Share

Jul 26, 2020

திருச்சி மாரிஸ் தியேட்டர் பாலத்தில்



திருச்சி மாரிஸ் தியேட்டர் பாலம் சிதிலமடைந்த நிலையில் பார்க்க கிடைத்தது. பள்ளிப்படிப்பு துவங்கி திருச்சி என் வாழ்வில் 
மிக முக்கியமான இடம் பெற்ற ஊர். 
எழுத்தில் அவ்வளவு சுலபமாக 
சொல்லி விட முடியாது. 

திருச்சி, நாகப்பட்டினம், கரூர், மதுரை, சென்னை, ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி. 
பன்னிரெண்டு வருடங்கள் வாழ நேர்ந்த திருப்பூர்.
இவ்வளவு ஊர்களும் என் வாழ்வோடு இணைந்தே வந்திருக்கின்றவை. 

இந்த மாரிஸ் பாலம் தான் 
எவ்வளவு பரவச நினைவுகளை எழுப்புகிறது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நான் திருச்சியில் பெற்றோர் குடியிருந்த புத்தூர் 
விஸ்வப்ப நாயக்கன் பேட்டை பங்களா வீட்டுக்கு
 வந்திருந்த போது திருச்சி மெயின் கார்ட் கேட் போக அருணா தியேட்டர் அருகில் 
ஆட்டோவில் ஏறுகிறேன். 

மனைவி, மகன்கள் இல்லாமல் 
அன்று  நான் மட்டும். 

பொதுவாக எந்த ஊரில் இருந்தாலும்
 திருச்சி வந்தால் திரும்புவதற்குள் இரண்டு முறையாவது குடும்பத்துடன்
 மெயின் கார்ட் கேட் போய், 
மாரிஸ் தியேட்டர், தெப்பக்குளம், மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு என்று ஒரு ரவுண்டு நிச்சயம். சலிக்கவே சலிக்காத இடங்கள். 
மைக்கல்ஸ் ஐஸ்க்ரீம், 
வடக்கு  ஆண்டார் தெரு ரமா கஃபே,
இம்பாலா பிரியாணி. 
திருச்சியில் இருந்த காலங்களில் ஆஹா.. சொல்லவே வேண்டாம். 

அருணா தியேட்டரருகில் கிளம்பிய ஆட்டோ உறையூர் வழியாக போய் மாரிஸ் பாலம் ஏறி இறங்கும் போது எதிரே வந்த பைக் காரன் மோதியதால் மூன்று குட்டிக்கரணம் போட்டது. 
இதே இடத்தில் தான். முன்னும் பின்னும் வந்த வாகனங்கள் நின்று விட்டன. ஆட்டோவை ஒட்டி டவுன் பஸ். எதிரேயும் ஒரு டவுன் பஸ். பல வாகனங்கள் இரு புறமும். எப்படி இவ்வளவு ட்ராஃபிக்கில் ஆட்டோவால் வசதியாக மூன்று குட்டிக் கரணம் போட முடிந்தது. மூன்றாவது குட்டிக்கரணம் போடும்போது பக்கவாட்டில் கவிழ்ந்த நிலை. 

கவிழு ஆரம்பிக்கும் போதே ஆட்டோ டிரைவர் வெளியே விழுந்து விட்டார். 

பாலத்தில் இரு பஸ்களில் இருந்தும், பாலத்தின் பல பகுதிகளில் இருந்தும் குரல்கள் 

'உள்ளாற ஆள் இருக்குது '

' ஆளுக்கு என்னாச்சின்னு பாருங்க. '

பெருங்கூட்டம். 

நான் உள்ளேயிருந்து பக்கவாட்டில் ஜம்ப் செய்து வெளியே குதித்தேன். 

' அடி பட்டுறுக்கா பாருங்க ' தொடர்ந்த கூப்பாடு. 

எனக்கு சின்ன காயம் கூட இல்லை. 

மோதிய பைக் காரன்  நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே எஸ்கேப். 

விசாரிப்பு, குசலமெல்லாம் முடிந்த பின் 
ஆட்டோ சார்ஜை டிரைவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்தே நான் நடக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.