Share

Jul 15, 2012

நட்சத்திரம், சிறகின் இறகு, சீதை

மீள் பதிவு

31-08-2009 ல் எழுதப்பட்ட பதிவு

நட்சத்திரம், சிறகின் இறகு, சீதை
வானில் இரவில் நட்சத்திரங்கள். இருட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றாய் தெரிய ஆரம்பிக்கின்றன .
லா .ச .ரா உரைநடையே கவிதை தான் .வாசனாதி திரவியங்களை எழுத்தில் கொண்டுவந்தவர் . " புத்ர" நாவலில் :
" சூரிய சாக்ஷி ஓய்ந்த பின் , இரவில் பூமி சகிக்கும் க்ரம அக்ரமங்களைக் கவனிக்க வான் அனந்தம் கண்கள் ஒவ்வொன்றாய்த் திறக்கின்றன ."
பாரதி தாசனின் பிரபலமான புல்லரிக்க வைக்கும் கவிதை கீழே :
" மண் மீது உழைப்பார் எல்லாம் வறியராம் .
உரிமை கேட்டால் புண் மீது அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம் .
இதைத் தன் கண் மீது பகலில் எல்லாம் கண்டு கண்டு
அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி !"
சிறுகதையின் திருமூலர் 'மௌனி' தன்னுடைய பிரத்யேக பாணியில் நட்சத்திரங்கள் பற்றி கொள்ளும் அபிப்பராயம் :"யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும்,விலைகொள்ளா வைரங்களை கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவன் காரியத்தை நினைத்து மினுக்கி நகைக்கின்றன."
தி ஜானகிராமன் தன் 'மலர்மஞ்சம் ' நாவலில் பார்க்கும் நட்சத்திரங்கள் :
இந்த ஆழ்ந்த மௌனம் தான்
அதன் திவ்யமான குரல்
வாரித்தெளித்துக்கிடக்கும் இந்த ஒளிகள் தான்
அதன் இளநகை.

'வழி ' சிறுகதையில் புதுமைப்பித்தன் :வானம் அந்தியந்தமும் கவ்விய இருட்டு . உயர்ந்த இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது போல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்.




.....................................



பிரமிளின் மிக பிரபலமான கவிதை :
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதி செல்கிறது .
லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :
பறக்கும் கொக்கின் சிறகடியினின்று
புல்தரை மேல் உதிர்ந்து
பளீரிடும் வெள்ளை இறகு .
......

Sita! The silent pillar of strength!

சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும் , மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம் .
லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு .
நெருப்பின் புனிதம் சீதைக்கா ?
சீதையின் புனிதம் நெருப்புக்கா ?"
....
சீதை பற்றி நான் படிக்க நேர்ந்த இன்னொரு விஷயம் . யார் சொன்னது என்று நினைவில்லை . அந்த வார்த்தைகள் மட்டும் மறக்கவே முடியவில்லை .
" சேறு தெளித்த தாமரை போல
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
சோகமாகவும் இருந்தாள்."
இப்படி ஒரு பெண்ணை சிலவருடங்களாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அருணாம்பிகை!The Silent Pillar of Strength ! ஸ்ருதி, மதுமஞ்சரி ஆகிய இரண்டு கன்னி தெய்வங்களின் தாய் அருணாம்பிகை!


அதனாலும் இந்த வரிகள் மறக்கமுடியவில்லை . யார் சொன்னது ??..
........................................................


மீள் பதிவு  03-09-2009

கண்டேன் சீதையை!


பல மாதங்களாய் நான் மூளையை கசக்கி விடை தெரியாமல்
இரண்டு நாளாய் பரண் மேல் தேடி ஒரு வழியாய்..... கண்டேன் சீதையை .
" சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள் ."

தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி ' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா!
..

சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று . திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.
" சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி
திரிசடை கனவு கண்டாளாம் ''

1 comment:

  1. Kamban said about Seetha in Kambaramayanam

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.