Share

Jan 8, 2018

பட்டுக்கோட்டை பிரபாகர்


தமிழில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி துவங்கி கோணங்கி வரை காலாகாலமாக படித்துக்கொண்டிருந்த நான் ஒரு வித்தியாசமான வேலை செய்திருக்கிறேன்.
1988ம் ஆண்டு பழனியில் இருந்த போது நான் தமிழ் க்ரைம் நாவல்கள் பற்றி தெரிந்து கொள்ள பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா, தேவி பாலா, சாருப்ரபா சுந்தர் போன்றவர்களின் பாக்கெட் நாவல்களை படித்திருக்கிறேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்களில் மதிப்பானவராக தெரிந்தார். அப்போது அச்சில் வந்திருந்த அவருடைய அனைத்து நூல்களையும் வாங்கி படித்தேன். அவருக்கு கடிதம் எழுதினேன்.
அந்த புத்தகங்கள் அனைத்தையும் பலருக்கும் அன்பளிப்பாக அப்போது கொடுத்து விட்டேன்.
சீரியஸ் எழுத்துலகத்தவர் எல்லோருக்கும் ஒரு பிம்பம் இருந்தது. ஜிப்பா, ஜோல்னாப்பை, தாடி என்பதான தோற்றம். அந்த மாதிரி என்னை எண்ணி விடக்கூடாதே. என் புகைப்படங்கள் கூட கடிதத்தில் இணைத்திருந்தேன்.
”சமீபத்தில் நீளமான கடிதம் உங்களுக்குத்தான். புகைப்படங்கள் பார்த்து விட்டு நடிகரோ என்று நினைத்தேன்.கிண்டலில்லை. Compliment தான்” இப்படி முடித்து ஒரு கடிதம் எனக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதியிருந்தார்.

தி.ஜா.வின் மரப்பசு படித்ததில்லை என்பது தெரிந்து ஒரு மரப்பசு நாவலை வாங்கி பரிசாக அனுப்பி வைத்தேன்.
தி.ஜா நினைவு மதிப்பீட்டு மடல் நவம்பர் மாதம் எல்லோருக்கும் அனுப்பிய போது இவருக்கும் இரு வருடங்கள் அனுப்பியிருக்கிறேன்
’பவுனு பவுனு தான்’ படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒர்க் பண்ணினார்.
நான் ’ராசுக்குட்டி’யில்.
நேற்று ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவில் பட்டுக்கோட்டை பிரபாகரை முதல் முறையாக நேரில் பார்த்தேன். அவர் அருகில் அமர்ந்தேன்.
29 வருடங்களுக்கு முந்தைய விஷயங்களை ஞாபகப்படுத்தினேன். மரப்பசு புத்தகம் அனுப்பி வைத்த விஷயம் சொன்னதும் தனக்கு நினைவுக்கு வருகிறது என்றார்.
தன் கையில் இருந்த ‘தி இந்து’ அழைப்பிதழில் என் பெயரையும் மொபைல் எண்ணையும் எழுதித் தருமாறு கேட்டார்.
எத்தனையோ வருடங்களாக புகைப்படங்களில் பார்த்த மாதிரியே பட்டுக்கோட்டை பிரபாகர் இன்றும் இருக்கிறார்.

  “How sad it is! I shall grow oldBut my picture will remain always young."

- Oscar wilde in his popular novel 'The Picture of Dorian Grey'

……………………………………………………..


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.