Share

Nov 23, 2016

பாலமுரளி கிருஷ்ணா


பாலமுரளி கிருஷ்ணாவின் சங்கீத கச்சேரிகளில் யாராவது “ ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா” பாடல் பாடச்சொல்லி சீட்டு கொடுத்தால் அவருக்கு கோபம் வந்து விடும். 

தன் வாழ் நாளில் இருபத்தைந்தாயிரம் கச்சேரி பாடியிருப்பார். சினிமாப்பாடல் பாடச்சொல்லி கேட்டால் எரிச்சலாகி விடுவார்.
இந்தக்குணம் கர்னாடக சங்கீத கச்சேரி செய்யும் போது ஜேசுதாஸிடமும் கூட உண்டு. “ இவ்வளவு சங்கீத ரசிகர்கள் இருக்கிற இடத்தில சில விசிலடிச்சான் குஞ்சுகள் வந்து அபத்தமா சினிமா பாட்டு பாடச்சொல்றான்” என்று பகீரங்கமாக கண்டிப்பார்.
பாலமுரளிக்கு என்று ஒரு மனோதர்மம் உண்டு. கர்னாடக சங்கீத கீர்த்தனைகளைக்கூட அவர் விருப்பப்படி தான் தேர்வு செய்து பாடுவார்.
“ இந்த கீர்த்தனை, அந்த கீர்த்தனை” என்று சீட்டு வருவதை விரும்பவே மாட்டார். தன் தேர்வில் தான் கீர்த்தனைகளை வழங்குவார்.
“ Lend thy ears! This is BalaMurali Music! Don’t ask for this and that.”

Child Prodigy! இப்படி இருப்பதில் பல மனச்சிக்கல்கள்,அவஸ்தைகள் உண்டு. மாலி, மாண்டலின் ஸ்ரீனிவாசன் போன்றவர்களும் இப்படிப்பட்டவர்கள்.
பாலமுரளியின் இரண்டாவது மனைவி பல ஆண்டுகளுக்கு முன் அவர் பற்றி தன் மனக்குறைகளை  வாரப்பத்திரிக்கையொன்றில் பேசினார்.


பாலமுரளி கிருஷ்ணா சங்கீத ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். சங்கீத ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் அவர் பாடும் கீர்த்தனைகள் சாஸ்த்ரோக்தமாக இருக்காது. தன் இஷ்டத்துக்குப் பாடுகிறாரே என்று எவ்வளவோ ரசிகர்கள், சங்கீத விற்பன்னர்கள் முகம் சுழித்திருக்கிறார்கள். ’ஆராய்ச்சியில் ஈடுபட்டவனெல்லாம் வீணாய்த்தான் போனான்’ என்று கடுமை காட்டியவரகள் உண்டு.

மதுரை மணி அய்யர், எம்.டி.ராமனாதன், அருணா சாய்ராம் ரசிகர்களுக்கு பாலமுரளியையும், மஹாராஜபுரம் சந்தானத்தையும் பிடிக்காமல் போனது இதனால் தான்.
…………………………………………………………………………..
Aug 24, 2012
பாலமுரளியின் திரை இசைப் பாடல்கள்
பின்னனிப் பாடகி பி.சுசிலா விழா. சிலமாதங்களுக்கு முன் நடந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
பாலமுரளி கிருஷ்ணா சுசிலாவுடன் இனணந்து “தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது நேரினிலே, மரகத தோரணம் அசைந்தாட, நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட பாட”
பாலமுரளி கிருஷ்ணா அனாயசமாக அதிக சிரமப்படாமல் பாடினார்.
”மாங்கனி கன்னத்தில் தேனூற
இருமைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே”
அதே சமயம் சுசிலாவும், சௌந்தர் ராஜனும் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூவரும் பாடியபோது முதுமை காரணமாக ரொம்ப சிரமப்பட்டு பாடினார்கள். அது ஒரு குறையாகத்தெரியவில்லை. குழந்தையின் மழலை போல யாழைவிட குழலைவிடவும் ரசிக்கத்தக்கதாய் நெகிழ்த்தியது.
சுசிலா,டி.எம்.எஸ் இருவரும் பாடிய ’ நான் மலரோடு தனியாக “ பாடலில் டி.எம்.எஸ் ”என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்” என்று தளர்ந்து போன நடுங்கும் குரலில், ஓடுவது போன்ற பாவனையுடன் பாடியது ரசிக்கத்தக்கதாக இருந்தது.
முதியவர் தான் என்றாலும் கூட பாலமுரளி மட்டும் இயல்பாக நன்றாக பாடினார்.
பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக சங்கீத பாடகர் என்பதால் தான் அந்த விசேசப்பயிற்சி அவரால் இந்த ’தங்கரதம் வந்தது’ஆபோகி ராகப்பாடலை இந்த வயதிலும் நன்றாக பாட முடிந்திருக்கிறது.ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் இடம்பெற்றப்பாடல்.
பாலமுரளி சினிமாவுக்காகப் பாடிய பாடல்களில் மிகப்பிரபலமான திருவிளையாடல் பட “ ஓரு நாள் போதுமா,இன்றொரு நாள் போதுமா” பாடல் காட்சியில் டி.எஸ்.பாலைய்யாவின் நடிப்பு அந்தப் பாடல் மிகப் பிரபலமாக காரணம்.
’சாது மிரண்டால்’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக அவர் பாடிய பாடல்
“ அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே”
”சுபதினம்” என்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் முத்துராமனுக்கும் புஷ்பலதாவுக்கும் ஒரு பாடல். ரொம்ப நல்ல டூயட் பாடல். பாலமுரளி -சுசிலா பாடியது.
”புத்தம்புது மேனி இசைத்தேனி தூங்கும் மலர் மஞ்சமோ”
”கண்மலர்’’ (கிருஷ்ணன்) பஞ்சு வின் தம்பி ’பட்டு’ இயக்கிய படம். ஜெமினி,சரோஜாதேவி,சௌகார் ஜானகி, நாகையா நடித்திருந்தார்கள்
இந்தப் படத்தில் “ பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ் நாள் நடந்ததையா நடராஜா” என்ற எஸ்.ஜானகி பாடலுக்கு ஒரு தொகையறா பாலமுரளி பாடியிருந்தார் கேதார் கௌளை ராகத்தில். படத்தில் வி.நாகையா பாடுவதாக.
”அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தைத் தேர்ந்தெடுத்ததேனையா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டினிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா”
”கவிக்குயில்” படத்தில் ரீதிகௌளை ராகத்தில் பாலமுரளியின்
“ சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக்கண்ணன்அழைக்கிறான்”
.........................................................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.