Share

May 20, 2018

மூனு எளனி


இவ்வளவு காலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தேன். 2005 மாடல். 2010ல் திருப்பூரில் ஹோண்டா ஆக்டிவா ஷோரூமிலேயே எஞ்சினை மாற்ற வேண்டும் என்று மிரட்டினான். நான் ஸ்கூட்டரை அங்கிருந்து எடுத்து வந்து விட்டேன்.
மெக்கானிக் யாராவது எஞ்சின் என்று ஆரம்பித்தாலே மெக்கானிக்கை மாற்றி விடுவேன். சென்னை வந்து 32 மாதங்களிலும் இப்படித் தான்.
இப்போது 2005 மாடல் என்றாலே மெக்கானிக் எவ்வளவு அடிக்க முடியும் என்று தான் பார்க்கிறான்கள்.
சமீபத்தில் ஒரு ஐயாயிரம் வரை செலவழித்தும் ஸ்கூட்டர் ஆஃபிஸ் போகும் போதும் சரி வரும்போதும் ஐந்து முறை நின்று விடும்.
ஹோண்டா ஆக்டிவா மக்கர் செய்தால் எருமை மாடே தான். தள்ளி முடியாதே.
மெக்கானிக் ஒவ்வொருத்தனும் எஞ்சின் வேலைக்கு வாய்க்கு வந்த பெருந்தொகையை சொல்ல ஆரம்பிக்கவே என் வாழ்வு முறையை மாற்றிக்கொண்டேன்.
ஸ்கூட்டரை வீட்டில் நிறுத்தி விட்டேன். 13 வருட ஸ்கூட்டர் வாழ்க்கைக்கு இப்போதைக்கு முற்றுப் புள்ளி.
ஆலப்பாக்கத்திலிருந்து வளசரவாக்கத்திற்கு மினி பஸ். வளசரவாக்கத்திலிருந்து விருகம்பாக்கத்திற்கு ஷேர் ஆட்டோ. அப்புறம் காளியம்மன் கோவில் மார்க்கெட் வரை நடந்து அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ. ஸ்ரீ ஐயப்ப நகரில் இறங்கி ஒரு நடை நடந்து ஆஃபிஸ்.
இதே மாதிரியான சுழற்சி தான் வீட்டுக்கு போகும்போதும். சமயங்களில் ஆற்காடு ரோட்டில் இறங்கி ஆலப்பாக்கத்திற்கு முக்கால் கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

கடந்த ஐம்பது நாட்களாக இப்படித்தான்.
பொதுவாக டூவீலர் பயன்படுத்தியவர்கள் இப்படி பஸ்சிலும் ஷேர் ஆட்டோவிலும் போக நேர்ந்தால் மிகவும் கஷ்டமாகத் தான் நினைப்பார்கள். மிகப்பெரிய அசௌகரியம் என்று உணர்வார்கள்.
எனக்கு இந்த மாற்றம் மிகுந்த பரவசத்தைத் தான் தருகிறது. கௌரவ பங்கம் ஏதுமில்லை. எந்த ஸ்தான சலனமும் என்னை ஒரு புதிய உலகத்தைக் காட்டி பிரமிக்கச் செய்கிறது. ரொம்ப உற்சாகமாக இந்த மாற்றத்தை ரசிக்கிறேன். I always accept my life unconditionally.
இழப்புகள், சரிவுகள், தாளமுடியாத துயரங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியாகவே எனக்கு தெரிய வந்திருக்கிறது.
மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன் இளநீர் ஒரு வண்டியில். இளனிக்கார ஆளை காணவில்லை. பார்வையை ஓட்டுகிறேன். பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா என்று காத்திருப்பவர் எழுந்து வந்தார்.
“சார்,அவன் டீ சாப்பிட போயிருக்கிறான்.”
சரி, வெய்ட் பண்றேன்.
ம்ஹும். ஆளக்காணோம்.
என்னை விட அந்த ஆட்டோக்காரர் ரெஸ்ட்லெஸ் ஆகி விட்டார்.
“இருங்க சார், நான் போய் கூட்டி வர்றேன்.”
இருபது கடை தாண்டி இருக்கும் ஐயப்பநகர் மெயின்ரோட்டு முனையில் இருக்கும் டீக்கடைக்கு ஓடுகிறார்.
அவரையும் கொஞ்ச நேரம் காணோம். சரி வேண்டாம்னு எனக்கு கிளம்ப மனசில்லை. எனக்காகவும் இளனிக்காரருக்காகவும் இப்படி சம்பந்தமேயில்லாத ஆட்டோக்காரர் மெனக்கெடும்போது நான் பொறுமை காப்பது தான் நியாயம்.
ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்ஸும், சிட்டி பஸ்களும், ஃபாஸ்ட்ராக், ஓலா, உபர் கால்டாக்ஸிகளும் இருக்கும் ஊரில் ஒரு ஆட்டோக்காரரின் தொழில் தான் எத்தனை போராட்டமானது?
கொஞ்ச நேரத்தில் ஆட்டோக்காரர் ஓடி வருவது தெரிந்தது. வரும்போதே என்னைப் பார்த்து கை காட்டிக்கொண்டே தான் வந்தார்.
“சார், டீ குடிச்சிட்டு இருக்கான். நான் சொல்லிட்டேன். இப்ப வந்துடுவான். போயிடாதீங்க”
“ அதெப்படிங்க நான் போக முடியும். நீங்க இப்படி எனக்கு ஒரு எளனி குடிக்க, அந்தாளுக்கு ஒரு எளனி விக்க வேண்டி சிரமப்படுகிற போது எனக்கு உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலே.”
கொஞ்ச நேரம் கழித்து எளனி வண்டிக்காரர் ஓடி வந்தார். வரும்போதே இங்கே ஆட்டோக்காரர் ‘எளனி குடிக்க ஆள் இன்னமும் நிக்கிறார்’ என்று கையால் சிக்னல் செய்தார்.
நான் சொன்னேன் “ ஆட்டோக்காரர் பாரு, எவ்வளவு நல்ல மனசு. ஒன் வியாபாரத்துக்கு எவ்வளவு மெனக்கிடுறார்.”
பரிதாபமான பஞ்ச தோற்றத்தில் எளனிக்காரர். காலை சாப்பாடே அந்த டீயாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்.
”ஆட்டோக்காரருக்கும் ஒரு எளனி கொடு. நான் காசு கொடுத்திடுறேன்.”
ஆட்டோக்காரர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்தார். நான் ஆட்டோக்காரரும் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்து எளனி வாங்கிக்கொடுத்தேன்.
“ ஒரு எளனிக்கு ஒனக்கு என்ன கிடைக்கும்?”
“ நாலு ரூபா சார். ஓனருக்கு ஒரு எளனிக்கு ஐந்து ரூபா”
நான் ரெண்டு எளனி காசை கொடுத்து விட்டு இன்னொரு நாலு ரூபா சேர்த்துக்கொடுத்தேன்.
’எதுக்கு சார்?’
”ஒனக்கு மூனு எளனி வித்த லாபம் கிடைச்சதா இருக்கட்டும்.”

……………………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.