Share

Jul 20, 2020

எழுத்தாளர் கர்ணன் மறைவுக்கு இரங்கல்

கர்ணன் மறைவுக்கு அஞ்சலி 

ஜி. நாகராஜன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவருடைய நண்பர் ஒருவரை தேடியதுண்டு. 

 எழுத்தாளர் தான். டெய்லர்.  பெயர் கர்ணன்.

 ஜி.நாகராஜனின் நெருக்கமான நண்பராக  இருந்திருக்கிறார். 
அவருக்கு சி.சு.செல்லப்பாவுடன் 
சினேகிதம் இருந்திருக்கிறது.

 கர்ணனின் சிறுகதை தொகுப்பை செல்லப்பா அங்கீகரித்திருக்கிறார். 
அவரே வெளியிட்டிருக்கிறார் என்றும் ஞாபகம்.

 ’பொழுது புலர்ந்தது’ என்று ஒரு சிறுகதை தொகுப்பு கர்ணனுடையது தான்.

அவரை நானும் சரவணன் மாணிக்கவாசகமும் மதுரையில் 1982ல் சேர்ந்து தேடிய முயற்சி 
அன்று ஈடேறவேயில்லை.  
டெய்லர் கடை பூட்டியிருந்தது.

2019 ஏப்ரலில் 
மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் 
வழக்கறிஞர் பா.அசோக் அழைப்பின் பேரில் 
நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களும் 
நானும் கலந்து கொண்டு உரையாற்றினோம். 

 சோமு நூற்றாண்டு விழாவிற்கு
 வந்திருந்த கர்ணனை
 நிகழ்வு முடிந்தவுடன் தற்செயலாக 
சந்திக்க நேர்ந்தது. அபூர்வ சந்திப்பு.

பெரியவருக்கு 2004ல் எழுதிய ’அவர்கள் எங்கே போனார்கள்’ புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கூட கிடைத்திருக்கிறது.

மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸில் கூட்டம் முடிந்த பின் என்னைப் பார்த்து பிரியத்துடன் புன்னகைத்தார். நடக்க சிரமப்படுகிறார். வாக்கர் மூலம் நடக்க வேண்டிய நிலை. கழுத்தில் செர்விக்கல் காலர். 

அவர் தான் எழுத்தாளர் கர்ணன் என்பது 
தெரிய வந்த போது
 ஜி.நாகராஜன் நினைவு மேலெழும்பியது.

வழக்கறிஞர் பா.அசோக் மொபைலில்  படம்பிடிக்க முனைந்த போது
 கழுத்தில் உள்ள செர்விக்கல் காலரை 
கழற்றி விடவா என்று கேட்டார். 

அசோக் அதற்குள் இரண்டு படம் எடுத்து விட்டார்.

.. 

"மரணத்தை நேருக்கு நேரா
விரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "

இப்படி சொன்னார் கர்ணன்.

நாகராஜனின் நெருங்கிய சகா. 

மதுரை 'கண்ட' எழுத்தாளர் என்று எழுதினால்
அது அபத்தமாக தெரியும். 
காணாமல் போன எழுத்தாளர். 
மதுரை கண்டு கொள்ளாமல் போன எழுத்தாளர்.

84 வயதான கர்ணன் வாடகை வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். 

தையல் கலையில் கூட அந்த காலத்தில் கோடீஸ்வரனான டெய்லர்கள் உண்டு.

டெய்லர் கர்ணனுக்கு அப்படியும் லபிக்கவில்லை.

மேல மாசி வீதி தானப்ப முதலி தெரு, வடுக காவல் கூட தெரு பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த கர்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு
 'கனவுப் பறவை'
சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பிரசுரமாக
1964ல் வெளி வந்தது.

ந. பிச்சமூர்த்தி தான் கர்ணனின் கனவுப்பறவைக்கு ஒரு முன்னுரை எழுதினார்.

எழுத்து இலக்கிய பத்திரிக்கையிலேயே தான் இவர் எழுதிய 'சுமை' கதை வெளி வந்திருக்கிறது.

ப்ரசன்னம் என்ற கதை விசேஷமானது.

48 நூல்கள் கர்ணன் எழுதியுள்ளார்.

இவருடைய 'உள்ளம்' நாவலை 
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். 

கவிதா பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது.

மணிவாசகர் நூலகம் கர்ணனின் 
'அகம் பொதிந்தவர்கள்' வெளியிட்டிருக்கிறது.

இதே பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நூல்
‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’

நர்மதா பதிப்பாக 'கி. வா. ஜ முதல் 
வண்ணதாசன் வரை' கர்ணனின் புத்தகம்.

http://rprajanayahem.blogspot.com/2008/09/g.html

https://rprajanayahem.blogspot.com/2016/01/blog-post.html

https://rprajanayahem.blogspot.com/2016/01/blog-post_26.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.