Share

Jul 6, 2018

தூங்கும்போது வரும் கனவு

ஆழ்ந்த தூக்கத்தில் கனவு வருகிறதா? தூக்கம் முடிகிற நேரத்தில் கனவு வருகிறதா? இரவின் பின் பாதியில் கனவா?
Dreams while sleeping
காரணங்கள் என்பதற்கு தேவை எந்தக் கனவிலும் கிடையாது. யதார்த்தத்தை முற்றிலும் மறுதலிக்கும் கனவு.
சென்ற வாரம் புது ஊரில் சரியான தூக்கம் இல்லாத நிலையில் கூட ஒரு சிறு கனவு.
கனவில் வந்த இரவின் இருட்டில் இரண்டு குட்டி நாய்கள். ரொம்ப குட்டியான நாய்கள். ஒரு குட்டி கழுதையைப் பார்த்து குரைக்கின்றன. குட்டி கழுதை கொஞ்ச நேரம் நாய்க்குட்டிகளை பார்த்து விட்டு பதிலுக்கு மழலையாக கத்துகிறது. நாய்க்குட்டிகள் மிரண்டு குரைப்பதை நிறுத்துகின்றன.
இரண்டு நாட்களுக்கு பின் ஒரு கனவு. ஒரு நிகழ்ச்சி. அதில் பலர் கூடியுள்ள நிலையில் ஒரு பெண் என்னிடம் ஏதோ சொல்ல நெருக்கமாக வருகிறாள். அவள் ஏதோ சொல்லத்தான் செய்கிறாள். அப்போது அவள் என் மீது முழுவதுமாக சாய்ந்து விட்டதை கவனிக்கிறேன். அவள் சொல்வது என்ன என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. அவள் முதுகை என் நெஞ்சில் சார்த்தி வைத்துக்கொண்டு தொடர்ந்து நீளமாக பேசுகிறாள்.
Siesta. Daytime napping. நேற்று இங்கே வீட்டில் பகலில் சற்று அயர்ந்த போது ஒரு தெளிவான கனவு.

தர்மு சிவராம் வருகிறார். சிவப்பு கலரில் ஒரு branded readymade shirt போட்டிருக்கிறார். கனவில் வந்த சிவராம் ஒல்லியாக இல்லை. சற்றே பூரித்த உடம்பு. ரொம்ப ஸ்மார்ட் ஆக இருக்கிறார்.
’போட்டோவில் பிரமிள் ரொம்ப அட்டகாசமான அழகுடன் இருப்பார். அவருக்கு போட்டோஜீனிக் ஃபேஸ்’ என்று சுந்தர ராமசாமி சொன்னது என் கனவிலேயே நினைவிற்கு வருகிறது.

நான் ஒரு மொட்டை மாடியில் நிற்கிறேன். பிரமிள் பக்கத்து வீட்டு மொட்டை மாடி. என்னைப் பார்த்து “துரை” என்று கூப்பிட்டு கையசைக்கிறார். துரை என்ற என் பெயர் பிரமிளுக்கு எப்படி தெரிந்தது!
உடனே அவர் அந்த மொட்டை மாடியிலிருந்து நான் இருக்கும் மொட்டை மாடிக்கு தாவுகிறார். இரண்டு கட்டடங்களும் பல மாடி கொண்டவை. நான் இருக்கும் கட்டடடத்தில் ஜன்னலோ எதிலோ அவருடைய பாதங்கள் நின்ற அடுத்த சில நொடியில் நழுவி கீழே விழுகிறார்.
ஐயோ…
அவருடைய ‘தன்னழிவு’ கவிதை முழுவதுமாக கனவில் என் நினைவில் தெளிவாக வருகிறது.
“கண்ணில் கருக்கொண்ட
மணல்
ஏதோ ஒரு ஒளியின்
ஊற்றாகிறது.
பாலை
புனலாகிறது.
இக்கணம்
இதயத்துள் வேரூன்றி
நிலைத்தது நனவு.
முளைத்தெழுந்து
பழுத்தது
சாவு.”
என் பதற்றத்தில் நான் மிரட்சி நீங்காதிருக்கிறேன். சில நிமிடங்களில் படியில் யாரோ வரும் சத்தம்.
மொட்டை மாடிக்கு வந்து விட்ட அந்த மனிதர் பிரமிளே தான்.
ஆகாய நீல வண்ணத்தில் நல்ல முழுக்கை நீள சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு பிரமிள் என்னைப்பார்த்து சிரிக்கிறார். ஸ்கை ப்ளு ரெடி மேட் சர்ட். நல்ல செழிப்பான பூசின உடலும் பூரித்த முகமுமாக பிரமிள்.
கனவுகள் ஆன்மாவின் மொழி. Dreams and the relevance they play in the journey of life. பௌலோ கொய்லோவின் Alchemist நாவல் நிழலாடுகிறது.
செத்தபின் சாவு என்னும் தூக்கத்தில் என்ன கனவு வரும் என்பார் ஷேக்ஸ்பியர்.
In that Pramil’s sleep of death what dreams may come!

….............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.