ஒன்றாம் வகுப்பு முடித்து மே மாதம். செய்துங்க நல்லூரில் அப்போது தாத்தா பாட்டி வீட்டில் ஜாலியாக இருந்தேன். தாத்தா வீட்டை ஒட்டிய எங்கள் வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பம். அந்த வீட்டில் ஒரு திருமணம். தாத்தா வீட்டையும் சேர்த்து பந்தல் போட்டார்கள். அந்த பந்தல் அந்த வயதில் எனக்கு தந்த ஆனந்தம் அலாதியானது. பந்தல் காலில் தொங்கி ஆடி விளையாடி…குதித்து…தவ்வி.. பந்தலின் கூரையை அண்ணாந்து பார்த்து பார்த்து .. ஆஹா….. பந்தல் என்பது எனக்கு எப்போதும் வேண்டும்…. பந்தல் தான் என்ன அழகாயிருக்கிறது.
பக்கத்து வீட்டு கல்யாணம் முடிந்த நான்காம் நாள் காலை பந்தலை பிரிக்க ஆரம்பித்தார்கள். விறு விறு என்று பிரிப்பு வேலை.
நான் பந்தல் பிரிக்கிற ஆட்கள் இருவரிடம் பந்தலை பிரிக்க வேண்டாம் என்று கிடைத்த கொஞ்ச அவகாசத்தில் அந்த வயதிற்கேற்ற சொல்லாடல் செய்தேன். அவர்களில் ஒரு ஆள் சொன்னான் ‘ கல்யாணம் நடந்துச்சுன்னா தான் பந்தல் போட முடியும்’
திகைத்துப்போய் விட்டேன். பந்தல் காணாமலே போய்விட்டது.
நேரே தாத்தாவிடம் போய் “ எனக்கு கல்யாணம் இப்பவே இன்னக்கே நடக்கனும்” என்றேன். சாராயக்கடைக்கடை ராஜ நாயஹம் பிள்ளைக்கு சிரிப்பு. பொக்கைவாய் திறந்து சிரித்தார்.
தொழுவத்தில் இருந்து பால் கறந்து விட்டு வந்த பாட்டியிடம் ஓடிப்போய்
“ ஆச்சி! எனக்கு இப்பவே இன்னக்கே கல்யாணம் நடக்கனும். உடனே பந்தல் போடனும்”
ஆச்சி பெரிய செம்பில் இருந்த கறந்த பச்சை பசும்பாலை
“ ஒரு வாய் முத இத குடி!” என்று கெஞ்சினாள். என் ஆச்சி எப்போதும் ஃப்ரெஷ்ஷா பால் கறந்தவுடன் எனக்கு நுரை ததும்பும் பச்சை பாலை வாயில் குடிக்க கொடுப்பாள். அது அவள் வழக்கம். உற்சாகமாக குடிப்பது என் வழக்கம்.
ஆனால் அன்று நான் மறுத்து விட்டேன். ” எனக்கு கல்யாணம் உடனே நடக்கனும்” ஆச்சி “ ஏல.. மொதல்ல இந்த பாலை குடி”
”மாட்டேன். எனக்கு கல்யாணம் உடனே நடக்கனும். இன்னக்கே நடக்கனும். நம்ம வீட்டில பந்தல் போடச்சொல்லு.”
கதறி அழ ஆரம்பித்தேன். தரையில் உருண்டு பிரண்டு கை கால்களை உதைத்து..
என் ஆச்சி என்னை தூக்கி இடுப்பில் வைத்தாள்.
“ ஏல அழாத.. இன்னக்கி வேண்டாம். நாளக்கி உனக்கும் எனக்கும் கல்யாணம். நான் தான் உனக்கு பொன்னு.. பந்தல்காரன் கிட்ட போய் இப்பவே சொல்லிட்டு வரலாம் வா.”
தாத்தாவைப் பார்த்து ஆச்சி சொன்னாள் “ அய்யா.. ஒன் பேரன் தொரைக்கும் எனக்கும் நாளைக்கி கல்யாணம். நீரு ஒமக்கு வேற பொன்னு பாத்துக்கிடும்.”
என்னைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
எதிரெ வந்த ஒரு கிழவியிடம் “ ஏட்டி மாரி…. நாளைக்கு என் பேரனுக்கும் எனக்கும் கல்யாணம். வந்திடு.. பந்தல் காரனப் பாக்கத்தான் இன்னா போறேன்.” மாரிக்கிழவி வாயெல்லாம் பல்லாகி
“ ஏயப்ப்பா… அப்படியா.. அப்ப இனி ராஜநாயஹம் பிள்ளை பாடு திண்டாட்டம்”
எதிரே ஒரு சாயபு வந்தார். “ பாய்! நாளக்கி எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம்..எல்லாரிட்டயும் சொல்லிடுங்க..”
பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருக்கும் அய்யர் ஓட்டல் ராஜ நாயஹம் பிள்ளை காம்பவுண்டை சார்ந்தது தான். அய்யர் வாடகைக்கு எடுத்து ஓட்டல் நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய அம்மாள் என் பாட்டியைப் பார்த்து
“ வள்ளி! என்னடி? ஒன் பேரன் அழுதுண்டு இருக்கான்.”
“ மாமி! என்ன உடனெ கல்யாணம் பண்ணனும்னு அழறான். பந்தல்காரனப்பார்க்கத்தான் போயிட்டிருக்கோம்.”
“ பேஷ்! துரைக்கேத்த துரைச்சானி தான்!”
எதிர்ப்பட்ட எல்லாரிடமும் ஆச்சி முரசறையாத குறையாக செய்தியை பரப்பிக்கொண்டே என்னை தன் இடுப்பில் வைத்துக்கொண்டே தான் கொசக்குடிக்கு போனாள்.
ஆறு வயது பையனை இறக்கி நடக்க விடலாம். ஆனால் ஆச்சி இடுப்பில் சுமந்து கொண்டே தான் போனாள். பேரன் பால் பேரன்பு. என் அப்பாவை பெற்ற ஆச்சி!
கொசக்குடிக்கு போனவுடன் பந்தக்காரனிடம் “ ஏல..ஏம்ல எங்க வீட்டில இருந்து பந்தல பிரிச்ச.. கூறு கெட்ட பயலே... நான் சொன்னேம்லலே. எனக்கும் என் பேரனுக்கும் கல்யாணம்னு சொன்னேனா? இல்லையாலே… அப்புறம் ஏம்ல பந்தல பிரிச்ச.....செத்த மூதி.. மருவாதியா ஒடனே பந்தல போடு….”
பந்தல் உடனே வீட்டில் போடப்பட்டு விட்டது. பந்தலைப் பார்த்த சந்தோஷம். ஆஹா பந்தல்! பந்தல் தந்த திருப்தி!
’கல்யாணம்’ என்பதே எனக்கு அன்றைக்கே உடனே,உடனே சுத்தமாக மறந்தே போய்விட்டது.
.........................................
photos
1. மூன்று வயதில் ராஜநாயஹம்
2. ஒன்பது வயதில் ராஜநாயஹம்
http://rprajanayahem.blogspot.in/2016/09/blog-post_16.html
http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_27.html
http://rprajanayahem.blogspot.in/…/raise-child-you-have-got…
http://rprajanayahem.blogspot.in/…/carry-your-childhood-wit…
http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html
http://rprajanayahem.blogspot.in/2014/06/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_1605.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_1605.html
Excellent !! can we say truth is stranger than fiction here:)
ReplyDelete