Share

Aug 6, 2012

கோணங்கி என்ற பொன்வண்டு

மீள் பதிவு 28-07- 2008


புதுவைக்கு ஒரு புத்தக சந்தைக்கு வந்திருந்த கோணங்கி யை புதுவையிலேயே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை அப்போது ரவிக்குமார் ( இப்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்-காட்டு மன்னார் கோவில் ) எடுக்க விழைந்தார்.

என்னிடம் கேட்டார். 'உங்களால் கோணங்கிக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா?'

எங்கள் தொழிற்சாலை நிறுவனப்பணியில் கட்டட வேலை sedarapattu industrial estate ல் நடந்து முடிந்திருந்தது.மின் வேலைகள் முடிந்து யந்திரங்கள் நிறுவப்படும் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது 25 லக்ஷம் செலவில் உருவான நிறுவனம் . நான் சரியென்றேன். நல்லது தான். அந்த காலத்தில் 600 ரூபாய் சம்பளம் தர ஒப்புக்கொண்டு factory க்கு அழைத்துக்கொண்டு போய் காட்டினேன் . அப்போதே இரண்டு பேர் என்னிடம் application கொடுக்க நிற்பதை கோணங்கி பார்த்தான். ( கோணங்கியை ஏகாரத்தில் குறிப்பிடுவது தான் இயல்பாக இருக்கும். கோணங்கியைபற்றி அவர்,இவர் என்று குறிப்பிடுவது தான் ரொம்ப செயற்கையான விஷயம் ) 'சரி இங்கு வந்து விடுகிறேன்.இப்ப நான் மைலம் போய் அங்க அஷ்வகோஷ் - அவரை பார்த்துட்டு அப்படியே கோவில்பட்டி.பெட்டி படுக்கையோட வந்திடறேன் .'

லாஸ்பேட்டை கி. ரா வாசஸ்தலம் போயிருந்தேன். கோணங்கி வரப்போகும் விஷயத்தை கி.ராவிடம் சொன்னேன். புன்னகைத்தார்.

நானிருந்த பிருந்தாவன் காலனிக்கு அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது மறு நாளே. இப்படி எழுதியிருந்தார் 'கோணங்கி என்ற பொன்வண்டு நீங்க போடுற கருவ இலையை தின்று கொண்டு உங்க தீப்பெட்டியில் அடங்கி முட்டையிடுமா?'

சில நாளில் கோணங்கியிடமிருந்து ஒரு கடிதம் . ' நீ எனக்கு கொடுக்கிற வேலையை எனக்கு பதிலா நம்ம அண்ணாச்சி இலக்கிய வெளிவட்டம் நடராஜனுக்கு கொடு' -- -இப்ப்படி! '

'சரி அண்ணாச்சியை உடனே வர சொல் ' -பதில் எழுதினேன்.
நடராஜன் அண்ணாச்சி = ஜனகப்ரியா.

தொடர்ந்து லாஸ் பேட்டையிலிருந்து ராஜ் கௌதமன் ஒரு கடிதம் எனக்கு எழுதியிருந்தார். ' இலக்கிய வெளி வட்டம் நடராஜன் இங்கு வரமாட்டார். அவர் சொந்த கிராமத்திலிருந்து வேறு ஊர்களுக்கு பிழைப்புக்காக போகக்கூடியவர் அல்ல். தன் ஊரிலேயே சவால்களை சமாளிப்பவர். இது கோணங்கி யின் வழக்கமான கோணங்கித்தனங்களில் ஒன்று.'

கி.ரா எழுதியதும் ராஜ் கௌதமன் எழுதியதும் தான் சரியாகிப்போனது.

ரவிகுமாரிடம் அப்புறம் நான் சொன்னேன் "கோணங்கி நமக்கு அல்வா கொடுத்து விட்டான் ! "

நாடோடி மன்னன் ஆச்சே. அவனை ஒரு ஊரில் அடைக்க முடியுமா ?

காலச்சுவடில் இரண்டு வருடம் முன் "விருது வாங்கலையோ " என்று சிலருக்கு விருது கொடுத்த போது

கோணங்கிக்கு கொடுக்கப்பட்ட விருது
" நாடோடி மன்னன் "

ரவிகுமார் -" திராவிட மாயை"

R.P. ராஜநாயஹம் - " ஊட்டி வரை உறவு ".


.........................................

மீள் பதிவு  24-08- 2008
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைகள்

க.நா.சு க்கு 1.12.1988 அன்று ஒரு கடிதம் எழுதினேன் .அமரர் தி.ஜானகி ராமனை பற்றி அலட்சியமாக, முன்றில் பத்திரிகையில் சேறு தெளித்து எழுதிவிட்டார்.

க.நா.சு எழுதிய அந்த ஒரு வரி “ ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்.”
அதற்கு பதிலாக ஒரு கோபமான rejoinder அவருடைய சென்னை விலாசம், டெல்லி விலாசம்,முன்றில் மற்றும் அந்த நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலக்கிய பத்திரிகைகள், புத்தக பதிப்பாளர்கள்,எழுத்தாளர்களில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, சிட்டி,ஜெயந்தன் துவங்கி கோணங்கி வரை , மேலும் பேராசிரியர்கள் பலர், வாசகர்கள்,என் நண்பர்கள் பலருக்கும் zerox நகல் நூறுக்கும் மேல் தபாலில் அனுப்பி வைத்தேன்.

16.12.1988 அன்று க.நா.சு இறந்துவிட்டார்.டெல்லி வானொலியில் காலை ஒலிபரபபில் தமிழ் செய்திகளில் கேட்டு அதிர்ந்து போனேன்.

க .நா. சு . நல்ல படைப்பாளி .அவருடைய பொய்த்தேவு ,ஒரு நாள் , அவருடைய முதல் நாவல் சர்மாவின் உயில், அசுர கணம் ....சொக்க வைக்கும் படைப்புகள்.
  உண்மையில் "உரைநடை விறுவிறுப்பு" என்றால் முதலில் க . நா .சு அடுத்து தி. ஜா .. தொடர்ந்து சுஜாதா. இப்படித்தான். அசோக மித்திரன், சுந்தர ராம சாமி பிரத்யேக நடை தனி விஷேசம். கி .ரா . எப்போதும் தனிக்காட்டு ராஜா! இ.பா . சுஜாதாவுக்கே வாத்தியார்!

கொஞ்சம் தடம் புரண்ட திறனாய்வாளர் க .நா. சு.

பொய் சொல்வார்.தன் தந்தையிடம் இருந்து இந்த பொய் சொல்லும் பழக்கம் தன்னை தொற்றிகொண்டதாக அவரே எழுதியிருக்கிறார்.

இப்ப உள்ள வில்லன்கள் அவரை ரொம்ப நல்லவர் ஆக்கிவிட்டான்கள்! இந்த ஜெகம் பிராடுகளோடு க.நா.சு வை ஒப்பிடவே கூடாது.

க .நா. சு . மரண செய்தி ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார். மறு நாள் எனக்கு கிடைத்தது .

சிட்டி எழுதியிருந்தார்.
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."

கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார் ."
_________________________________

1991 ல் "மேலும் " பத்திரிகையில் " நெஞ்சஞ்சுட உரைத்தல் நேர்மைஎன கொண்டாயோ ?"- இந்த தலைப்பில் நான் எழுதி ஒரு கட்டுரை வெளியானது. புதுமைப்பித்தன் சர்ச்சை பற்றியது.

உடன் பொதியவெற்பன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
" மரணப் படுக்கையில் இருக்கும் கமலா விருத்தாச்சலத்தை புண் படுத்தி விட்டீர்கள்"

கமலா விருத்தாசலம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவியார்.


இதற்கு ஒரு கார்டில் நான் எழுதிய பதில்.

“My intentions are genuine. I don’t see the need to retaliate .”


http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_02.html


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2925.html





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.