Share

Aug 3, 2012

கூறாமல் சந்நியாசம் கொள்


மீள் பதிவு -  28-03-2009

'சித்தி ' என்று ஒரு கதை. சின்னம்மா என நினைத்து விடக்கூடாது. ஆத்மசித்தி! புதுமைப்பித்தன் எழுதியது. சந்நியாசம் பற்றிய கதை தான். சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிப்பது பற்றி.இந்த கதையில் செண்பகராமன் என்பவர் காலத்துக்கு முந்திய துறவறம் பூண்ட அரைகுறை சந்நியாசி!
...

எனக்கு தெரிந்த  பெரியவர் ஒருவர் தீப்பெட்டி ஆபிஸ் அதிபர்.ரொம்ப கீழே ஏழையாய் இருந்து பின் பெரிய பணக்காரர் ஆனவர். வயது அப்போது பதினைந்து வருடம் முன் எண்பத்திஒன்று.
ரொம்ப ஆன்மீக தேடல். நிறைய சுவாமியார்களை தேடியவர். ஒரு சாமியாரிடம் கடைசியில் ஐக்கியமாகி அவரே தெய்வம் என பூஜித்துக்கொண்டிருந்தார்.
சம்சார,வியாபார வாழ்வு வாழ்ந்தார். எப்போதும் என்னிடம் ' விரைவில் நான் சந்நியாசம் வாங்க வேண்டும். இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி.முடித்தவுடன் கிளம்பி விடுவேன். நீங்க சொல்லுங்க . .. நான் எப்ப சந்நியாசி ஆவேன் ' என பார்க்கும் போது எல்லாம் ' நான் சந்நியாசி ஆகணும் ' என்ற திரும்ப திரும்ப சொல்வார்.

அப்போது அவர் மனைவி இறந்து விட்டார் ! இவர் வடநாடு போயிருந்தார். அவசரமாக திரும்பினார். அவர் வந்தவுடன் காட்டுக்கு பிணம் கிளம்பியது.

அறுபது வருடம் அந்த அம்மாவோடு வாழ்ந்தவர். சுடுகாட்டில் பிணத்தை எரிப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் இவர் காட்டில் தன் தீப்பெட்டி ஆபிஸ் கணக்குபிள்ளையை கூப்பிட்டு " சேட்டு சரக்குக்கு பணம் எவ்வளவு அனுப்பினான் " என்றார்.

 ' ஏப்பா மெழுகு வந்திடிச்சா " என்றார்.

பேரனை கூப்பிட்டார் " சேட்டு லேபிளை மாத்த சொன்னான். நான் முடியாதுன்னுட்டேன். "

 " தீப்பட்டி ஆபிஸ் வேன் நான்கும் ஆர் டி ஒ ஆப்பிஸ் எப்ப ரெனியூவல் " “மெக்கானிக் ரிப்பேர் வேலை பார்த்தாச்சா .'‘

" ஏப்பா!கொத்தனார் காசி என்ன ரொம்ப காசு கேட்கிறான்"

 "ஆமா காட்டிலே மிளகா போட்டிருந்ததே. என்னாச்சி ?"

மனைவி பிணம் எரியூட்டப்படும் போது கூட பல வியாபார,விவசாய விஷயங்களை அலசி கொண்டிருந்தார்.
.....


சில நாள் கழித்து பஜாரில் ஒரு கடையில் என்னை பார்த்தார்." சொல்லுங்க ! நான் எப்ப சந்நியாசம் வாங்கணும். இன்னும் தொழில் ,வீட்டு விஷயம் சில முடித்துவிட்டால் நான் கிளம்பிடுவேன்." என்றார்.

இவருக்கு நான் ஒரு கதை சொன்னேன்.

" சிரகாரி ,சிரகாரி ன்னு ஒருத்தன். அவன் பெண்டாட்டி அவனை கோபம் வரும் போது அடி வெளுத்து விடுவாள். புருஷன் பொஞ்சாதி சண்டையில் புருஷனை உரித்து விடுவாள்.
இவன் வீட்டில் அடி வாங்கி வெளியே வந்து விழுந்து (தலையில் முடியில் நான்கைந்து ஈர்க்குச்சி) எழுந்து பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து " யோவ்! உம்மகிட்ட சந்நியாசம் எப்படி வாங்குறது ன்னு நூறு தடவை கேட்டுட்டேன். என்னை இந்த சண்டாளி கொலை செய்யுறதுக்கு முன்ன சொல்லி தொலையும்.இல்லேன்னா கொலை பழி உம்மேலே தான். என் பாவம் உம்மை சும்மா விடாது. "
பக்கத்து வீட்டுக்காரன் பதிலே சொல்லாமல் " வீட்டுக்குள்ள போ " என சமாதானமாக சொல்வான்.
அடிக்கடி இப்படி அவன் அடி வாங்கும்போதெல்லாம் " யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லு .இந்த மூதேவி கிட்ட இருந்து தப்பிக்கணும் ." என்று பக்கத்து வீட்டுக்காரனிடம் புலம்புவான்.
ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து விளக்குமாறு அடி வாங்கி வெளியே வந்து விழுந்தவுடன் ' யோவ் சந்நியாசம் எப்படி வாங்குறது சொல்லுய்யா " என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.
பக்கத்து வீட்டுக்காரன் சட்டென்று எழுந்தான். தான் கட்டியிருந்த நாலு முழ வேட்டியைவிருட்டென்று கிழித்து கோமணமாக தனக்கே கோமணமாக கட்டிக்கொண்டான். " இப்படி தாண்டா! " என சொல்லி விட்டு திரும்பியே பார்க்காமல் அவன் விறு விறு என நடந்து விட்டான். பக்கத்து வீட்டுக்காரன் சந்நியாசி ஆகி கிளம்பி போயே விட்டான்!!
இந்த சிரகாரி அடுத்த தடவை பொண்டாட்டி கிட்ட அடி வாங்கியவுடன் வெளியே தெருவுக்கு ஓடி வந்து எதிர்த்த வீட்டுக்காரனிடம் கேட்க ஆரம்பித்து விட்டான் " யோவ் சந்நியாசம் போறது எப்படி சொல்லுயா "
எப்படி கதை....

இந்த கதையை சொன்னவுடன் அங்கிருந்தவர்கள் எல்லாம் தீப்பெட்டி தொழில் அதிபரை பார்த்து சிரித்து விட்டார்கள்! அவரும் சிரித்து விட்டார்.
நான் சொன்னேன் " நீங்க சந்நியாசி ஆகவே மாட்டிங்க! நிறைய பேரை இன்னும் நீங்கள் சாமியாரா ஆக்க வேண்டியிருக்கு!"


சம்சாரியாகவே,வியாபாரியாகவே தான் சில வருடங்களுக்கு பின் அவர் இறந்தார்!


http://rprajanayahem.blogspot.in/2009/03/blog-post_14.html


http://rprajanayahem.blogspot.in/2009/01/blog-post_4796.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_13.html

3 comments:

 1. படித்ததில்லை ஐயா...
  நல்ல கதை... ஹா... ஹா... நன்றி...

  ReplyDelete
 2. Thank you sir! I cannot express in words the joy I feel when I read your posts. Missed your writings for more than a year. Such a talent! It is a pity that only a few in the large Tamil population can really appreciate your wealth of knowledge and savour the gems you offer in your blog.

  Arun, Kovai.

  ReplyDelete
 3. நல்ல மேற்கோள்.இந்த கதையை ஒரு சிறுகதையில் தி.ஜா.வும் பயன்படுத்தியிருப்பார். தீப்பெட்டி அதிபர் சாவு வீட்டில் வியாபாரத்தைப் பற்றிபேசியதில் ஆச்சர்யம் இல்லை.மனைவி போய்விட்டாள்.வியாபாரமும் போய்விட்டால் சந்நியாசம்தானே.அதனால் வியாபாரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள மனம் உடனே அதீதமாக வேலை செய்யும்.

  மனதின் இந்த கூத்தைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி அதிகம் படித்தபோது தெரிந்தது.நன்றி பதிவுக்கு.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.