமையான விமர்சனம் இருப்பதைக் காண முடிகிறது.

அசோகமித்திரனின் ‘கடன்’ சிறுகதையில் வரும் நடிகர் ஸ்ரீராம் அப்போது ஜெமினி ஸ்டுடியோவின் நம்பிக்கை நட்சத்திரம். ஜெமினி கணேசனுக்கு அந்தக் காலகட்டத்தில்ஸ்ரீராம் தான் Rival! 1953 ல்’மூன்று பிள்ளைகள்’ படத்தில் பெயர் வாங்கும்படி நடித்தவர்..முதலாளி வாசனையே எதிர்த்துப் பேசி எதிர்காலத்தைப் பாழாக்கிக்கொண்ட துரதிர்ஸ்டசாலி. ராமண்ணாவின் முதல் படம்’ வாழப்பிறந்தவன்’(1953) படத்தில்கதாநாயகனாக நடித்தவர்.1954ல் ‘மலைக்கள்ளன்’ படத்தில் வில்லனாக எம்.ஜி.ராமச்சந்திரனுடன் சண்டை போட்டவர் ஸ்ரீராம்.1960களில் ‘ பாலும் பழமும்’, ‘பச்சை விளக்கு’,’பழனி’,’இதயக்கமலம்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத்தான் இந்த நம்பிக்கை நட்சத்திரம் தொலைந்து போனது.
‘கடன்’ சிறுகதை நடிகர் ஸ்ரீராமின் பொருளாதாரச்சிக்கலை சுற்றிச்சுழன்று நெஞ்சைப் பிழியும் உருக்கமான சித்திரமாக விரிந்திருக்கிறது.

‘போட்டியாளர்கள்’ சிறுகதை ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகிகளாக நடித்த வைஜயந்தி மாலா,( அழகான இளவரசி) பத்மினி ( அழகான பிரஜை) இருவரை வைத்து எழுதப்பட்டது. பத்மினி வீட்டில் படத்திற்கான டான்ஸ் ரிகர்சல்.ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் கூட இந்தக் கதையில் வருகிறார். டான்ஸ் ரிகர்சலின் போது Sound Assistant  ஆக வரும் இளைஞனின் விரசமான நடவடிக்கை அதிர்ச்சியேற்படுத்துகிறது.ஒரு நடிகை என்றில்லை.எந்தப்பெண்ணுமே ஒருவன் பார்க்கின்ற பார்வையின் நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.அந்நியனின் பார்வையில் விரசமும் வேட்கையும் பெண்ணை அவமானப்படுத்துகிற விஷயம்.’போட்டியாளர்கள் ‘ கதையில் அந்த சௌண்ட் அசிஸ்டண்ட் பலர் முன்னிலையில் நடிகையின் குடும்பத்தார் கூட இருக்கின்ற நிலையில் Masturbation என்கிற அளவிற்கு மிகவும் ரசாபாசமாக நடந்துகொள்கிறார்.ஒரு திரைப்பட நடிகை இளமையழகை மூலதனமாக்கி தன்னுடைய ‘நிழல்பிம்பம்’பலரையும் தவிதவிக்கச் செய்வதில் தான் தொழில் வெற்றி அடங்கியுள்ளது என்பதை நன்கறிந்தவள் தான் என்றாலும் கூட, பகிரங்கமாக தன் நிஜ உடல் விரச வேட்கை,பார்வை நடவடிக்கைகளால் காயப்படும்போது இவளுடைய பெண்மைக்கு ஏற்படும் மன உளைச்சல்,வேதனையின் நுட்பமான துயர பரிமாணம் பரிபூர்ணமாக பதிவாகியுள்ள கதை தான் ‘போட்டியாளர்கள்’.

மானசரோவர்,விரல், கடன்,போட்டியாளர்கள் கதையின் பாத்திரங்கள் திலீப்குமார்,மணிக்கொடி கி.ராமச்சந்திரன்,ஜி.நாகராஜன்,ஸ்ரீராம்,வைஜயந்திமாலா,பத்மினி  என கண்டுபிடித்து நான் அசோகமித்திரனிடம் சொன்னபோது அவருக்கே உரித்த பாணியில் அசந்து ஆச்சரியப்பட்டு ‘அடடே!அடடே!எப்படி!எப்படி ராஜநாயஹம்! கண்டுபிடித்துவிட்டீர்களே! அடடே! ’என்றார்.

‘பாத்திரத்தின் முன் மாதிரியை அடையாளம் கண்டு கொள்வது ஒரு தனித்தேர்ச்சியின் பேரில் வருவது’ என்று அசோகமித்திரன் ஜூலை 2004 காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார்.

2 comments:

  1. What a depth of memory and relating skill! Unbelievable!

    ReplyDelete
  2. //முதலாளி வாசனையே எதிர்த்துப் பேசி எதிர்காலத்தைப் பாழாக்கிக்கொண்ட துரதிர்ஸ்டசாலி//
    பாவம்.. Dog's rule தெரியாதவர்...... Never bite the owner!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.