Share

Oct 6, 2019

சம்பத்தின் ”இடைவெளி” சிறுகதை


சம்பத் ‘இடைவெளி’ சிறுகதையில் தி.ஜானகிராமனின் மூத்த மகன் சாகேதராமன் ஒரு கதாபாத்திரம். சம்பத் நாராயணனே ஒரு பாத்திரம். அப்புறம் கங்காதரன். 
மூவரும் டெல்லியில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். கங்காதரன் அலுவல் விஷயமாக ஜப்பான் போயிருந்த போது அங்கு பயணத்தில் இருந்த ஜானகிராமனை சந்தித்திக்க வாய்த்திருக்கிறது. அதனால் கங்காதரனின் அப்பா கூட இவருக்கு அறிமுகம். ’அம்மா வந்தா’ பற்றி கூட கங்காதரனின் தந்தை ஜானகிராமனுக்கு கடிதமொன்றில் குறிப்பிட்டு எழுதியிருந்திருக்கிறார்.

கதை ஆரம்பிக்கும் போது கங்காதரனின் அப்பாவின் மரணம்.
அந்த பெரியவர் ரிஷி மாதிரி.
An Evolved soul. தாஸ்தயேவ்ஸ்கியின் கரமஸோவ் ப்ரதர்ஸ் நாவல் படித்தவர். இலக்கியம், ரிலிஜன் பற்றி பேசக்கூடியவர். “பிரபஞ்சம் என்ற களேபரத்தில் நாம் அவ்வளவு முக்கியமில்லை”
வார்த்தைகளுக்கு ஒரு அசாத்திய மதிப்பு முந்தைய தலைமுறையான இவர்களால் கொடுக்க முடிந்திருக்கிறது.
சாகேதராமனிடம் ’அப்பா வருகிறாரோன்னா’ ஆனால் தி.ஜா செக்கோஸ்லேவாகியா போயிருக்கிறார்.
இவர்களுடன் வேலை பார்ப்பவர்கள் கூட வரவில்லை.
கங்காதரன் வீட்டுக்கு சாகேதராமனுடன் நாராயணனும் கிளம்புகிறார்.
சாகேத ராமனிடம் டெல்லிக்குளிருக்கான நல்ல ஸ்வெட்டர் இல்லை. நாராயணன் அடுத்த சம்பளத்தில் ஒரு ஸூட் தைத்துக்கொள்ள சொல்கிறார். சாகேதராமன் ஸூட் விலை குறித்து மதராஸில் பட்டுப்புடவைக்கு தான் இப்படி செலவழிப்பார்கள் என சொல்கிறார்.
முதலில் கொஞ்சம் நடந்து
பின்
‘பட்படி’ டெல்லி வாகனத்தில். கரோல் பாக்கில் இறங்கி இழவு வீட்டுக்கு போகிறார்கள். கங்காதரனுடைய மூத்த தமையன் வர வேண்டும். அதன்பின் காரியம் ஆக வேண்டும்.
சாவில் சில சமயங்களில் நாராயணன் காணும் அருவருப்பு, குரூரமான வீர்யம். அகோர வீர்யம்.
கிளம்புகிறார்கள்.
சாகேத்
“Don’t leave me. I feel alone.”
ஒரு ரெஸ்ட்ரண்ட் போகிறார்கள். டான்ஸ் பார்க்கிறார்கள். டான்ஸும் அந்த பெரும் மார்பும்.
சம்பத்திடம் சாகேத்
“You have read lot of books. What they have got to say about death?”
ஹெமிங்க்வே “ Death is a whore”
டால்ஸ்டாய் death process பற்றி நன்றாக விவரிக்கிறார்.
சாகேத் “What about my father?” தி.ஜாவுக்கு மரணம் பற்றி?

“ மோகமுள்ளில் ஒரு பெண் செத்துப் போயிடறா… தற்கொலை. பாபுவுக்கு உடம்பெல்லாம் மணல் பட்டது போன்ற அரிப்பு ஏற்படுகிறது.. ’மலர்மஞ்சம்’ பெண்கள் சாவுப்பட்டியலுடன் துவங்குகிறது. Anyway death was not an obsession with your father. You can speculate it.
நாராயணன் தனக்கு பள்ளியில் ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் பற்றி சொல்கிறார்.
அந்த இரண்டுக்குமே சாரம் “ சாவு ஒரு இடைவெளி”
மயிரிழையில் இரண்டு விபத்தில் இருந்து தப்பிக்கும் சிறுவன்.
இப்போது ரெஸ்ட்ரண்ட்டில் டான்ஸ், கஜல் பாட்டு என்ற நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருக்கும் நாராயாணன் மனதிற்குள் “சாவு ஒரு இடைவெளி” என்று சொல்லிக்கொள்கிறான்.
’அன்றிலிருந்து சொல்ல முடியாத அளவுக்கு உடல் சுகத்தில் அவனுக்கு நாட்டம் விழுந்தது’
– சம்பத்தின் ’இடைவெளி’ சிறுகதையின் கடைசி வரி.

......
சம்பத் ஆயிரம் பக்கத்திற்கு ஒரு நாவல் எழுதிக் கொண்டு வந்து இந்திரா பார்த்தசாரதியிடம் கொடுத்திருக்கிறார்.
அதை படித்துவிட்டு இந்திரா பார்த்தசாரதி அபிப்ராயமாக '
RAMBLING ஆக இருக்குடா. நாவலை இன்னும் Crisp ஆக edit செய்தால் நன்றாக வரும்' என்று சொல்லிவிட்டு எதற்கோ வீட்டின் உள் அறைக்குச் சென்றுவிட்டு திரும்பிய போது
சம்பத் வெராண்டாவில் அந்த முழு நாவலையும் கொளுத்திவிட்டு ’குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனிமேல் எதற்கு?’ என்று இந்திரா பார்த்தசாரதியிடம் கூறியிருக்கிறார்.
இ.பா.வே என்னிடம் சொன்ன விஷயம் இது.

இன்று எல்லோர்க்கும் பார்க்க கிடைக்கும் குட்டி நாவல் ”இடைவெளி”.
’ப்ரக்ஞை’ சிறு பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் தலைப்பையே நாவலுக்கும் வைத்திருந்திருக்கிறார்.
..
30 வருடங்களுக்கு முன்னால் எனக்கு ஒரு கடிதம்.டெல்லியிலிருந்து சாகேத ராமன் எழுதியிருந்தார் .தி. ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது. ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதியும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார்.
Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
நான் உடனே "சான்சேஇல்லை. க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.
சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன் ." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார்.

சாகேதராமனும் மறைந்து விட்டார்.

சம்பத்தும் இல்லை.
……




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.