Share

Jul 27, 2018

ஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை

எனக்கு பெற்றவர்கள் வைத்த பெயர் ரொம்ப நீளமானது. அதைத் தான் சுருக்கி பிரமிள் மாற்றி வைத்தார்.
என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இருந்த ரொம்ப நீளமான பெயருக்கான நியூமராலஜி குறிப்பு இப்போது நினைத்துப்பார்த்தால் என் வாழ்வின் வடிவத்தை குறியீடாகச்சொல்வது போலத்தான் இருக்கிறது.
‘அற்புதம் நிறைந்தது.
எல்லாவிதமான பந்தங்களில் இருந்தும் விடுவிக்கக்கூடியது. பூட்டுக்களும் திறந்துகொள்ளும். பூட்டப்பட்ட விலங்குகளும் தெறித்துப்போய் விடும். மாயம் போல் செல்வச்சிறப்பு மறைந்து போய்விடும்.’

மதம், ஜாதி, உறவு எல்லாவற்றையும் என் வாழ்வு உதறியிருக்கிறது. ரத்த உறவுகளையும் மனைவி வழியில் வாய்த்த கிளை உறவுகளையும் என்னை நெருங்கவே முடியாதவாறு தூக்கி எறிந்து விட்டேன்.
முப்பது வருடங்களுக்கு மேலாக எவ்வளவோ திருமணங்கள், கிரஹப்ரவேசம், கடை திறப்பு விழா..பிறந்த நாள் விழா.. இன்னும் என்னன்ன உண்டோ நான் செய்திருக்கிற மொய் கொஞ்சநஞ்சமல்ல. 1980களிலேயே 100 ரூபாய்க்கு குறைந்து எந்த மங்கல நிகழ்ச்சியிலும் செய்ததேயில்லை. நெருங்கிய உறவுகள் பலவற்றின் திருமண நிகழ்வுகளுக்கு அப்போதே 300 ரூபாய் என்று மொய் வைத்து ஏனோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறேன். தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் பத்திரிக்கை வைத்தால் பெருமொய் தான்.
என் மகன்கள் இருவர் திருமணத்திற்கு உறவினர்கள் யாருக்கும் அழைப்பிதழ் கிடையாது. 


என் சார்பாக நண்பர்கள், இலக்கிய நண்பர்கள், வலைத்தள நண்பர்கள், வாசக அன்பர்கள் என்று யாருக்கும் அழைப்பு கிடையாது.
இது அபூர்வம். யோசித்துப் பார்க்கையில் என் சொந்த பந்தத்தில் இப்படி நடந்ததே இல்லை.
எளிமையாக திருமணம் நடக்க வேண்டும் என்பதில் ஒரு வைராக்கியம் எனக்கு ஏற்பட்டு விட்டது.
திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாலே அதை எதிர்கொள்வதில் எல்லோருக்கும் எந்திரத்தனம் வந்து விட்டது.
’ஒரே நாளில் மூன்று பத்திரிக்கை வந்து விட்டதே. தொர வேற மகனுங்களுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை வச்சிட்டான்’ என்று ஒரு ஆயாசம் தான் நிச்சயம்.
யார் மீதும் கோபம் இல்லை. வருத்தம் இல்லை. உறவுகளோ நண்பர்களோ யார் மீதும் வருத்தம் இல்லை. யாருக்கும் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் யாரையும் அழைக்கவில்லை.
மகன்களின் மணப்பெண்கள் குடும்பங்கள் திருமணத்தில் முழுமையாக பங்கேற்றாலும் என் வழியில் யாருக்கும் அழைப்பு இல்லை என்பதை சம்பந்தி குடும்பங்களுக்கு தெளிவு படுத்தி விட்டேன்.
ஜூலை 1ம் தேதி இளைய மகன் திருமணம் சுந்தர பாண்டிய புரத்தில் நடந்து முடிந்து விட்டது. இதோ ஜூலை 29ம் தேதி விழுப்புரத்தில் மூத்த மகன் திருமணம்.
இரு மகன்களும் காதல் திருமணம் தான்.



Sons and Daughters in law. The leading characters of our own lives.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.