Share

Jul 21, 2020

கல்யாண்குமார் காரில் சிவாஜி

1960 களில் நடந்த சம்பவம் ஒன்றை 
'நெஞ்சில் ஓர் ஆலயம்'கல்யாண்குமார் 
என்னிடம் 1992ல் சொன்னார். 

மௌன்ட் ரோட்டில் கல்யாண் குமார் 
தன்னுடைய அந்த நேரத்து மாடர்ன் காரை ஓட்டிக்கொண்டு வந்திருக்கிறார். 
சிவாஜி கார் இவரை தாண்டிப் போயிருக்கிறது. 

 ஓவர் டேக் செய்து போகும் போதே கல்யாண்குமாரை சிவாஜி கவனித்து விட்டார். 
சிவாஜியின் கார் டிரைவர் 
இவரை காரை நிறுத்த சொல்லி
 சிக்னல் செய்து, காரை தானும் 
இந்த கார் முன் நிறுத்தி விட்டார். 

ஜன நடமாட்டமுள்ள மௌன்ட் ரோட்டில், கடைகளில் உள்ளவர்களும் கவனிக்கும் முன் சிவாஜி அவர் காரில் இருந்து கல்யாண்குமார் காரில் மின்னலென நுழைந்திருக்கிறார். 

"டேய், எப்படா இந்த கார் வாங்குனே"

"எங்கடா போற "

கல்யாண் ஸ்டுடியோ பெயரைச் சொல்லியிருக்கிறார். 

" எனக்கும் அங்க தான்டா ஷுட்டிங் "

சிவாஜிகணேசனின் டிரைவர் வந்து எட்டிப்பார்த்திருக்கிறார். 

சிவாஜி "நான் இவன் கூட வந்துடறேன்டா. நீ ஸ்டுடியோவுக்கு போயிடு" 

டிரைவரை தன் கார் எடுத்துக் கொண்டு போக பணித்து விட்டார். 

கல்யாண்குமார் செல்ஃப் டிரைவிங். 

ஸ்டார்ட் பண்ணியிருக்கிறார். ஒரு நூறடியில் கார் நின்று விட்டது. 

என்ன முயன்று பார்த்தும் கார் கிளம்பவில்லை. 

சிவாஜிகணேசன் பதற்றம் அதிகமாகி 
திட்ட ஆரம்பித்து விட்டார். 

" பாவி, ஒன்னய நம்புனது தப்பாயிடுச்சேடா, ஏமாந்துட்டேனேடா, 
எவனாவது ஒர்த்தன் பாத்துட்டான்னா
 'சிவாஜி, சிவாஜி' ன்னு கூப்பாடு போட்டு 
கூட்டம் கூடிடுவானுங்களேடா"

'அண்ணே, அண்ணே மன்னிச்சிக்கங்க,
 ஐ ஆம் சாரி ' தவிப்பில் உளறியிருக்கிறார். 

சிவாஜிக்கு பங்க்சுவாலிட்டி
 வேறு ரொம்ப முக்கியம். 

கல்யாண் குமாருக்கு சிவாஜி சாருக்கு இப்படி
 ஒரு கஷ்டத்தை கொடுக்கும்படி ஆகி விட்டதே என்ற 
தர்ம சங்கடம். 

கல்யாண் குமார் சொன்னதில் இது வரை தான்                       எனக்கு இப்போது ஞாபகம் இருக்கிறது. 

அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது
 எவ்வளவு யோசித்தாலும் 
குழப்பம் தான் மிஞ்சுகிறது.

It's in my memory locked. 
- Shakespeare in Hamlet 

இது இயல்பான ஒன்று. 
நினைவில் நிழல் விழுவதும் 
ஞாபக சிக்கல் ஏற்படுவதும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.