Share

Jul 3, 2012

ஜெய்சங்கர்பாக்கியம் ராமசாமியின் அப்புசாமித்தாத்தா-சீதாப்பாட்டி கதையொன்றில் அப்புசாமி ஒரு முக்கிய மனிதரைக் கவர்வதற்காக சில துறுதுறுப்பான உற்சாகமான வாலிப சேட்டைகள் செய்வார். பல்டியடிப்பார்.விசிலடிப்பார். தாவிக்குதிப்பார்.. அப்புசாமியைப் பார்த்து வியந்து போய் அந்த மனிதர் கேட்பார். “ நீர் உண்மையிலேயே கிழவர் தானா? அல்லது
கிழவர் வேடம் போட்டு வந்த ஜெய் சங்கரா? “

 டப்பா படத்தில் நடித்தாலும் ஏதோ வெள்ளிவிழா படத்தில் நடிப்பது போல மிகுந்த உற்சாகமாக பெருமிதத்துடன் நடிப்பார்.

ஜெய்சங்கர் சிரிப்பு- முகத்தில் மின்சாரம் பாய்ச்சியது போல சிரிப்பார்.அவரோடு பழகிய யாரும் அந்த சிரிப்பை நிமிடத்திற்கு ஒரு முறை பார்க்கவேண்டியிரு்ந்திருக்கும்.

குழந்தையும் தெய்வமும், பட்டணத்தில் பூதம்,நூற்றுக்கு நூறு,வீட்டுக்கு வீடு என்று ஒரு நாலே நாலு படம் தான் தேறும். அதிலும் நாகேஷ் பங்கு தான் அதிகம். வீட்டுக்கு வீடு படத்தில் தன்னுடைய தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் இமேஜை உடைத்து ஒரு பொண்டுகச்செட்டியாக பிரமாதமாக நடித்திருப்பார்!


வருசத்துக்கு பன்னிரண்டு படம் வீதம் பன்னி குட்டிப் போட்டது போல ஜெய்சங்கர் வத,வதன்னு கதாநாயகனாக மட்டுமே குறுகிய ஒரு காலகட்டத்திற்குள் ஒரு இருநூறு படமாவது நடித்திருப்பார்.
வேறு பொழுதுபோக்கே அறியாத அந்தக்கால தமிழ் சினிமாப்பைத்தியங்களுக்கு ஜெய்சங்கர் படங்கள் பார்த்த போது தான் சினிமாப் படம் கூட போர் அடிக்கும் என்ற விஷயமே தெரிய வந்தது. கடுங்காவல் தண்டனைக் கைதிகளுக்கு ’ராஜாவீட்டுப்பிள்ளை’ அன்புவழி’’புத்திசாலிகள்’ ‘அத்தைமகள்’’கெட்டிக்காரன்’ ‘மாப்பிள்ளை அழைப்பு’ போன்ற படங்களைப் போட்டுக் காட்டலாம்.(சித்திரவதை செய்வதாக மனித உரிமைக் கழகம் தலையிடும் வாய்ப்பு உண்டு.)இத்தனைக்கும் ‘புத்திசாலிகள்’ ஸ்பென்ஸர் ட்ரேசி நடித்த It's a mad,mad,mad,mad world படத்தின் காப்பி.

 தமிழ்வாணன் கல்கண்டு பத்திரிக்கையில் அப்போது தமிழ் படங்களை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்தார். அவர் திடீரென்று ஜெய்சங்கரை கதாநாயகனாக்கி ஒரு படம் எடுத்தார். தமிழ் திரை காணாத புதுமையான படம் என்று சவடாலாக விளம்பரமும் பெரிய அளவில் செய்தார். ‘காதலிக்க வாங்க’ என்ற அந்தப் படம் 1972ல் வெளியானது. சட்டை மட்டும் போட்ட (பேண்ட் இல்லாமல்)ஜெய்சங்கர் அரை நிர்வானமாக ஒரு போஸ்டர் தமிழகமெங்கும் அப்போது ஒட்டப்பட்டது. படம் ஜெய்சங்கரின் மட்டமான போர் பட வரிசையில் சேர்ந்தது.

போர் அடிக்காத சில படங்கள் பஞ்சவர்ணக்கிளி, வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள்,பெண்ணே நீ வாழ்க, நான் யார் தெரியுமா,பூவா தலையா,மன சாட்சி,நிலவே நீ சாட்சி,மாணவன்,வீட்டுக்கு ஒரு பிள்ளை,அக்கரைப் பச்சை,கல்யாணமாம் கல்யாணம் ஆகியவை.

பெண் தெய்வம்,கண்ணன் வருவான்,நிலவே நீ சாட்சி,சூதாட்டம், மாணவன் போன்ற சில ஜெய் படங்களில் முத்துராமன் இனணந்து நடித்தார். ’முத்துராமன் தான்யா நல்லா நடிச்சிருக்கான்’ என்று தரை டிக்கட் ரசிகர்கள் படம் முடிஞ்சி தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே சொல்வார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸ் 1966ல் திரையிட்ட ‘இருவல்லவர்கள்’ (தம்பியாக ஜெய்சங்கர், அண்ணனாக ஆர்.எஸ். மனோகர் ) இந்தியில் ரந்திர் கபூர்,வினோத் கன்னா நடித்து ’ஹாத் கி சஃபாய்’ ஆக படமாக்கப்பட்டு மீண்டும் தமிழில் 1981ல்  கமல்,  ஜெய்சங்கர் நடித்து ‘சவால்’ என்ற பெயரில் பாலாஜி தயாரிப்பில் வெளியானது.

இங்கே ‘விளக்கேற்றிவள் ஆதித்யன்‘ பற்றிய பதிவில் ஒரு பிரபல பதிவர் “ தமிழ் சினிமாவுலகில் ஜெய்சங்கர் இடத்தை நிரப்ப இன்று யாரும் இல்லை” என்று கமெண்ட் போட்டார். அந்த கமெண்டை  publish செய்யாமல் உடன் delete செய்தேன்.( பல்வேறு பதிவுகளில் பலருடைய  அபத்தக் கமெண்ட்களை delete செய்திருக்கிறேன்.)
ஜெய்சங்கர் இடத்தை நிரப்ப இன்று யாரும் வந்துவிட்டால் தமிழ் சினிமா அதல பாதாளத்தில் விழுந்து நாசமாய் போகவேண்டியது தான்.

சி.ஐ.டி சகுந்தலா, கெட்டிக்காரன் லீலா,ராஜ்கோகிலா போன்ற க்ரூப் டான்ஸ், எக்ஸ்ட்ரா நடிகைகள் ஜெய்சங்கர் படங்களால் கதாநாயகியாக முடிந்தது.
எவ்வளவோ டெக்னிசியன்களுக்கு ப்ரொமோசன் கொடுத்தவர்,தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் என்று திரையுலகில் பலரும் நன்றியோடு குறிப்பிடுவார்கள். ப்ரொமோசன் பெற்றவர்களெல்லாம் பல ‘ஜெய்சங்கர் குப்பைப் படங்கள்’ தான் எடுத்தார்கள்.கே. பாலச்சந்தர் நூறுபடங்கள் இயக்கினாரே. தான் இயக்கிய படங்களில்  அவருக்கே பிடிக்காத படமாக  சலிப்போடு குறிப்பிட்டது ஜெய்சங்கர்- ரவிச்சந்திரன் நடித்த ”நான்கு சுவர்கள்” தான்!( ‘நூற்றுக்கு நூறு’ பாலச்சந்தர் படம்.)


பழைய தமிழ் படங்களில் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்பதால் ஜெய்சங்கர் படப் பாடல்கள் விஷேச அந்தஸ்து பெற்றன. முக்கியமான ஒரு அம்சம்- T.M.சௌந்தர ராஜன் பாடல்கள் இவருக்கு சிவாஜி,எம்.ஜி.ஆருக்கு போலவே நன்கு பொருந்தியது. TMS பாடல்கள் கேட்டவுடன் இது எம்.ஜி.ஆர் பாட்டு, இது சிவாஜி பாட்டு என்பது போல ஜெய்சங்கர் பாடல்களும் கண்டுபிடிக்க முடியும். குரல் கூட ஜெய்சங்கர் போலவே இருக்கும்.உதாரணம்: “காதல் பறவை” படத்தில் ’பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பாப்பா.’
இந்தி பாடல்களை அப்படியே காப்பியடித்து மாடர்ன் தியேட்டர்ஸுக்கு வேதா இசையமைத்த பாடல்கள் கூட இன்றும் எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன.
”நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்.என் மகராணி உனக்காக ஓடோடி வந்தேன்” பிஸ்வஜித்-சாய்ரா பானு படத்தில் வரும் ஒரு சோகப்பாடல்!
பாட்டு என்றதும் ஜெய்சங்கரின் funny dance பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது. இருகால்களையும் மாற்றி மாற்றி்த் தூக்கி குதிப்பது தான் ஜெய்சங்கர் டான்ஸ்.’பிருந்தாவனத்தில் பூவெடுத்துஇளம்பெண்ணே உனக்கு சூடட்டுமா’‘நாணத்தாலே கால்கள் பின்ன,பின்ன’ பூவாத்தலையா போட்டாத்தெரியும்.நீயா நானா பார்த்து விடு’ ‘ காலம் பொன்னானது,கடமை கண்ணானது’என்று ஆரம்பித்து அவர் ரஜினி படத்தில் ஆடிய ‘ மாத்தாடு மாத்தாடு மல்லிகை’ வரை குதித்துக்கொண்டே தான் இருந்தார்.

கேமராமேன் கர்ணன் இயக்கிய கங்கா, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்கள் ஜெய் சங்கருக்கு ‘கரடி’ பட்டத்தை உறுதி செய்தன. மயக்க ஊசி போடப்பட்ட சிங்கத்தை தூக்கத்திலிருந்து எழுப்பி சண்டை போட்டு சித்திரவதை செய்வார். “ என்னை தூங்க விடேன்டா” என்று சிங்கம் கெஞ்சும். 1970களில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களை கொஞ்சம் தள்ளி நின்று ரசித்தால், சிரித்து வயிறு புண்ணாகி விடும். அவர் ரொம்ப சீரியஸாகத்தான் நடிப்பார். ஆனால் நமக்கு சரியான காமெடியனாகத்தான் அந்தப்படங்களில் தெரிவார். அது போலத்தான் பல,பல ஜெய்சங்கர் படங்களும்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பின் கருணாநிதியிடம் ஜெய்சங்கர் சிக்கிக்கொண்டு  வண்டிக்காரன் மகன் துவங்கி பல படங்கள் செய்திருக்கிறார். கருணாநிதி வசனம் எழுதிய ஜெய்சங்கர் படங்கள் எதுவும் கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பவையல்ல.

‘ இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி,இரண்டு துப்பாக்கி ஆனால் குண்டு வெடிக்கவில்லை. இது என்ன புரட்சி’ என்று சட்டசபையில் புதிதாய் கட்சி ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்கப் பட்டது, மற்றும் செருப்புவீச்சு போன்ற விஷயங்களால் அன்று எம்.ஜி.ஆர் “ சட்ட சபை செத்துவிட்டது” என்று விரக்தியுடன் வெளியேறினார்.
எம்.ஜி.ஆரின் கதாநாயகி ஒருவர் ஜெய்சங்கரைக் காதலித்தார். மற்றொரு நடிகை எல்.விஜயலட்சுமியைக் கூட ஜெய்சங்கர் கல்யாணம் செய்ய இருக்கிறார் என்ற பரபரப்பு இருந்ததுண்டு.


வில்லனாக ரஜினியின் “ முரட்டுக்காளை” படத்தில் நடித்த பிறகு மீண்டும் ஒரு செம ரவுண்டு வந்தார்.

ரொம்ப பரோபகாரி. பல சிரமப்பட்ட திரையுலகத்தவர்க்கு பொருளுதவி செய்தவர் என அறியப்பட்டவர் ஜெய்சங்கர்.

நடிகர் குள்ள மணி அந்தக்காலத்தில் ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்தபோது ஜெய்சங்கரின் தாயாரும், மனைவியும் மிக மோசமாக சித்திரவதைகள் செய்து கொடுமைப் படுத்தியதாக பத்திரிக்கைப் பேட்டியொன்றில் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். சமீபத்தில் திருப்பூரில் ஒரு கல்யாண வீட்டில் குள்ளமணி அதை என்னிடம் ஊர்ஜிதப்படுத்தினார்.


அப்பல்லோவில் கடைசிக் காலத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்த போது நர்ஸிடம் “ Halls" மிட்டாய் கேட்டு அடிக்கடி கெஞ்சிய ஜெய்சங்கர் குணமாகுமுன்னே சொல்லாமல் கொள்ளாமல் ennui தாங்க முடியாமல் ஹாஸ்பிடலில் இருக்க முடியாமல் வெளியேறி வீட்டுக்கு ஓடி வந்து, பின் மரணத்தை தழுவினார்.


http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post.html


1 comment:

Note: Only a member of this blog may post a comment.