Share

Nov 28, 2016

சார்பு


சார்ந்திருக்க எவ்வளவோ இருக்கிறது.
”எதையேனும் சார்ந்திரு
கலை, இலக்கியம், சங்கீதம்,இங்கிதம்
 இப்படி எதையேனும் சார்ந்திரு.
இல்லையேல் வாழ்க்கை காணாமல் போய் விடும்.”
- வண்ண நிலவன்
‘ மெய்ப்பொருள்’ கவிதைத்தொகுப்பில் ஒரு கவிதை.’

ஊட்டி தளையசிங்கம் கருத்தரங்கம் நிகழ்விற்காக சென்றிருந்த போது தனிப்பட்ட உரையாடல் போது வெங்கட் சுவாமிநாதனிடன் நான் கேட்டேன். “ ஒரு இலக்கியவாதி பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியுமா?”
உடனே அவர் பதில்: ”ஏன், ஒரு இலக்கியவாதி மார்க்ஸிஸ்ட் ஆக இருக்க முடியும் என்றால் ஏன் பி.ஜே.பி.ஆதரவாளனாக, ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருக்க முடியாது? ஏன் இருக்கக்கூடாது?”
மௌனியின் பூணூலைப்பார்த்து அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ.ரா “ இந்த சனியனை கழட்டி அந்த ஆணியிலே மாட்டு” என்று சொன்ன போது மௌனி சற்றும் யோசிக்காமல் சொன்னார் “Rather I would cut my cocks and put it there!”
நான் பெரிதும் மதிக்கும் ந. முத்துசாமியிடம் இந்த கேள்வி ’உங்களுக்கு பிடித்த கொள்கை என்ன?’ கேட்கப்பட்டால் எப்போதும் தயங்காமல் உடனே சொல்வார் “ திராவிட இயக்கக் கொள்கைகள்”
முத்துசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் மௌனி!
அசோகமித்திரன் பி.ஜே.பி சார்புடையவர்.
லா.ச.ரா. ஆச்சாரம் எல்லோரும் அறிந்தது.
தி.ஜானகிராமன் ஆன்மீக தேடல் கொண்டிருந்தவர்.

 கி.ரா கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருக்கிறார்.
பெரும்பாலான படைப்பாளிகள் மார்க்ஸீயத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ளவர்கள். மனிதன் மீதான அக்கறை தான் மார்க்ஸீயம் என்பதால் அதை எங்கனம் அலட்சியப்படுத்த முடியும். முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரும் மார்க்ஸீயத்தின் பால் அபிமானம் கொண்டவர்கள்.
நான் கல்லூரி வாழ்க்கையின் போது தி.மு.க. காரன். திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் இரண்டிலும் உறுப்பினராய் இருந்தவன்.உறுப்பினர் கார்டுகள் பத்திரமாக என்னிடம் ரொம்ப காலம் இருந்ததுண்டு. அந்த நேர என் அரசியல் ஈடுபாடுகள் பற்றிய சாட்சிகளாக!
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு ஓட்டு போட்டதேயில்லை.
என் மார்க்சீய அபிமானம் காரணமாக 'தோழர் ' என்றபட்ட பெயரும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது.இன்றும் என்னை என் பெயரை சொல்லாமல் ' தோழர் ' என்று குறிப்பிட்டு அழைக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு.
சேலம் காம்ரேடுகளோடு மோதல் ஏற்பட்ட போது ஒரு பத்திரிகையில் எழுதிய எதிர்வினைக்கு ”கொள்கை சனாதனத்தின் மிச்ச சொச்சங்கள்”தலைப்பை கொடுத்தேன்.
சுந்தர ராமசாமி சொன்னதை அடையாளத்தை நிராகரிக்கும் நானும் சொல்வேன்.
' இலக்கியவாதியாகிய நான் ஒரு மொழிக்கோ, சாதிக்கோ,மதத்திற்கோ இனத்திற்கோ, கட்சிக்கோ, சித்தாந்ததிற்கோ,ஏன் நாட்டிற்கோ கூட விசுவாசமாக இருக்க முடியாது '



.........................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.