Share

Oct 21, 2019

டவுன் பஸ் கண்ணப்பா


பட்டபடிப்பு முடித்திருந்த நேரம்.
கோரிபாளையம் அமெரிக்கன் கல்லூரி முன் உள்ள கடைகளுக்கு முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம்.
என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன் ஒருவனை காட்டினான்.
"மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் " என்ற பாடலை அந்த புது நண்பன் அழகாக பாடினான்.
அருண் சொன்னான்." மாப்பிள்ளை, இவனோட அப்பா சினிமா நடிகராம்டா " என்றான்.
அந்த நண்பனிடம் "யார் உங்க அப்பா ?" -கேட்டேன்.
' கண்ணப்பா.' - புது நண்பன் பதில்.

"அடடே 'டவுன் பஸ்'கதா நாயகன்.
கே சோமு படம். ஏ பி என் வசனம் எழுதினார்.
அஞ்சலி தேவி தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி.                             இருவருக்கும் பாட்டு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே. உலகம் இது தானா துயரம் நிலை தானா' "
அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது.
நான் தொடர்ந்தேன். ''தேவகி ' படத்தில் எம் ஜி யார் மனைவி வி.என் ஜானகியோடு கதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் " என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன்.
'எஸ்.எஸ்.ஆர் நடித்த 'தெய்வத்தின் தெய்வம் ' படத்தில் இரண்டாவது கதாநாயகன்.
சிவாஜி படம் கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரனாருக்கு தேசாந்திர தண்டனை கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார் தம்பி.
ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும் சீனாக்கார ராணுவ அதிகாரி '
இப்படி நான் அடுக்கி கொண்டே போகும் போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது.) கண்கள் கலங்கி விட்டது.
" இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர் என்று சொன்னால் யாருக்குமே புரியவில்லை. என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு. ' என்னமோ சொல்றான். யாருன்னே புரியலே ' என்பார்கள்.
நீங்கள் தான் சார் எங்க அப்பா பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள். பெயர் நான் சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள்! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.நம் வயதில் யாருக்குமே என் அப்பா பற்றி எதுவுமே தெரியவில்லை."
கமல், ரஜினி காலம்.
கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்?
அன்று வீட்டில் அவர் அப்பா கண்ணப்பாவிடம் என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட அழைத்திருக்கிறார்.
மதுரை கே கே நகரில் வீடு. அதற்கு மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர் வீட்டுக்கு போனேன்.
கண்ணப்பாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு பிள்ளைகள். பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார்.
கண்ணப்பா, அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள்.
பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார். எனக்கு பழைய போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம்.
ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் கண்ணப்பா, சிவாஜி கணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக,
அதே புகைப்படத்தில் வேட்டி கட்டிய இளைஞனாக எம் என் நம்பியார்.
இன்னும் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா "சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.
பல நடிகர்களை பார்த்து அவர்கள் பெயரை குறிப்பிட்டு நானே அடையாளம் காட்டியது கண்ணப்பாவுக்கு திகைப்பு!
கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.