Share

Mar 16, 2015

Notoriety is often mistaken for fame


1980களின் துவக்கத்தில் மதுரை பெரியார் பஸ் நிலையம் சுற்றியுள்ள சுவர்களில் கராத்தே வீரன் பெயர்,படமெல்லாம் போட்டு சின்ன,சின்ன போஸ்டர் ஒட்டியிருக்கும். சும்மா இரங்கல் போஸ்டர் போல இருக்கும்.
உற்றுப்பார்த்தால் அது இரங்கல் போஸ்டர் அல்ல. கராத்தே போஸ்டர்.
சும்மா ஒரு பத்து அவ்வப்போது ரெடி செய்து இப்படி ஒட்டிக்கொண்டு.....

1982ல் மேலச்சித்திரை வீதியில் ஒரு நாள் சவ்வாஸ் ஷோ ரூமில் நிஜாம் அந்த ஆளைக்காட்டி அறிமுகப்படுத்தினான்.‘ மாமா! கராத்தே வீரன் இந்த ஆளு தான்’

கராத்தே‘என் அனுபவத்தைக் கேட்டிங்க.. நம்ப மாட்டீங்க!’

‘நான் சில வருடங்களுக்கு முன்னால அமெரிக்காவில கிடார் வாசிச்சி பிச்ச எடுத்து சாப்பிட்டிருக்கேன்!’

புருடா என்று வெளிப்படையாகத்தெரியும் விஷயங்களுக்கு கொஞ்சம் கூட அதிர்ச்சியை வெளிப்படுத்த மாட்டேன். என் முகம் ரொம்ப placid ஆக இருப்பதால் புருடா நபர் எப்போதும் சலிக்கும்படி ஆகி விடும்.

கராத்தே ‘எனக்கு என்ன வயசுன்னு நினைக்கிறீங்க?’ என்னைக்கேட்டது.

“நீங்களே சொல்லுங்க!’

‘இல்ல. நீங்க குத்துமதிப்பா சொல்லுங்க!’ கராத்தே கெஞ்சியது.

‘உங்க வயசு.. நீங்களே சொல்லிடுங்களேன்’

‘எனக்கு நாற்பத்தஞ்சி வயசு சார்! நாற்பத்தஞ்சி வயசு! நம்ப முடியலேல்ல.. ’ இந்த செய்தி நிச்சயம் யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விடும் என்று கராத்தே திருவாலத்தான் பெருமையான பார்வையுடன் பார்த்தான்.

அவன் நாற்பத்தஞ்சு வயசு என்று சொன்ன அடுத்த வினாடியே நான் என் முகத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணி “என்ன சொல்றீங்க! நிச்சயமா இருக்காது. நம்ப முடியல. பார்த்தா 'நாற்பத்தி நாலு' வயசு மாதிரி தான் தெரியுது. சத்தியமா ’நாற்பத்தியஞ்சி’ன்னா நம்ப முடியல! நாற்பத்தி நாலு வயசுக்கு மேல மதிக்கவே முடியாது..”

சவ்வாஸ் நிஜாம் அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.

சில வருடங்களுக்கு அப்புறம் மெட்ராஸில போலீஸுக்கெல்லாம் கூட அந்த ஆள் கராத்தே பயிற்சி கொடுப்பதாக கேள்விப்பட்டேன்.

புன்னகை மன்னன் படத்தில அந்த கராத்தே தலை காட்டியது. சரி தான். கே.பாலசந்தரையே மிரட்டிட்டான் போல இருக்கேன்னு நினச்சேன்.

பழனியில் நான் இருக்கும்போது பேராசிரியர் டாக்டர் சிவக்கண்ணன் ஒரு பள்ளிக்கூட வாத்தியாரை அறிமுகம் செய்யும்போது கராத்தே திருவாலத்தானின் கூடப்பிறந்த அண்ணன் என்றார். அவர் ரொம்ப அப்பிராணியாய் ரொம்ப சாதுவாய் இருந்தார்.முகச்சாயல் தவிர திருவாலத்தானின் கல்யாண குணங்கள் ஏதுமற்று அந்த வாத்தியார் வேட்டி கட்டி எளிமையாய் தெரிந்தார்.

 


பின்னால டி.வி.யில  கராத்தே திருவாலத்தான் சலசலன்னு பேசிக்கிட்டே சமையல் அவசரமாஅவசரமா செய்யறதைப்பாத்திருக்கேன்.

இப்ப - என்னயே நான் சிலுவயில அறஞ்சிக்கிட்டேங்கிறான். விமானத்த கடத்தறதா இருந்தேங்கிறான்.

வால மரத்தில தொங்கப்போட்டு ஊஞ்சல் ஆடுறான். தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்தறான்.....



http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_07.html


http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_6071.html  


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_5.html 

.........................................


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.